3 things asked by Yama to a gandharva – Spiritual story

பாடம் கற்று வா – J K SIVAN

சம்பூவுக்கு செருப்பு தைக்க தான் தெரியும். ரொம்ப சாது. தாராள மனசு இருந்து என்ன பிரயோஜனம் பரம ஏழை. ,மனது பூரா கிருஷ்ணனிடம். அவனிடம் செருப்பு தைத்துக் கொண்டு காசு கொடுக்காதவர்கள் அநேகர். மனைவி சுசீலாவோடு வடக்கே ஹிமாச்சல குளிர் பிரதேசத்தில் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தான். இன்னும் ரெண்டு மாதத்தில் பனி உறைந்து குளிர் கொன்றுவிடும். எப்போதோ யாரோ கொடுத்த பழைய கம்பளிக்கோட்டு கிழிசல். அளவும் சின்னது. அவன் மனைவியிடம் ஒரு கனமான கம்பளி ஸ்வெட்டர். அதை வாங்கி போட்டுக் கொண்டு மேலே அவனது கிழிந்த கோட்டை மாட்டிக்கொண்டு கிளம்பினான். எங்கே ? தார்வால் ஊரில் கம்பளி கோட்டு செய்பவன் ஒருவன் கொஞ்சம் குறைந்த விலைக்கு விற்பவன். மொத்தம் கைவசம் 80. மனைவி கொடுத்தது. கடன்காரர்களிடம் வசூல் செய்தால் 120 ரூபாய் கிடைக்காதா. ஒரு கோட்டு வாங்கிவிடலாமே .
”ராம்லால் 60 ரூபாய் நீங்கள் செருப்பு தைத்த பாக்கி தர வேண்டும். கொடுத்தால் ஒரு கோட்டு வாங்க உதவும்””இப்போ பணம் இளைய, அடுத்தவாரம் தருகிறேன்.அடுத்தவாரம் இனி எப்போதும் வராது என்று சம்பூவுக்கு தெரியும். பிடிவாதமாக எப்படியோ 30 ரூபாய் வசூல் செய்து விட்டான். அடுத்த கடன்காரன் கோபி ஊரில் இல்லை என்று அவன் மனைவி சொல்லி விட்டாலும் வீட்டு வாசலில் கோபியின் செருப்பும் குடையும் இருந்தது. 110 ரூபாய் எப்படி வசூல் செய்வது? வேறு வழியின்றி மூன்றாவது கடன்காரன் லீலாராம் வீட்டுக்கு சென்றான். 45 ரூபாய் தரவேண்டும் அவன். சம்பூவைப் பார்த்ததும் அழுதான். வீட்டில் அரிசி வாங்க பணம் இல்லை என்றான். அடுத்த வாரம் சந்தைக்கு சென்று ஆட்டை விற்று தந்துவிடுகிறேன் என்று சத்யம் செய்தான். சம்பூவுக்கோ இளகிய மனது. என்ன செய்வான்?
கையில் ராம் லால் கொடுத்த 30 ரூபாய். குளிர் தாங்கவில்லை. பசி தாகம் வேறு. தார்வால் வியாபாரியிடம் 110 ரூபாயை கொடுத்து கம்பளி கோட்டுக்கு கெஞ்சினான். நிர் தாக்ஷண்யமாக சோம்நாத் கம்பளி கோட் தர மறுத்து விட்டான். நான் உன்னைப் போல ஏமாந்தாங்குளி இல்லை.”பணம் இருநூறு ரூபாய் கொடு கம்பளி கோட்டு தருகிறேன். இல்லாவிட்டால் போ” சரி வரப்போகும் இந்த குளிர் சீசனிலும் எப்படியோ கிருஷ்ணன் அருளால் தாக்கு பிடிப்போம் என்று சம்பூ திரும்பும்போது பஜார் தெருவில் குளிருக்கு ஒருவன் நாட்டு சாராயம் விற்றுக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டான். ஒரே கும்பல். எப்படியோ முண்டி அடித்து சம்பூ ஒரு முடக்கு வாங்கி குடித்துவிட்டான். ராம்லாலிடம் வசூல் செய்த 30 ரூபாயும் சாராயமாக உள்ளே இறங்கி உடல் முழுதும் திகுதிகு என்று ஒரு சூட்டை கிளப்பி விட்டது. குளிருக்கு இதமாக இருந்தது. வீடு நோக்கி நடந்தான்.

