Thiruppavai paasurams with explanations

Courtesy:Dr.Smt.Saroja Ramanujam

https://sites.google.com/site/mytamilposts/

திருப்பாவை ஒரு புதிய கண்ணோட்டம்

கிருஷ்ணாவதாரம் தசாவதாரத்தில் ஒன்பதாவது. எட்டு அவதாரத்தில் செய்ய முடியாததைச் செய்ய கிருஷ்ணாவதாரம் எடுத்தாராம். ஏனென்றால் இதில்தான் நம்மை உய்யச்செய்யும் கீதை சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வர் பெரியோர்..

பகவான் பாமரஜனங்களையும் உய்விக்க அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்தில் , அதாவது சாஸ்திர அறிவு இல்லாமல் அன்பு ஒன்றையே அறிந்த ஆய்க்குலத்தில் வளர்ந்து அன்பின் மகத்துவத்தை எடுத்துரைத்தான். இந்த அன்பே பின்னர் கீதையாய் மலர்ந்தது.

ஸஹஸ்ரநாம்னாம் புண்யானாம் த்ரிருக்தானாம் யத் பலம்

தத் பலம் லபதே ஜந்து: க்ருஷ்ண இத்யக்ஷரமாதரத:

கிருஷ்ணா என்ற பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே ஆயிரம் நாமங்களை மூன்று முறை கூறிய பலன் , மனிதர் மாத்திரம் அல்ல எந்த உயிருக்கும் கிடைக்கிறது.

அப்படி இருக்கையில் கிருஷ்ணனை சதா ஸ்மரித்துக் கொண்டிருந்த கோப கோபியரைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?

த்வாபரயுகத்தில் கண்ணன் செய்ததை கலியுகத்தில் செய்தவள் ஆண்டாள். திருப்பாவை மூலம் பக்தி, கரம யோகம் ஞானயோகம் எல்லாவற்றையும் காட்டியவள். பக்தியில் மூன்று வகை. முதலாவது பூஜை, அவன் பாதங்களில் மலரிட்டு வணங்குவது. இரண்டாவது நாமசங்கீர்த்தனம் – அவன் நாமங்களை கீர்த்தனம் செய்வது, மூன்றாவது அவனையே சரணம் என்று அடைவது. இந்த மூன்று விதங்களும் முறையே திருப்பாவையின் முதல் பத்து, இரண்டாவது பத்து, மூன்றாவது பத்து பாசுரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

கோதா என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்க்கலாமா?

காம் ததாதி இதி – பகவானை அடைய உதவும் வாக்கை அளித்தவள்

கவா தத்தா –பூமியால் கொடுக்கப்பட்டவள்

கா: தமயதி- புலனடக்கத்தை போதிப்பவள்.

Thiruppavai pasuram 1 to 5

அரங்கன் திருவரங்கத்தை விட்டு ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்தான். திருப்பாவை எல்லா இடத்திலும் ஒலிக்கிறதே அதற்கு ஏன் ஸ்ரீவில்லிபுத்தூர் போக வேண்டும் என்று கேட்டாள் அவனுடன் கலந்து ஒன்றாக இருக்கும் ஆண்டாள். அதற்கு அவன் கூறினான். “ எப்போதும் விளைநிலத்திலேயே போய் விளைந்ததை வாங்குவது வாங்குவது விசேஷம் அல்லவா? ஆகையால் திருப்பாவையை அது விளைந்த நிலமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே கேட்டு ரசிக்க வேண்டும் என்று எனக்கு ஆவல். நான் வடபத்ரசாயியாக அங்கு இருக்கிறேன் நீயும் அங்கு கோயில் கொண்டுள்ளாய் அல்லவா. இருவருமாக உன் தீஞ்சுவைத் தேன் ஆகிய பாசுரங்களை ரசிப்போம். “ என்றான்.

இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் திருப்பாவை சாற்றுமுறை நடந்து கொண்டிருக்கிறது.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்

அரங்கன் கேட்டான் “ கோதை , நீ என் மார்கழி மாதத்தை தேர்ந்தெடுத்தாய்?” என்று.

கோதை கூறினாள். “ மாதங்களில் நான் மார்கழி என்று கூறிவிட்டு ஒன்றும் அறியாதவர் போல் இந்தக் கேள்வி ஏன்? அது மட்டும் அல்ல. உங்கள் நாமங்களில் கேசவன் என்ற நாமம் மார்கழி மாதத்திற்கு உரியது அல்லவா? அதில் என்ன விசேஷம் என்றால் ‘க’ என்றால் பிரம்மா, ‘ஈச’ என்றால் சிவன். நாராயணன் ஆகிய பரப்ரம்மத்தின் வசம் இருவரும் என்ற பொருள் ‘வ’ என்னும் சொல்லாகும். “

ஒன்றும் அறியாதவன் போல் “அப்படியா” என்ற அரங்கன், மேலும் மார்கழி தேவர்களின் விடியற்காலை அல்லவா? “ என்றான்.

“ அதுமட்டுமா. இந்த மாதம் ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் வித்தைக் கொண்டது. இந்த பல காரணங்களால் இந்த மாதம் புண்ணிய மாதமாகக்கருதப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் செய்யும் புண்ணிய காரியங்கள் நற்பயனை அளிக்கின்றன.” என்றாள் ஆண்டாள்.

அரங்கன் சிரித்து, “ நீ பூமாதேவி என்பதை நிரூபித்துவிட்டாய் . அதுசரி, மதி நிறைந்த நன்னாள் என்று கூறியுள்ளாயே, மாதம் பௌர்ணமி அல்லாத நாளில் பிறந்தால் இது சரிவராதே ?” என்றான்.

“நீ இதயத்தில், வரும் நாள் மதி நிறைந்த நாள் அல்லவா?”என்றாள் கோதை.

“ஆஹா, உன் வார்த்தைகள் எனக்கு என் பிரிய சகோதரியைக் குறித்து அபிராமி பட்டர் கூறியது நினைவுக்கு வருகிறது. அமாவாசை அன்று அவர் பௌர்ணமி இன்று எனக்கூற அவர் வார்த்தையை மெய்ப்பிக்க அவள் அருளால் முழு நிலா வந்ததே !” என்றான் அந்த மாயவன்.

“ ஆம் அவளும் பெரிய மாயக்காரி அல்லவா? உன் மறுபக்கம் தானே அவள்?” “ என்றாள் கோதை.

“இந்த மார்கழியில் எல்லா பெண்களையும் கூட்டிக்கொண்டு நீராடச் சென்றாய், “ என்ற அரங்கனை இடை மறித்து கோதை கூறினாள். “நீராடுவது என்பது உண்மையில் உன்னை அடைவது என்று பொருள்.”

“ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் மகளான நீ ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்களை அழைக்கக் காரணம்? , என்ற அரங்கனைப் பார்த்து கோதை,

“எங்கே பிறந்தால் என்ன ? நீ உள்ளத்தே இருக்கையில் நாங்கள் செல்வமுடையோர் , செல்வச் சிறுமீர். அப்சர ஸ்திரீகள் கோபியர்களாக மாறலாம், நாங்கள் மாறக்கூடாதா? “ என்றாள்.

“நீ கிருஷ்ணனானால் நாங்கள் எல்லோரும் கோபியர்தான் , “ என்று ஆண்டாள் சொன்னவுடன் அரங்கன் கிருஷ்ணனாக மாறிவிட்டான்.

கண்ணனாகக் கேட்டான், “ என் தந்தை நந்தகோபர் ஒரு உயிருக்கும் தீங்கிழைக்காத சாதுவானவர். அவரைப் போய் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று கூறியது நியாயமா?”

ஆண்டாள் கூறினாள். சாதுப் பிராணியான பசுவும் தன் கன்றைக் காக்க புலியையும் எதிர்ப்பதில்லையா ? அது போல உனக்கு தீங்கு நினைப்பவரை எதிர்க்கும் திறன் கொண்டவரஅல்லவோ உன் தந்தை? “

“ஆனாலும் என் தாய் ஏரார்ந்தகண்ணி,அழகிய கண்ணை உடையவள் என்று சொன்னது சரிதான் என்ற கண்ணனிடம்,

”அந்த கண்ணுக்கு அழகு எப்படி வந்தது தெரியுமா? உன்னைப் பார்த்துக் கொண்டே இருந்ததனால்தான்.” என்ற கோதை , “இந்த வார்த்தை உன்னையும் நினைவுபடுத்தியது, ஏரார்ந்தகண்ணி என்றபோது உன் மார்பில் விளங்கும் வைஜயந்தி மாலை நினைவுக்கு வந்ததும் உன் அழகில் ஆழ்ந்துவிட்டேன். அதனால் உன்னை யசோதை இளம் சிங்கம்,கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் என்று வர்ணிக்கத்தோன்றியது” என்றாள்.

கண்ணன் முறுவல் செய்து, “ முதலில் நந்தகோபன் குமரன் , பிறகு யசோதை இளம் சிங்கம், “ என்றவனிடம் ,’ ஆம் உன் தந்தையுடன் இருக்கும்போது தந்தைக்கடங்கின இளம் பிள்ளை. ஆனால் தாயிடம் ஒரு இளம் சிங்கம் போல் இருப்பாய். செல்லப்பிள்ளை அல்லவா? “

“ உன்னை கார்மேனிச் செங்கண் என்று ஏன் வர்ணித்தேன் தெரியுமா? அன்பர்களுக்கு கருணை என்ற மழையைப பொழிவதால். மழை மேகம் போன்று வண்ணம் கொண்டவன் நீ. பக்தர்களைக் கண்டு ஆனந்த மிகுதியால் உன் கண் செந்நிறம் கொண்டது.”

“ கதிர்மதியம் போல் முகத்தான் என்றது உன் கண்கள் பக்தர்களுக்கு தீங்கு இழைப்பவரை நோக்கும்போது கதிரவனைப் போல் தீவிழிக்கும் . பக்தரை நோக்கையில் மதியைப் போல் குளிர்ந்திருக்கும் அல்லவா?” என்றாள் ஆண்டாள்.

“ ஆனால் இடைச்சிறுவனைப்போல் நீ போட்ட வேஷம் எங்களுக்குத் தெரியாதென நினைத்தாயா? நீதான் நாராயணன் என்றறிவோம்,. அதனால்தான் ‘நாராயணனே நமக்கே பறை தருவான் ,’ என்றேன் “ என்ற கோதையைப் பார்த்து கண்ணன் ,

“கோதையே , இந்த உலகம்தான் ஆயர்பாடி . சுலப பக்தியால் என்னை அடையலாம் என்று ஒரு ஆச்சார்ய ஸ்தானத்தில் இருந்து வழி காட்டினாய். நீ காட்டிய பாதை ஒரு மார்க்க சீர்ஷம், தலையான பாதை. இதை மார்கசீர்ஷம் என்னும் இந்த மார்கழியில் கூறியது பொருத்தமே. “ என்றான்.

வையத்து வாழ்வீர்காள் நாங்கள் நம் பாவைக்கு

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பைய துயின்ற பரமனடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டேழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி

உய்யும் ஆறெண்ணி உறங்கேலோரெம்பாவாய்

“மிகவும் கடுமையான விரதம்தான் அதுவும் உலகத்தில் உள்ளோர் எல்லோருக்கும் “ என்றான் கண்ணன் இந்தப் பாசுரத்தைக் கேட்டு.

“ ஆம். வையத்து வாழ்வீர்காள் என்று எல்லோரையும் ஏன் கூவி அழைக்கிறேன் தெரியுமா? இந்த மண்ணுலகம் மற்ற உலகங்களைக் காட்டிலும் சிறந்தது. ஏனென்றால் இங்குதான் உன்னை பக்தியுடன் அடைய முடியும். அதனால் தானே பராசர பட்டர் அரங்கனாகிய உன்னை இங்கிருந்து பக்தி செய்வதை விட்டு பரமபதமானாலும் வேண்டாம் என்றார். என்றாள் ஆண்டாள்.

“ அது சரி ஆயினும் உன்னுடைய சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானதாகத் தோன்றுகிறது. நான் இப்படி எல்லாமா இருக்கச் சொல்கிறேன்? “ என்ற கண்ணனிடம், “ நீ பக்தவத்சலன். ‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ததஹம் பக்த்யுப்ஹ்ருதம் அச்னாமி பிரயதாத்மன: ‘ என்று ஒரு இலை பூ பழம் அல்லது வெறும் நீர் எதுவானாலும் பக்தியுடன் தருவதை ஏற்கிறேன் என்றாய் . “

“ஆனால் இந்த மனிதர்கள் ஒரு கட்டுப்பாடு இல்லாவிட்டால் நீ ‘பக்தியுடன்’ என்றதையே மறந்து ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்துவிடுவார்கள். எல்லோரும் கோபியர் அல்லவே. உலகத்தில் உள்ள இன்பங்களில் ஈடுபட்டு உன்னை மறந்து விடுவார்கள்.அதனால் உடல் உள்ளம் இவைகளுக்கு ஒரு ஒழுக்க நெறியை விதிக்க வேண்டும். அதனால் உன்னையே நினைக்கும் பக்குவம் வரும் “ என்றாள் ஆண்டாள்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் என்றது கர்மேந்த்ரியங்களை கட்டுப்படுத்த.. மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்றது உடல் பற்றை அகற்ற.” என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் நீங்கள் ஒரு அலங்காரமுமே செய்து கொள்ளாமல் வந்தால் உங்களை யார் பார்ப்பது?” என்று நகைத்தான்.

“ நாங்கள் உன்னை அலங்காரம் செய்வதில் இன்பம் காண்கிறோமே தவிர எங்கள் உடலை அல்ங்கரிப்பதில் அல்ல. ஆனாலும் பரமனடிபாடி என்று உன் நாமசங்கீர்த்தனம் செய்து வரும் எங்களை பார்க்காமல் இருப்பாயா? ‘மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத’, என் பக்தர்கள் நாமசங்கீர்த்தனம் செய்யும் இடத்திலெல்லாம் நான் இருக்கிறேன் என்று சொன்னவன் ஆயிற்றே” என்றால் ஆண்டாள்.

“ வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்வது என்பது இதுதான் ,” என்ற கண்ணனிடம் “ நீ இந்த நோன்பு முடியும்போது நாங்கள் கேட்டதை கொடுப்பயல்லவா, அது வரை நாங்கள் நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம், பிறகு எல்லா அலங்காரமும் செய்து கொள்வோம் சுவையான பாற்சோறு சாப்பிடுவோம் “ என்ற ஆண்டாளிடம் கண்ணன் குறும்புப் புன்னகையுடன் கூறினான்,

“ இது எனக்கு போன அவதாரத்தில் கைகேயியை நினைவூட்டுகிறது .” என்று.

அதற்கு ஆண்டாள் கூறினாள். அவள் உன் பிரிவை விரும்பினாள். நாங்கள் உன் சேர்க்கையை அல்லவா விரும்புகிறோம்? “

“ எங்கள் விரதம் எப்படி வேறுபட்டது என்றால் மனம் திரிந்த கைகேயி போல் இல்லாமல் மனத்தூய்மையை மேற்கொள்ளும் விரதம் இது.

“செய்யாதனசெய்யோம் என்றால் இரண்டு வகையான காரியங்கள் செய்ய மாட்டோம். அதாவது க்ருத்ய அகரணம், செய்யவேண்டியதை செய்யாமல் இருப்பது அதாவது உன் வழி பாடு எங்கள் நித்ய கடமைகள் முதலியவை. இன்னொன்று அக்ரருத்ய கரணம் செய்யக்கூடாததை செய்வது. இதில் தீக்குறளை சென்றோதோம் என்பது அடங்கும் . தீக்குறளை அதாவது கடும் சொற்கள் கூறுதல் , பிறரை இழித்துரைக்கல் முதலியன, என்று சொன்னவளை இடைமறித்து கண்ணன் கேட்டான் , “அதென்ன சென்றோதோம் , எங்கு சென்று இவைகளை செய்வீர்கள்.?என்றான். ஆண்டாள் கூறினாள், பிறரை பற்றி அவதூறு சொல்பவர்கள் அவரிருக்கும் இடம் சென்றோ அல்லது மற்றவர் இருக்கும் இடம் சென்றோ இதே வேலையை செய்வார்கள் அல்லவா., அதைக் குறிப்பிட்டேன். “

“செய்யாதன செய்யோம், என்று கூறி விட்டாய் . எதை செய்வோம் என்று கூறவில்லையே?’என்ற கண்ணனை நோக்கி அடுத்து என்ன கூறினேன் என்று பார்க்கவில்லையா ? ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி , இவையெல்லாம் செய்ய வேண்டியவை. “

“இதற்கும் விளக்கம் சொல்லிவிடேன் “என்றான் கண்ணன்.

“ ஐயம் என்பது கேட்காமலேயே கொடுப்பது, பிச்சை கேட்டபின் கொடுப்பது , ஆம்தனையும் கைகாட்டி என்றால் இயன்ற அளவு கொடுப்பது. கேட்காமலேயே கொடுப்பவன் நீ., கேட்டபிறகு கொடுத்தவன் மகாபலி. அவனுக்கு இயலாத அளவு த்ரிவிக்ரமனாய் நின்றவன் நீ” என்ற ஆண்டாளிடம் “ இதைத்தான் எதிர்பார்த்தேன் “ என்று சிரித்தான் அக்கள்ளன்.

“ ஆனால் இந்த விதிமுறை எல்லாம் கடுமையாகத் தோன்றுகிறதே தவிர உன்னை மனதில் கொண்ட எங்களுக்கு , உடல் பற்றோ, பசியோ தோன்றுமா என்ன ? உன் நாம்சங்ககீர்த்தனம் என்னும் அமுதம் நாவில் இருக்க வேறு எந்தச் சுவை வேண்டும், உய்யும் ஆறு எண்ணி உகந்திருக்கையில்?” என்ற கோதையிடம். “அதென்ன ஆறு எண்ணி,” என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “ பகவானாகிய உன் குணங்கள் ஆறு, பிரபத்தியின் அங்கங்கள் ஆறு, அன்று நீ வரதனாக திருக்கச்சிநம்பிகளுக்கு ராமானுஜரின் பொருட்டு கூறிய வார்த்தைகள் ஆறு , த்வயமந்த்ரத்தின் பதங்கள் ஆறு,”

“ அடேயப்பா, அதற்கு மேல் ஆறாகப் பெருகும் உன் பக்தி கடலாகிய என்னை அடைந்துவிட்டது அல்லவா? என்ற கண்ணன் ,

“ நான் பாற்கடலில் பையத் துயின்றவன் என்றாயே அதற்கு என்ன அர்த்தம் ? “ என்றான்

“ அதாவது நீ துயில்கின்றாய் என்று நாங்கள் ஒருபோதும் ஏமாறவில்லை என்று அர்த்தம்” என்ற கோதை, அதனால் தான் பையத்துயின்ற பரமன் என்றேன். நீ பரம்பொருள் , உண்மையில் துயின்றால் உலகம் அழிந்துவிடுமே? ஒரு தந்தை தூங்குவதுபோல் குழந்தைகளை கண் காணிப்பது போலவும் ஒரு குடியானவன் தன் பயிரைக் காக்க வீட்டை விட்டு வந்து வயலில் துயில்வது போலவும், நீ உன் பரமபதத்தை விட்டு எங்களைக் காக்க பாற்கடலில் துயில் கொண்டவன் போல் இருக்கிறாய். ஒரு ஆபத்து என்றால் துள்ளி எழுந்து விடுவாய் என்று எங்களுக்குத் தெரியாதா? அதனால் தான் நாங்களும் இந்த உலகில் நிம்மதியாக இருக்கிறோம். என்றாள் ஆண்டாள்.

கண்ணனின் மயக்கும் புன்னகையே இதற்கு பதிலாக அமைந்தது.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகள

பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப

நீகாதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்

கண்ணன் கூறினான்.

“கோதை, முதலில் என்னை நந்தகோபன் குமரன் என்றும், யசோதை இளம் சிங்கம் என்றும் கூறினாய். பிறகு பாற்கடலில் துயில்பவனாகக் காட்டினாய் . இப்போது என்னை ஒருகாலில் நிற்க வைத்து விட்டாய் “ என்றான்.

அதற்கு கோதை பதிலளித்தாள். “ ஒரு முறை அல்ல மூன்று முறை உன் த்ரிவிக்ரமாவதாரத்தை திருப்பாவையில் சொல்லி இருக்கிறேன். ஏன் தெரியுமா? இந்த அவதாரம் எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் அது உன்னுடைய பராக்கிரமம் கருணை இரண்டையும் காட்டிற்று அல்லவா!”

“ ஆனால் சிலர் நான் மகாபலியை வஞ்சித்து விட்டேன் என்று சொல்கிறார்களே? ஒரு வாமனனாய் வந்து அவனை ஏமாற்றிப் பிறகு உலகளந்தானாக மாறியது வஞ்சகம் என்று சொல்கிறார்கள்.”

“விஷயம் தெரியாதவர்கள் ஏதோ கூறிவிட்டுப் போகட்டும். நீ வந்தது அவனை தண்டிக்க அல்ல. அவனுடைய இகலோக சாம்ராஜ்யத்தை எடுத்து விட்டு பக்தி சாம்ராஜ்யத்தைக் கொடுக்க அல்லவா? வாமனனாக வந்தாய் என்றால் அது உன் மாயை. எந்த அவதாரத்தில் நீ மாயம் செய்யாமல் இருந்தாய் ?” என்றாள் கோதை.

அதுவும் அல்லாமல் எல்லாமே உன்னுடையது அதை எடுத்துக்கொள்வது எப்படி வஞ்சகம் ஆகும்? மகாபலியுடன் உன் கருணை முடிந்துவிட்டதா? இல்லையே . உன் பாதகமலத்தில் இருந்து உற்பத்தியான கங்கை உலகம் முழுவதையும் புனிதப் படுத்தவில்லையா? அதனால் தான் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றேன். என்றாள் ஆண்டாள்.

“மூன்றடி மண் கேட்ட உனக்கு மகாபலி கொடுத்தது ஓரடி மண்தானே . இதை நான் சொல்லவில்லை . நம்மாழ்வார் கூறுகிறார். ஓரடியால் உலகம் முழுதும் வ்யாபித்தான். இரண்டாவது அடிக்கு எங்கே இடம்? என்கிறார். “ என்ற கோதையிடம், “இந்த விரதத்தால் நீவேண்டுவது என்ன?” என்றான் கண்ணன் .

“வேறு என்ன உன்னை அடைவதுதான்’” என்றவளிடம், “ஆனால் இந்த பாசுரத்தில் நீ வேண்டுவது வேறாக உள்ளதே?

1.தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,

2.ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகள

3. பூங்குவளைப்போதில் பொறிவண்டு கண்படுப்ப

4.வள்ளல் பெரும் பசுக்கள்

5. இவைகளால் நீங்காத செல்வம்

இவைதானே நீ கேட்பது என்றான்.

ஆண்டாள் கூறினாள். “இவை என் வேண்டுகோள் அல்ல.உன் நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தேன். ஓங்கி உலகளந்த உத்தமனாகிய உன் பேர் பாடினால் இவை எல்லாம் கிடைக்கும் என்றும் நாமம் நாமியை விட உயர்ந்தது என்று காட்டவும்தான். திரௌபதியையும் கஜேந்திரனையும் காத்தது உன் நாமம் அல்லவா? “

“நீராடல் என்பது உடல் மற்றும் உள்ளத்தூய்மை. சாற்றி நீராடுவது என்றால் எந்தச் செயலையும் உன் கைங்கர்யமாகச் செய்வது “.

இதைச் சொல்கையில் நான் கோகுலத்திற்கே சென்று விட்டேன்.,” என்றாள் ஆண்டாள்.

“ அப்படியானால் மற்ற வரிகள் கோகுலத்தை வர்ணிப்பனவா? என்றான் கண்ணன் .

“ஆம். நீ வந்த பிறகு கோகுலத்தில் மாதம் மும்மாரி மழை பொழிந்தது, தீங்கின்றி , அதாவது அளவாக. அதன் விளைவாக நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்தன. நீர்ப் பெருக்கினால் நிறைந்த வயல்களில் மீன்கள் விளையாடின. குவளை மலர்களில் தேன் உண்ட வண்டுகள் வயிறு நிரம்பியதால் அங்கேயே கண் வளர்ந்தன. “ என்றால் ஆண்டாள்.

