Thirupariyalur temple

உ.
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌿 சிவ தல தொடர்.59. 🌿
🌿 சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.🌿
(நேரில் சென்று தரிசித்ததைப் போல…..)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🌿 திருப்பறியலூர்.🌿
■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இறைவன்: வீரட்டேஸ்வரர், தட்சபுரீசர்

இறைவி: இளம்கொம்பனையாள், வாலாம்பாள்.

தலமரம்: வில்வம், பலாமரம்.

தீர்த்தம்: சந்திர புஷ்கரணி, உத்தரவேதாதி தீர்த்தம். (கோவிலின் பக்கத்தில் உள்ளன.)

சோழ நாட்டின் தென்கரையில் அமையப் பெற்றுள்ள நூற்று இருபத்தெட்டு தலங்களுள் இத்தலம் நாற்பத்தோராவது தலமாகப் போற்றப்பெறுகிறது.

பெயர்க்காரணம்:
வீரபத்திரரை ஏவி தக்கனை சம்கரித்த தலம்.

தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும் , தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தை தண்டனை மூலம் பறித்தலால் பறியலூர் ஆயிற்று.

இருப்பிடம்:
மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பாதையில் செம்பொன்னார் கோயிலை அடைந்து, அங்கிருந்து நல்லாடை செல்லும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்றால், "பரசலூர்" என்று கைகாட்டி வரும். அந்த கைக்காட்டியிலிருந்து வலதுபுறம் பிரியும் சாலையில் திரும்பி இரண்டு கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

தல அருமை:
திருப்பறியலூர் சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், குறுக்கை, திருக்கடவூர் ஆகியவை.

சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும், தட்சனையும் அழித்த தலம் இதுவாகும்.

சிவபெருமானின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன். அவனுக்கு வரம் அளித்த சிவன் என்றும் கூட மதியாமல் அவருக்குரிய அவிர்பாகத்தையும் தான் நடத்தும் யாகத்தில் தராமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான் தட்சன்.

தட்சன் நடத்தும் யாகத்திற்கு தாட்சாயினி செல்ல ஈசன் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தும் யாகத்திற்குச் சென்ற தாட்சாயினியை மகள் என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் தட்சன்.

திரும்பிச் சென்று ஈசனை பார்க்க மனம் வராத தாட்சாயினியாக குண்டத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள்.

கோபமுற்ற ஈசன் வீரபத்திரரை அனுப்பி தட்சன் நடத்தும் யாகத்தை அழித்ததுடன் தட்சன் தலையைக் கொய்து அவனை தண்டித்த தலம் திருப்பறியலூர்.

தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் சிவபெருமான் தண்டித்தார்.

அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால்தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.

எனவே இத்தலத்தில் நவக்கிரங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை எனபது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு:
சிறிய கிராமம். பழமையான கோவில்.
மேற்கு நோக்கியது. அரை ஏக்கர் நிலப்பரப்புடன் கோவில் அமைந்துள்ளது.

முதலில் நம் கண்களுக்குப் பார்வையான வாயிலை அக்கோபுரத்தை சிவ சிவ, சிவ சிவ என மொழிந்து வணங்கினோம்.

அதையடுத்துது நிலை உள் கோபுரமும். ஆலயம் இரண்டு பிரகாரங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.

முதல் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழையவும் நந்தியிடம் வணங்கிக் கொண்டு, பலிபீடத்தின் முன்பு வந்து நின்று, வேண்டத்தகாதவகைகளை அங்கை பலியிட்டுவிட்டு நகர்ந்தோம்.

அடுத்தாற்போல இருக்கும் கொடிமர விநாயகர் அவருக்கே உரிய வணங்குதலைச் செலுத்திக் கொண்டோம்.

ஆனால் கொடிமரம் இல்லை. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், தல விநாயகர், நால்வர் சந்நிதி ஆகியவைகளைக் கண்டு உளபுளங்காங்கிதம் கொண்டு ஒவ்வொருவராக தொடர்ச்சியாக வணங்குதலை செய்தோம்.

இரண்டாவது கோபுரம் கடந்து உள் பிராகாரம் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் இருக்க, மன நிம்மதிக்குண்டான வேணடுதலை வேண்டி பிரார்த்தித்து வணங்கி நகர்ந்தோம்.

கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர்களின் சந்நிதி முன் வந்து தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு, அடுத்ததாக இருக்கும் சண்டேசுவரர் சந்நிதிக்கு வந்து, அவருக்குரியதான வணங்குத் தன்மையை பக்தியின் ஆழத்தைப் பதிவு செய்தோம்.

பின் திரும்பிப் பார்க்கையில், கருவறைச் சுவரில் தக்கன் ஆட்டுத் தலையுடன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளதைக் கண்ணுற்று ஆனந்தித்தோம் ரசித்தோம்.