சாயந்திரம் ஐந்து மணி ஆகிவிட்டதே. அதற்குள் இருள் கவிந்து கன்னங்கரேலென்று வானம் இருந்து விட்டது. குளிர் காற்று தோலை துளைத்தது. மூச்சு விடுவதே திணறலாக இருக்கிறதே. வெடவெடவென்று நடுங்கியவாறு சம்பூ நடந்தான். சாராயம் உள்ளே இதமாக ஒரு இளம் சூட்டுடன் எரிச்சலையும் தந்து கொண்டு இருந்தது.
வரும் வழியில் கோல்பாக் எனும் கிராமம். அங்கே ஒரு பழைய கிருஷ்ணன் கோவில் உண்டு. அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் நின்று கிருஷ்ணனை கைகூப்பி வணங்கி விட்டு தான் போவது வழக்கம். கோவில் கதவு சார்த்தி இருந்தது. பார்த்துக்கொண்டே இருக்கும்போது கோவில் வாசல் அருகே ஒரு வெளிச்சம் பளிச்சென்று மேலே இருந்து கீழே இறங்கியது. நகர்ந்தது. சம்பூ உற்று நோக்கினான். அது சட்டென்று ஒரு உருவமாக மாறியது. ஏதோ வெள்ளையாக கை கால்களுடன் சுருண்டு இருந்தது.
”ஆடோ மாடோ ஏதோ வன விலங்கோ? பேயோ பிசாசோ? இன்னும் சற்று நெருங்கியவுடன் அது ஆடையே இல்லாத நிர்வாண மனிதன்.எவனோ குடிகாரன், கொலைகாரன்,கொள்ளைக்காரனோ?” சுசீலாவின் பணம் 80 ரூபாயை அவன் பிடுங்கிக்கொண்டால் என்ன செய்வது? அந்த ஆளின் கால் தரையில் இருக்கிறதா என்று பார்த்தான் சம்பூ . யாரோ சொன்னார்களே பேயாக இருந்தால் கால் தரையில் பாவாது என்று ? அந்த இளம் வயதினன் தரையில் காலை மடக்கி படுத்துக் கொண்டிருந்தான்.

” இவன் யாரோ என்னவோ, நமக்கு எதற்கு வம்பு ”. சற்று தூரம் சென்ற சம்பூவுக்குள் ஒரு இரக்கம். ” நானே ஒரு பரம ஏழை. என்னைவிட அவன் மோசமோ? மேலே சட்டையோ துணியோ கூட போர்த்திக்கொள்ள வசதியில்லாதவன். பாவம் இந்த குளிரில் துடிக்கிறானே . அருகே போய் யார் என்று கேட்க வேண்டாமா?அந்த ஆளை தொட்டு எழுப்பினான்.

”நீ யார்?” அவன் பேசவில்லை. ”எங்கிருந்து வருகிறாய்? பதில் இல்லை. தனது மேல் போட்டிருந்த கிழிசல் கோட்டை அவனுக்கு போட்டுக்கொள்ள கொடுத்தான். அவனும் வேகமாக அதை வாங்கி போட்டுக்கொண்டான். அவனை எழுப்பினான்.”நீ எந்த ஊர் என்று கேட்டபோதும் பதில் இல்லை. ஊமையோ?” வருறுகிறாயா என்னோடு? அந்த மனிதன் கண்ணில் அன்பு தெரிந்தது. ரெண்டு பேரும் நடந்து வீடு திரும்பியபோது சுசீலா உணவை முடித்திருந்தாள். குழந்தைகளுக்கும் கொடுத்தாகி விட்டது.

வீட்டில் அடுத்த நாளுக்கு ஒருவேளை ரொட்டிக்கான மாவு மட்டும் தான் இருந்தது. சம்பூ புது கம்பளிக்கோட்டை வாங்கிக்கொண்டு கடன் வசூலோடு வழியில் சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கும் ஏதாவது வாங்கி வருவான் என்று நினைத்தவள் பட்டினியோடு இன்னொருவனையும் கூட்டிக்கொண்டு வந்து சாப்பாடு போடு என்ற போது எப்படி இருக்கும் ல் சுசீலாவுக்கு? ஷாம்பூ அருகே சாராய நெடி அடித்ததால் கடும்கோபம் அவளுக்கு.