அதற்கு கண்ணன் “ எனக்கும் கோகுலத்தில் இருப்பதுபோல் இருக்கிறது.” என்றான்,.

“ஆனால் என் மனதில் தோன்றிய காட்சி வேறு. .” என்றாள் ஆண்டாள். “ ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகள “ என்றபோது அந்த ஓங்கிய பயிர்கள் உன் பக்தர்களின் மனத்தை ஒத்திருந்தன .அதனூடே சென்று விளையாடிய மீன் எது தெரியுமா? பக்தர்கள் மனம் புகுந்து விளையாடும் மகா மத்ஸ்யமான நீயே. அவர்கள் இதயமான் குவளை மலரில் புகுந்து ஆனந்தமாகக் கண்வளர்ந்த பொறிவண்டும் நீயே. என்றாள் கோதை.”

“என் பிரியமான ஆவினத்தைக் கண்முன் கொண்டு நிறுத்திவிட்டாய். ‘தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’ என்று கூறி. உண்மை. பக்கத்தில் வந்து கை வைக்கும்போதே பாலை சொரிந்து குடம் நிறைத்தவை அவை “ என்ற கண்ணனிப் பார்த்து,

கோதை கூறினாள், “ அவை பெரும் பசுக்களாக இருந்ததற்கும் கை வைத்தவுடன் பாலை சொரிந்ததற்கும் அவை உன்மேல் கொண்ட அன்பல்லவா காரணம் ?”

“நீ சொல்வது முற்றும் உண்மை. கோகுலத்தில் நான் பெற்ற ஆனந்தம் வைகுண்டத்திலும் எனக்கு ஏற்படவில்லை .” கோபாலன்.

“உன்னிடம் வருவோர்க்கெல்லாம வாரி வழங்கும் வள்ளல் பெரும் பசு நீயே அல்லவா? எங்கள் சிறுமதியால் உன்னிடம் குடத்துடன் வருவதற்கு பதில் ஒரு சிறு கோப்பையுடன் வருகிறோம்.. . உன்னையே தரத்தயாராக இருக்கும் உன்னிடம் அல்ப உலக சுகங்களைக் கேட்கிறோம். அது எங்கள் மதியீனமே தவிர உன் கருணையின் குறை அல்ல.” என்றாள் ஆண்டாள்.

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகர்ந்துகொடார்த்தேறி

ஊழிமுதல்வன் உருவம் போல் மெய் கருத்து

பாழியன் தோலுடை பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்

வாழ் உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்

ஆண்டாளும் கண்ணனும் பேசிக்கொண்டிருக்கையில் மேகமூட்டம் காணப்பட்டது. அதைக்க்கண்டு ஆண்டாள் கூறினாள்.

“ கண்ணா உன்னை நான் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று கூறியதைக் கேட்டு மேகங்கள் நீ எங்கே கங்கைபெருக்கை உண்டாகியது போல் மழையையும் உண்டாக்கி அவைகளை பயனற்றவையாக செய்துவிடுவாயோ என்று பயந்து விட்டன போலும்.தாமாகவே வந்து நின்றுவிட்டன. “ என்றாள்.

“அல்ல. ஆழிமழைக்கண்ணா என்ற உன் பாசுரத்தைக் கேட்டு கீழ்ப்படிந்து வந்து விட்டன. பஞ்ச பூதங்களும் என் பக்தர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். “ என்றான் கண்ணன்.

அதற்கு ஆண்டாள், “ அது சரி. ஆனால் நான் ஆழிமழைக்கண்ணன் என்றது உன்னையல்லவா? எல்லாவற்றிலும் உள்ளே இருந்து இயக்குபவன் நீதானே? கருணையாகிற மழை பொழியும் மேகம் நீயல்லவா? அதனால் ஒன்று நீ கை கரவேல் என்றது பாரபட்சம் இல்லாமல் எங்கும் மழை பொழியட்டும் என்ற பொருள் காணப்பட்டாலும், என் குழந்தைகளான இந்த பூமியில் உள்ள எல்லா உயிர்கட்கும் உன் கருணை மழையைப் பொழிவாயாக என்று உன்னை வேண்டிக்கொள்கிறேன்.” என்றாள்.

“மேகங்கள் நான் அவைகளைத்தான் சொல்கிறேன் என்று வந்து நின்று விட்டதால் அவைகளுக்கு ‘ஆழியுள் புக்கு’ என்று கடலின் உள் புகுந்து நீர் மட்டும் அல்ல, மற்ற முத்து ரத்தினங்கள் இவற்றையும் எடுத்துக்கொண்டு, ‘முகர்ந்து கொடு ஆர்த்தேறி,’ உயரச்சென்று , நடுவில் எங்கும் பெய்து விடாமல் எல்லா உயிர்களும் நன்மை அடையுமாறு , ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்றேன், என்ற ஆண்டாள்,

“அந்த மேகங்களைப் பார்த்ததும் உன் கார்மேக வண்ணம்தான் நினைவுக்கு வந்தது. அதனால் ஊழி முதல்வன் போல் ‘மெய்கறுத்து,’ என்றேன்.

கண்ணன் கேட்டான் அதென்ன ‘ஊழிமுதல்வன் போல் ‘?

ஆண்டாள் கூறினாள்,” பிரளயத்திற்குப் பின் படைப்புக்கு முன் கருணையினால் கறுத்த உன் மேனி எல்லா உயிர்களையும் உள்ளே அடக்கினதால் நீருண்ட மேகம்போல் உள்ளதல்லவா? ஆனால் மேகம் மழையைப் பொழிந்த பின்னர் வெண்மை நிறம் கொண்டதாகி விடுகிறது. ஆனால் உன் கருணை என்ற மேகம் எவ்வளவு பொழிந்த போதிலும் நிறம் இழப்பதில்லை. வற்றா நீருள்ள கடலைப்போல. “.

“ஊழிக்காலம் என்றவுடன் அடுத்து வரும் சிருஷ்டி நினைவுக்கு வந்தது போலும். அதனால் என்னை பத்மநாபன் என்றாய் இல்லையா ?” என்றான் கண்ணன்.

“ஆம். பத்மநாபன் என்றபோது உன் நாபியில் உள்ள பிரம்மாவும் நினைவுக்கு வருகிறார் அல்லவா? அதன்பின், சிருஷ்டிக்குப் பிறகு உன் கருணையை வெளிப்படுத்தும் செயல்கள் நினைவுக்கு வந்ததில் என்ன அதிசயம்? ‘ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து ‘ என்றது உன் துஷ்ட நிக்ரஹம்சிஷ்ட பரிபாலனம் இவற்றைக் குறிக்கும் சொற்கள். மின்னல் போல மின்னி தீயோர்க்கு பயத்தை விளைவிக்க, சங்கம் இடிபோல் அவர்களை நடுங்க வைக்கிறது. “ என்றாள் கோதை. “

“ இந்திரன் ஆணைப்படி கோகுலத்தில் பெய்த மழை ஆயர்களை இப்படித்தான் நடுங்க வைத்தது , என்றான் கண்ணன்.

“ஆனால் உன் கருணை என்ற மலை அவர்களைக் காத்ததே? “ என்ற கோதை, “உன் ஆயுதங்களும் உலகைக் காக்கவே. ‘சார்ங்கம் உதித்த சரமழை ,’ என்றது உன்னை சரண் புகுந்த முனிவர்களைக் காக்க ராமாவதாரத்தில் உன் வில்லிலிருந்து புறப்பட்ட சரமழை. மகாபாரதப் போரில் நீ சங்கம் எடுத்து ஊதியவுடன் கௌரவர் மனதில் நடுக்கம் ஏற்பட்டது என்றாரே வியாசர். “ என்றாள் கோதை.

“ இந்த உவமை எனக்கு வேறொரு மேகத்தை நினைவூட்டுகிறது. நம்மாழ்வார் என்ற மேகம் நானாகிய கடலில் இருந்து என் அருளாகிய நீரை எடுத்து நாதமுனியாகிய மலை மேல் வர்ஷிக்க , அது உய்யக்கொண்டார் ராமமிச்ரர் என்கிற அருவிகள் மூலம் ஆளவந்தார் ஆகிய நதியை அடைந்து கடைசியில் ராமானுஜர் ஆகிய ஏரியில் எல்லோரும் நலம் பெறுமாறு தங்கியது. “என்ற கண்ணனிடம் ,

“அந்த நீர் ஆழ்வார்கள் என்ற பல ஊற்றுகளாகவும் பரிணமித்து மக்களுக்கு நன்மை செய்தது. “ என்றால் கோதை.

“ ஆமாம் அந்த ஊற்றுகளில் பேரூற்று நீதானே என்று நகைத்தான் கண்ணன்.

மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனதினால் சிந்திக்க

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்

“ கோகுலத்தில் ஆரம்பித்து நந்த கோபன் குமரன், யசோதை இளம் சிங்கம் என்று சொல்லிப் பிறகு, நாராயணன், பையத்துயின்ற பரமன், ஓங்கி உலகளந்த உத்தமன், பத்ம நாபன் என்றாய். இப்போது மறுபடி புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டாய் போலும். நான் இப்போது மதுரை மைந்தன், யமுனைத் துறைவன் ஆகிவிட்டேன் . “ என்றான் கண்ணன்.

“ நான் உன்னை மாயன் என்றேன். ஏன் தெரியுமா? உன் கிருஷ்ணாவதாரம் முழுதும் விளக்க முடியாத மாயம். மதுரையில் பிறந்தாய் ஆகையால் மதுரை மைந்தன். கோகுலம் வந்து ஆயர்குலத்து அணி விளக்காக ஆனாய். தூய பெருநீர் யமுனைத் துறையில் நீ செய்த மாயங்கள் கொஞ்சமா? , “என்ற ஆண்டாளிடம்,“அதென்ன தூய பெருநீர் யமுனை ? “ என்றான் கண்ணன்.

“ஆம், யமுனையின் தூய்மை கங்கையிலும் மேலானது. ஏனென்றால் நீ புகுந்து விளையாடியதால். மேலும் வசுதேவர் உன்னைச் சுமந்து வரும்போது கம்சனுக்கு பயப்படாமல் வழி விட்டாள் அல்லவா? கோதாவரியைப்போல் அல்லாமல்? “ என்றால் கோதை.

“ஏன் கோதாவரியுடன் ஒப்பிடுகிறாய்? “ என்ற கண்ணனிடம் கோதை, “ “ராமனாக நீ சீதை எங்கே என்று கேட்ட போது ராவணனுக்கு பயந்து கோதாவரி பதிலுரைக்கவில்லை அல்லவா?’ என்றாள்.

கண்ணன் கூறினான். “ஆனால் வேதாந்த தேசிகர் . சொல்கிறார். ‘ப்ராயேண தேவி பவதீவ்யபதேச யோகாத் கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே,’ கோதாவரி நதி கோதா என்ற உன் பெயரை தன்னுள் கொண்டதால் தன் நீரால் இந்த உலகை புனிதமாக்குகிறது என்று.”

அதைக்கேட்டு நாணத்தால் தலை குனிந்த கோதையை பார்த்து , “அதிருக்கட்டும் , தாயைக்குடல் விளக்கம் செய்த தாமோதரன் என்று நான் உரலில் கட்டுப்பட்டதைத்தானே சொல்கிறாய்? “ என்றான்.

“ ஆம். நவநீத சோரனாய் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்தாய். உரலில் கட்டுப்பட்டு தாமோதரன் என்று பெயர் பெற்றாய். உன் தாய் உன்னைக் கட்ட எந்தக் கயிறு எடுத்தாலும் அது இரண்டு அங்குலம் குறைவாக இருக்கக் கண்டு அயர்ச்சியுற அப்போது அவ்ளுக்கிறங்கி கட்டுப்பட்டாய். அதை நினைவு கூர்ந்த நம்மாழ்வார் ‘எத்திறம்’ என்று அதிசயித்து ஆறுமாதம் உணர்ச்சிப்பெருக்கால் நினைவற்று இருந்தார் அல்லவா?”

கண்ணன் “ ஆம். அந்த அடையாளத்தை இப்போதும் அரங்கனான என் உந்தியில் காணலாம். என் தாயின் நினைவாக அதை இன்னும் சுமக்கிறேன்.” என்றான் கண்ணன்.

“தாயைக் குடல் விளக்கம் செய்தவன் அல்லவா, தாமோதரன், உதரத்தில் கயிறால் கட்டுப்பட்டவன், என்று சொல்லும்போதே உன் தாய் நினைவும் கூட வருகிறதே அத்துடன் இந்த மாயமும் வாய் திறந்து உலகம் காட்டிய மாயமும் நினைவுக்கு வருகிறது. அதனால் தான் தாயைக் குடல் விளக்கம் செய்தவன் என்றேன். அதாவது அவளுக்கு புகழ் அளித்தவன். “

“அதுவும் உன் மாய லீலை. நலகூபுரர்களின் சாபத்தைத் தீர்க்க. “ என்றவளிடம் கண்ணன் கூறினான்.

“அதனால் தான் வேதாந்த தேசிகர் என்னை உரலில் கட்டுப்பட்டவனாக யார் நினைக்கிறார்களோ அவர்கள் மறுபடி சம்சாரம் என்ற கட்டுக்குள் புக மாட்டார்கள் என்று சொல்லி, அந்த உரலை என் ,மேனி சம்பந்தம் பெற புண்ணியம் செய்த உரல் என்கிறார்.”

“ மிகுதியுள்ள வரிகளைப் பார்க்கலாமா? “ என்ற கண்ணிடம் கோதை கூறினாள்.

“தூயோமாய் வந்து தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனதினால் சிந்திக்க. ‘மலர் தூவித் தொழுவது , உடல் தூய்மை, வாயினால் பாடி என்பது வாக்குத்தூய்மை, உன்னை சிந்திப்பது மனத்தூய்மை. இதனால் என்ன பயன்?

“போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும். போய பிழை என்பது இதுவரை பயன் கொடுக்காத ஆனால் வரப்போகும் ஜன்மங்களில் பயன் கொடுக்கும் கர்மம். சஞ்சித கர்மா. புகுதருவான் என்பது இந்த ஜன்மத்தில் செய்யும் கர்மம் இனிமேல் பலனளிக்கக் கூடியது, ஆகாமி கர்மா. நின்றனவும் என்பது இப்போது அனுபவிக்கும் கர்ம பலன் பிராரப்த கர்மா. இம்மூன்றும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்துவிடும்.”

“ இனி மற்றவரை எழுப்பி பாகவதானுபவத்தில் திளைக்கச் செய்யும் உன் இனிய பாசுரங்களைக் கேட்க ஆவலாக உள்ளேன் என்றான் கண்ணன்.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்

வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

கண்ணன் இதைக் கேட்டுவிட்டு கூறினான்.

கோதையாக வந்த உன் நோக்கம் பக்தி ஒன்றே என்னை அடைய எளிதான வழி என்பதைக் காண்பிக்கவே என்று அறிவேன். இந்தப் பாவை நோன்பைத் தொடங்கி இளம் கன்னியரை அதிகாலையில் எழுந்து உன்னுடன் நாம சங்கீர்த்தனம் செய்து அதன் மூலம் அதைக் காண்போர் மனதில் பக்தியை ஊட்டுவது என்பது நல்ல முடிவு. ஆனால் உன் சொற்கள் ஆயர்பாடி சிறுமியரை அல்லவா நினைவூட்டுகின்றன? “ என்றான்.

“ஆம் . என்னை ஒரு கோபியாக பாவித்து மற்ற என் தோழிகளையும் அவ்வாறே கற்பனை செய்தேன். இந்த பாவை நோன்பு வியாசரால் பாகவதத்தில் கோபியர் செய்ததாகத்தானே சித்தரிக்கப் பட்டுள்ளது? “ என்றாள் கோதை.

“முடிவில் என்னைக் கண்டு உங்கள் கோரிக்கையை முன்வைக்கத்தான் கூட்டமாக வந்தீர்களாக்கும் . அப்போது நான் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? என்றான் கண்ணன்.

“நாங்கள் கூட்டமாக வந்ததன் காரணம் என்னவென்றால், தனியாக வந்தால் உன்னைக் கண்டதும் உலகமே மறந்து விடும்.அப்புறம் எப்படி வேண்டுவன கேட்பது? அதற்குத்தான் சேர்ந்து வந்தோம். ஒருவருக்கொருவர் தைரியம் சேர்க்க,” என்ற கோதை, மேலும் கூறலுற்றாள்.

“ ஒரு மனதிற்கினிய நிகழ்வு மற்றவருடன் சேர்ந்து அனுபவித்தால் அதிகம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நல்லதை நாலுபேருடன் பகிந்துகொள்ள வேண்டும் அல்லவா? பரதன் கௌசல்யையிடம் தனக்கு ராமன் காட்டுக்குப் போவதைப் பற்றி முன்னமே தெரிந்திருந்தால் என்னென்ன பாவத்தின் பலனை அனுபவிப்பான் என்று கூறும்போது, ஒரு இனிய பண்டத்தை யாருக்கும் கொடுக்காமல் உண்ணும் பாவத்தையும் செர்த்த்குக் கொள்கிறான் அல்லவா? எங்களுக்கு உன்னை விட இனியது எது?” என்றாள்.

புள்ளினம் கூவும் , சங்கம் ஒலிக்கும் கோவில் புள்ளரையன் கோவில் என்றாயே அது கருடனைத்தானே குறிக்கும் ? என்ற கண்ணனிடம் ,

“புள்ளரையன் கோவில் என்றது உன் கோவிலை. புள்ளரையன் என்பது கருடன் தான் பட்சிகளுக்கு அரசன் என்ற அர்த்தத்தில்ஆனால். அந்தப் புள்ளரையனின் கோ, நீதானே. உன் இல் அல்லது இல்லம் தானே கோவில். “

“ அங்கு ஒலிக்கும் சங்கு உன் அன்பர்களின் மனதில் புகுந்து உன்னை நினைவூட்டுகிறது. அதனால் அதன் ஓசை பேரரவம் ஆகிறது. “

கண்ணன் கூறினான். “பூதனை சகடாசுரன் இவர்களைப் பற்றி சொல்ல விசேஷ காரணம் ஏதும் உளதோ?”

“ஆம், சிறு குழந்தையாய் இருந்தபோதே நீ செய்த அற்புதச் செயல்கள் அல்லவா அவை? “ என்றாள் ஆண்டாள்.

“ நீ பூதனயிடம் ஸ்தன்யபானம் செய்தபோது கண்ணை மூடிக்கொண்டாயாமே அவள் உன் கடாக்ஷம் பட்டால் அவளை கொள்ள முடியாது என்றா? “ என்ற கோதையைப் பார்த்து சிரித்த கண்ணன் “ ஆம் அப்படித்தான் என் பக்தர்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். நாராயண பட்டாத்ரி என் கால் பட்டு உடைந்த சகடத்தின் ஒரு துகள் கூட காணப்படவில்லை என்று கூறின மாதிரி.” என்றான்.

“ ஆமா அவர்களுக்கு நீ ஆயர் குல சேய் அல்ல , வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்து என்பது தெரியாதல்லவா? என்றாள் கோதை.

“உலகத்தின் வித்தாகிய நீ பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொள்ள உன்னை முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் கொண்டு மெல்ல எழுந்திருக்கிறார்கள் தங்கள் த்யானத்தில் இருந்து. ஏன்தெரியுமா ? உன் துயில் கலையக்கூடாதாம். அப்போதுதானே அவர்கள் வந்து உனக்கு திருப்பள்ளி எழுச்சி பாடமுடியும்? “

“அப்படியானால் ஹரி என்ற பேரரவம் எங்கிருந்து வந்தது என்றான்” கண்ணன்.

“அப்படிக்கேள் , நீ உறங்கினால் அல்லவா உன்னை எழுப்ப முடியும்? உன்னைக் கண்டவுடனே மெய்ம்மறந்து ஹரி ஹரி என்று பேரரவம் செய்தார்கள். ‘ என்றாள் ஆண்டாள்.

“வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்து கொண்டு,” என்ற சொற்கள் எனக்கு உன் தந்தையான பெரியாழ்வாரையே சொல்வது போல் இருக்கிறது. அவர்தானே ‘ அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து ‘ என்று நான் அவர் உள்ளத்தில் எவ்வாறு ஆதிசேஷனுடனும் பாற்கடலுடனும் , லக்ஷ்மி யோடும் வந்து புகுந்தேன் என்று பாடினாரே!” என்றான் கண்ணன்.

அதற்குக் கோதை “ அவர் மட்டும் அல்ல, உன் பக்தர்கள் அனைவரும் முனிவர்களும் எல்லோரும் உன் நாமத்தைச் சொல்ல அதுவே பேரரவம் ஆயிற்று.” என்றாள்.

‘ஆம். அந்த பக்தி வெள்ளத்தில் நானும் மூழ்கினேன்.” என்றான் கண்ணன்.

“உண்மையில் சொல்லப்போனால் பாற்கடல் எது? பாலைப்போல் தூயதாக உள்ள உள்ளமே அல்லவா? அதில் அரவு என்னும் ஆயிரம் தலை நாகம் அதாவது உலக இச்சைகள் எல்லாம் அடங்கி அதில் நீ மட்டுமே துயில் கொள்கிறாய். மற்ற இச்சைகள் அடங்கி உள்ளம் பால்போல் தூயதாக ஆகுமேயானால் இறைவனாகிய நீ தானாகவே வந்து வாசம் செய்கிறாய் என்று அர்த்தம்.” என்று சொன்ன கோதையிடம் “நன்று நன்று” என்றான் அந்த ரங்கசாயி.

கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசம் உடையாய் திறவேலோரெம்பாவாய்

கண்ணன் கூறினான். “ விடியற்காலையைப் பற்றி ஒரு அழகான வர்ணனை. ஆனைச்சாத்தன் என்ற வலியன் குருவி கீச் கீச் என்று ஒன்றோடுஒன்று கலந்து பேசும் அரவம், ஆய்ச்சியர் தயிர் கடையும் அரவம். இதுதான் எனக்குப் பிடித்தது. வெண்ணை கிடைக்கும் அல்லவா?”

“ தயிர் கடையும் அரவம்ஆயர்பாடியில் ஏன் உரக்கக் கேட்கிறது தெரியுமா? நீ வந்தபின்னர் பால் மிகுந்த ஆடையுடன் இருக்க தயிர் பாறைபோல் கெட்டியாக ஆகிவிட்டது. அதை மிகுந்த பிரயாசையுடன் கடையும்போது , காசும் பிறப்பும் என்னும் அவர்கள் கழுத்தில் உள்ள ஆரம் சப்தம் செய்தது.” என்ற ஆண்டாளைப் பார்த்து,

“வாச நறும் குழல் என்றாயே , நக்கீரர் காதில் விழப்போகிறது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாது என்று கூறிக்கொண்டு வரப் போகிறார், “ என்று நகைத்தான் கண்ணன்.அதற்கு கோதை பதில் கூறினாள்.

“அவர்கள் யார்? அப்சரஸ்திரீகள் தானே கோபியராக வந்தனர். அவர்கள் கூந்தலில் நறுமணம் வீசுவதில் வியப்பென்ன?”

“நான் பேசின பேச்சரவம் என்று கூறியது பட்சிகளின் பேச்சை அல்ல. ஒரு யானையைக் கொன்று மற்றொரு யானைக்கு அபயம் அளித்ததால் ஆனைச்சாத்தன் என்றது உன்னை. கலந்து பேசின பேச்சரவம் நீயும் திருமகளும் பக்தர்களைக் காக்க நிகழ்த்திய சம்பாஷணை. உங்களைப் பற்றி நினைவே இல்லாமல், நாங்கள் நாராயணன் மூர்த்தி கேசவன் ஆகிய உன்னைப் பாடுவது கேட்டும் மஞ்சத்தில் கிடந்தவளை பேய்ப்பெண்ணே என்றேன்.” என்றால் ஆண்டாள்.

அப்போது கண்ணன் கேட்டான். “உடனே நாயகப் பெண்பிள்ளாய் என்றாயே , அவள் கோபித்துக் கொள்வாள் என்றா?”

