Esaiyanoor paati – Periyavaa

*"ஜகன்மாதாவான பெரியவாளுக்கே, யசோதையாகி, மாத்ரு பாவத்தில் பக்தியை பொழிந்தவள்"*.

ஒருமுறை ப்ரஹ்லாதன் எனும் ஶ்ரீமடத்து யானைக்கு மதம் பிடித்து, ஒரு குதிரையை கொன்றுவிட்டது. எனவே பெரியவாளின் மஹா பக்தையான, எஸையனூர் பாட்டியிடம் ப்ரஹ்லாதனை அனுப்பியதும், குண்டுத்தோப்பு எனும் தோப்பில் வைத்து அவனுக்கு வைத்யம் பார்த்தாள் பாட்டி.

ப்ரஹ்லாதனுக்கு வைத்யம் பண்ண, பாலக்காட்டிலிருந்து வைத்யர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அதற்கான அத்தனை செலவையும் எஸையனூர் பாட்டிதான் பார்த்துக் கொண்டாள்! ப்ரஹ்லாதன் பூரணமாக குணம் அடைந்ததும், ஸ்ரீமடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

தன்னுடைய ஸஹோதரனின் பிள்ளையையே ஸ்வீகாரம் பண்ணிக் கொண்டிருந்தாள். அவனுடைய கல்யாணத்துக்கு பெரியவா…. பிறந்தவீட்டு சீர் போல, ஸ்ரீமடத்திலிருந்தே பண்ணச்சொன்னார்.

“கல்யாணத்துக்கு….. பொண்ணாத்துலேந்து நெறைய்ய பக்ஷணம் பண்ணியிருந்தாலும், நம்ம மடத்துலேந்து…. ஜாங்கிரி பண்ணிப் போடச் சொல்லுங்கோ!….”

ஸம்ஸாரத்தோணியான ஸந்யாஸி, ஸம்ஸாரத்தில்தானே இருக்கவேண்டும்!

ஒருநாள் பாட்டியிடம் சொன்னார்….

“எனக்காக, ஒன்னோட பாதி ஸொத்தை செலவு பண்ணிட்டே! மீதியை ஒன்னோட ஸ்வீகார புத்ரனுக்கு குடு!…”

பெரியவா என்ற பெருநிதிக்கு முன் பணமும், காஸும் ஓட்டாஞ்சல்லிதானே!

ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயன் ஸ்வாமிகள் எஸையனூர் பாட்டியிடம் நன்கு பழகியவர்.

யஶோதை ப்ரபஞ்ச நாயகனுக்கு செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லம் கொடுத்து, மிரட்ட வேண்டிய நேரத்தில் குச்சியை வைத்துக் கொண்டு உருட்டி மிரட்டியது போல், எஸையனூர் பாட்டி, பாரிஷதர்களை மட்டுமில்லை; ஸமயத்தில் தன் செல்லமான பெரியவாளையும் அன்பால் உரிமையோடு நேரடியாக இல்லாமல், மற்றவர் மூலம் அதட்டுவாள்.

அவளுடைய அன்பும், மிரட்டலும், கவலையும் ஸத்யமானதாக, யதார்த்தமாக இருக்கும். ‘தனக்குத்தான் இந்த ஸலுகை’ என்ற கர்வம் துளிகூட இல்லாமல் இருக்கும்.

“ஏண்டா…. பெரியவா இன்னிக்கி பிக்ஷை பண்ணினாளோ?….. ”

“இல்ல பாட்டி!…”

“ஏன்தான் இந்த ஏகாதஸி, த்வாதஸி, ப்ரதோஷம்… மூணும் சேந்தாப்ல வருதோ! தசமி ராத்ரிலேந்து நாலு நாளக்கி இப்டி கொலை பட்னியா…. காயறாளே! ஒடம்பு என்னத்துக்காறது?…….”

பெரியவாளுக்கு பிக்ஷை பக்வம் பண்ணிக்கொண்டிருந்த மேலூர் மாமாவைக் கண்டால் எல்லாருக்கும் ஸிம்ஹ ஸொப்பனம்! அந்த மேலூர் மாமாவையே கொஞ்சம் அசைத்து விடுவாள், பாட்டி!