”எங்கே வசூல் பணம் ?எங்கே புது கோட்டு ?” – சீறினாள் சுசீலா.
‘ பொறுமையாக சொல்வதை கேள் சுசீலா. நீ கொடுத்தது அப்படியே இருக்கிறது. கடன் வசூல் முப்பது ரூபாய் தான் தேறியது .குளிருக்கு குடித்தேன். இந்தா நீ கொடுத்த 80 ரூபாய்”
‘யார் இவன்? நீ போதாதென்று இன்னொரு தண்டமா இந்த வீட்டில். ?”
”பாவம்.நம்மை விட தரித்ரன் . பேசாதவன். குளிரில் வாடிக்கொண்டிருந்தவனுக்கு என் கோட்டை கொடுத்து அழைத்து வந்தேன். பசி. ஒன்றுமே சாப்பிடவில்லை அவன். ஏதாவது கொடேன். ஏழைகளுக்கு இறங்கினால் கடவுள் நம்மை காப்பாற்றமாட்டாரா?
”ஓஹோ. நாம் பெரிய பணக்காரர்களோ? சுசீலா புதியவனை ஏற இறங்க பார்த்தாள் . அவளுக்குள் ஒரு பரிதாபம் இரக்கம் உண்டாயிற்று. அவள் கணவனும் பாவம் நல்லவன். வேறு வழியின்று குளிருக்கு கொஞ்சம் குடித்திருக்கிறான். குடிகாரன் இல்லை..
” சரி. கொஞ்சம் இருங்கள். நாளைக்கு நமக்கு ரொட்டிக்கு மாவு கொஞ்சம் வைத்திருக்கிறேன். அதை வைத்து ரொட்டி சுடுகிறேன். நாளைக்கு பத்தி அப்புறம் யோசிப்போம் ”
பத்தே நிமிஷத்தில் சுடசுட ரொட்டி வெங்காய உருளைக்கிழங்கு கொத்சு தந்தாள். வயிறார ரெண்டு பெரும் சாப்பிட்டார்கள். அந்த மனிதன் முதன்முறையாக அவளைப் பார்த்து சிரித்தான். முகம் ஒளி வீசியது.
”நீ யாரப்பா, எங்கிருந்து வந்தவன்?” தாய் அன்போடு கேட்டாள் சுசீலா.
”அம்மா, நான் ஒரு கந்தர்வன். சாபம் பெற்று பூமிக்கு வந்தவன். முன்பின் தெரியாத எனக்கு ஆதரவு கொடுத்து, உணவளித்து அன்போடு பழகிய உங்களை கடவுள் நிச்சயம் ஆசிர்வதித்து அருள்புரிவார்” என்றான். அன்று முதல் அவன் வீட்டில் மூன்றாவது ஆளாக மாறி விட்டான். சம்பூ அவனுக்கு செருப்பு தைப்பது எப்படி, என்று பழக்கினான் . வெகு விரைவில் நல்ல செருப்பு தைப்பவனாக மாறிவிட்டான் கந்தர்வா. பேச்சு சொற்பம். சிரிக்கமாட்டான். ஒரே ஒருமுறை சுசீலாவை முதலில் பார்த்து அவள் உணவளித்தபோது சிரித்ததோடு சரி.

மூன்று வருஷம் ஓடிவிட்டது. சம்பூவை விட கந்தர்வா தான் செருப்பு தைத்து அந்த குடும்பத்திற்கு சம்பாதித்து கொடுத்தான். ஒரு நாள் ஒரு பணக்காரன் குதிரை வண்டியில் வந்தான்.