“ இல்லை. அவள் நாங்கள் கூப்பிட்ட உடனே வந்து சேர்ந்து நாமசங்கீர்த்தனத்தில் கலந்து கொண்டதால் நாயகப் பெண்பிள்ளாய் என்றேன்.

“உன் சொற்களுக்கு சில அன்பர்கள் வேறு உள் அர்த்தம் கொள்கிறார்கள். காசு பிறப்பு என்பது ஸ்ருதியும் ஸ்ம்ருதியும். கலகலப்ப என்றால் அவை சேர்ந்து ,என் புகழ் பாடுவது. வேதத்தை நன்கு கற்றுணர்ந்த, வாச நறும் குழல் ஆய்ச்சியர், பக்தி என்னும் மணம் வீசும் ஆசார்யர்கள், கை பேர்த்து, உயர்ந்த கைகளுடன் என் பெருமையைக் கூறுகிறார்கள், என்று பொருள் எனக் கூறுகிறார்கள்.

“அது நான் செய்த பாக்கியம், உன் திருவருள்,” என்ற கோதை, தயிர் கடைவது என்பது பக்தி என்ற மத்தினால் மனத்தைக் கடைவது என்று வைத்துக் கொண்டால் நீ வெண்ணை என உன்னை வெளிப்படுத்துவாய். “ என்றாள்.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை

கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய

பாவை எழுந்திராய் பாடிப்பறை கொண்ட

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்

“ கீழ் வானம் வெள்ளென்று அதாவது கிழக்கு வெளுக்க, நீராடப் போகும் மிக்குள்ள பிள்ளைகளை போகாமல் காத்து இந்தப் பெண்ணை எழுப்புகின்றாய். சரி. எருமை சிறு வீடு மேய்வான் என்றாயே அது எதற்கு.” என்ற கண்ணனிடம்,

பொழுது விடிந்ததும் முதலில் எருமைகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள் பிறகுதான் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துப்போவது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஏன் என்று கோபாலனாகிய உன்னையன்றி வேறு யார் அறிவார்? “ என்றால் ஆண்டாள்.

“ ஆம். அதைக் கூறவே இந்தக் கேள்வி, “ என்ற கண்ணன் , விடியல்காலையில், புற்கள் மீது பனி படர்ந்திருக்கும்.இது பசுக்களுக்கு ஒவ்வாதது. ஆனால் எருமைகள் அந்தப்புல்லைத் தின்று அதிகமாக பால் கறக்கும் இயல்புடையவை.,.” என்றான் .

"கோதுகலமுடைய பாவை என்றால் அது கௌதூஹலம் என்ற வடமொழிச்சொல்லின் திரிபா "என்றவனிடம் ஆண்டாள் கூறினாள்.

"அப்படியும் எடுத்துக்க்கொள்ளலாம். இது உனக்குப பிரியமான பக்தரைக் குறிக்கிறது. பாவை என்றால் பதுமை போல உன்னையே நினைத்து அசைவற்றிருப்பவர்.

"கோதா என்ற பெயருக்கேற்ப சொல்லின் சக்தியால் பக்தியை ஊட்டும் உன்னை விடவா எனக்கு பிரியமானவர் ஒருவர் இருக்க முடியும்."

“ சரி, அடுத்த வரிகளைப் விளக்குகிறாயா? “ என்றான் கண்ணன்.

“மாவாய் பிளந்தான் என்பது நீ கேசி என்ற குதிரை வடிவில் வந்த அரக்கனை வாய் பிளந்து அழித்தது. மல்லரை மாட்டிய, என்பது கம்சனால் ஏவப்பட்ட மல்லரை வீழ்த்தியது.”

“அப்படிப்பட்ட உன்னை சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து, நம் பக்தியை உள்ளபடி அறிந்து அருள்வாய் என்று கூறினேன்.” என்றாள் ஆண்டாள்.

“நான் ஆராய்ந்தா அருளுகிறேன்? என் பக்தர்கள் யாவரும் எனக்கு ஒன்றுதானே? “என்றான் கண்ணன்.

“ஆம் உண்மை. ஆனால் முதல் அடி நாங்கள் எடுத்து வைக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் சென்று நாம் சேவித்தால் நம் பக்தியை உணர்ந்து கேட்டதெல்லாம் அருள்வான் என்றேன்.” என்றாள் கோதை.

“கோதா என்ற பெயர் படைத்தவளான உன் வாக்கிலிருந்து வரும் சொற்கள் எல்லாம் உயரிய அர்த்தம் வாய்ந்தவை. இநத பாசுரத்தை என் அன்பர்கள் எப்படி எல்லாம் வர்ணிக்கிறார்கள் தெரியுமா? “ என்ற கண்ணன் மேலும் கூறினான்.

“மாவாய் பிளந்தான் என்பது இந்த்ரியங்களாகிய குதிரைகளை அடக்கி , மல்லரை மாட்டிய அதாவது எதிர்வாதம் செய்தவர்களை ஜெயித்து உலகில் பக்தியை நிலைநாட்டிய ராமானுஜர் போன்ற ஆசார்யர்களைக் குறிக்கிறது. .”

“போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் என்பது இந்த்ரியங்களின் வழியில் போகின்றவர்களை காத்து நல்வழிபடுத்தும் ஆசார்யர்கள். “

கோதை , “எல்லாம் உன் திருவுள்ளமே அல்லவா? என் வாக்கில் வந்த வார்த்தைகள் நீ தந்ததுதானே?” என்றாள்.

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணை மேல் கண்வளரும்

மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ நும் மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

எமப்பெரும் துயில் மந்திரப்பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றும்

நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்

“தூமணி மாடம் என்றதும் எனக்கு கோகுலம் நினைவுக்கு வருகிறது. அங்குள்ள எல்லா மாளிகைகளிலும் ரத்தினங்கள் பதிக்கப் பட்டு தூமணி மாடங்களுடன் ஜகஜ்ஜோதியாக விளங்கும் .ஒரு சம்ப்ரதாயத்திற்காகத்தான் அங்கு விளக்கு ஏற்றுவது வழக்கம்.” என்றான் கண்ணன்.

“நானும் கோகுலத்திற்கே போய்விட்டேன் கற்பனையில், அதனால் தான் அந்த மாளிகையில் உறங்கும் பெண்ணை மாமன்மகளே என்றேன். “

“உண்மையில் பக்தர்களுக்கு பகவத்ஸம்பந்தம் உடையோர்தான் பந்துக்கள். அல்லாதார் பிறப்பினால் உற்றார் ஆனாலும் மற்றாரே. மாதவா வைகுந்தா என்று உள்ளத்தில் பக்தியை பிறப்பிப்போரே உண்மையான பெற்றோர்.” என்ற கோதையிடம் “ என்னை மறுபடியும் மாமாயன் என்று கூறிவிட்டாயே?” என்றான் கண்ணன்.

“மாமாயன் என்றால் மா அதாவது லக்ஷ்மியின் பதி , மாதவன் என்று பொருள். ஆனாலும் நீ மாமாயன்தானே. உன் மாயை என்பது ஒரு கறுப்புக் கண்ணாடிக் கதவு. அதன் மூலம் நீ எங்களைப் பார்க்கிறாய் ஆனால் அது உன்னை எங்களுக்கு மறைக்கிறது. “

“விராதன் கூறினானே, ‘பசு அதன் கன்றை எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டு கொள்ளும். அதுபோல எங்களை நீ அறிவாய் . ஆனால் உன் திருவுள்ளம் அன்றி நாங்கள் உன்னை அறிய முடியாது.; என்று. இந்திரன் முதலிய தேவர்களாலேயே உன்னை இனம் கண்டுகொள்ள முடியாமல் உன் மாயை மறைத்தல்லவா?” என்றாள் கோதை.

“‘அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே ,’ என்று நம்மாழ்வார் கூறினபடி உன் மாயையை யாரால் அறிய முடியும்? என்ற ஆண்டாளிடம் , “ம்ம், அப்புறம்? “ என்றான் அந்த மாயவன்.

“உன் மாய லீலைகளுக்கு ஒரு எல்லை உண்டா என்ன ? வராஹாவதாரத்தில் சமுத்திரம் உன் கணுக்கால் வரை தான் இருந்தது . ஆனால் கிருஷ்ணாவதாரத்தில் உன் தாய் ஒரு கை ஜலத்தால் உன்னை நீராட்டினாள். அதுமட்டுமா? ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ,’ என்பாதத்தை சரணமடை,’ என்று சொன்னவன் தாய் நீராட்டும்போது அவள் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாயே!” என்றாள் கோதை.

“இப்போது மற்ற வரிகளைக் காண்போமா? “ என்றான் கண்ணன்.“தூமணி என்றது வேதங்கள் ஸத்யஸ்ய ஸத்யம் என்ற உன்னைத்தான் .நீ இருக்கும் உள்ளமே மாடம். சுற்றும் சுருதி ஸ்ம்ருதி புராணம் என்ற விளக்குகள் உன்னைப்பற்றிய அறிவை விளக்குகின்றன. உன்னில் ஆழ்ந்து இருப்பதே துயிலணை மேல் கண் வளர்வது, அந்த நிலையில் உள்ளவன் இந்த்ரியங்கள் வெளிப்பார்வை அற்று ஊமையைப் போலவும் , செவிடைப் போலவும், அனந்தல், அதாவது பித்தனைப் போலவும் தோற்றம் அளிக்கிறான். உலக சிந்தனை அற்று ஏமப் பெருந்துயில் கொண்டவன் போல் காணப் படுகிறான் . அப்படி உள்ளவர்கள் வெளிப்போந்து மற்றவர்க்கு வழி காட்டுவதென்பதே மணிக்கதவம் தாள் திறப்பது.அது நீ திருவுள்ளம் கொண்டால் தான் இயலும் . அதற்குத்தான் மாமீர் என்று புருஷகாரபூதையான திருமகளை அழைக்கிறோம். “ என்றாள்.

“அடேயப்பா, நான் ஏதோ பெரிய மாளிகையில் சுகமான பஞ்சணையில் தூங்கும் பெண்ணை எழுப்புகிற வரிகள் என்று நினைத்தேன்.” என்றான் கண்ணன்.

“ ஒரு பகவதனுபவத்தில் ஈடுபட்ட ஒருவரை உருவகப்படுத்தியதுதான் அந்தப் பெண்ணைப பற்றிய வர்ணனை. “ என்றால் கோதை.

“உன் அடுத்த பாசுரத்திற்காக நான் வேறு வேடம் அணிகிறேன் “ என்று நகைத்தான் கண்ணன்.

“ஆம் வில்லேந்தி வரவேண்டும்.” என்றாள் கோதை.

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத்துழாய் முடி நாராயணன் நம்மால்

போற்றப்பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே

தேற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்

“நீ கும்பகர்ணனை சொல்லப்போவதால் நான் ராமனாகிவிட்டேன் .”என்றான் கண்ணன்.

“இந்தப் பெண் உன்னை அடைவதே சுவர்க்கம் என்ற எண்ணத்தை உடையவள். ஆனால் அதை மறந்து இங்கே தூங்குகிறாள். கதவையும் திறக்கவில்லை , மறுமொழியும் தரவில்லை.அதனால் தான் கும்பகர்ணன் என்றேன்.” என்ற கோதை,

உண்மையில் எங்களுக்கு சுவர்க்கம் என்பது உன்னை அடைவதுதான். நோற்று என்றால் பக்தி மூலம் அடைவது. புகுகின்ற அம்மனார் என்பது உன்னை சேர்கின்ற பக்தர்கள்.”

“ வாசல் திறவாதார் யார் ? உன்னை சேரவொட்டாமல் தடுக்கும் த்வாரபாலகர்களான இருவினைகள் . அவை மாற்றமும் தாராரோ, அதாவது புண்ணியமாக மாறி விடாவோ?’

“உனக்கு சர்வ நிச்சயமாக பக்தர்களுக்கு எந்தத்தடையும் ஏற்படாது என்று தெரியுமா?” என்றான் கண்ணன்.

“ஆம், ஏனென்றால் நீ நாராயணன் ஆனாலும் நம் மால் , பக்தர்களை இனவேறுபாடில்லாமல் ஏற்றுக் கொள்பவன். போற்றப் பறை தரும் புண்ணியன். ஜடாயு சபரி இவர்கள் நினவு வந்ததால் ராமனாக உன்னைக் காண்கிறேன் “ என்றாள்.

”அது சரி, அவர்களுடன் கும்பகர்ணனும் நினைவுக்கு வந்தானோ ?” என்று குறும்புப் புன்னகை புரிந்தான் ராமனாக நின்ற கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “ முக்திக்கு முக்கிய இடையூறுகள் , உன்னைப் பற்றிய அறிவின்மை, அதனால் உலக இன்பங்களில் ஈடுபாடு. கும்பகர்ணன் இந்த்ரிய சுகங்களில் ஈடுபடாத சமயங்களில் உறங்குவான். இதுதான் கூற்றத்தின் வாய் வீழ்வது,.மரணம், ஜனனம், மரணம் என்ற சுழலில் அகப்படுவது. அவன் ராமனான உன்னால் வீழ்ந்தான் அந்தப பெரும் துயிலை கலியில் மக்களுக்கு அளித்துவிட்டு. அதைத்தான் கூற முயன்றேன். “ என்றாள்.

“அதெல்லாம் சரி. திடீரென்று ராமனாக என்னைக் காண விரும்பியது ஏன்.”

“ சொல்கிறேன் . ராமனான நீ புண்ணியன் , ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி. மேலும் சரணாகத ரக்ஷகன், ‘அபயம் சர்வபூதானாம் ததாமி இதி ஏதத் வ்ரதம் மம, என்னை சரணம் புகுந்தவன் யாரானாலும் ராவணனே ஆயினும் அவனைக் காப்பாற்றுவேன் என்ற விரதம் பூண்டவன் அதனால் போற்றப்பறை தரும் புண்ணியன் என்றவுடன் உன் ராம ஸ்வரூபம் மனக்கண்முன் தோன்றியது. “ என்றாள் கோதை.

“ஆற்ற அனந்தல் உடையாய் என்பது பரம ஏகாந்தியாக உன்னையே நினைத்திருப்பவர். அவர் அருங்கலமாக எல்லோருக்கும் ஒரு தீபத்தைப் போல் வழி காட்டுகிறார். “ என்ற கோதையிடம் , “நான் வேஷத்தைக் கலைத்துவிடவா ,”என்றவனை “இரு, இரு, இன்னும் ஒரு பாசுரம் ஆகட்டும் அப்புறம் மறுபடி இவ்விதமே வரவேண்டி இருக்கும்.” என்றால் கோதை.

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றரவல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்துத் தோழிமார் யாவரும் வந்து நின்

முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ

எற்றுக்குறங்கும் பொருள் ஏலோரெம்பாவாய்

“ இப்போது பசுக்களை கறக்கும் நேரம் வந்துவிட்டதாக்கும்.” என்ற கோபாலன் ,” கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து என்று நீ சொல்வது மிகவும் சரியானதே. ஆயர்பாடியில் கணக்கிலாத பசுக்கள். பால் ஏராளமாக இருந்த போதிலும் அவைகளின் மடிக்கனத்தைக் குறைப்பதற்காகவே கறப்பது வழக்கம். அதுவும் ஒரு தேகப் பயிற்சியாகவே யாதவர்கள் செய்வார்கள். ஏனென்றால் நீ கூறியுள்ளபடி செற்றார் திறலழிய சென்று செருச்செய்பவர்கள் அல்லவா? எதிர்ப்பவர்களை வெல்ல பலம் வேண்டுமே” என்றான் கண்ணன்.

“ ஆனால் ஆயர்களுக்கு யார் எதிரிகள்? உனக்கும் உன் அன்பர்களுக்கும் கெடுதல் நினைப்போரே. ஏனென்றால் அவர்கள் குற்றம் ஒன்றில்லாத கோவலர்கள் அல்லவா?” என்றாள் கோதை.

“ நீ எழுப்ப நினைக்கும் பெண் அப்படி ஒருவர் பெண்ணல்லவா? பொற்கொடி, அழகான பொற்கொடியைப்போன்றவள் , புற்றரவு அல்குல், புற்றில் இருந்து வெளிப்படும் பாம்பைப் போன்ற அளகபாரம் உடையவள், புன்மயில், ஆடும் மயில் என்று வர்ணித்தாயே , பாம்பும் மயிலும் எங்காவது ஒரே இடத்தில் இருக்குமா? “ என்றான் கண்ணன்.

“ பொற்கொடி என்றால் கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடும் மனம் படைத்த பக்தர் , பத்தரை மாற்றுத் தங்கம் போன்றவர். போன்றவர். புற்றரவல்குல் என்றால் ஊருக்குள் இருக்கும் பாம்பு போன்ற பரம ஏகாந்தி. தன் பெருமையை மறைத்துக் கொள்பவர். அதே சமயம் முகில் வண்ணனாகிய உன்னைக் கண்டபோது மேகத்தைக்கண்ட மயில்போல் ஆனந்தம் அடைபவர். “

“அப்படிப்பட்டவர் உன்னுடைய செல்வப்பெண்டாட்டி போன்றவர். உன்னையே நினைந்து சிற்றாதே , அசைவின்றி, பேசாதே , பேச்சின்றி, எற்றுக்கு உறங்கும், , உறங்குவது போல் உன்னில் ஆழ்ந்திருப்பர். “ என்றாள் கோதை.

“ அப்படியானால் முதல் இரு வரிகளின் பொருள் என்ன” என்றான் , கோவிந்தன்.

ஆண்டாள் கூறினாள்.

“கற்றுக் கறவைகணங்கள் என்பது வேதம் உபநிஷத் எல்லாம்.அதை கறந்து பாலை எல்லோருக்கும் கீதை மூலம் வாரி வழங்கியவன் நீ. ‘ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபாலநந்தன: ,’ என்று சொல்வர் பெரியோர், உபநிஷத் என்ற பசுக்களிடம் இருந்து பாலைக் கரந்தவன் , என்று உன்னை.”

செற்றார் திறல் அழிய சென்று செருச்செய்பவனும் நீயே . பக்தர்களுக்கு ஓர் இடையூறு செய்பவர்களை உடனே சென்று அழிக்கவில்லையா.? கஜேந்திரனுக்கு ஓடி வந்து அபயம் அளித்தாய். பாண்டவர்களுக்கு கெடுதலே செய்துவந்த கௌரவர்களை குருக்ஷேத்ரம் சென்று அழித்தாய்.. ஆகவே குற்றம் ஒன்றில்லாத கோவலன் உனக்கு செல்வப் பெண்டாட்டி போல உள்ள பக்தர்கள் எதற்கு கவலைப்பட வேண்டும்? “ என்றாள்.

“ என்னைசரண் அடைந்தவர்களைக் காப்பது என் கடன்.” என்றான் கோவிந்தன்.

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால்சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

“கும்பகர்ணன் வதத்திற்குப் பிறகு இப்போது ராவண வதமா? நான் இன்னும் ராமனாகவே காத்துக்கொண்டிருக்கிறேன் என்றான் கண்ணன்.”’

“ சினந்திங்கு தென்னிலங்கைக் கோமானைச் செற்ற , என்ற வரியின் பொருள் ராவண வதம் மட்டும் அல்ல, “ என்ற கோதையை வியப்புடன் பார்த்து நின்றவனிடம் அவள் கூறினாள்.

‘நோற்றுச்சுவர்க்கம் ‘ என்ற பாசுரத்தில் ‘சென்று செருச்செய்யும் குற்றமொன்றில்லாத கோவலன் ‘ என்று உன்னைக் குறிப்பிட்டதன் பொருள், நீ எப்போதும் மக்களை விட்டு விலகிச் சென்றுதான் போர் புரிவாய். மதுரை மக்களுக்கு இடையூறு நேராத வண்ணம் ஜராசந்தனை வெளியிலே சந்தித்து அவனை நீ ஓடுவதாக ஏமாற்றி த்வாரகைக்கு மக்களையும் அழைத்துச் சென்று விட்டாய். மஹாபாரதப போரும் ஹஸ்தினாபுரத்தில் இருந்து தூரத்தில் குருக்ஷேத்ரத்தில்தான் நடந்தது. ராமாவதாரத்திலும் இலங்கைக்கு வெளியேதான் போர் புரிந்தாய் “ என்ற கோதையைப் பார்த்து, இலங்கையை நான் ஏற்கெனவே விபீஷணனுக்குக் கொடுத்துவிட்டேனே, அதைக் காப்பாற்ற வேண்டாமா என்றான் கண்ணன்.

“அதனால்தான் சினந்து இங்கு தென்னிலங்கைக் கோமானை செற்ற , இலங்கை அரசனைத்தான் அழித்தாயே தவிர இலங்கையை அல்ல , என்ற பொருளில் கூறினேன்.” என்றாள்.

மேலும் கோதை கூறினாள். அதிருக்கட்டும். ராவணனேயானாலும் சரண் அடைந்தவனைக் காப்பேன் என்றாயே, இலங்கையை விபீஷணனுக்கு கொடுத்த பின்பு ராவணன் சரண் அடைந்தால் நீ கொடுத்த வாக்கு என்ன ஆவது?” என்றாள் .

“உன்னையே இழந்தாலும் லக்ஷ்மணனையே இழந்தாலும் கொடுத்த் வாக்கைக் காப்பேன் , என்று நான் சீதையிடம் கூறியதை வைத்துக்கொண்டு என்னை மடக்குகிறாயாக்கும். ராவண யுத்தத்தின்போது என் பதினான்கு வருட வனவாசம் முடியும் தருணம் அல்லவா? அப்போது அயோத்தி என் வசம்தானே? அதை கொடுத்திருப்பேன், என்று சொன்னதும் கோதை, “அய்யய்யோ” என்றாள்.

“பயப்படாதே . அது என் சரணாகதரக்ஷகன் என்ற பெயரை நிலை நாட்டவே. ராவணன் சரணடைய மாட்டான் என்பது எனக்கு மட்டும் தெரிந்த தேவ ரகசியம். அதனால்தான் விபீஷணனுக்கு ‘இந்தா விபீஷணா லங்காபுரி ராஜ்ஜியம்’ என்று கொடுத்தேன்.” என்றான் கண்ணன்.

“ நீ ராமன் வேடத்தில் இருந்தாலும் மாயக் கண்ணன்தான் என்பதை நிரூபித்துவிட்டாய்,” என்ற கோதை,

“அதனால்தான் உன்னை மனத்துக்கினியான் என்று குறிப்பிட்டேன். உன்னை வால்மீகி ‘ஸோமவத் பிரியதர்சன: ‘, உன் தரிசனம் சந்திரனைக் கண்டது போல் ஆனந்தம் அளிக்கிறது என்று கூறினார்.

எருமை தன் கன்றை நினைத்த மாத்திரத்தில் கனைத்து முலைவழியே பால் சோர நிற்பது போல நீ எங்களை நினைத்து உன் அருளாகிய பாலை சொரிந்துகொண்டே இருக்கிறாய், “ என்ற கோதையைப் பார்த்து, “ ஆம் பசுவுக்கு கன்றைப் பார்த்தால்தான் பால் சுரக்கும். பசுக்களைக் கற்க நேரம் ஆனால் அதற்குள் எருமைகள் கன்றை நினைத்து பால் சுரக்கும்,” என்ற கண்ணன் குறும்புடன் கூறினான்.

“ நந்தகோபன் குமரன், யசோதை இளம் சிங்கம் ஆக இருந்த நான் இப்போது எருமை ஆகிவிட்டேனே.”

கோதை அவனுக்கு சளைத்தவளா? “ நீ மட்டும் அல்ல , உன் துணைவியும் கூட.” என்றாள்.

“அப்படியானால் சரி. ஒரு மகிஷத்தின் துணைவியும் மகிஷியாக இருப்பதுதானே நியாயம் “ என்றான் கண்ணன்.

‘ந கச்சித் நாபராத்யதி,’ யார்தான் தவரிழைக்கவில்லை என்று கூறிய சீதா பிராட்டி தன் கன்றை நினைத்துக் கருணைப்பால் சொரியும் மகிஷி , பெண் எருமை போல.அதோடு மட்டும் அல்ல . அவள் உனக்கே கருணையை உபதேசித்தவள், ராவணனுக்கும் ஹிதோபதேசம் செய்தவள்.