“மாமா! பெரியவாளுக்கு நெஞ்சு முழுக்க பயங்கரமா கபம் கட்டிண்டிருக்கு! இருமினா, வெளில கூட வராம பாறையாட்டம் இருக்கு! மூணு வேளை ஸ்நானமும், வெந்நீர்ல பண்ணினா என்னவாம்? யார் சொல்றது? கொஞ்சம் நீங்க சொல்லுங்கோ! நீங்க சொன்னா பெரியவா கேப்பா…”

மானேஜர் விஸ்வநாதய்யர், பெரியவாளுக்கு ‘சிறு குறிப்பு-பெரும் தொண்டர்‘. பெரியவாளை ப்ரத்யக்ஷ பகவானாகவே கண்டாலும், அவ்வப்போது செல்லமாக இருவரும் கன்னடத்தில் சண்டையும் போட்டுக் கொள்ளுவார்கள். இரவு நேரம் கடந்தும், அவர் பெரியவாளிடம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பதை, பாட்டி பார்த்தாளோ! போச்சு…..! அவருக்கு மண்டகப்படிதான்!

“ஏண்டா விஶ்வநாதா! பெரியவாளுக்கு தூக்கம் வராதா? விடிய விடிய மூணு மணிக்கு முன்னாடியே…. ஏந்துக்கறார்! இப்டி பேச்சுக் குடுத்துண்டே இருந்தா, அவர் எப்போ தூங்கறதாம்?…”

“இல்ல பாட்டி, பெரியவாதான் பேசறா….. நாங்க வெறுமனே கேட்டுண்டுதான் இருக்கோம்”

“ஏண்டா! நைவேத்யக்கட்டுல இத்தனை பேர் இருக்கேளே? யாராவுது போய் பெரியவாளை ஸ்நானத்துக்கு கூப்டுங்கோளேன்! காலாகாலத்ல பூஜை பண்ணி, பிக்ஷை பண்ண வேண்டாமா?…”

“இதோ…. போறோம் பாட்டி”

பாரிஷதர்கள் மட்டும்தான் என்றில்லை, ஸ்ரீமடத்தில் வேலை செய்யும் பாட்டாளிகள், பாராக்காரர்கள், பல்லாக்கு தூக்கும் போகிகள் எல்லாரிடமும் தன் ப்ரியத்தையும் அப்படியே பாலாட்டம் சடக்கென்று கொட்டிவிட்டு போவாள்.

பெரிய பெரிய டின்கள் நிறைய, தானே உட்கார்ந்து மாங்கு மாங்கென்று பக்ஷணங்களை பண்ணிக்கொண்டு வருவாள். அத்தனையையும் அந்த ஏழை ஜனங்களுக்கு குடுத்துவிடுவாள்.

“நீங்கள்ளாம் புண்யாத்மாக்கள்! நன்னா இருங்கோ! இந்தா….. “கொஞ்சூண்டு“ [அவளுக்கு அது கொஞ்சூண்டுதான்] பக்ஷணம் பண்ணிண்டு வந்திருக்கேன். நன்னா ஸாப்டுங்கோப்பா ! ஒங்களுக்கெல்லாம் பெரியவாளோட ஸவாரில போறச்சே, காலம்-நேரம் கெடையாதே! பெரியவா எப்போ கெளம்பறாளோ…. ஒடனே நீங்களும் கெளம்பணுமே? …. தயாரா இருங்கோ! வழில, அவரை ஜாக்ரதையா பாத்துக்கோங்கோடா…! இருட்டுல, காட்டுல, பாழடைஞ்ச மண்டபத்துல, மரத்தடீல-ன்னு கண்ட கண்ட எடத்துல வஸ்த்ரத்தை விரிச்சுண்டு படுத்துக்கறேன்னு ஆரம்பிச்சுடுவா! நீங்கள்ளாந்தான்… தீவட்டியை வெச்சிண்டு…. நாலாபக்கமும் பாத்துக்கணும்! பாம்பு-பல்லி இருக்கப்போறது….! ஜாக்ரதையா இருங்கோடாப்பா….!..

ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் பட்டத்துக்கு வந்ததும்தான், பாட்டிக்கு ஒரு பெரிய நிம்மதி! தன் ‘உலகமறியாத குழந்தையை’ பார்த்துக் கொள்ள, பொறுப்பான ஒருவர் வந்துவிட்டார் என்று!

பெரியவாளைப் பற்றிய “கவலைகளை” புதுப்பெரியவாளிடம் கொட்டித் தீர்ப்பாள்! புதுப்பெரியவாளும் அவளுடைய தாயன்பில் கரைந்து, கண்ணீர் மல்க அவள் சொல்வதை சிரித்த முகத்துடன் கேட்டுக் கொள்வார்.

ஒருமுறை எஸையனூர் பாட்டி பெரியவாளுடன் காஸியாத்ரை சென்றாள்.

காஸியில் பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிட்டியின் ஸ்தாபகரான பண்டிட் ஸ்ரீ மதன்மோஹன் மாளவ்யா, பெரியவாளை வரவேற்று, யூனிவர்ஸிட்டி வளாகத்தில் பெரியவாளுக்கு ஏராளமாக புஷ்பங்களை பொழிந்து அபிஷேகம் பண்ணினார்.

அந்த நேரத்தில் அங்கே தனக்கு மானஸீகமாக தெரிந்த ஒரு அழகான தெய்வீக காட்சியை ஸ்ரீ ஆத்ரேயன் மாமாவிடம் எஸையனூர் பாட்டி விவரித்தாள்…….

“பாரு….. நா…. சொல்றத நன்னா கேட்டுக்கோ!

“பெரியவா…. அப்டியே…. தோளோட தண்டத்தை அணைச்சிண்டு… கண்ணை மூடிக்கறா! திடீர்னு சந்த்ரகலை தெரியறது; கங்கை தெரியறா; ஜடை தெரியறது; பளபளன்னு நெத்தி! ஶாந்தமா….. சிரிச்ச முகம்! அப்டியே….. தேவேந்த்ரன் வந்து….. தங்கத்தாமரைகளா கொணுந்து அவரோட சிரஸுல வர்ஷிக்கறான்!….. ஆமா! நா…. கண்ணால பாத்தேன்! எல்லாரும் சொல்றா….. மாளவ்யா பெரியவாளுக்கு புஷ்பாபிஷேகம் பண்ணினார்-னு!…”

மானேஜர் விஶ்வநாதய்யர், எஸையனூர் பாட்டியைப் பற்றி சொல்லும்போது…

“பெரியவா பூஜை பண்ற அம்பாளே….. எஸையனூர் பாட்டியா… வந்து எல்லாத்தையும் கவனிச்சு பாத்துக்கறா! நிர்வாகத்துல எதாவுது குத்தம்-கொறை இருந்தா சொல்லுங்கோ பாட்டி-ன்னு கேப்பேன்! அவ்ளோவ் ஏன்?….. ‘எஸையனூர் பாட்டி….. எதாவுது சொல்லப் போறாடா! ஜாக்ரதையா இருங்கோ!..”ன்னு பெரியவாளே எங்க எல்லாரையும் பாத்து சிரிச்சிண்டே ஜாக்ரதைப்படுத்துவார்!…”

பிறந்த குழந்தைகளுக்கும், சூட்டிகையான குழந்தைகளுக்கும், வீட்டுப் பெரியவர்கள் வாரத்தில் ஒருநாள் த்ருஷ்டி சுத்திப் போடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

ஸ்ரீமதி மஹாலக்ஷ்மிம்மாவுக்கு அப்புறம், அவளுடைய ‘குழந்தைக்கு’ மற்றொரு தாயாக எஸையனூர் பாட்டி இருந்தவரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் த்ருஷ்டி சுத்திப் போடுவாள்.