”உங்கள் ரெண்டுபேரில் யார் நன்றாக செருப்பு தைக்கும் சம்பூ?” என்றான் பணக்காரன். சம்பூவை கை காட்டினான் கந்தர்வா.
‘இதோ இந்த விலை உயர்ந்த தோலை வீணாக்காமல் என் கால் அளவெடுத்து ஒரு ஜோடி கனமான பூட்ஸ்
தைக்க வேண்டும். பூட்ஸ் சரியாக செய்யாவிட்டால், ஒஸ்தியான இந்த தோலை பாழாக்கினால், அடுத்த வருடத்திற்குள் பூட்ஸ் முனை சுருண்டு, மடங்கி, அறுந்து போய், வீணாகிவிட்டால் உன்னை கொன்று விடுவேன். அடுத்த வருஷம் வரை அது நன்றாக இருந்தால் உனக்கு ஐம்பது ரூபாய் பரிசு.தருவேன். இன்னும் மூன்று நாளில் வருவேன்.அதற்குள் சரியாக செய்து வை” என்றான் பணக்காரன். கந்தர்வா காலை அளவெடுத்தான். அப்போது அந்த பணக்காரனை பார்த்து சிரித்தான். முகம் பளிச்சென்று ஒளி வீசியது. ”ஓஹோ பணக்காரன் நட்பு தேவையோ உனக்கு . காக்காய் பிடிக்கிறாயோ” என்று சம்பூ கேலி செய்தான்.

மறுநாள் காலை கந்தர்வா அந்த பணக்காரன் கொடுத்த தோலை அவன் கொடுத்த கால் அளவுக்கு வெட்டினவன் பூட்ஸ் செய்வதற்கு பதிலாக செருப்பாக செய்து கொண்டிருந்தான். சம்பூ திகைத்து விட்டான்.
”ஐயோ, விலை உயர்ந்த தோலை கெடுத்து விட்டாயே. நான் எப்படி அந்த பணக்காரன் கோபத்தை சமாளிப்பேன். பணம் கேட்டால் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்?” அலறினான் சம்பூ . அப்போது குதிரைவண்டி வாசலில் வந்து நின்றது. பணக்காரனின் சேவகன் ஓடி வந்தான். அவன் சொன்னதிலிருந்து அந்த பணக்காரன் சம்பூவின் வீட்டிலிருந்து போகும் வழியிலேயே மாரடைப்பில் இறந்துவிட்டதால் அவன் மனைவி அவன் ஆசைப்பட்டதால் அவன் பிணத்திற்கு காலில் மாட்ட ஒரு சாதாரண செருப்பை செய்து தரச் சொன்னதை அறிவித்தான். செருப்பை என்ன செய்வது என்று திகைத்த சம்பூ ”கிருஷ்ணா” என்று நன்றிக்குரல் கொடுத்து அந்த செருப்பை வண்டிக்காரனிடம் கொடுத்தான்.

அன்று மத்யானமே ஒரு பெண்மணி ரெண்டு பெண் குழந்தைகளோடு வந்தாள் . ரெட்டை குழந்தைகள். ஒன்றின் கால் ஊனம். அவற்றிற்கு செருப்பு செயது தரச் சொன்னாள். பேச்சு கொடுத்து தெரிந்து கொண்டதில் அந்த பெண்மணி குழந்தைகளின் தாய் அல்ல. குழந்தைகள் அனாதைகள். தந்தை .விறகுவெட்டி. மரம் மேலே சாய்ந்து இறந்துபோனான். ரெண்டே நாளில் அந்த குழந்தைகளை பிரசவித்த தாய் மரணமடைந்தாள் . வந்தவள் அவர்கள் அண்டை வீட்டுக்காரி. கைக் குழந்தைக்காரி. தனது குழந்தையோடு அந்த ரெட்டை குழந்தைகளுக்கும் தாய்ப் பால் கொடுத்து வளர்த்தாள் . வேறு யாரும் உறவு இல்லாததால் அவை அவளிடமே வளர்ந்தன. அவளைப் பார்த்து கந்தர்வா சிரித்தான். முகம் மலர்ந்தது.ஒளி வீசியது. செருப்புகள் அந்த குழந்தைகளுக்கு தைத்துக் கொடுத்தான். அவள் சென்றாள்.