நற்செல்வன் தங்காய் என்ற சொல்லும் ஸ்ரீதேவியையே குறிக்கும். தங்காய் என்றது அவள் பொன் வண்ண உருவம். அவள் நற்செல்வனாகிய உனக்கே உரியவள் அல்லவா? செல்வத்திருமகளை அடைந்ததால் நீயும் நற்செல்வன் ஆகிறாய். “ என்ற ஆண்டாளைப் பார்த்து,

“அவளைப் போலவே பூதேவியான உன்னையும் ஆடைந்ததுதான் என்னுடைய பெரும் செல்வம். அவளைப்போலவே நீயும் உன் குழந்தைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு என்னிடம் அவர்களுக்கு அருளும்படி யாசிக்கிறாய் அல்லவா? அதற்காகத்தானே இங்கு அவர்களை நல்வழிப் படுத்த ஆண்டாளாகவும் வந்திருக்கிறாய். “ என்ற கண்ணன் ,

“எனக்கு இந்தப்பாசுரத்தில் ‘அனைத்தில்லம் சேறாக்கும்’, ‘பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி ‘ என்ற வர்ணனை பிடித்திருக்கிறது. இதற்கும் எதாவது விசேஷ விளக்கம் சொல்லப்போகிறாயா” என்றான்.

“ஆம். தலைக்குமேல் நீர்வண்ணம் , அதாவது நீ, கீழே பால்வண்ணம் பாலாக ஓடும் எங்கள் பக்தி, உன்னையே நினைந்து மால்வண்ணம் கொண்ட நாங்கள் அன்பு வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் நாங்கள் வந்த காரியத்தை மறந்து விடாமல் இருக்க இந்த உடல் உணர்வு என்ற வாசற்படியை விடாமல் பிடித்துக்கொள்ள வேண்டியதாகிறது.

பேருறக்கம் என்பது பகவத் சிந்தனை இன்றி இத்தனை ஜன்மம் கழித்தோமே அதுதான். .” என்றாள்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

“இந்தப் பாசுரத்தில் என்னுடைய எந்த ரூபத்தை வர்ணிக்கிறாய் என்று தெரியவில்லையே ? கிருஷ்ணனாகவா, ராமனாகவா அல்லது நரசிம்ஹனாகவா?” என்றான் எல்லாம் அறிந்தவன் ஒன்றும் அறியாதவன் போல்.

ஆண்டாள் கூறினாள். “ என் வாக்கிலிருந்து வரும் எல்லா சொற்களுமே உன் சங்கல்பத்தினால் வருவது. உனக்குத் தெரியாதாக்கும். என் வாயிலாகக் கேட்கவேண்டும் என்பது உன் விருப்பம். சொல்கிறேன்.

“ உண்மையில் மூன்று அவதாரங்களையும் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானை என்பதைப் பிரித்து அர்த்தம் கொண்டால்,புள்ளின் வாய் கீண்டான் என்பது நீ கிருஷ்ணனாக நாரை வடிவில் வந்த பகாசுரனைக் கொன்றது. பொல்லா அரக்கன் என்பது ராவணனையும் குறிக்கும் ஆதலால் அது உன் ராமாவதாரத்தையும் சொன்னதாக ஆகிறது. கிள்ளிக்களைநதானை என்பது உன் நரசிம்ஹாவதாரத்தைக் குறிக்கும் , இரணியனை நகத்தால் கிள்ளி அழித்ததால். பிரிக்காமல் ஒரே தொடராகக் கொண்டால், புள்ளின்வாய் கீண்டான், அதாவது ஜடாயுவைக் கொன்ற பொல்லா அரக்கன் ராவணனைக் கிள்ளிக் களைந்தானை, அதாவது ராமனை என்று பொருள்கொள்ளலாம்.”

“பிரமாதம்” என்ற கண்ணன் , “ஆனால் ஒரு சின்ன சந்தேகம். அரக்கன் என்றால் ராக்ஷசன். ஹிரண்ய கசிபு அசுரன் அல்லவா , சுரர்களின் அதாவது தேவர்களின் மாற்றாந்தாய் மக்கள்,” என்ற கண்ணனைப் பார்த்து, “ராமன் என்றதும் கம்ப ராமாயணம் நினைவுக்கு வந்துவிட்டதாக்கும்.. அதையும் என் வாயால் கேட்கவேண்டுமாக்கும் . .கம்ப ராமாயண அரங்கேற்றத்தில் திருவரங்கத்தில் இரணியவதைப் படலத்தின் போது நரசிங்கமாக ஆர்ப்பரித்ததை நானும் கேட்டேனே, “ என்ற ஆண்டாள் கூறினாள்.

“ கம்பன் சொற்படி, “இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினார், அரக்கர் என்று உளர் அறத்தின் நீங்கினார்.” இந்த முறையில் இரணியனும் அரக்கன் ஆகிறான். பெற்ற பிள்ளை என்று கூடப பாராமல் ப்ரஹ்லாதனைக் கொல்ல முயற்சித்தான் அல்லவா?”

“அருமையாகச் சொன்னாய் “ என்றான் கண்ணன்.

“கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார் , எல்லாப்பெண்களும் உன் புகழ் பாடிக்கொண்டு பாவை நோன்புக்காக வந்து விட்டார்கள். வர மனமிருந்தாலும் எழுந்திருக்க மனமில்லாமல் பள்ளிகொண்டு இருப்பவளைப பற்றிய பாட்டு இது. ‘. போதரிக்கண்ணினாய் என்பது தாமரைக்கண் என்ற பொருளில் சொல்லப்பட்டாலும், அரி அல்லது மனம் என்ற வண்டு, போது அல்லது இந்த்ரியங்களாகிய மலருக்குள் சிறைப்பட்டுக்கிடக்கின்றது. . அதனால் கள்ளம் தவிர்ந்து , கள்ளத்தூக்கத்தை விட்டு வந்து கலந்து கொள் என்று பொருள்,” என்ற ஆண்டாளைப்பார்த்து ,

“அழகான விளக்கம் “ என்ற கண்ணன் கேட்டான், “ஆமாம் நீராடுவது சரி. அதென்ன குள்ளக்குளிர குடைந்து நீராட்டம்? “

ஆண்டாள் கூறினாள், “ நீராட்டம் என்பது உன்னை நினைப்பது. குடைந்து நீராடுவது, உன்னை அர்ச்சாவதாரமாக வழிபடுவது., குளிர நீராட்டம் உன் அவதார ரூபத்தை வழிபடுவது. குள்ளக்க்குளிர நீராடுவது உன்னை வைகுண்டத்தில் தரிசிப்பது. முதல் இரண்டும் மூன்றாவதற்கு வழி வகுக்கும்,.”

“ ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய் “ என்றான் கண்ணன்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

“சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று என்னை நாராயணனாகக் காண்கிறாய் அல்லவா இப்போது?” என்றான் கண்ணன்.

“இல்லை , இன்னும் உன்னை கண்ணனாகவே காண்கிறேன். நீ கண்ணனாக அவதாரம் செய்தபோது உன் பெற்றோருக்கு இப்படித்தானே தோன்றினாய்? மேலும் உன்னை பங்கயக்கண்ணன் என்றேனே, எந்த அவதாரம் எடுத்தாலும் நீ உன் தாமரைக் கண்களைக் கொண்டு உன்னை அறிந்துகொள்வோம். ஏனமாய் வந்தாலும் சீயமாய் வந்தாலும் உன் கமலக்கண் உன்னைக் காட்டிக்கொடுக்குமே. “ என்றாள் ஆண்டாள்.

“இந்தப் பாசுரத்தில் உங்களை முன்னம் வந்து எழுப்புவதாகச் சொன்ன பெண்ணை நாணாதாய் நாவுடையாய் என்று எழுப்புகிறாய் போலும்.செங்கழுநீர்ப்பூ மலர்ந்து ஆம்பல் குவிந்தது என்றால் சூரிய உதயம் ஆகிவிட்டது என்று பொருள் அல்லவா? செங்கழுநீர் மலர்வதை வாய் நெகிழ்ந்து என்று கூறினதன் பொருள்? என்ற கண்ணனுக்கு கோதை மறுமொழி கூறினாள்.

“ஏனென்றால் அது வாய் திறந்து சிரிப்பது போல் உள்ளது சூரிய உதயத்தினால் அல்ல. உன் கோவில் திறப்பதை உணர்த்தும் சங்கொலி கேட்டு, உன்னை தான் அலங்கரிக்கப் போவதை உணர்ந்த மகிழ்ச்சியால். அதே காரணத்தால் ஆம்பல் வாய் கூம்பி வருத்தத்தை தெரிவிக்கிறது.”

“செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் என்பது எனக்கு திருப்பாவை ஜீயரான ராமானுஜரை நினைவுபடுத்துகிறது. திருவரங்கத்தில் செங்கல் வண்ண வஸ்திரம் அணிந்து முதலில் தரிசனத்திற்கு வரும் அவரை மனக்கண்முன் காண்கிறேன். “ என்றான் கண்ணன்.

“நினைவுக்கு வருகிறதா? உன் அடியாரை நீ மறந்தால் அல்லவா நினைவுக்கு வருவதற்கு ?” என்றாள் ஆண்டாள்.

“இந்தப் பாசுரத்தில் உங்களை முன்னம் வந்து எழுப்புவதாகச் சொன்ன பெண்ணை நாணாதாய் நாவுடையாய் என்று எழுப்புகிறாய் போலும், செங்கழுநீர் மலர்கள் எங்கும் மலர்ந்திருக்க ‘உங்கள் புழக்கடை தோட்டத்து வாவி என்று சொல்லகாரணம்?” என்றான் கண்ணன் அவள் வாய்மூலம் தத்துவ விளக்கம் வேண்டி,.

“ மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் அதுதான் பொருள். ஆனால் உங்கள் புழக்கடை என்றால் அது சம்சாரம்.அதில் உள்ள தோட்டம் சரீரம். செங்கழுநீர் என்பது ஆத்மகுணங்களான அஹிம்சை, இந்திரிய நிக்ரஹம், ஜீவ காருண்யம், பொறுமை, ஞானம், தவம், தியானம் , சத்யம் இவையாகும். அவை உன் நினைவு என்ற சூரியன் உதிக்கும் போது மனதில் மலர்கின்றன. காமக்ரோதம் முதலிய ஆம்பல்கள் கூம்பி விடுகின்றன.”

“நாணாதாய் என்றால் நாமசங்கீர்த்தனம் செய்ய தயக்கம் தேவையில்லை என்பதைக் குறிக்கிறது. உன் நாமம் சொல்பவர்தான் நாவுடையவர்கள் . மற்றவர்களின் நாவு உண்பதற்கு மட்டுமே. பிற விஷயங்களைப் பற்றி பேசும் நாவு ஒரு வேண்டாத உபயோகமற்ற அங்கம்.” என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் கூறினான்.‘கோதை, நீ மக்களை நல்வழிப்படுத்த படாத படுகிறாய். . ஆனால் எவ்வளவு தூரம் அது பலனைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும். ஏனென்றால் ‘இந்த்ரியாணி ப்ரமாதீனி ஹரந்தி பிரஸபம் மன’: , இந்த்ரியங்கள் பலம் வாய்ந்தவை மனத்தை பலவந்தமாக இழுத்து விடுகின்றன, என்று நான் அன்று அர்ஜுனனுக்கு சொன்னது போல மனித மனம் சஞ்சலிக்கும் சுபாவம் கொண்டது. அதை அடக்குவது மிகவும் கடினம்.” என்றான்.

அதற்கு கோதை, அப்படிச் சொன்ன நீயே ‘ அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன ச கிருஹ்யதே ‘ என்றுஅதற்கு ஒரு வழியும் கூறினாய் அல்லவா? அதனால் நான் அப்யாஸம், அதாவது முயற்சி, வைராக்கியம், பற்றை விடுவது ஆகிய வழிமுறைகளை உபதேசிக்க முயலுகிறேன். ஒரு சிறு சதவிகிதம் மக்கள் இதைப பின்பற்றினாலும் என் முயற்சி வெற்றி பெற்றதாகக் கருதுவேன்” என்றாள் நம்மை எல்லாம் உய்விக்க வந்த பூமி பிராட்டியான கோதை.

‘எந்த உருவில் நீ வந்தாலும் உன் கமலக்கண் உன்னை காட்டிக் கொடுக்கும்” என்ற கோதையின் வார்த்தைகளை மனதில் கொண்டு எழுந்த பாடல்: ஒரு பக்தன் பகவானை நோக்கிப் பாடும் வகையில் அமைந்தது.

மாயம் எத்தனை செய்தாலென்ன உன் ஜாலம் நானறிவேன்

மறைபொருளாய் நின்று (மாயம் )

சீயமாய் வந்தாலும் ஏனமாய் வந்தாலும் உன்

கமலநயனம் உன்னைக் காட்டிகொடுத்ததே ( மாயம்)

வாமனனாய் வந்து மூவுலகளந்தாய்

வாய் திற என்ற தாய்க்கு புவனம் காட்டினாய்

ஆமையாய் வந்து மலை தாங்கி அமுதம் தந்த

நாடகத்தின் ஊடே நாரணன் உனை அறிந்தேன் ( மாயம்)

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?

சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்

வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்

வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக

ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

“இது ஒரு புதுமாதிரியாகக் காணப்படுகிறது. வாய்ச்சொல்லில் உனக்கு இணையான பெண்ணாக இருக்கிறாள்.” என்றான் கண்ணன்.

“ஆம் அப்படித்தான் தோன்றுகிறது. எல்லே இளம்கிளியே என்றது எல்லோரையும் விட வயதில் குறைந்தவள் என்ற அர்த்தத்தில் இருந்தாலும் உலகப்பற்று என்ற தங்கக் கூண்டில் உள்ள கிளியைப்போல் பகவத் தியானம் இல்லாமல் இருப்பது உறங்குவதுபோல. பால அல்லது இளம் வயதினர் என்ற சொல் வடமொழியில் ‘ஒன்றும் அறியாத’ என்ற பொருளில் பயன்படுத்தப் படுகிறது அல்லவா?”

“அறியாமை என்ற உறக்கத்தில் ஆழ்ந்தவர்கள் அதிலிருந்து எழுந்திருக்க விரும்புவதில்லை. இன்னம் உறங்குதியோ, என்று எழுப்ப முயற்சி செய்பவர்களையும் நிந்திக்கிறார்கள்..”

:” சில்லென்றழைக்காதீர் , நானே வருவேன் உரிய காலத்தில் என்று சொல்கிறார்கள். “ என்ற ஆண்டாளிடம்

“உரிய காலம் என்றால் ? என்றான் கண்ணன்..

கோதை கூறினாள்.”உரிய காலம் என்றால் இந்த உலக இன்பத்தை அனுபவித்து முடித்த பிறகு என்று அர்த்தம் .”

“அது எப்போது வரும்? அது யயாதிக்கு வரவே இல்லையே .” என்றான் கண்ணன்.

“ இது சங்கரரின் வாக்கை நினைவூட்டுகிறது,

பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: , குழந்தைப் பருவத்தில் விளயாட்டில் நாட்டம், தருணஸ்தாவத் தருணீஸக்த:, யுவனாக இருக்கையில் பெண்கள் மீது நாட்டம். வ்ருத்தஸ் தாவத் சிந்தா ஸக்த: முதுமையில் தான் அனுபவித்த இப்போது அனுபவிக்க முடியாததை எண்ணி கவலை. ஆனால் எந்த வயதிலும் பகவத் ஸ்மரணம் வருவதில்லை என்று கூறி ‘பஜகோவிந்தம்’ என்றாரே? “

“ஆனால் நீ இந்த மக்களை பகவ்த்பக்தியில் ஈடுபடுத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாய். அதைத்தான் வல்லை உன்கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் என்றாய் அல்லவா? “ என்றான் கண்ணன்.

“ஆம். உன்னை அடைய விருப்பம் இல்லாதவர் ஆயிரம் வாதங்கள் செய்வார். வல்லீர்கள் நீங்களே , நீங்கள்தான் விதண்டா வாதம் செய்கிறீர்கள் என்று நம்மையே குற்றம் சாட்டுவார்’ பிறகு கொஞ்சம் அறிவு வந்த பின் , சரி சரி என் மேல் தான் தவறு என்று கூறி அப்போதும் வரமாட்டார். நாள் கடத்துவார். “ அதைத்தான் ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை என்றேன்.”

“ வேறுடையை என்றால் தன்னை தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று தானே பொருள்? என்றான் கண்ணன்.

“ஆம் ஆனால் உன்னை நினைக்கவும் உன்னைப் பாடவும் எதற்காக தயார் செய்து கொள்ள வேண்டும். நான் இன்னும் அந்த நிலைக்கு தயாராகவில்லை என்று ஒருவர் சொன்னால் அது அவர் எந்த நிலையிலும் தயாராக மாட்டார் என்று அர்த்தம்.”

“எப்போது உலகப்பற்று விடும்? நாம்தான் அதை விட வேண்டும்.. கடைசியாக எல்லோரும் போந்தாரோ என்று எல்லோருமா பகவத்த்யானத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கு போந்தார் போந்தெண்ணிகொள் என்ற பதில் ஒருவர் பகவத் தியானத்தில் ஈடுபட்டுவிட்டால் பக்தர்களைத்தவ்ற வேறு யாரையும் காண மாட்டார்கள் என்பது. “என்ற ஆண்டாளைப் பார்த்து,

“வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க என்றது கஜேந்த்ரனைப் பற்றிய மேற்கோள்தானே ?’என்றான் கண்ணன்.

“வல்லானையாவது குவலயாபீடம் . அதைக் கொன்றவன் நீ. அதற்கு மாற்றாக இருந்த இன்னொரு யானை கஜேந்திரன். அதற்கு மாற்று எதிரியாக வந்த முதலையை அழித்தவன் என்று பொருள் கொள்ளலாம்—- “என்று இன்னும் ஏதோ சொல்ல வருபவள் போல இருக்கும் கோதையைப் பார்த்து கண்ணன்,

“ம்ம் சொல்லு என்றான்.”

“மாறனை மாற்று அழிக்க வல்லான் என்பதற்கு இன்னொரு பொருள் நீ மாற்றான் அதாவது விரோதியை அழிக்காமல் அவனுடைய மாற்று , விரோதத்தை மட்டும் அழிக்க முயல்பவன் என்பது.”

“ அப்படியா ?” என்றான் அந்த மாயன் அவள் வாயிலிருந்தே அதைக் குறித்து கேட்கும் ஆவலில்.

ஆண்டாள் கூறினாள்.

“ ஆம். நீ அவ்வாறு பல சமயங்களில் செய்து இருக்கிறாயே. இரணியனுக்கு கடைசி வரை திருந்த வாய்ப்புக் கொடுத்தாய். ராவணனுக்கு ‘இன்று போய் நாளை வா என்றாய். மகாபலியின் கருவத்தை மாத்திரம் அழித்தாய். இந்திரன் பிரமன் இவர்களின் அகந்தையையும் அழித்தாய்..

அதனால் நீ வல்லான் , எல்லா விரோதிகளையும் அழிக்க வல்லவன் ஆயினும் அவர்களுக்கு கடைசி வரை கருணை காட்டுபவன். ஆனால் மாயன் , மாயைதனை படைப்பாய் மாயையும் துடைப்பாய். “

கண்ணன் கூறினான். “ இப்போது என் மாளிகை வரை வந்தாகிவிட்டது இனிமேல் நேருக்கு நேர் கலந்துரையாடல் தான்”

அதற்கு ஆண்டாள் கூறினாள். “ நீ மாயன் என்பதை இது மூலமே நிரூபித்து விட்டாய். நேருக்கு நேர் உரையாடலா? நான் தானே பேசிக்கொண்டிருந்தேன். நீ எங்கே மறுமொழி கூறினாய் ? “ என்றாள்

“அதற்குத்தான் இப்போது வந்திருக்கிறேனே ,” என்று நகைத்தான் கண்ணன்

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய

கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

“ இப்போது என் மாளிகை வாயில் காப்பானை கதவைத் திறக்குமாறு வேண்டிக்கொள்கிறாயாக்கும் “ என்றான் கண்ணன்.

அதற்கு கோதை விடையளித்தாள். “ துவாரகையில் உன் மாளிகைக்கதவுகள் திறந்தே இருக்கும். உன்னைப் பார்க்க வந்த குசேலர் நேராக உள்ளே வந்தாரே . ஆனால் ஆயர்பாடியில் நீ செல்லப் பிள்ளை அல்லவா அதனால் உன் பெற்றோர் கதவை மூடியே வைத்திருப்பார்கள். அதனால் வாயில்காப்போனை வேண்டவேண்டியதாயிற்று. “

“ உன் வாயில் காப்போன் கோயில் காப்போனாகவும் இருப்பதால் இலகுவில் எங்களை அனுமதிக்கவில்லை . அவனை நாயகனாய் நின்றவனே. கொடி பறக்கும் தோரண வாயில் காப்பவனே என்று முகஸ்துதி பண்ண வேண்டியதாயிற்று . “

“ த்வார பாலகர்களை திருப்தி செய்துதானே எல்லா இடங்களுக்குள்ளும் செல்ல வேண்டியதாய் இருக்கிறது. ஆனால் உன் த்வார பாலகர்கள் உன் பாகவதோத்தமர்கள். அதனால் அவர்கள் முதலில் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள். “ என்றாள் ஆண்டாள்.

“பிறகு என்ன சொல்லி உள்ளே வந்தீர்கள் ? “ என்றான் கண்ணன்.

“ நாங்கள் ஆயர் சிறுமியர் . எங்களால் ஒன்றும் ஆபத்தில்லை .தூயோமாய் வந்தோம் கண்ணன் துயில் எழப் பாடுவதற்கு என்று கூறினோம். “

“அப்போதும் உங்களை அவன் அனுமதிக்கவில்லை அல்லவா? “ என்ற கண்ணனிடம் ,

“நீதான் மாயன் மணிவண்ணன் ஆயிற்றே, உன் திருவுள்ளம் இன்றி எது நடக்கும்? ஆனாலும் வைகுண்டத்தில் உன் தவாரபாலகர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்தோ என்னவோ கதவைத் திறந்துவிட்டான். ஆனாலும் கொஞ்சம் அழ வைத்தான். அதனால் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா என்று அவனைக் கெஞ்ச வேண்டியதாயிற்று. பின்னர் கண்ணன் எங்களுக்கு நென்னலே வாய் நேர்ந்தான், முன்னமே அனுமதி அளித்துள்ளான் என்ற பிறகுதான் அந்த நேய நிலைக்கதவம் திறந்தது.”

“ நான் எப்போது அனுமதி அளித்தேன் ?” என்றவனிடம்,

“ என்னை நாடிவந்தவரை நான் கைவிடமாட்டேன் என்று கீதையில் கூறினாய், ராமனாக செய்து காண்பித்தாய். அதனால் இப்போது கிருஷ்ணனான உன்னை சரணமடைந்தோம். என்றாள் ஆண்டாள்,

“இவ்வளவுதானா இல்லை வேறு ஏதாவது அர்த்தம் உள்ளதா?” என்றான் கண்ணன்.

அதற்கு ஆண்டாள் கூறினாள்,

“இந்த பாசுரம் ரஹஸ்ய த்ரயம் என்று சொல்லப்படும் மூன்று மந்திரங்களையும் குறிப்பிடுகிறது. முதல் இரண்டு வரிகள் மூல மந்திரமான் ஓம் நமோ நாராயணாய என்பதைக் குறிக்கும்.

நாயகனாய் என்றது உலகநாயகனாகிய உன்னை.நந்த கோபன் என்பது ஆனந்தத்தை கொடுப்பதனாலும் , கோபன் அதாவது ரக்ஷிப்பவனாக இருப்பதாலும்.கோயில் என்றது ப்ரணவம். ஆனந்தம் ப்ரபத்தியின் மூலமாகவே கிடைப்பதால் நம என்ற சப்தமும் இதில் அடங்கி விட்டது.

கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே என்றது த்வய மந்திரத்தை சுட்டுகிறது. கொடித்தோன்றும் தோரணவாயில் என்பது வைகுண்டத்தில் நீ திருமகளுடன் தோன்றுவது. காப்பான் என்பது சரணமடைந்தவர்களை நீ காப்பதைக் குறிக்கிறது.

ஆயர்சிறுமியரோமுக்கு அறைபறை நென்னலே வாய் நேர்ந்தான் என்பது சரமச்லோகம். அதாவது ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று சரணம் அடைய பக்தி ஒன்றே போதும் குலமோ கல்வியோ ஒரு பொருட்டில்லை என்பதைக் காட்டுகிறது.

நேய நிலைக் கதவம் என்பது, மூன்று மந்திரங்களிலும் உள்ள இரு பாகங்கள். ஓம்,மற்றும் நமோ நாராயணாய, த்வயத்தின் இரு பாகங்கள் சரமஸ்லோக்த்தின் இரு வரிகள்.

இந்தக் கதவுகள் திறக்க வேண்டுமானால் வாயில் காப்போனாகிய ஆசார்யன் கிருபை வேண்டும்.” என்ற ஆண்டாளை கைகொட்டிப் பாராட்டினான் கண்ணன்.

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!

எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்

அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த

உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

“ரொம்ப சாமர்த்தியம்தான் ,”.

“முதலில் உன் மாமனார் மாமியாரை வேண்டிக்கொண்டு அப்புறம் என்னிடம் வருவதைச் சொன்னேன்.” என்றான் கண்ணன்

கோதை கூறினாள் “ நான் உன் பள்ளியறையில் முதலில் உன் பெற்றோரைத்த்தான் கண்டேன். உடனே உன் தந்தையின் தாராளகுணம் நினைவுக்கு வந்தது. அவர் அம்பரம் , தண்ணீர் , சோறு, அதாவது உடுக்க உடை, பருக நீர், உண்ண உணவு, வாரி வாரித்தந்தவர் ஆயிற்றே. அதனால்தானே வேதாந்த தேசிகர் , யாதவாப்யுதயம் என்னும் காவியத்தில், நீ பிறந்தவுடன் நந்தகோபர் கொடையில் கல்பதருவையும் மிஞ்சிவிட்டார் என்றார். ?” என்றாள் ஆண்டாள்.

“ ஆம். யாதவாப்யுதயம் என் சரிதத்தை மிகவும் அழகாகக் கூறுகிறது. தேசிகரின் அறிவார்ந்த புலமைக்கு ஈடு இணை உண்டோ?”

“அடுத்தது உன் அன்னையைக் கண்டேன். கொம்பனார்க்கெல்லாம்கொழுந்து என்றதன் மூலம் அவளுடைய கொடிபோன்ற மேனி படைத்த் எல்லா மாதரிலும் சிறந்தவள் என்றேன். மேலும் அவள் யாதவகுல விளக்குஅல்லவா. “

“உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று நாங்கள் உணர உன்னை எங்களுக்கு அளித்தனால் நந்தகோபர் எம்பெருமான் ஆகிறார்,. யசோதை எம்பெருமாட்டி. மேலும் யச: என்றால் பிரம்மம் என்கிறது வேதம் அந்த பிரம்மத்தை ஒரு குழந்தையாக உலகுக்கு தந்தவள் , யச: ததாதி இதி யசோதா.” என்ற ஆண்டாளிடம் கண்ணன் கேட்டான்.

“அத்புதமான விளக்கம் . அது சரி. நீ படுத்திருக்கும் வரிசைக்க்ரமத்தில் எழுப்பி வந்தவள் எனக்கு முன்னாள் படுத்திருந்த அண்ணனை விட்டுவிட்டு என்னை முதலில் எழுப்பக் காரணம் ?

“ ஆண்டாள் கூறினாள். “ அதுவா, பலராமன் காலில் இருந்த செம்பொற் கழலைப்பார்த்து நீ என்று நினைத்தேன் . அதனால் உன்னை முதலில் எழுப்ப முயற்சித்தேன். பிறகுதான் உண்மை தெரிந்தது அதனால் அவனை மகிழ்விக்க உம்பியும் நீயும் உறங்கேலாரெம்பாவாய் என்றேன். , உன் சயனமாகிய ஆதிசேஷன் ஆயிற்றே, அவன் எழுந்தால் நீ எழுந்துதானே ஆகவேண்டும்?”

“ நல்ல சாதுர்யம் “ என்ற கண்ணன் “அன்னை அருகில் இங்கு சாதுவாகப் படுத்து உறங்கும் என்னை உலகளந்தானாக பாவிக்க ஏதும் விசேஷ காரணம் உண்டோ” என்றான்.

“நல்ல சாதுப்பிள்ளை “ என்ற ஆண்டாள்,

‘அம்பரம் அதாவது ஆகாயத்தை ஊடறுத்து, பிளந்து ஓங்கி உலகளந்தவன் நீ. உனக்கு உறங்குவதற்கு ஏது இடம் என்று பொருள். “ என்றாள் கோதை.

“ எல்லோரையும் திருப்திப் படுத்தி விட்டாய்,” என்ற கண்ணனைப் பார்த்து கோதை கூறினாள்.

“ நாங்கள் எல்லோரிடமும் உன்னையே காண்கிறோம் அல்லவா? நந்த கோபாலன் என்றது உன்னைத்தான். நந்தம் அல்லது ஆனந்தம் என்பது நீதான், கோ அதாவது, பூமி, வாக்கு, ஆவினம், இந்த்ரியங்கள் முதலிய எல்லாவற்றிற்கும் பாலன், காப்பாற்றுகிறவன் நீதானே.” அம்பரம், வஸ்திரம் திரௌபதிக்குக் கொடுத்தாய் . பாரத யுத்தத்தில் தேரோட்டியாகி களைத்த குதிரைகளுக்கு உன் கையால் நீர் கொடுத்தாய்., சோறு அதாவது உணவு, வற்றின அக்ஷயபாத்திரத்தில் இருந்து துர்வாசர் முதலியோருக்கு உணவளித்தாய்.” என்றாள் கோதை. “ நன்று. நீ செம்பொற்கழல் என்று சொன்னது என் அண்ணனின் காலில் இருந்த வீரக்கழல்.,அவன் வீரச்செயல்களை அறிவாயல்லவா? அவமதித்த கௌரவருக்கு புத்தி புகட்ட தன கோடரியால் ஹஸ்தினாபுரத்தையே கங்கையில் தள்ளவில்லையா? ஒருசமயம் யமுனையை தான் இருக்கும் இடத்திற்கு இழுத்தானே.” என்றான் கண்ணன்.

“ அது மட்டுமா? ஆதிசேஷனான அவன் ஏழு குழந்தைகளை இழந்த பின்னர் உன் தாயான தேவகியின் கர்ப்பத்தில் புகுந்து சர்ப்ப தோஷ நிவாரணம் செய்பவன் போல அதை சுத்தமாக்கி உன் பிறப்புக்கு வழிவகுத்தவன் அல்லவா? “என்றாள் கோதை.

“ நீ சொல்வது உண்மை, சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் என்று எங்கும் என்னைத் தொடர்பவன் அல்லவா? “ என்றான் கண்ணன்.

“சேஷனாகியவனும், சேஷியாகிய நீயும் ஒன்றே. வால்மீகி ஆதிசேஷனின் அவதாரமான லக்ஷ்மணனை ராமனாகிய உன் உடலுக்கு வெளியே உள்ள உயிர், பஹிர்கதபிராண: என்றல்லவா கூறுகிறார்?’ என்ற கோதையிடம் கண்ணன் கூறினான்.

“எம்பெருமான் நந்த கோபாலன் என்பது, எம்பெருமானார் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை நினைவூட்டுகிறது. எல்லோருக்கும் பக்தியை ஊட்டி ஆனந்தத்தை அளித்தததனால் அவரும் நந்த கோபாலனாகிறார். “ என்ற கண்ணிடம் ஆண்டாள் கூறினாள்.

“ உன் அருளால் வரும் எல்லா சொற்களும் எந்த காலத்திற்கும் ஓட்டிவரும் அல்லவா? அம்பரம் என்பது உன் அருள். தண்ணீர் அதனால் பெருகும் பக்தி. சோறு என்றால் பகவத்கைங்கர்யம். இது எல்லாம் ஆசார்யன் அருளால் வருவது.”

“மேலும் அவர் என் பிரியமான அண்ணன் ஆயிற்றே. நான் நேர்ந்து கொண்ட நூறு தடாவில் வெண்ணையும் அக்கறை வடிசிலும் திருமாலிருன்சொலையில் உள்ள உனக்குக் கொடுப்பேன் என்றதை நிறைவேற்றினவர் அல்லவா !” என்றாள் ஆண்டாள்.

“ஆம். அடுத்த பாசுரம் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்ட அவருக்கு உகந்ததாயிற்றே!” என்றான் கண்ணன்.

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்

வந்துஎங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

“இந்தப்பாசுரத்தில் நீ நப்பின்னையை வந்து தாழ் திறக்கும்படி வேண்டுகிறாய். நப்பின்னை கிருஷ்ணாவதாரத்தில் என் தந்தையான நந்தகோபரின் மருமகள். அவள் நீளா தேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறாள். அதனால் நந்தகோபாலன் மருமகள் என்று நீ சொன்ன இரு அர்த்தத்திலும் சரியாகப் படுகிறது. “ என்றான் கண்ணன்.

“ நந்தகோபாலன் மருமகள் என்று நான் சொன்னது ஏனென்றால் ஒரு பெண்ணை விவாகம் ஆகுமுன் அவள் இன்னாரின் பெண் என்று சொல்வது போல விவாகம் ஆனதும் இன்னாரின் மருமகள் என்று சொல்வதுதானே சிறப்பு?.சீதை தன்னை ராவணனிடமும் அனுமனிடம் ‘ஸ்னுஷா தசரதஸ்யாஹம்,’ நான் தசரதருடைய மருமகள் என்றுதானே அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்?’

“அவள் மேலும் ‘ப்ருதிவ்யாம் ராஜசிம்ஹானாம் முக்யஸ்ய ‘ இந்த மண்ணுலகில் சிம்ஹம் போன்ற அரசர்களுக்குள் முக்கியமான தசரதர் ‘ என்று சொன்னது போல் நான் ‘உந்துமதகளிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்றேன். மத்த கஜம் போல் வலிவுடையவன் அல்லது மத்தகஜம் போன்ற உன்னை உடையவன் , உனக்குத் தீங்கு இழைப்போரைக் கண்டு பயப்படாமல் எதிர்த்து நிற்பவன் என்ற அர்த்தத்தில்.”

“ ஆனால் உண்மையில் நாங்கள் புருஷகார பூதையான திருமகளை எழுப்புகிறோம். ஏனென்றால் நீ கண்ணனாக வந்தாலும் எங்களுக்கு.நாராயணன்தானே. அவள் உன் மார்பில் மருவைப் போல் இருப்பதால் மருமகள். நப்பின்னை என்ற சொல் நல்+ பின்னை, உன் அவதாரங்களில் உன்னைத் தொடர்ந்து வருபவள் என்ற பொருளில்.” என்றாள் ஆண்டாள்.

“ அப்படியானால் பந்தார் விரலி, கைகளில் பந்தை வைத்துக் கொண்டிருப்பவள் , உன் மைத்துனன் பேர் பாட, என்ற சொற்களுக்கு என்ன பொருள்? “ என்றான் கண்ணன்.

“எல்லா ஜீவர்களும் உங்கள் இருவருடைய லீலாவிநோதம் என்ற கைப்பந்து போலத்தானே. ஆனால் அந்த பந்து எப்போதும் திருமகளின் கைகளில்தான் முடிவில் இருக்கும். ஏனென்றால் உன் கருணையை எங்கள் மேல் வீசிக் காப்பது அவள் அல்லவா? “

“ மைத்துனன் என்பது மைதுனம், ஒன்றாக இணைவது, என்ற கருத்தில் ஸ்ரீதேவியின் இணையான உன்னைக் குறிப்பிடுவதாகும்.”

“கந்தம் கமழும் குழலி என்பது திருமகள் கேசத்தின் இயற்கை வாசம்,செந்தாமரைக்கையால் என்றது அவள்கையில் எப்போதும் உள்ள தாமரை.. ஆக, இது திருமகளைக் குறிக்கும் பாசுரம்.

“ நன்று. வந்தெங்கும் கோழி அழைத்தன காண், மாதவிப்பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் ,’ என்ற வரிகளுக்கும் விளக்கம் தந்துவிடு,” என்றான் கண்ணன்.

கோதை கூறினாள், “நேரிடைப் பொருள் கோழிகள் கூவுவதும் குயில்கள் மாதவிக் கொடிகளில் கூவுவதும் தான் என்று இருந்தாலும், கோழி என்பது பகவ்த்பக்தி இல்லாதோர். குயில்கள் பக்தர்கள். எங்கும் காணப் படும் கோழியின் குரல் எப்போதும் உரக்க இருக்கும். குயில்களின் குரல் இனிமையானது. பக்தி இல்லாதவர்கள் எழுந்து அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர். இதன் நடுவில் பக்தர்களின் இனிய நாமசங்கீர்த்தனம் கேட்பதில்லை. “

“உலகப்பற்றைக் குறிக்கும் விஷயங்கள் எங்கும் உள்ள கோழியின் கூவலைப் போல் நாடெங்கும் இறைந்து கிடக்கின்றன. பகவத்விஷயமான வாக்குகள் , குயில் கூவிவதைப் போல் இனிமையானவை. மாதவிப்பந்தல் என்பது திருமகளின் கேள்வனாகிய உன்னைக் குறிக்கும்.”

“கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்” என்றபடி,, உன் நிழலில் கவிதை என்னும் கிளையில் இருந்துகொண்டு வால்மீகி , வ்யாசர் போன்ற குயில்கள் மதுரமாக உன் பெருமையை இசைக்கின்றன. அவைகளை தேடிப் போகவேண்டும்.” என்றாள்.“இந்தப் பாசுரம் இன்னொரு விதத்திலும் மேன்மை வாய்ந்தது. ராமானுஜர் உகந்த பாசுரம். திருப்பாவை சொல்லிக்கொண்டே பிக்ஷைக்குப் போகும்போது, அவர் குருவான பெரியநம்பியின் வீட்டு வாசலில் அவர் மகள் அத்துழாய் பிக்ஷைபோட வெளியில் வந்தாள். இந்தப பாசுரத்தில் லயித்த ராமானுஜர் அவளை ஸ்ரீதேவியாகவே கண்டு உணர்ச்சிவசப்பட்டார்.” என்ற கண்ணன் ,

“இன்னொரு சிறப்பையும் நான் இந்தப பாசுரத்தில் காண்கிறேன். இது பதினெட்டாவது பாசுரம் .” என்றான்.

கோதை கூறினாள், “ ஆம் திருமகளைப் பற்றிய இந்தப பாசுரம் அப்படி அமைந்தது எனக்கும் வியப்பைத் தருகிறது. ஏன் தெரியுமா?ஒன்று , எட்டு இவ்விரண்டின் கூட்டுத்தொகை ஒன்பது. அது ஒரு தெய்வீக எண். அதோடு எந்த எண்ணைக் கூட்டினாலும் கழித்தாலும் பெருக்கினாலும் வரும் எண்ணின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும். அதுபோல ஸ்ரீதேவி என்றும் மாறாத கருணை உடையவள். மேலும், பதினெட்டு என்ற எண் உன்னோடு சம்பந்தப்பட்டது. நீ கூறிய பகவத் கீதை பதினெட்டு அத்தியாயம் கொண்டது, உன் மகிமையைக் கூறும் பகவத் புராணத்தில் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள். உன் கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய நோக்கமான் பூபாரம் தீர்க்க நீ நடத்திய பாரத யுத்தமும் பதினெட்டு நாள் நடந்தது.” என்றாள் கோதை.

கண்ணன் கூறினான். “ கருணையில் இருந்து என்றும் மாறாதவள் என்று நீ கூறியதைக் கேட்கையில், எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருவரங்கத்தில் நான் மோகினி அலங்காரத்தில் இருக்கையில் திருமகளைப் போல் அழகாக இருக்கிறேனா என்று ஒரு பக்தரிடம் கேட்க அவர் ஆம் ஆனால் அவள் கண்களில் உள்ள கருணை என்னிடம் குறைகிறது என்றார்.”

ஆண்டாள் சிரித்து, “ அது உண்மைதான். நான் ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் பாடியும் நீ இரங்கவில்லையே?” என்றாள்.

“ அது உன் தீஞ்சுவைத் தமிழமுதம் பருகவே.” என்றான்.

ஆண்டாள் கூறினாள். “ அதனால் எவ்வளவு மன வேதனை அனுபவித்தேன் என்று உணர்வாயோ? “என்றாள்.

:”அது உன் பக்தியை உலகறியச் செய்வதற்கே ,” என்ற கண்ணன் “ நான் உன் உள்ளத்தில் எப்போதும் இருக்கிறேனே, என்னை எங்கு சென்று தேட வேண்டும். “ என்றான்.

19. குத்து விளக்கெரிய

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

“பதினேழாவது பாசுரத்தில் உன்னை எழுப்ப முனைந்தோம். புருஷகார பூதையான தாயாரை முன்னிட்டுத்தான் உன்னை ஆராதிக்க வேண்டும் என்ற முறையில் போன பாசுரம் அமைந்தது. இது அவளையும் உன்னையும் சேர்த்துக் கூறுவது. அன்னை உன்னைக் கேட்காமலேயே கருணை காட்டும் இயல்புடையவள். ஆனால் தண்டிப்பது மட்டும் உன் ஆணையின்றி செய்ய மாட்டாள். “ என்ற ஆண்டாளிடம் கண்ணன் “அப்படியா?” என்றான்.

“ஆம் ஹனுமானுக்கு வாலில் நெருப்பு வைத்தபோது அது சுடாமலிருக்க ‘சீதோ பவ ஹநூமத: , குளிர்ந்திருப்பாயாக’ என்று அக்னிதேவனுக்கு ஆணையிட்டாள். ஹனுமனின் கோபத்தில் இருந்து ராக்ஷசிகளை ‘ ந கச்சித் ந அபராத்ய்தி?’ யார்தான் தவறு செய்யவில்லை? ‘ என்றுகூறிக் காப்பாற்றினாள். ஆனால் ‘ராமரின் ஆணையில்லாதனால் உன்னை விடுகிறேன் இல்லையென்றால் பஸ்மமாக்கிவிடுவேன்’ என்று ராவணனிடம்கூறினாளே.” என்றாள் கோதை.

“தியாகராஜரின் சொற்கள் நினைவுக்கு வருகின்றன.. மாஜானகி சட்டபெட்டகா என்ற க்ருதியில் சீதைக்கு ராவணனை அழிக்க எல்லா சக்தியும் இருந்தது. ஆனால் ‘ஸ்ரீநாயக யசமு நீகே கல்க,’ உன் புகழுக்கு மாசு ஏறபடக்கூடாது என்று அப்படிச் செய்யவில்லை என்கிறார்.”

“ ஏக லக்ஷ்யம்தயாயா:’என்று தேசிகர் ஸ்ரீ ஸ்திதியில் சொல்வது போல உங்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் கருணை காட்டுவதுதானே,” என்றஆண்டாளிடம் கண்ணன் ,

“இப்போது பாசுரத்திற்குப் போவோம். கு’த்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா ‘ என்று அழகாக நான் சயனித்திருப்பதை வர்ணித்தாய் . அப்படிப்பட்ட நிலையில் ‘வாய் திறவாய்’ என்றால் என்னால் எப்படி முடியும்? “ என்றான் குறும்புப் புன்னகையுடன்.
“ உன் வாக் சாதுர்யத்தை என்னிடம் காட்ட வேண்டாம். குத்துவிளக்கு எனப்படுவது ஞான தீபம்.உன் பஞ்ச சயனம் ஆதிசேஷன். பஞ்ச சயனம் என்றால் அதற்கு. மிருதுத் தன்மை , வெண்மை ,நல்ல வாசனை, குளிர்ந்து இருத்தல், அழகு என்ற ஐந்து குணங்கள் இருக்க வேண்டும். இது ஆதிசேஷனுக்கு இருக்கிறது. “ என்ற ஆண்டாளைப் பார்த்து, கோகுலத்தில் நான் ஆதிசேஷனுக்கு எங்கே போவேன்?” என்றான் கண்ணன்.

“ இந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஒரு பிரபு எங்காவது போவதென்றால் அவன் மெத்தை முன்னால் அனுப்பப்படும். அது போல நீ வருமுன்பே ஆதிசேஷனை அனுப்பி விடுகிறாயே. அதனால் தானே விஸ்வாமித்ரர் காட்டில் தரையில் படுத்துறங்கும் உன்னை ஆதிசேஷன் மேல் சயனித்துள்ளதாகக் கண்டார்?” என்றால் கோதை.

“ ஸ்ரீதேவியும் உன்னை விட்டு எங்கும் போவதில்லை. அதனால்தானே நீ ‘அகலகில்லேன் இறையும் என அலர்மேல் மங்கை உறை மார்பா ‘ என்று அழைக்கப் படுகிறாய். இதுதான் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா என்பதன் பொருள்.

“.சரி. அவளை எல்லையில்லாக் கருணை உடையவள் என்று சொல்லிவிட்டு இப்போது ‘மைத்தடங் கண்ணினாய்! நீஉன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,’ என்பது ஒட்டவில்லையே ? “ என்றான் கண்ணன்.

“ அவளுக்கு உன்னை எப்படி எப்போது எழுப்ப வேண்டும் என்று தெரியும் உன்னை உடனே எழுப்ப மாட்டாள். ஏனென்றால் அவசரமாக எழுந்தாயானால் எங்கள் குற்றங்கள் உன் கண்ணில் படும். நீ எப்படி எழுந்திருக்க வேண்டும் என்று பிறகு சொல்கிறேன்.”என்றாள் கோதை.

“ நான் உண்மையில் உறங்கவில்லை . உன்னுடைய தேனினும் இனிய சொற்களைக் கேட்கவே தாமதித்தேன்.” என்றான் கண்ணன்.

“எனக்குத் தெரியும் அதனால்தான் தத்துவம் அன்று. தகவேல் என்றேன்.

தத் கேட்டும் வாளாவிருபப்து த்வம் அன்று உன் ஸ்வபாவம் இல்லை. தகவேல்- இரங்க வேண்டும் என்று பொருள்.

மேலும் தத் த்வம்(அஸி), என்று உன்னோடு பிரிவில்லாமல் இருப்பது தகவு அல்லது உன் அருள் இன்றேல் சித்திக்காது. அதற்காகத்தான் பிராட்டியின் கருணை வேண்டும்." என்றாள் ஆண்டாள்.

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

“போன பாசுரத்தைக் கேட்டும் நீ எழுந்திருக்க வில்லை. நப்பின்னை நங்காய் திருவே என்று நாங்கள் கூப்பிட்ட்தும் அவள் எழுந்து வந்து விட்டாள் ஆனால் அவளால் உன்னை எழுப்ப முடியவில்லை அல்லவா?> தூங்குகிறவனைத்தானே எழுப்ப முடியும்.” என்றாள் ஆண்டாள்.

“ அவள் உங்களுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டுவிட்ட பின் நான் வேறு என்ன செய்வது. . எழுந்திருக்கத்தானே வேண்டும், என்ற கண்ணனிடம் ஆனால் நீ உடனே வந்தாயா? சாவகாசமாகத்தானே வந்தாய்?” என்றாள் ஆண்டாள்.

“அதனால்தானே இன்னும் சில பாசுரங்களைக் கேட்க முடிந்தது. இந்தப் பாசுரத்தில் ஒரே புகழ் மாலையாக இருக்கிறதே ? “ என்றான் கண்ணன்.

“ முப்பத்துமூவர் அமரர்க்கும் முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே என்று ஏன் கூறினேன் தெரியுமா? முப்பதுமுக்கோடி தேவர்களுக்கும் ஏதாவது ஆபத்து என்றால் அதை வருமுன்பே காப்பதில் நாட்டம் உடையவன் நீ. அதுமட்டுமா செப்பம் உடையாய் அதாவது நேர்மை உடையவன் , திறலுடையாய் , சாமர்த்தியம் உடையவன். “

“ ஏலாப் பொய்களுரைப்பான் என்று சொன்னதும் நீதானே இப்போது நேர்மையுடையவன் ஆகிவிட்டேனா? “ என்றான் கண்ணன்.