“குழந்தையை” உட்கார வைத்து, மூன்று கண் கொண்ட தேங்காய் மூடியில், பருத்திக்கொட்டை, உப்பு, சீயக்காய் பொடி, சிவப்பு மிளகாய் இவற்றை போட்டு, வலம்-இடமாக மூன்று முறை சுத்தி, அதைக் கொண்டுபோய் கோட்டையடுப்பில் போடுவாள்.

“மொளகா காரத்தோட நெடியால, தும்மல், இருமல் வந்தா….. த்ருஷ்டி இல்ல-ன்னுஅர்த்தம். தும்மலும் இருமலும் இல்லாம, காரத்தோட நெடி ஒறைக்காம இருந்தா, எக்கச்சக்க த்ருஷ்டி! பாரு! பெரியவாளுக்கு கொஞ்சமாவுது கமறறதா பாரு! அவ்ளோ…… த்ருஷ்டி!”

அவளுக்கு எப்போதும் இத்தகைய ஸந்தோஷத்தை தரவேண்டும் என்பதற்காகவே, காரநெடியை ஸஹித்துக் கொண்டு இருமாமல் ‘ஜிங்’கென்று உட்கார்ந்திருந்தாரோ என்னமோ?

குழந்தை கண்ணன் பிறந்ததுமே, அவனைக் கொல்ல வந்த பூதனா, சகடாஸுரன் போன்றவர்களை பரலோகம் அனுப்பிய குழந்தையின் ப்ரபாவம் கண் முன்னே தெரிந்தாலும், பதைத்துப் போகும் யஶோதை, குட்டிப்பயலைத் தூக்கிக் கொண்டு பஶுவின் கொட்டிலுக்குச் சென்று கோ-தூளியை எடுத்து, அவனுக்கு நெற்றியிலிட்டு, த்ருஷ்டியும் சுற்றிப் போடுவாளாம்!

“எனக்கு எதுக்கு த்ருஷ்டி சுத்திப் போடறே?…..”

பெரியவா, அலுத்து கொள்வது போல் கேட்டாலும், பாட்டி தேங்காய், பருத்திக்கொட்டை, சீயக்காய், உப்பு, மிளகாய் ஸஹிதம் வந்ததும், ஒழுங்காக வந்து மணைப்பலகையில் உட்கார்ந்து விடுவார்.

“எங்களுக்குத்தான் தெரியும்…. ஒங்களுக்கு எவ்ளோ த்ருஷ்டி இருக்குன்னு!….”

‘குழந்தை’யை ஒரே போடாக போட்டு அடக்கிவிடுவாள். குழந்தையும் ‘அம்மா சொன்னா ஸெரி!..’ என்பது போல், பேசாமல் போய்விடும்!

எஸையனூரில் பாட்டியின் க்ருஹத்தின் பெயர்….. ‘காமகோடி‘.

எஸையனூரிலிருந்து யாராவது தர்ஶனம் பண்ண வந்தால், பெரியவா தவறாமல் கேட்கும் கேள்வி…

“கோகிலா பாட்டி எப்டியிருக்கா?…..”

சிறுவன் வேதபுரியிடம் கூறுவார்.

“பாட்டியாலதான்…. நீ எங்கிட்ட வந்தே!…….”

இப்பேர்ப்பட்ட மஹா அம்மாவாக இருந்த பாட்டியை, ஏதோ மாடு முட்டியதால், காலகதியை அடைந்துவிட்டாள் என்ற செய்தி, மெட்ராஸ் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் முகாமிட்டிருந்த பெரியவாளுக்கு கூறப்பட்ட க்ஷணத்திலிருந்து அடுத்த மூன்று நாட்கள் பெரியவா காஷ்ட மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார்!

பெரியவாளுக்கென்றே வாழ்ந்த இந்த உயர்ந்த எளிய புண்யாத்மாக்களை ஸ்மரிப்பதே, பெரியவா நமக்கு பண்ணும் பெரிய அனுக்ரஹம்.

*kn*

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s