அன்று சாயங்காலமே கந்தர்வா சம்பூ அவன் மனைவி இருவரையும் வணங்கி ”நான் உங்களிடமிருந்து இப்போதே விடை பெறுகிறேன்” என்றான். முதல் தடவையாக மூன்று வருஷங்களில் அன்று தான் பேசினான். அவனிடமிருந்து ஒரு ஒளி வீசியது. அதிர்ச்சி யடைந்த அந்த தம்பதிகளிடம் கந்தர்வா என்ன சொன்னான்:

” சம்பூ , நான் ஒரு கந்தர்வன். என்னிடமிருந்த ஒளி நான் காலனின் தண்டனை பெற்று பூமியில் விழுந்தபோது
போய்விட்டது. அதை தான் நீங்கள் கோபால்பாக் கிருஷ்ணன் கோவில் அருகே வெளிச்சமாக பார்த்தீர்கள். பூமியில் தள்ளப்பட்டேன்”

எதற்காக காலதேவன் தண்டனை உனக்கு? இதுவரை பேசாதவன் எதற்கு மூன்று முறை மட்டும் முகத்தில் ஒளி பரவ சிரித்தாய்?

”ஒரு பெண்ணின் உயிரை கொண்டு வர வேலை கொடுத்தான் காலதேவன். சென்றபோது அந்த பெண் ரெட்டை குழந்தைகளை பெற்றிருந்தாள் . ”என் உயிரை கொண்டு போகாதே. என் இரு குழந்தைகள் அனாதை. யாருமே இல்லை. அவர்களை பாதுகாக்க. என் கணவன் இப்போது தான் ரெண்டு நாள் முன்பு மரம் மேலே சாய்ந்து இறந்துபோனான் ” என்றாள் .நான் அவள் உயிரை கொண்டு செல்லவில்லை. காலதேவன் மீண்டும் அவள் விதி முடிந்து விட்டது கொண்டுவா அவள் உயிரை. அவள் குழந்தைகளை பற்றி நீ யார் கவலைப்பட’, அது உன் வேலை அல்ல?”’ என்றான் நான் மீண்டும் சென்று அந்த தாயின் உயிரை கொண்டு வந்தேன். அப்போது தான் என்னை தண்டித்தான் காலதேவன். என் கட்டளையை மீறிய உனக்கு பூலோகத்தில் மனிதனாக வாழும் தண்டனை தருகிறேன். மூன்று விஷயங்களை தெரிந்து கொண்டு பிறகு இங்கே வா. அந்த மூன்று:
”1. மனிதனிடம் என்ன இருக்கிறது.
2. அவனிடம் இல்லாதது எது? 3. எதால் மனிதன் வாழ்கிறான்?”

கிருஷ்ணன் கோவில் அருகே பூமியில் ஆடையற்ற மனிதனாக வீழ்ந்த போதுதான் மனிதனுக்கு குளிர் பசி, என்றால் என்ன என்று அறிந்து வாடினேன். என்னை சம்பூ முதலில் பார்த்து பயந்தான். அவன் வீடு,மனைவி, அவன் சுகம், கம்பளி கோட்டு என்று தன்னைப்பற்றிய எண்ணங்களில் இருந்தவன் சற்று நேரத்தில் மனதில் இரக்க குணத்தோடு என்னை நெருங்கினான். பயம் இல்லை. என்னை காப்பாற்றவேண்டும், ஆதரவளிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. எனக்காக அவன் மனைவியிடம் வாதாடினான். அவள் முதலில் என்னை இகழ்ந்தாள், வெறுத்தாள். சுசீலா, இவன் நம்மைவிட தரித்ரன். பரம ஏழை. அனாதை. இவனுக்கு உதவினால் எப்படியும் கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்ற சொல் அவளை மாற்றியது. அவளில் இருந்த தாய் பாசம் என்னை ஆதரிக்க தூண்டியது. ஆகாரம் கொடுத்தாள். சம்பூவின் உடைகளை கொடுத்தாள் . பாதுகாத்தாள். தன்னுடைய அடுத்த நாள் உணவை அன்றே எனக்கு கொடுத்தாள். அவளைக் கண்டதும் முதலில் சிரித்தேன். காலதேவனின் முதல் பாடம்.கேள்விக்கு விடை கிடைத்தது. ”மனிதனின் உள்ளே கடவுள் விதைத்த பேரன்பு இருக்கிறது” என்று புரிந்தது. மகிழ்ந்தேன் மற்ற இரண்டு கேள்விகளுக்கு விடை தெரியவில்லை. காத்திருந்தேன்.
ஒருநாள் ஒரு பணக்காரன் வந்து பூட்ஸ் தயார் செய்ய தோலை கொடுத்து ஒரு வருஷம் அதை உபயோகப்படுத்த வேண்டும் . அது வரை அது மடங்கவோ அறுந்தோ பிய்ந்தோ போகக்கூடாது என்று சம்பூவை மிரட்டினான். நான் அவனை ஏறிட்டு பார்த்தபோது அந்த பணக்காரன் தோளுக்குப் பின்னால் என் எஜமான் காலதேவனின் ஆள் என்னைப்போல் ஒருவன் நிற்பதை பார்த்தேன். ஓஹோ இவன் காலம் முடியப்போகிறதோ. அது அவனுக்கு தெரியாமல் அடுத்த வருஷம் பற்றி பேசுகிறானே என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது. அன்றே அவன் மாண்டான். காலதேவன் என்னிடம் கேட்ட ரெண்டாவது கேள்வி புரிந்தது. ”மனிதனிடம் இல்லாதது அவனுக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஞானம் ” என்று புரிந்தது. புரிந்துகொண்ட சந்தோஷத்தில் என் முகம் மலர்ந்தது சிரித்தேன்.