“நேர்மை அல்லது ஆர்ஜவம் என்பது சாமர்த்தியத்துடன் சேர்ந்து இருந்தால் தான் பலன். உன்னுடைய செய்கைகள் ஏமாற்றுவது போல் தெரிந்தாலும் அது நல்லவர்களைக் காக்கவே .பாரத யுத்தத்தின் போது அமாவாசையை ஒரு நாள் முன்பாக வரவழைத்தது போலும் ஜயத்ரதனை அழிக்க சூரியனை மறைத்தது போலும். அங்கு ஆர்ஜவம் பயன்படாது. கேடுதான் விளைவிக்கும்.”

“ மற்றும் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் என்றது, உன் அன்பர்களுக்கு தீங்கு விளைவிப்பவரைத் தீயாய் சுடுவாய் என்று பொருள்.”

“ அதெல்லாம் சரிதான் , அதென்ன உக்கம் தட்டொளி நீ கேட்டது? உக்கம் என்றால் விசிறி தட்டொளி என்றால் கண்ணாடி. இதனால் உனக்கு என்ன பயன்? “ என்றான் கண்ணன்.

. “ உக்கம், விசிறி என்பது தான் எனற மமதையை அகற்றுவது. தட்டொளியாவது ஆத்மஸ்வரூபத்தை கண்ணாடிபோல் காண்பிக்க.அதற்காக தாயாரின் அருளை வேண்டினேன். “ என்றாள் கோதை.

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

இன்னாரின் மைந்தன் என்று அபிவாதயே சொல்வது போல் என் தந்தை பெயரை முதலில் கூறிவிட்டாய்.” என்றான் கண்ணன்.

“ ஆம். ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் ஆயிற்றே. கலங்கள் நிரம்பி வழிய மாற்றாதே பால் சொரியும் பசுவைப் போல நாங்கள் கேட்டதை விட மேலான பலனை அளிக்கும் வள்ளலாகிய உன்னைத்தந்தவன் அல்லவா?”

“நீ ஊற்றம் உடையாய் சர்வ சக்திமான், பெரியாய் , எங்கும் நிறைந்தவன், உலகெலாம் தோற்றமாய் நின்ற சுடர், உலகில் தோன்றுவது எல்லாம் நீயே. உன்னிடம் என்ன கேட்பது? நாங்கள் என்ன கேட்டாலும் அது ஒரு சக்ரவர்த்தியிடம் சில பொற்காசுகள் கேட்பது மாதிரி. “ என்ற ஆண்டாளிடம், நான்தான் எல்லாம் தரத் தயாராக உள்ளேனே .நீங்கள் கேட்பதை யார் தடுத்தார்கள்? “என்றான் கண்ணன்.

‘யாவானர்த்த உதபானே ஸர்வத: ஸம்ப்லுதோதகே’ என்று நீ கீதையில் சொன்னபடி, எங்கும் ஜலம் நிறைந்தாலும் ஒரு கிணறு எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவுதான் அதில் நிற்கும். அதுபோல எங்கள் கர்மா அறிவை மறைக்கிறது. அதனால் நீ உன்னையே தரத் தயாராக இருந்தாலும் எங்கள் அறிவுக்கெட்டினவரை தான் உன்னைக் கேட்கத் தோன்றுகிறது. “

“அதனால் மாற்றார் , உன்னை எதிர்த்தோர் , வலி தொலைந்து, உன்னால் ஜெயிக்கப்பட்டு, உன் வாசற்கண் வந்து அடி பணிவது போல, நாங்களும் எங்கள் அறிவற்ற நிலை உணர்ந்து உன்னைப் போற்றுகின்றோம், உன் புகழ் பாடி, “ என்றாள் கோதை.

“உன் வார்த்தைகளில் ஆழமான பொருளை உணர்கிறேன்.ஆற்றப்படைத்தான் என்பது ராமானுஜரைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.ஏனெனில் வற்றாது பால் சொரியும் பசுக்களைப்போல அவருடைய சிஷ்ய பரம்பரை அவர் உபதேசங்களை எங்கும் பரப்புகின்றனர்.அவர் ஆற்றபடைத்தான் என்றால் அவர் மகன் யார்? நானே . ஏனென்றால் என்னை அவர் ‘செல்வப்பிள்ளாய் வருக’ என்று அழைத்தாரல்லவா?” என்றான் கண்ணன் .

“ஊற்றம் உடையாய், பெரியாய், உலகெலாம் தோற்றமாய் , நின்ற, சுடரே , இந்த ஐந்து சொற்களும் சில வைணவப்பெரியார்களால் உன் ஐந்து ரூபங்களைக் குறிப்பிடுவதாக சொல்லப் படுகிறது.”

‘ஊற்றம் உடையாய்’ என்பது உன் பரத்வம், பரவாசுதேவன். ‘பெரியாய்’ என்பது வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யுமான, அநிருத்தன் என்ற உன் வ்யூஹ ரூபம், .’ உலகெலாம் தோற்றமாய்’ என்பது உன் விபவம், அதாவது அவதாரங்கள் , ‘நின்ற ‘ உன் அர்ச்சாவதாரம் ‘சுடரே’ என்பது அந்தர்யாமி ஸ்வரூபம்.

“ இன்னும் சொல்லப்போனால், பரதவம் என்பது ஆவரண ஜலம் போல வைகுண்டத்தில் இருக்கும் தோற்றம்.நித்ய சூரிகள் மட்டுமே காண்பது. வியூஹம் என்பது பாற்கடல், தேவர்களும் முனிவர்களும் காண்பது அல்லது ஞானிகள் யோகத்தால் காண்பது. விபவம் என்பது பெரும் மழையினால் எப்போதாவது ஏற்படும் வெள்ளம் போல. அந்த சமயம் ஞானிகள் மட்டுமே உன் உண்மை ஸ்வரூபத்தை உணர்வர். மற்றவர் மாயையினால் மயக்குறுவர். அர்சாவதாரம் என்பது ஏரி, குளம் இவற்றில் தங்கியுல்ல நீர் போல எல்லோரும் நன்மையடையக் கூடியது. அந்தர்யாமி ஸ்வரூபம் நிலத்தில் மறைந்துள்ள ஜலம். பக்தியின் மூலம் தோண்டினால் மட்டுமே தெரிவது.” என்றாள்ஆண்டாள்.

‘ அடேயப்பா உன்சொற்களுக்கு இவ்வளவு அர்த்தங்களா என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். என் வாக்கில் வருவதெல்லாம் உன் சொற்கள் அல்லவா? என் கையில் உள்ள கிளியைப்போல நீ சொல்லச்சொல்வதை அல்லவா சொல்கிறேன். என்றாள்.

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

“உன்னை எழுப்பும் பாசுரங்களில் இதுதான கடைசி. அடுத்த பாசுரத்தில் இருந்து நீ நேரில் வர உன்னைக் கண்டு எங்கள் கோரிக்கைகளை முனவைக்கிறோம்.” என்றால் ஆண்டாள்.

“ இந்தப் பாசுரத்தில் உன் பள்ளிக்கட்டிற்கீழே நீ கண்விழிப்பதைக் காண வந்துள்ளோம், அங்கண்மாஞாலம் , இந்த அழகிய உலகத்தில் அரசர் அபிமான பங்கமாய் அதாவது தங்கள் அகம்பாவம் அழிந்து வந்து உன்னை சூழ்ந்தாற்போல ,” என்ற ஆண்டாளை நோக்கி ,

“அரசர்கள் என்று யாரைச் சொல்லுகிறாய் ,” என்றான்.

எனக்கு ஜராசந்தனால் சிறைப் பிடிக்கப் பட்டு உன்னால் விடுவிக்கப்பட்ட அரசர்கள் ஞாபகம் வந்தது. அவர்கள் தங்கள் ராஜ்யத்திற்குப் போவதை விட உன் கைங்கர்யத்துக்கே ஆசைப்பட்டார்கள் அல்லவா? “

“ பள்ளிக்கட்டிற்கீழே என்றால் உன் காலடியில் என்று பொருள். அதாவது அர்ஜுனன் உன்னை காண வந்து உன் காலடியில் அமர்ந்தது போல வந்து தலைப்பெய்தோம், எவ்வளவோ பிறவிகளுக்குப் பின்னர் புண்ய வசமாக உன்னை அடைந்தோம். நீ கண்விழித்ததும் முதலில் எங்களைக் காணவேண்டும் என்பதற்காக.” என்ற ஆண்டாளை நோக்கி கண்ணன் கூறினான்.

“ கண் விழிப்பது எப்படி என்றும் கூறிவிட்டாயே , செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ என்று.”

“ ஆம்.உன் கண்களை தாமரை மலர்வது போல சிறிது சிறிதாகத் திறக்க வேண்டும். ஏன் தெரியுமா? பாதி மூடிய கண் எங்கள் குறைகளைக் காணாதிருப்பதற்கு. பாதித் திறந்த கண் எங்களைக் காப்பதற்கு. உன் அழகிய கண் , அங்கண் கொண்டு எங்களை நோக்கினாயானால் எங்கள் மேல் உள்ள சாபங்கள் எல்லாம் அழிந்து விடும்.

உன் கண்கள் விழிக்கும்போது, சூர்ய சந்த்ரௌ ச நேத்ரே என்று வேதம் கூறியபடி, திங்களும் ஆதித்தியனும் சேர்ந்து உதித்தது போல. சூரியனைப் போல எங்கள் பாவத்தை எரித்துவிடும்.சந்திரனைப் போல குளிர்ச்சியைத் தந்து எங்களைக் காக்கும். தாமரை சூரியன் உதித்தால் மலரும் சந்திரன் உதிக்கும்போது மூடி விடும். இரண்டும் சேர்ந்து உதித்தால் பாதி மலர்ந்த தாமரை போல் இருக்கும்.” என்ற ஆண்டாளின் சொற்களைக் கேட்டு மகிழ்ந்து கண்ணன் எழுந்து வர ஆண்டாள் பரவசமாகிக் கூறுவது அடுத்த பாசுரம்.

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங்கா சனத்திருந்து யாம் வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

“நான் நேரில் வந்தபோது என்னை கண்ணனாக அல்லாமல் நரசிங்கமாக கண்டது ஏன்? என்றான் கண்ணன்.

“அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. பிறகு சொல்கிறேன்.” என்ற ஆண்டாளைப்பார்த்து ,

“ என்னை மலைக்குகையில் உள்ள சிங்கத்துக்கு ஒப்பிட்டது எதனால் “ என்றான் கண்ணன்,.

“உறங்கும் சிங்கம் என்றும் சொன்னேன் அல்லவா? மாரி என்பது பாற்கடலைக் குறிக்கும். மலை என்றது ஆதிசேஷன்.குகை போன்ற அவனுடைய விரித்த படத்தினுள் உறங்கும் நாராயணனான நீ நரசிங்கமாக வந்தாய் அல்லவா?” என்றாள் ஆண்டாள். அதன் பின் வேரி மயிர் பொங்க , உன் சிலிர்த்த பிடரியை எப்பாடும் பேர்த்து உதறி , எடுத்து வீசிவிட்டு, பூவைப்பூ வண்ணனான கண்ணனாக மாறினாய்.”

“மாரிமலை என்பது மலை போன்ற இரணியனின் மாளிகையையும் குறிக்கும்.அதில் குகை போன்ற தூணில், மன்னிக் கிடந்து உறங்கும் சிங்கமாய் இருந்த நீ மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு வந்தாயே அது போல இங்கு வந்து சீரிய சிம்மாசனத்தமர்ந்து எங்கள் கோரிக்கைத்யைக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்தது இந்தப் பாசுரம் “ என்றாள் கோதை.

“ அறிவுற்று தீ விழித்து சீரிய சிங்கம் என்றாயே நான் இரணியனைக் கொல்ல அல்லவா அப்படி வந்தேன். உங்களிடையே அப்படி வரலாமா? “ என்றான் கண்ணன்.

“பயங்கரமான உருவமா இல்லை பூவைப்பூவண்ணன் என்றாயே அதுபோல அழகிய உருவத்திலா எதில் வரவேண்டும் “ என்றான் கண்ணன்.

“அந்த உன் உருவத்தைக் அகண்டு பிரஹ்லாதன் பயப்படவில்லையே. நீ பக்தர்களைக் காக்க அல்லவா எந்த உருவத்திலும் திருவுள்ளம் கொண்டுள்ளாய்? “

“ நாரசிம்ஹ வபு: ஸ்ரீமான் என்றல்லவா பீஷ்மர் உன் சஹஸ்ரநாமத்தில் கூறுகிறார். அதாவது நரசிம்ஹ உருவத்திலும் நீ ஸ்ரீமான் அழகியவன் என்று? அதனால்தானே உன்னை அழகிய சிங்கர் அன்று பக்தர்கள் கூறுகிறார்கள்?’என்றாள் ஆண்டாள்.

” ஏதோ முக்கிய காரணம் என்றாயே அது என்ன? “ என்றான் கண்ணன்.

“சொல்கிறேன் அதற்கு முன் இன்னொரு விளக்கம்.”என்ற ஆண்டாளைப் பார்த்து, ‘” காத்திருக்கிறேன் “ என்றான் அந்தக் குறும்புக்காரன்.

ஆண்டாள் கூறினாள், “ விளையாட்டு வேண்டாம் கண்ணா. என் வாயிலிருந்து வரும் சொற்கள் உன் அருளால் அல்லவா? ஆனாலும் குழந்தைகள் மழலையில் இன்புறும் தந்தையைப்போல் எங்கள் வார்த்தைகளை ஒன்றும் அறியாதவன் போல் கேட்டு இன்புறுகிறாய்.”

“மாரிமலை என்பது வேதங்கள். உபநிஷதங்கள் அதில் உள்ள குகைகள். அதில் மன்னிக்கிடந்துறங்கும் சீரிய சிங்கம் என்பது பரப்ரம்மமாகிய வேத வேத்யனாகிய நீ.”

உபநிஷதங்களின் பொருள் அறிந்தோர் அறிவுற்று தீ விழித்து, அறிவுத்தீ சுடரிட, வேரிமயிர் பொங்க, எப்பாடும் பேர்த்துதறி, உடல் மனம் வாக்கு இவை உன் சேவைக்கே அர்ப்பணித்தவராக போதருமாப்போலே , உலகில் உன் புகழ பரப்ப வருவது போல,” என்று பொருள்.

“ நன்று நன்று, இப்போதாவது உன் முக்கிய காரணத்தை சொல்கிறாயா?’ என்ற கண்ணனிடம்,

“அதற்கு முன் நீ இந்த சிங்காசனத்தில் வந்து உட்காரவேண்டும்.இது சீரிய சிங்காசனம். இதில் உட்கார்ந்து கொடுத்த வாக்கை மீற முடியாது உன்னால்” , என்ற கோதையிடம்.

“ ஏதேது கைகேயி தசரதனிடம் வாக்குறுதி கேட்ட மாதிரி இருக்கிறதே?” என்று சிரித்தான் கண்ணன்.

“ நீ பிரம்மாவின் வரத்தை மீறாமலும் பிரஹ்லாதனின் வார்த்தையை மெய்ப்பிக்கவும் நரசிம்ஹனாகத் தோன்றினாய் அல்லவா? அதனால் தான் உன்னை நரசிம்ஹனாகவே பாவித்தேன்..” என்ற ஆண்டாளிடம்“இவ்வளவுதானா,” என்றான் கண்ணன்.“இல்லை, இன்னும் இருக்கிறது , “ என்ற ஆண்டாள்,

“நான் என் கனவைப்பற்றிய பாசுரத்தில் உன்னை அரிமுகன் அச்யுதன் என்றேன் அல்லவா, அது ஏனென்றால் அரிமுகன், அதாவது சிங்கப்பிரானாகிய நீ அச்யுதன், கொடுத்த வாக்கிலிருந்து வழுவாதவன்,. அதனால் தான் ருக்மிணி அவள் கடிதத்தில் உன்னை அச்யுதா என்றும் நரசிம்ஹா என்றும் அழைத்தாள். ஏனென்றால் நீதான் ஏலாப்பொய்கள் உரைப்பவன் ஆயிற்றே? அதனால் கிருஷ்ணா என்று சொல்லவில்லை. “என்றாள்.

“ நல்ல சான்றிதழ் அளித்தாய் ,” என்ற கண்ணன், இது என் லீலாவதாரம் ஆயிற்றே. என் செயல்களைப புரிந்து கொள்ளாவிட்டால் அப்படித்தான் தோன்றும். “.

“ பரம் பாவம் அஜானந்த: மம பூத மஹேச்வரம்,” என்று நான் அர்ஜுனனுக்கு சொன்னபடி, என் உண்மை ஸ்வரூபத்தைப் புரிந்து கொள்ளாதவர் என்செயல்களில் குற்றம் காண்பது இயல்பு. “ என்றான்.

“ உன் மாயையை யார் அறிவார்? ஆனால் இப்போது எங்கள் கோரிக்கையைக் கேட்டு அருளவேண்டும்.” என்றாள்ஆண்டாள்.

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி

பொன்றச்சகடமுதைத்தாய்! புகழ் போற்றி

கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்

கண்ணன் ஆண்டாளைப பார்த்து, நான் வந்து இந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டேன். உங்கள் கோரிக்கைகளைக் கூறு என்றான்.

நீ வந்தமர்ந்த சிம்ஹாசனம் எங்கள் மனம் அல்லவா? உன்னைப் பார்த்ததும் ஆனந்தத்தில் என்ன கேட்கவேண்டும் என்பதே மறந்துவிட்டது.” என்றாள்.

கண்ணன் கூறினான். “நல்லது, என் திரிவிக்ர்மாவதாரத்தை மூன்று முறை கூறிவிட்டாய் அல்லவா? ‘ஓங்கி உலகளந்த உத்தம பேர்பாடி,’ அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகலந்த,’ என்றும், இங்கு ‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,” என்றும்.

அதற்கு ஆண்டாள் “நீ உலகளந்தபொது உனக்குக் கிடைத்தது ஓர் அடி மண்தான் . ஏனென்றால் நீதான் ஒரு அடியில் மண்ணுலகம் முழுவதையும் அளந்து விட்டாயே. இரண்டாவது அடியில் விண்ணை அளந்தாய். மூன்றாவது அடி கிடைக்கவேயில்லை. ஏனென்றால் மகாபலியின் தலை நீ ஏற்கெனவே எடுத்துக்கொண்ட முதலடியில் அடங்கினது அல்லவா? அதனால் தான் நான் இங்கு உனக்கு மூன்று அடி தந்தேன்.” என்றாள்.

“ நன்றி. ஆனால் ஏன் சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் என்று சொன்னாய் நான் இலங்கையை விபீஷணனுக்குக் கொடுத்ததால் அதை அழிக்கவில்லையே? என்றான் கண்ணன்.

இந்தப் பாசுரம் உன்னைப் போற்றுவது போலத் தோன்றினாலும் இது உன் பாதங்களின் சிறப்பைக் கூறுவது. அன்று உலகளந்த பாதங்கள். அயோத்தியிள் இருந்தவாறே ராவணனை அழிக்கும் திறமை இருந்தாலும் முனிவர்களுக்கு அருள தண்டாகாரண்யம் முழுவதும் நடந்த பாதங்கள். அதனால்தான் சென்றங்கு என்று சொன்னேன்.

.தென்னிலங்கை செற்றாய் என்றால் இலங்கையை அழித்தாய் என்று அர்த்தம் இல்லை.இதை நான் ஏற்கெனவே தென்னிலங்கைக் கோமானைச் செற்ற என்ற இடத்தில் சொல்லியிருக்கிறேனே. தென்னிலங்கை என்றால் தென்- அழகிய, நிலம் – தேசம், கை – கைக்கொண்ட , அதாவது ராவணன். அவனை செற்றாய் அழித்தாய் என்று பொருள்.” என்றாள் ஆண்டாள்.

“அடேயப்பா “ நீ உண்மையில் சொல்லின் செல்விதான், “ என்ற கண்ணன் , பின்வரும் அடிகளும் என் அடியைப் போற்றுவதுதானோ?” என்றான்.

ஆம். ‘பொன்றச் சகடம் அதாவது சகடாசுரனை உதைத்தது இந்த அடிதானே இதன் புகழ் போற்றி என்றேன். “ என்ற ஆண்டாளிடம்,

“ ஆனால் என் தாய் நான் உதைத்து அந்தச்சக்டம் பொடிப்பொடியாயிற்று என்று மற்ற சிறுவர்கள் சொன்னதை நம்பவில்லை. என் பாதங்கள் வலிக்குமே என்று தொட்டுப் பார்த்தாள்.” என்றார் கண்ணனிடம்,

“ நீதான் மாயவன் ஆயிற்றே, வேதாந்த தேசிகர் கூறியுள்ளபடி அந்த சகடத்தின் உடைந்த துகள் கூட காணவில்லையோ என்னமோ/” என்றாள் ஆண்டாள்.

கண்ணன் கூறினான். “ அதிருக்கட்டும், கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி என்று கூறியிருக்கிறாயே , என் கைகள் அல்லவா அந்தச் செயல் செய்தன? “ என்றான்.

“ ஆம். ஆனால் நீ அந்த செயலை செய்வதை மனக்கண்ணில் காணும்போது உன் பாதங்கள் ஒன்று முன் ஒன்று பின்னாக வைத்து இருந்த அழகுதான் தெரிந்தது. அதனால்தான் கழல் போற்றி என்றேன். “ என்ற ஆண்டாளிடம் ,“ ஆனால் அடுத்த வரியில் ‘குன்று குடையாய் எடுத்தாய் , என்றது என் கரத்தைப் போற்றுவது தானே ,” என்ற கண்ணனிடம்,

“இல்லை, அங்கும் உன் பாதங்களையே போற்றினேன். பெரும் மழையைக் கண்டு பயந்து உன் பாதங்களில்தானே கோபர்கள் சரணமடைந்தனர். அதனால் உன் பாதங்களுக்கே அந்த மகத்துவம் உரித்தாகும், “ என்றாள் கோதை.

“ அதுவுமல்லாமல் ஏழு நாட்கள் அயராமல் நின்றது உன் பாதங்கள் அல்லவா? அதனால் உன் கரத்துக்கொப்பான பெருமை உன் பாதங்களுக்கும் உண்டு, ஆயர்களைக் காக்க ஏழு நாட்கள் தூக்கிய கரத்துடன் நின்ற உன்ன பக்தவாத்சல்யத்தையே குணம் போற்றி என்று குறிப்பிட்டேன்.” என்றாள் ஆண்டாள்.

“வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்று சொல்லி எதிரிகளை அழிக்கும் உன் ஆயுதத்தையும் அதைத் தாங்கும் கரத்தையும் போற்றி விட்டேன், “ என்ற ஆண்டாள், தந்தை கையில் வேல் என்றால் தனயன் கையிலும் அதுதானே இருக்கவேண்டும்?” என்றாள்.

இந்தப் பாசுரத்திற்கு வேறு ஏதாவது பொருள் சொல்லப் போகிறாயா? என்ற கண்ணன்., “இரு நானே சொல்கிறேன் “என்றான்.

“இந்தப்பாசுரம் சரணாகதியைக் குறிக்கிறது. ஆறு போற்றிகளும், பாஞ்சராத்ர ஆகமத்திள் என்னால் சொல்லப்பட்ட சரணாகதியின் ஆறு அங்கங்கள். தென்னிலங்கை என்றால் அழகான இருப்பிடம் கொண்ட , அதாவது தேகத்தைக் கொண்ட மனம்.. செற்றாய் என்றால் அந்த மனத்தை சரியான வழியில் நடத்துவதைக் குறிக்கிறது. சகடம் என்பது ஜீவனை ஜனனமரணம் என்னும் சுழற்சியில் கொண்டு செல்லும் கர்மா. என்னைச் சரணடையும்போது நான் இந்த சக்கரத்தை உதைத்துத் தள்ளுகிறேன். இதைத்தானே சொல்லப் போகிறாய் ? என்றான் கண்ணன்.