கடைசியாக ”மனிதன் எதால், எதனால் வாழ்கிறான்” என்ற பாடம் கற்றுக்கொள்ள காத்திருந்தேன். ரெட்டை குழந்தைகளுடன் ஒரு பெண் வந்தாள். அட, நான் கடைசியாகக் கொண்டு சென்ற உயிருக்கு சொந்தமான பெண்ணின் குழந்தைகள் அவர்கள். அந்த குழந்தைகளை பார்த்ததும் எனக்கு அடையாளம் புரிந்தது. கூட வந்தவள் யார்? நான் உயிரை பறித்த தாய் என்னிடம் ”என் குழந்தைகள் அனாதை தாயோ தந்தையோ இன்றி வளர, வாழ முடியாது என்றாள். நம்பினேன். அது தவறு. தனது குழந்தையைப் போல் இந்த குழந்தைகளை வளர்த்த யாரோ ஒரு அந்நிய பெண்மணி தனது பேதமற்ற அன்பினால் அக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினாள். மனித இனம் தூய அன்பினால் பாசத்தால் வாழ்கிறது ” என்று புரிந்துகொண்டேன். எனக்கு சந்தோஷத்தில் அந்த வளர்ப்புதாயை பார்த்ததும் முகம் மலர்ந்து சிரித்தேன். என் தலைவன் கொடுத்த பரிக்ஷையில் விடைகள் தெரிந்து விட்டது. நான் என் இடத்திற்கும் மீண்டும் என் எஜமானிடம் பதிலோடு
செல்கிறேன்” என்றான் அந்த கந்தர்வன். கண்ணைப் பறிக்கும் ஒரு ஒளி அந்த குடிசையிலிருந்து விண்ணோக்கி சென்றது.

இந்த கதை சற்று வித்யாசமாக இருந்தால் அதற்கு நான் காரணம் இல்லை ஸார் . ரஷ்ய எழுத்தாளர் சிந்தனையாளர் லியோ டால்ஸ்டாய். அவரது அற்புதமான, சற்று நீளமான சிறுகதை ”WHAT MEN LIVE BY” திருமதி. ரமா தேவி என்ற முகநூல் சகோதரி ” நீங்கள் இந்த கதையை தமிழில் எழுதுங்களேன்”/ கொஞ்சம் நெருடலாக இருக்கிறது ” என்று எழுதி இருந்தார்.
கிருஷ்ணன் என்னை சம்பூவாக அந்த ரஷ்யாக்கார செருப்பு தைப்பவனை மாற்றி அமைக்க வைத்து விட்டார். சைபீரியா குளிரை ஹிமாச்சலப்பிரதேச குளிராக்கி விட்டேன். ரஷ்ய பணத்தை இந்திய ரூபாயாக்கினேனே தவிர மற்றபடி கதை அதே தான். கதை நன்றாக இருக்க வேண்டுமானால் அதன் கருத்து நேர்த்தி யாக இருக்கவேண்டாமா? பிடிக்கிறதா சம்பூ புராணம்?.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to 3 things asked by Yama to a gandharva – Spiritual story

  1. Umaravichandran says:

    Very nice. Excellent story. Thank you so much sir God bless you

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s