“ இன்னும் இருக்கிறது, “ என்ற ஆண்டாள் கூறினாள்.

போற்றி என்று ஆறுமுறை கூறியது, நாராயணனான உன் ஞானம், பலம், ஐஸ்வர்யம், சக்தி,தேஜஸ், வீர்யம் ஆகிய ஆறு பகவத் குணங்களைக் கூறுவது. “

“பொன்றச்ச்கடம் உதைத்தது , கர்ணனுடைய நாகாஸ்திறத்தில் இருந்து அர்ஜுனனைக் காப்பாற்ற நீ தேர்ச்சக்கரத்தை அழுத்தியது. சகடம் உதைத்தாய் என்றால் நீ காளியன் தலைமேல் சுழன்று சுழன்று ஆடியதையும் குறிக்கும்.”

“குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்பது, உன் சௌலப்யம், சௌசீல்யம்,வாத்சல்யம், ஸ்வாமித்வம் என்ற குணங்களை குடையாகக் கொண்டு எங்களைக் காப்பது. உன் பாதத்தை சரண் அடையத் தடையை உள்ள எங்கள் பாபங்களை அழிப்பது உன் கை வேல்.”

“அபாரம். சரி. உங்கள் கோரிக்கை என்ன?” என்றான் கண்ணன்.

“என்றென்றும் உன் சேவகமே வேண்டியே இன்று வந்தோம் “ என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் கூறினான்

“அன்று பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் பெண் என்பதை நிரூபித்து விட்டாய், போற்றி போற்றி என்ற இந்தப்பாசுரத்தின் மூலம்” என்றான்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைத்த

கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்

நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

“என்றென்றும் உன் சேவகமே வேண்டும் என்பதையே இதிலும் வலியுறுத்துகிறாய். ஆனாலும் அடுத்த பாசுரத்தில் ஒரு நீண்ட பட்டியல் காணப்படுகிறதே? “ என்றான் கண்ணன் .
“அதைப்பிறகு விளக்குகிறேன். “ என்ற ஆண்டாள் “இது உன் அவதார ரஹஸ்யத்தை விளக்கும் பாசுரம்.” என்று மேலும் கூறலுற்றாள்.

“ஒருத்தி மகனாய் பிறந்து என்பதே உன் மாயை. சாதாரண மானிடப் பிறவி என்பது உனக்கு எப்படி வாய்க்கும்? கிழக்கு திக்கில் சூரியன் உதிக்கிறான் என்று சொல்கிறோம். ஆனால் அது உண்மை அல்லவே? சூரியன் எப்போதும் இருக்கிறான் ஆனால் நமக்கு கிழக்கு திக்கில் தோன்றுகிறான். அதே போல நீ தேவகியின் மதலையாய் பிறக்கவில்லை, தோன்றினாய். எங்கேயாவது நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடன் குழந்தை பிறக்குமா? அதனால் தான் பாகவதம் ‘தம் அத்புத பாலகம் ,’ என்று கூறிற்று.”

“பிறகு, ஒருத்தி மகனாய் ஒளித்து வளரந்தாய். அது தரிக்கிலானாகி, தான் தீங்கு நினைந்த கம்சனைப் பற்றிய பயத்தால் அல்ல.உண்மையில் பயம் அவனுக்குத்தான் அவன் வயிற்றில் கனன்ற நெருப்பென உன்னை நினைத்து பயந்து கொண்டே இருந்தான்.’ஒளித்து வளர்ந்த’ என்றால் உன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு ஆயர்சிறுவனாக வளர்ந்தாயே அதைச் சொல்வது.” என்றாள் கோதை.

கண்ணன் கூறினான் . “ ஆம் என் அவதார ரஹஸ்யம் இதுதான். அதனால்தான் அர்ஜுனனிடம், ‘ஜன்ம கர்ம ச மே திவ்யம் யம் ஏவம் யோ வேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புனர்ஜனம் ந ஏதி, மாம் ஏதி’ என் ஜன்மம் கர்மம் இவைகளை யார் தெரிந்துகொண்டார்களோ அவர்கள் மறுபடி பிறப்பதில்லை, என்னை அடைகிறார்கள்’ என்றேன். “

ஆண்டாள் கேட்டாள், “என் ஜன்மம் என்று எதைக் கூறுகிறாய் ? உனக்கு ஏது ஜன்மம்?”

“ அஜாயமானோ பஹுதா விஜாயதே என்ற உபநிஷத் வாக்கியப்படி நான் பிறப்பற்றவன் ஆனால் பலவாகத் தோன்றுகிறேன். தேவகி, கௌசல்யை, அதிதி இவர்கள் என்னைப் பெற்றதாக நினைத்தது என் மாயை. என் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டு இதர உருவத்தில் தோன்றினேன், என்ற கண்ணனைப் பார்த்து, ஆண்டாள் ,

“ உன்னை மறைத்துக் கொள்வது என்பது உன் கைவந்த கலை ஆயிற்றே. இரணியனின் தூணில் மறைந்து இருந்தவன் அல்லவா?, மகாபலியை ஆட்கொள்ள வாமனனாகவும் தண்டகாரண்ய ரிஷிகளைக் காப்பாற்ற ராமனாகவும் வந்த நீ இப்போது யாதவகுலத்தைக் காக்க கோபாலனாய் தோன்றி உள்ளாய்.” என்றாள்.

“ வராஹமாகத் தோன்றி பூதேவியாகிய உன்னை எடுத்து வந்ததை மறந்துவிட்டாயே” என்றான் கண்ணன்.

“ ராமாவதாரத்தை நினைக்கையில் எனக்கு ஒன்று தோன்றுகிறது. தசரதர் செய்த தவப்பயன் நான்கு புதல்வர்கள். கிருஷ்ணாவதாரத்தில் நான்கு பேரின் தவப்பயனாக ஒரு புதல்வன். மேலும் ராமனாக பித்ருவாக்கிய பரிபாலனம் செய்தது வயது வந்த பின். ஆனால் கிருஷ்ணனாக பித்ருவாக்ய பரிபாலனம் பிறந்ததுமே “ என்றாள் ஆண்டாள்.

“எப்படி?என்ற கண்ணனிடம், “கம்சனுக்கஞ்சி உன் திவ்ய ஸ்வரூபத்தை மறைத்துக் கொள்ளும்படி உன் பெற்றோர் கேட்டதால் சாமானிய மானுடக்குழந்தை போல் ஆனாயே அதைச் சொல்கிறேன். “ என்றாள்.

“கிருஷ்ணாவதாரத்திலும் உன் ஸ்வரூபம் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்தது. வசுதேவர் தேவகியிடம் உன் நிஜ ரூபத்தைக் காட்டினாய். யசோதையிடம் வாய் திறந்து புவனம் காட்டினாய். நீ அசுரர்களை வதைத்தது, காளியனை வென்றது கோவர்தனம் தாங்கியது ஒவ்வொன்றுமே உன் திவ்ய ஸ்வரூபத்தை வெளிப்படுத்தினாலும், உன் மாயையால் எல்லாவற்றையும் மறைத்து விட்டாய்.” என்றாள்.

“ ஆயினும் என் பக்தர்களும் முனிவர்களும் என்னை உணர்ந்திருந்தார்கள், என்ற கண்ணன் , ஒருத்தி மகனைப் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்த என்ற உன் சொற்கள் எனக்கு நம்மாழ்வாரையும் ராமானுஜரையும் நினைவு படுத்துகின்றன. திருவாய்மொழி என்பது வேதம் அதில் உள்ளவன் வேதஸ்வரூபனான நானே. ஆகவே நம்மாழ்வார் தேவகியைப்போல, திருவாய்மொழியை உலகுக்கு அளித்த ராமானுஜர் யசோதையைப் போல.’என்றான் .”

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே

சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

“நீங்கள் வேண்டுவது என்ன என்று கேட்டாயல்லவா? பதில் கூறிவிட்டேன், “ என்ற ஆண்டாளைப் பார்த்து கண்ணன் “ ஏது பெரிய பட்டியலாக இருக்கிறதே?”என்றான்.

“ எங்கள் மூத்தோர் கூறியபடி பாவை நோன்பு செய்வதற்கு வேண்டிய சாமக்ரியைகள் இவை.” என்ற ஆண்டாளைப்பார்த்து,

“நீ கூறியவை தருவதில் ஒரு சங்கடம் இருக்கிறதே. உலகமே நடுங்கும் ஓசை கொண்ட என் பாஞ்சஜன்யம் போன்ற சங்கங்கள் பால் போல் வெண்மையானவை வேண்டும் என்றாய். பாஞ்ச ஜன்யத்தைப் போலே இன்னொரு சங்கம் ஏது? இதை உனக்கு கொடுத்துவிட்டு நான் என் செய்ய?” என்றான்.

“ உன் வாக் சாதுர்யத்தை என்னிடம் காண்பிக்கிறாய். நான் என்ன கேட்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா? பாலன்ன வண்ணம் என்று சொன்னது வெண்மையான சங்கம் தான் அதிக ஓசை எழுப்பும் என்பதனால். இங்கு வெண்மை என்பது சத்துவ குணம்.அது மனதில் பக்தி என்னும் பெரிய ஓசை எழுப்பி ரஜஸ் தமஸ் இவற்றை போக்கிவிடும்.

“ மேலும் உன்னை ஆலின் இலையாய் என்று குறிப்பிட்ட காரணம் பாற்கடலில் ஆதிசேஷன் மேல் துயின்ற நீ ஒரு ஆலிலை மேல் பாலகனாக தோன்றினாயே உன்னால் ஒன்று என்ன, ஆயிரம் வெண்சங்கங்களை உண்டாக்க முடியாதா?”

“ உன் பாஞ்ச ஜன்யத்தின் ஒலியாலேயே உலகத்தை உருவாக்க முடியும். ஏனென்றால் அது பிரணவமல்லவா. நீ பாஞ்சஜன்யத்தை ஞாலம் எல்லாம் நடுங்க முழங்கினபோதே அத்தனை கௌரவர்களும் அழிந்தனர். யுத்தம் என்பது ஒரு நாடகம். அதனால் கன்னத்தைத் தடவப் பெற்ற துருவன் ஞானத்தைப் பெற்றானே.”

“ஒரு தர்ப்பைப்புல்லை ப்ரும்மாஸ்திரமாக்கினாய். கடல் ஒரு கால்வாய் போல கடந்தாய். குரங்கு சேனையுடன் சென்று ராவணனை ஒரு கொசுவை அடிப்பது போல அழித்தாய். மேலும் கிருஷ்ணாவதாரத்தில் நீ செய்யாத அத்புதமா? என்றாள் ஆண்டாள்.

கண்ணன் கூறினான் . “அது சரி. பாஞ்ச ஜன்யத்தின் உனக்கு மிகவும் ஈடுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. அதற்கு மூன்று வரிகளை கொடுத்திருக்கிறாயே?”

“மூன்று வரிதானா ? உன் அதரத்தில் அமரும் பாக்கியம் பெற்ற அதற்கு பத்து பாசுரங்கள் அல்லவா அளித்திருக்கிறேன் “ என்ற ஆண்டாள் மேலும் கூறினாள்.

“இங்கு மூன்றுவரிகள் அமைக்கக் காரணம் பஞ்சஜன்யத்தின் த்வனி ஓம்காரம். அதற்கு அ, உ, ம் என்று மூன்று மாத்திரைகள் . அது மட்டுமா. பாஞ்சஜன்யம் கடலில் பிறந்து அசுரன் உடலில் வளர்ந்து உன் கரத்தை அடைந்தது என்ற மூன்று நிலை. அதே போல நீயும் மதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து துவாரகையில் குடியேறினாய் அல்லவா?”

“அபாரம்,” என்ற கண்ணன் சங்கத்தைப் போல மற்றவைகளுக்கும் என்ன உண்மையான பொருள் என்று கூறவேண்டியதுதானே ?” என்றான்.

ஆண்டாள் விடையளித்தாள்.

“சாலப்பெரும்பறை பறை வாத்தியம் அல்ல. உன் நாமசங்கீர்த்தனம்.அது எங்கும் முழங்கி மற்ற சப்தங்களை விலக்க வேண்டும். பல்லாண்டிசைப்பாரென்றது உன் பக்தர்களை . அவர்களின் சத்சங்கத்தால் உலக விஷயங்கள் மீது பற்று விலகும்.”

கோலவிளக்கு உன்னைப்பற்றிய ஞானமாகிய தீபம். கொடி, உன் புகழ் பரப்பும் பக்தி என்ற த்வஜம், விதானம் உன் அருள் என்கிற பந்தல்.”

கண்ணன் கூறினான்.

“ இது 26 ஆவது பாசுரம்.. இது அஷ்டாக்ஷரத்தையும் த்வய மந்திரத்தையும் குறிப்பதாக அடியார்கள் கூறுகின்றனர். 2+6 =8, அஷ்டாக்ஷரம். ,2 த்வயமந்த்ரம்.6 என்பது அதன் ஆறு பாதங்களைக் குறிக்கிறது என்று கூறுவர். “

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்

பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடுபுகழும் பரிசினால் நன்றாக

சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

“இப்போது கோவிந்த நாம சங்கீர்த்தனமா? “என்ற கண்ணன் , ஆனால் அது எனக்கு மிகவும் பிடித்த நாமம். “ என்றான்,

“ இது உன் பக்தரகளுக்கும் பிடித்த நாமம் ஆயிற்றே. ஒருமுறை அல்ல மூன்றுமுறை இந்த நாமத்தால் உன்னை அழைக்கிறேன். அது பற்றிய விளக்கம் என் அடுத்த பாசுரத்தில் வரும்.:” என்ற ஆண்டாள்’

“நீ உன்னை நினையாதவரையும் உன் அன்பினாலும் குணங்களினாலும் தடுத்தாட்கொள்பவன் . அதனால் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் என்றேன். ஆனால் உன்னிடம் அன்புள்ளவர்களால் நீ வெல்லப்படுகிறாய். உன்னை முதலில் நிந்தித்த வாலி பின்னர் புகழவில்லையா? தாராவும் மண்டோதரியும் அவர்கள் கணவர்களைக் கொன்ற உன்னைப புகழ்ந்தார்களே. அவர்கள் உன் குணத்தால் வெல்லப்பட்டார்கள். ராவணன் உன் வீரத்தாலும் சூர்பனகை உன் அழகினாலும், விபீஷணன் உன் கருணையினாலும் வெல்லப்படவில்லையா? “ என்றாள்.

“நீங்கள் கேட்டதைத் தந்தேன். இப்போது உங்கள் அடுத்த நடவடிக்கையைக் காண ஆவல் கொண்டுள்ளேன்.” என்ற கண்ணனிடம்,

ஆண்டாள் கூறினாள்.

“எங்களுடைய கோரிக்கை உன்னுடன் சேர்வதே. நீ அதைத் தர சம்மதித்ததால் நாங்கள் மையிட்டேழுதோம் , மலரிட்டு முடியோம் என்று அன்று சொன்னதன் மாறாக,சூடகம்- வளை, தோள்வளை , தோடு, செவிப்பூ என்னும் ஆபரணம் , பாடகம்- கால் கொலுசு முதலியவை அணிவோம். புத்தாடை அணிவோம். ஏனென்றால் அரசர்க்கரசனான உன் முன் நிற்கத் தகுதி வேண்டும் அல்லவா.”

“நெய்யுண்ணோம் பால் உண்ணோம் என்று அன்று சொன்னோம். இன்று சர்க்கரைப் பொங்கல் மூட நெய் பெய்து முழங்கை வழியாக ஓடும்படி உண்போம்.” என்றாள்.

கண்ணன் கேட்டான். “ அதென்ன முழங்கை வழி வார, நெய்யை ஓடவிடுவானேன். அதை சாப்பிட வேண்டியது தானே ? “ என்றான்.’

“ அது ஏன் என்றால் உனக்கு பால்சோறு அதாவது அக்காரவடிசில் நைவேத்யம் செய்து விட்டு உன் முகத்தையே பார்த்துக் கொண்டு அதை சாப்பிட மறந்து விடுவோம்.” என்றாள்.

“நெய்யிடை சோறும் நியதமும் அத்தாணிச்சேவகமும்

கையிடைக்காயும் கழுத்துக்குப்பூனோடு காதுக்குக் குண்டலமும்

மெய்யிடை சாந்தமும் தந்து எம்மை வெள்ளுயிராக்கவல்ல

பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே

என்று பாடிய பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை அல்லவா நீ? “ உன்னிடமிருந்து இந்த சொற்கள் வருவதில் வியப்பென்ன? “என்றான் கண்ணன்.

“உண்மையில் நாங்கள் அணியும் பல்கலன் அஷ்டாக்ஷர மந்த்ரம், த்வய மந்த்ரம் , சரம ஸ்லோகம் இவையே . உன்னோடு சேர்ந்து இருக்கும்போது, உண்டாகும் ஆனந்தமே உன் அருளாகிற நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கல். புத்தாடை என்பது உன் கைங்கர்யம்.” என்ற ஆண்டாளைப் பார்த்து, “ உன் முகத்தைப் பார்த்தால் இன்னும் ஏதோ சொல்ல வருவது போல் தெரிகிறதே?” என்றான் கண்ணன்.

“ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் என்றது நீ இருக்கும் அதே பூமியில் இருப்பது. சாலோக்யம். உன் மாளிகை வருவது சாமீப்யம், உன் அருகாமை. இதற்கு முந்தைய பாசுரத்தில் நாங்கள் கேட்டவை உன்னோடு ஒத்துப்போகும் தன்மை அதாவது சாரூப்யம்.இந்த பாசுரத்தில் கேட்பது உன்னோடு கலத்தல் , சாயுஜ்யம். உன்னோடு கூடியிருந்து அடையும் ஆனந்தமே பாற்சோறு.

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை

பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

போன பாசுரத்திற்குப் பிறகு தன்னை ஆயர்பாடியில் இருப்பதாகவே கற்பனை செய்துகொண்ட ஆண்டாள் கூறினாள்.

“உன்னுடன் இணையும் ஆனந்தம் கிடைக்க வேண்டும் என்று கேட்டோம் நீயும் தந்தேன் என்றாய் . ஆனால் எங்களுக்கு அதற்கு தகுதி உண்டா என்று தெரியவில்லை.”

“ ஏன் இந்த திடீர் சந்தேகம்? “ என்றான் கண்ணன்.

“ ஆண்டாள் கூறினாள்.” நீ குறைவொன்றும் இல்லாத கோவிந்தன், நான் இப்போது உன்னை எங்கும் நிறைந்தவனாகக் காண்கிறேன்.

நாங்கள் பசுக்கள் பின்னால் சென்று கானகத்தில் உணவு உண்ணும் அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம். நீ பிறந்து இங்கு வந்தது நாங்கள் செய்த புண்ணியம். அறியாத பிள்ளைகளாகிய உன் பெருமை தெரியாமல் உன்னை எங்களுக்கு இணையனானவன் போல கண்ணா கோபாலா என்று சிறு பேரால் அழைக்கிறோம். நீ சீறினால் என்ன செய்வது என்ற பயம் வந்து விட்டது. ஆனாலும் உன்னை விட்டுவிட்டு எங்களால் இருக்க முடியாது ஆதலால் அருள வேண்டும்.” என்றாள்.

கண்ணன் கூறினான் .”கண்ணா கோபாலா என்பது சிறு பேறல்ல. நான் இங்கு கிருஷ்ணனாக இருக்கையில் என்னை நாராயணா, என்று அழைத்தால்தான் சிறுபேர்,. வேஷத்திற்கேற்ற பெயர் சொல்லித்தானே கூப்பிடவேண்டும். நாடகத்தில் நடிக்கும் ஒருவனை அவன் இயற்பெயர் சொல்லி அழைப்பார்களா? “

“நான் இந்த இடைக்குலத்திற்கு ஏன் வந்தேன் தெரியுமா? நீங்கள் செய்த புண்ணியம் கோஸம்ரக்ஷணம். பசுவின் தேஹத்தில் பதினான்கு லோகங்களும் இருக்கின்றன. ஆதலால் பசுவை மூன்று தரம் சுற்றி வருவது இந்த பிரபஞ்சத்தை சுற்றி வருவதாகும்.”

“ஆமா அறிவேன். அதனால்தானே கௌதமர் காமதேனுவைச் சுற்றி வந்து அஹல்யையை அடைந்தார். “ என்றால் ஆண்டாள்.

“ நீ அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலம் என்றாயே , நான் பக்தியை மட்டுமே பெரிதாகக் கருதுகிறேன். சாஸ்த்ர அறிவையோ யாகம் தவம் இவைகளையோ அல்ல. ‘நாஹம் வேதைர்ந தபஸா ந தானேன ந ச இஜ்யயா, பக்த்யா து அனந்யயா லப்ய: என்று அன்று பார்த்தனுக்குக் கூறியபடி பக்தியால் மட்டுமே என்னை அடைய முடியும் . தவத்தினாலோ தானதர்மங்கள் செய்வதாலோ யாகங்கள் செய்வதாலோ அல்ல” என்றான் கண்ணன். .

“ ஆம் அறிவேன். சபரியும் குஹனும் உன் அருள் பெறவில்லையா.? ஆனால் சபரி குருவின் அருளால் அவள் கொடுத்த பழங்களை நீ உண்ணும் பாக்கியம் பெற்றாள். குஹனுக்கு அது கிடைக்கவில்லையே. ஆயர் சிறுமியர் குருவுக்கு எங்கே போவது? “ என்றாள் ஆண்டாள்.

“ஆயர்களுக்கு அவர்கள் சேவை செய்யும் பசுக்களே குருமார்கள். திலீபன் நந்தினிக்கு சேவை செய்து அருள் பெற்றது போல.”

“உண்மை அறிவு என்பது என்னை அறிவது மற்றதெல்லாம் அறியாமையே, “ என்ற கண்ணன் , இந்த பாசுரத்தில் கோவிந்தன் என்ற சொல்லுக்கு விளக்கம் கூறுவதாக உரைத்தாயே.” என்றான்.

.” சொல்கிறேன், என்ற கோதை,

“கோ என்றால் மோக்ஷம் அல்லது சுவர்க்கம். அதைக்கொடுப்பதால் நீ கோவிந்தன்..

கோ என்றால் அஸ்த்ர சஸ்த்ரம். அதை நீ விச்வாமித்ரரிடம் இருந்து பெற்றதால் கோவிந்தன்.

கோ, பசுக்கள் அவற்றை அறிந்தவன் அதாவது அவைகள் தண்டகாரண்ய ரிஷிகள் என்று அறிந்தவன்.

கோ என்றால் வேதம் நீ வேதத்தால் அறியப்படுபவன்..

கோ என்றால் வஜ்ராயுதம் அதை இந்திரன் பெற வழிகாட்டியவன்.

உன்னை வேதம் சஹஸ்ராக்ஷ: என்று சொல்கிறது கோ என்றால் கண் என்றும் பொருள்.

கோ என்றால் நெருப்புஜ்வாலை. நீ சூர்யமண்டல மத்ய வர்த்தி என்று கூறுகிறது வேதம்.

கோ என்றால் பூமி. ஜலம், வேதம், இந்த்ரியங்கள் என்றும் பொருள். நீ வராஹமாக பூமியை வெளிக்கொணர்ந்தாய், மத்ஸ்யமாகவும் கூர்மமாகவும் நீரில் சஞ்சரித்தாய், வேதங்களின் உட்பொருள் ஆனாய். இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்துபவன் , ஹ்ருஷீகேசன்,

“ஆச்சரியமான விளக்கம், “ என்ற கண்ணன் , “ எனக்கே மறந்துவிட்ட பல அர்த்தங்களைக் கூறினாய். அதனால் தான் நீ பிறந்த இந்த ஸ்ரீவில்லிபுத்தூரை கோவிந்தன் வாழுமூர் என்று சொல்கிறார்களோ. “ என்ற கண்ணன் , முக்கியமான அர்த்தத்தை மறந்து விட்டாயோ? ‘ என்றான்.

“இல்லை மறக்கவில்லை . கோவர்தனத்தைத் தாங்கியதால் உனக்கு கோவிந்த பட்டாபிஷேகம் நடந்ததல்லவா? கோ என்றால் மலை என்றும் அர்த்தம் கோ வர்தனம் என்ற பெயர் கோ அதாவது பசுக்களை வர்தனம், செழிக்கச் செய்வதால் அதற்கு கோவர்தனம் என்ற பெயர் பொருத்தமே,’ என்ற ஆண்டாள், உன் கோவிந்த பட்டாபிஷேகம் நீ ராமனாக பட்டாபிஷேகம் செய்துகொண்டதை விட உயர்ந்தது என்று கூறுகிறார்களே , ஏன் தெரியுமா?” என்ற ஆண்டாளைப் பார்த்து

“‘சொன்னால் தானே தெரியும் என்றான்,” அந்த குறும்புக்காரன் கள்ளப் புன்னகையுடன்.

“ வால்மீகி கூறுகிறார் ராமருக்கு வசிஷ்டர் பட்டாபிஷேகம் செய்தது, ‘வஸவோ வாஸவம் யதா’ தேவர்கள் இந்திரனுக்கு செய்தது போல் இருந்தது, என்று. கோவிந்த பட்டாபிஷேகம் அந்த இந்திரனே உனக்கு செய்தானே!” என்றாள் ஆண்டாள்.

“ கோவிந்தா என்று என்னை அழைப்பவர் யாராயினும் அவரை உடனே வந்து காக்கக் கடமைப்பட்டுள்ளேன், த்ரௌபதி கோவிந்தா என்று கூவியவுடன் காத்தது போல. அதனால் எனக்கும் கோவிந்தன் என்பது மிகவும் பிடித்த பெயர். என்றான் கண்ணன்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

“சிற்றம் சிறு காலே, அதிகாலையில் வந்து கோவிந்தா என்று கூறி உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியைப் போற்றும் காரணம் சொல்கிறேன் கேளாய் . சற்றுத் தாமதமாக வந்தால் நீ மாடு மேய்க்கப போய்விடுவாய். மேலும். உன்னுடைய சிற்று அம் சிறுகால் உன் கட்டிலில் இருந்து வெளித்தெரிவதை காண்பது எத்தனை இன்பம்! உன் அந்த பொற்றாமரை அடிதான் எங்களை இங்கு இழுத்து வந்தது.அதைப் போற்றவே வந்தோம்.”
“ என்னைக் கூப்பிட்டால் நானே வந்திருப்பேனே. பனித்தலை வீழ நீங்கள் இவ்வளவு காலையில் வந்திருக்க வேண்டாமே ?” என்ற கண்ணனிடம்,

‘நாங்கள் கூப்பிட்டால் நீ வருவதற்கு நாங்கள் என்ன கஜேந்த்ரனா இல்லை திரௌபதியா? நாங்கள் அவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்: அல்ல. ஆயினும் பெற்றம் மேய்த்துண்ணும் ஆயர்குலத்தில் உதித்த நீ எங்களைக் கைவிடமாட்டாய் , எங்கள் குற்றேவலை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் வந்தோம் . என்றாள் ஆண்டாள்.

“மேலும் சிற்றம் சிறு காலை என்பது பிராம்ம முஹூர்த்தம். முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம் செய்யும் வேளை. பேரரரவம் என்றால் அவர்கள் த்யானிக்கும் உன் ஸ்வரூபம் ஒன்றாகச் சேர்ந்து விஸ்வரூபம் எடுத்தது போல. அப்போது உன்னை வழிபடுவது சிறந்தது. ஏனென்றால் இந்த உலக வ்யவஹாரத்தின் சபலம் தூண்டுமுன் உன்னை நினைப்பது சுலபம்.”

“ஆன்மீகப் பொருளாவது, சிற்றம் சிறுகாலை என்பது பகவத் விஷயமான அறிவு ஏற்படுவது. அதற்கு முன் அறியாமை என்ற இரவில் தூங்கிக் கொண்டிருக்கிறோம். “

“என்னைப் போற்றும் பொருள் என்ன என்பதை இன்னும் சொல்லவில்லையே? “ என்றான் கண்ணன்.

ஆண்டாள் கூறினாள். “இற்றைப் பறைகொள்வான் அன்று , எங்களுக்கு இந்த உலகத்தின் பொருள் எதுவும் வேண்டாம். கோவிந்தா எனக் கூறி வந்து அன்று விபீஷணன் ‘த்யக்த்வா புத்ராம்ஸ்ச தாராம்ஸ்ச ராகவம் சரணம் கத:’ என்று உற்றார் உறவினர் எல்லோரையும் விடுத்து வந்தது போல் உன்னையே சரண் எனப்புகுந்தோம். “

எங்களுக்கு வேண்டியதெல்லாம் இற்றைக்கும் ஏழேழுபிறவிக்கும் உன்னோடு உற்றோராக இருக்க வேண்டும்.உனக்கே ஆட்செய்ய வேண்டும். இனி வரும் பிறவிகளிலும் உன் அடியவர்களாகி உன் சேவையில் ஈடுபடவேண்டும். “ மற்றை காமங்கள் மாற்றி எங்களை ஆட்கொள்வாயாக.:” என்றாள் ஆண்டாள்

“ இன்னும் ஏழேழு பிறவி என்றால் முக்தியை நீங்கள் விரும்பவில்லையா? “ என்றான் கண்ணன்.”

ஆண்டாள் கூறினாள். உன் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தால் ஏழேழு பிறவியும் ஒரே பிறவி போலத்தான் இருக்கும். முக்தி என்பதில் அக்கறை இல்லை. நீ ஒருவன்தான் எல்லாப் பிறவிகளிலும் எங்கள் பந்து. மற்ற பந்துக்கள் இந்தப் பிறவியோடு சரி. “

“ அதாவது மாதா ச லக்ஷ்மீ தேவி பிதா தேவோ நாராயண:, பாந்தவா விஷ்ணுபக்தா: ச வசுதைவ குடும்பகம் “ என்ற வாழ்க்கை வேண்டும் என்கிறாய்”., என்ற கண்ணன் “உன் பாசுரங்கள் மூலம் சரணாகதிதத்துவத்தை நிலைநாட்டிவிட்டாய்.” என்றான்.

ஆண்டாள் கூறினாள். “எவரிடம் சரணாக்தி அடைகிறோம் என்பது முக்கியம். யாரிடம் சக்தி, காருண்யம் இவை உள்ளதோ அவரே சரணம் அடையத் தகுந்தவர். த்வய மந்திரமான ஸ்ரீமன் நாராயண சரணௌசரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம: , பிராட்டியுடன் கூடிய உன்னை சரணம் அடைவதைக் கூறுகிறது. லக்ஷ்மணன் சீதையுடன் நீ இருக்கும்போது காலில் விழுந்தான் தன்னை வனதுக்கு அழைத்துப்போகக் கோரி. சீதையை விட்டு உன்னை மட்டும் கோரிய சூர்பனகை காது மூக்கு இழந்தாள். உன்னை விட்டு சீதையை மட்டும் கவர்ந்த ராவணன் அழிந்தான்.

அதே சமயம் சக்தியற்றவரை சரணம் அடைவது பயனற்றது என்று நீ சமுத்ரராஜனை சரணம் என்று கூறியது காட்டுகிறது. ஏனென்றால் அவன் அஸமர்த்தன்.உன்னைவிட சக்திபடைத்தவன் அல்ல. எனவே ஸமர்த்தனாகவும் காருண்யனாகவும் பிராட்டியுடன் கூடியனாகவும் உள்ள உன்னை சரணம் அடைந்தோம்.” என்றாள் ஆண்டாள்.

மேலும் கூறினாள்.

சரணாகதி என்பது ஒரு யக்ஞம். ஆத்மாதான் ஹவிஸ். அச்சுதனாகிய நீ யாகத்தீ. பிரணவம் என்பது வில். ஆத்மா அம்பு. ஆத்மாவை பிரணவத்தில் பூட்டி பிரம்மமாகிய உன்னைக் குறிவைக்க வேண்டும். “

“கண்ணன் கூறினான்.

“ஆம். உன்னுடைய திருப்பாவை ஆத்ம சமர்ப்பணம் என்ற ஒரு மகாயக்ஞம்.”

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை

திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்

செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

இந்தப பதிவு ஆரம்பத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை சாற்றுமுறை நடக்கையில் அரங்கனும் ஆண்டாளும் வந்து கலந்து கொண்டனர். இப்போது இவர் இருவர் சந்நிதியிலும் அன்பர்கள் பலஸ்ருதி ரூபத்தில் உள்ள இந்த பாசுரத்தைக் கூறி சேவிக்கிறார்கள்.

வங்கக்கடல் கடைந்த மாதவன் மற்றும் கேசவன். அவனை திங்கள் திருமுகத்துச் சேயிழையார் , கோதை தலைமையில் அழகிய முகம் கொண்ட பெண்கள் சென்று, அவன் மாளிகைக்குச்சென்று, இறைஞ்சி, ப்ரார்த்தித்த, பட்டர்பிரான் மகளான் கோதையின் இந்த முப்பது சங்கத்தமிழ் மாலையை எவர் ஈரிரண்டுமால்வரைத் தோள் கொண்ட திருமாலுக்கு சமர்ப்பிக்கிறார்களோ அவர்கள் என்றும் இன்புற்று வாழ்வார் என்பது இதன் சாராம்சம்.இப்போது பாசுரத்தைப் பார்க்கலாம்.

வங்கக்கடல் என்றால் வங்காள விரிகுடாக்கடல் என்று சிலர் நினைக்கலாம் ! மாதவன் கடைந்தது திருப்பாற்கடல். ஏன் வங்க க்கடல் என்று கூறினாள்? வங்க என்றால் அழகிய என்று பொருள். பாற்கடல் அச்சுதன் குடிகொண்டதால் அழகியது. மேலும் அழகே உருவான திருமகளைத் தந்ததாலும் அமுதம் தந்ததாலும் அது அழகியது. வங்க என்ற சொல்லுக்கு அலைகள் நிரம்பிய என்றும் பொருள்.

கடைந்த மாதவன் – இங்கு மாதவன் என்ற பெயர் பொருத்தம் .ஏனென்றால் மாயா: தவ: மாதவ: . மா என்றால் லக்ஷ்மி தவ என்றால் பதி. கடலைக் கடைந்ததனால் லக்ஷ்மீபதியான அவனை இங்கு மாதவன் என்று சொல்கிறாள்.கடைந்தது மட்டும் அல்லாமல் முதலிலிருந்து கடைசி வரை, அவன் உதவினான் அல்லவா?

யாமுனாசார்யர் ஸ்தோத்ரரத்தினத்தில் கூறுகிறார் ,” யதர்த்தம் அம்போதி: அமந்தி அபந்தி ச ,” யார் பொருட்டு கடல் கடையப்பட்டதோ கட்டப்பட்டதோ என்று. அதாவது திருமகளை அடைய கடலைக் கடைந்தான் , திருமகள் அவதாரமான சீதையை அடையக் கடலைக் கட்டினான்.என்கிறார்.

இதை ஆராய்ந்து பார்க்கையில், திருமகளை அடையவே அவ்வளவு ஸ்ரமம் எடுத்துக்கொண்டான் என்று வைத்துக் கொண்டாலும், அவளைத்தன் திருமார்பில் வைத்து அவன் ஹ்ருதயத்தை தயைக்கு இருப்பிடமாகக் கொள்வதற்கே என்று அறியலாம். ஆகையால் அவன் உலகக்ஷேமத்துக்காகவே திருமகளை அடைய விரும்பினான் என்று விளங்குகிறது.

பாற்கடலைக் கடைந்தவன் கோகுலத்தில் தயிர்கடலையும் கடைந்தான் கோபியர் உள்ளத்தையும் கடைந்தான், இது பின்னர் மகாபாரதம் என்ற ரணக்கடலைக் கடைவதற்கோ என்று தோன்றுகிறது.

கேசவன் என்ற சொல் அழகிய கேசத்தை உடையவன் , கேசி என்ற அசுரனைக் கொன்றவன், நாராயணன் என்கிற பரப்ரம்மஸ்வரூபம் க என்ற பிரம்மாவையும் ஈஸ என்னும் சிவனையும் வசத்தில் கொண்டது என்றும் பொருள் கொள்ளலாம். கேசவன் மார்கழி மாதத்தின் அதிஷ்டான தெய்வம், இந்த பாசுரம் கடைசி ஆதலால் அடிபாடி என்று தொடங்கி கேசவன் என்று கேசத்தைக் குறிப்பதாக உள்ளதால் இது பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் ஆகிறது.

அடுத்து பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் என்றதன் பொருள், விஷ்ணுசித்தர் அதாவது பெரியாழ்வார் தாமரை மற்றும் துளசி அணிவாராம்.தாமரை ஸ்ரீதேவியையும் துளசி நாராயணனையும் குறிப்பது.

கோதையின் பாசுரங்கள் மேன்மையில் சங்கத்தமிழை ஒத்தது. அதனால் சங்கத்தமிழ் மாலை என்பது பொருத்தமே.சங்கம் என்றால் சேர்வது. பல பக்தர்கள் கூடி இதை அனுபவிக்கிறார்கள்.

ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமால். மால் போல் அதாவது மலை போன்ற நான்கு தோள்களை உடையவன், தாமரைச்செங்கண் கொண்டவன். இதுவரை சரி. அதென்ன செல்வத்திருமால்?

இதற்குப் பல பொருள் கூறுகிறார்கள்.

திருமால் என்பது ஸ்ரீனிவாசன் திருமகளுடன் சேர்ந்து செல்வத்திருமால் ஆகிறான்.

எண்ணற்ற பக்தகோடிகள்ஆகிய செல்வம் உடையவன்.

ஆண்டாள் சூடிக்கொடுத்த பூமாலை, பாடிக்கொடுத்த பாமாலை என்ற செல்வம் உடையவன்.

நம்மாழ்வார் அவனை செல்வநாரணன் என்று குறிப்பிடுகிறார்.

ராமானுஜரால் செல்வப்பிள்ளாய் என்று அழைக்கப் பட்டவன்.

இந்த திருப்பாவையை அறிந்து திருமாலை வணங்குபவர் எங்கும், இகலோகம் பரலோகம் இரண்டிலும் திருவருள் பெற்று இன்புறுவர்,

இவ்வாறாக இந்த திருப்பாவை பற்றிய பதிவு நிறைவு பெறுகிறது.

Advertisements
Posted in Uncategorized | Leave a comment

Samskrita bharati model questions papers in Sanskrit

https://www.dropbox.com/s/ux7686hanhwxvy3/parichaya-jan-2015.pdf?dl=0

https://www.dropbox.com/s/tigxo5kf6j0wp4g/Parichaya%20July%202015-final.pdf?dl=0

https://www.dropbox.com/s/zgyhuwpx5iee7zb/Parichayah-July%202016.pdf?dl=0

https://www.dropbox.com/s/myuogma2zs0het4/parichaya-jan-2017%28Fi%20%29.pdf?dl=0

https://www.dropbox.com/s/75hmutjyotj9dei/shikshaa-%20jan-2015.pdf?dl=0

https://www.dropbox.com/s/kyirc5jye5mfqq6/shikshaa-%20july-2015.pdf?dl=0

https://www.dropbox.com/s/epv1zfzu5603epo/shiksha-jan-2016.pdf?dl=0

https://www.dropbox.com/s/3fs4hihkhua17gx/shiksha-july-2016.pdf?dl=0

Posted in Uncategorized | Leave a comment

Sanskrit subhashitam

🖌सुभाषित-विज्ञानम् – 32📚
📝अर्थानामर्जने📖

मूलम्-
अर्थानामर्जने दुःखमर्जितानां च रक्षणे ।
आये दुःखं व्यये दुःखं धिगर्थाः कष्टसंश्रयाः ॥
(पाठ. आये व्यये महद्दुःखं कथमर्थाः सुखावहाः)

पदविभागः-
अर्थानाम् अर्जने दुःखम् अर्जितानां च रक्षणे । आये दुःखं व्यये दुःखं धिग्, अर्थाः कष्टसंश्रयाः ॥

अन्वयः-
अर्थानाम् अर्जने दुःखम् अर्जितानां च रक्षणे (दुःखम्) । आये दुःखं व्यये दुःखं धिग् अर्थाः कष्टसंश्रयाः ॥

प्रतिपदार्थः-
अर्थानाम् = धनस्य ; of the riches, wealth
अर्जने = द्रव्य-सम्पादने ; in earning
दुःखम् = मनसः पीडा ; unhappiness, pain
अर्जितानां च = स्वत्व-कृतानां अर्थानां ; of the earned (riches)
रक्षणे = (अत्र) सञ्चये ; in safe-guarding
आये = लाभे, प्राप्तौ ; in earning, in acquisition of money
व्यये = अर्थस्य अपगमे ; in spending
धिग् = (निन्दार्थकमव्ययम्) अहो ; fie
अर्थाः = धनं ; riches, wealth
कष्टसंश्रयाः = व्यथा-स्थानम् ; resort of misery, suffering,

तात्पर्यम्-
धनं सम्पादयितुमपि पीडा भवति, तस्य परिरक्षणेऽपि दुःखमेव। धनलाभेन, अपगमेनापि मनसि व्यथा जायते। एवंविध-दुःखभाजनस्य धनस्य धिक्। [अनेन धनार्जनं त्यक्तव्यमिति, धनं पूर्णतया अनुपयुक्तमिति वा न अर्थोऽत्र। किन्तु आवश्यकताम् अतिरिच्य तस्मिन् आदरभावः न युक्तः। अस्य सुभाषितस्य एवं समाधानं वक्तुं शक्यते- "यल्लभसे निजकर्मोपात्तम्, वित्तं तेन विनोदय चित्तम्" ]

It is difficult to earn money, and to protect the earnings. Income as well as expenditure give pain – Fie on Money which is the cause of hardship.
[This does not mean that money is totally useless or one should stop earning it. But investing too much interest in it is bad. Answer to this would be from something like this – "यल्लभसे निजकर्मोपात्तम्, वित्तं तेन विनोदय चित्तम्" ]

प्रश्नाः-
1. के कष्टसंश्रयाः?
2. कुत्र कुत्र दुःखं भवति?
3. किमनेन धनार्जनं त्यक्तव्यमिति अर्थः?
4. ‘कष्टसंश्रयाः’ इत्यत्र समासविग्रहः कथम्?
5. आये दुःखं

Posted in Uncategorized | Leave a comment

Sivasadaksara stotram

Sivasadaksara stotram

Posted in Uncategorized | Leave a comment

Nakshatra temples of Shiva

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்
நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.
இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும்,
பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை.
இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.
எத்தனையோ மகான்களும்,
ரிஷிகளும்,
தேவர்களும்
வழிபட்ட,
இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு,
தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம்
இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள்
சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.
மனிதராய் பிறந்த அனைவர்க்கும்,
அவரவர் ,
கர்ம வினையே – லக்கினமாகவும்,
ஜென்ம நட்சத்திரமாகவும்
பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து
பெற்றெடுக்கும் பெற்றோர்களையும்,
பிறக்கும் ஊரையும்,
வாழ்க்கை துணையையும்,
அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும்,
வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு,
நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,
நமது கர்மக்கணக்கு நேராகிறது.
அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும்,
தீராத பிரச்னைகளும் தீர்ந்து ,
மனதளவில் நமக்கு பலமும்,
மாற்றமும் ஏற்படுகின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை
உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று
ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள்.
அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம்,
சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும்.
. 🙏👌🙏
ஆலயங்களும், அமைவிடங்களும்:-
அஸ்வினி:-
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:-
திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
பரணி:-
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:-
மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.
கார்த்திகை:-
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது.
மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
ரோஹிணி:-
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்:-
காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
மிருக சீரிஷம்:-
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்:- தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
திருவாதிரை:-
அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:-
தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
புனர் பூசம்:-
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம்:-
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
ஆயில்யம்-
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மகம்:-
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது.
இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம்.
ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம்:-
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.
ஆயில்யம்-
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மகம்:-
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது.
இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம்.
ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம்:-
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
உத்திரம்:-
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:-
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
ஹஸ்தம்:-
அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.
குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
சித்திரை:-
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்:-
மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும்.
மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
சுவாதி:-
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:-
சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது.
குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.
விசாகம்:-
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம்:-
மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம்.
இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன
அனுஷம்:-
அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
கேட்டை:-
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்:-
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.
மூலம்:-
அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
பூராடம்:-
அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:-
தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம்.
பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
உத்திராடம் :-
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது.
ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
திருவோணம்:-
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்:- வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்.
*அவிட்டம்
அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..
சதயம் :-
அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:-
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.
பூரட்டாதி :-
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
இருப்பிடம்:- திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
உத்திரட்டாதி:- அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:- புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.
மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.
ரேவதி :-
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
இருப்பிடம்:- திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும்.
இங்கிருந்து 5 கி.மீ.
தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது

Posted in Uncategorized | Leave a comment

Rasi temples of Shiva

எந்த ராசியினர் எங்கு சென்று சிவனை வழிபடலாம்..!!

✮ சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி. ஒவ்வோரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் லிங்கத்தில் அருள்பாலிக்கத் தொடங்கியதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் சிவபெருமானின் அடிமுடி தேடியதும், தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அருந்தி சிவபெருமான் உலகைக் காப்பாற்றியதும் இந்த நாளில்தான். மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும்.
எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம் என்பதைக் காண்போம் :

மேஷம்
மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம்.

ரிஷபம்
திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மிதுனம்
திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடகம்
திருக்கடையூர், திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம்.

சிம்மம்
சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் சிவப்புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கன்னி
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.

துலாம்
சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலாபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

விருச்சிகம்
திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

தனுசு
திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.

மகரம்
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

கும்பம்
சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.

மீனம்
வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.
நன்றி

Posted in Uncategorized | Leave a comment

13th February – Periyavaa

Today is the Day on 13 February 1907 – Swaminathan was consecrated as Sri CHANDRASHEKHARENDRA SARASWATHI SWAMIGAL (Mahaperiyavaa)

During the childhood of the Acharya, his father consulted an astrologer who, upon studying the boy’s horoscope, is said to have been so stunned that he prostrated himself before the boy exclaiming that "One day the whole world will fall at his feet".

In the first week of February 1907, the Kanchi Kamakoti Math had informed Subramanya Sastrigal that Swaminathan’s first cousin (son of his mother’s sister) was to be installed as the 67th Peetathipathi. The presiding Acharya was then suffering from smallpox and had the premonition that he might not live long. He had, therefore, administered upadesa to his disciple Lakshminathan before he attained Samaadhi. Sastrigal being away in Trichinopoly on duty arranged for the departure of Swaminathan with his mother to Kanchipuram. The boy and his mother started for Kalavai (where Lakshminathan was camping) to console his aunt who, while also being a widow, had just given up her only son to be an ascetic. They traveled by train to Kanchipuram and halted at the Sankara Math. By then, Lakshminathan had fallen ill.

I had a bath at the Kumara Koshta Tirtha. A carriage of the Math had come there from Kalavai with the people to buy articles for the Maha Puja on the tenth day of the passing of the previous 66th Acharya. One of them, a hereditary maistry (mason) of the Math, asked me to accompany him. A separate cart was engaged for the rest of the family to follow me. During the journey the maistry hinted to me that I might not return home and that the rest of my life might be spent in the Math itself. At first I thought that my elder cousin having become the Head of the Math, it was his wish that I should live with him. But the maistry gradually clarified matters as the cart rolled on. The acharya had fever which developed into delirium and that was why I was being separated from the family to be taken to Kalavai… I was stunned by this unexpected turn of events.

I lay in a kneeling posture in the cart, shocked as I was, repeating "Rama… Rama," the only prayer I knew.

My mother and other children came some time later only to find that instead of her mission of consoling her sister, she herself was placed in the state of having to be consoled.

The 67th Acharya also attained Samaadhi, after reigning for a brief seven days as the head of the Math. Swaminathan was immediately installed as the 68th head of Sri Kanchi Kamakoti Peetam on February 13, 1907, the second day of the Tamil month of Maasi, Prabhava year. He was given Sanyasa Asramam at the early age of 13 and was named Chandrasekharendra Saraswati.

JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.

Posted in Uncategorized | Leave a comment