வீரபத்திரர் தெற்கு நோக்கி எட்டு கரங்களுடன் உள்ளார். இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப்போன்று சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது.

இதனின் கீழே செப்புத் தட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது. இதைத் தகட்டால் மூடிவைத்துள்ளனர். சிவாசாரியரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக் கண்டு தரிசித்தோம்.

சம்ஹாரமூர்த்திக்குப் பக்கத்தில் நடராசர் சபைக்கு வந்தோம். அவன் ஆடற்கலையின் நளினங்களில் பொதிந்து கிடக்கும் அருட்காட்சிகளை அள்ளி பருகிக் கொண்டோம்.

மூலவரைத் தரிசிக்க வந்தபோது, சிவன் சுயம்பு மூர்த்தியாக வீரட்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

அவருளாட்சிப் பார்வையில் எங்களின் பக்தி தொழுகை சரணடைந்தன.

மூலவர் பெரிய திருமேனியுடனும் சதுர ஆவுடையார் மீது மேற்கு நோக்கிப் பார்த்த வண்ணம் காட்சி அளித்தார்.

மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு நகர்ந்து வருகையில், இவற்றுள் மயில்மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர், விநாயகர், பிரதோஷ நாயகர் முதலியன சிறப்புடன் தெரிந்தார்கள்.

திருப்பகழ் தலம்: திருப்பறியலூர் திருப்பகழ் வைப்புத் தலங்களில் ஒன்று.

இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு விளங்குகிறார்.

அடுத்ததாக,வெளிமுன் மண்டபத்திற்கு வந்தோம். இங்கே அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அருளாட்சி தந்து கொண்டிருந்தாள். அம்பாள் சந்நிதியில் கூட்டம் குறைவாகவே இருக்க சிலநிமிடங்கள் அதிகமாகவே நின்று அம்பாளின் அருளுக்காக நெஞ்சின் முன் கைகள் குவித்த வண்ணமிருந்தோம்.

இக்கோயிலில் பைரவருக்கு முன் வந்தபோது, இவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுவது வழக்கம் என்று சொல்லக் கேட்டோம்.

தலபெருமை:
அர்த்தசாம வழிபாடு பைரவருக்கு நடைபெறுகிறது. இறைவன், எட்டு வீரட்டான தலங்களுள் ஒன்றான தக்கன் வேள்வி தகர்த்ததும், தக்கனின் சிரசை பறித்த தலம்.

எட்டு கரம் கொண்ட வீரபத்திரர் தெற்கு நோக்கி தனிச்சந்நிதியில் காட்சியளிக்கிறார்.

கார்த்திகை, ஞாயிறு நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர் 1-ல் ஒரே ஒரு பதிகம் மட்டும் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் இத்தல இறைவியின் பெயரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

1 கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும் நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன் திருத்தம் உடையார் திருப்பறியலூரில் விருத்தன் எனத் தகும் வீரட்டத் தானே.

விளக்கம்‬:
*திருந்திய
மனமுடையவர்கள் வாழும் திருப்பறியலூரில் தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்து இறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக இருப்பவன். கையில் கனலேந்தி நடனம் புரிபவன். சடைமுடி மீது இளம்பிறை அணிந்தவன்.

02மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறியலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.

விளக்கம்‬:
ஒழுக்கத்திற் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிணி தீர்க்கும் மருந்தாவான். உயிர் காக்கும் அமுதமாவான். மயானத்துள் நின்றாடும் வலியோனாவான். மிகப் பெரியதாகப் பரந்து வந்த குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில் தாங்கி வைத்துள்ள பெருமானாவான்.

3குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறியலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

விளக்கம்‬:
அறிவில் தெளிந்த மறையோர்கள் வாழும் மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன் குளிர்ந்த சடைமுடியை உடையவன். கொடிய வில்லை வளைத்து மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்து இறக்குமாறு செய்து, இரதிதேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்.

4பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திருப்பறியலூரில்
விறல் பாரிடம் சூழ வீரட்டத் தானே.

விளக்கம்‬:
சிறப்புடையவர்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய பூதகணங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன். இவ்வுலகில் பிறவி எடுக்கும் உயிர்கள் அடையும் பிறப்புக்கும், சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச்செய்யும் ஒளி வடிவினன்.

5கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறியலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

விளக்கம்‬:
நான்கு வேதங்களையும் ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவர், இறந்தவர்களைக் கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும் கபாலி.

6அரவுற்ற நாணா அனல் அம்பு அது ஆக
செருவுற்றவர் புரம் தீயெழச் செற்றான்
தெருவில் கொடிசூழ் திருப்பறியலூரில்,
வெருவுற்றவர் தொழும் வீரட்டத் தானே.

விளக்கம்‬:
தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில், பிறவிப் பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்து இறைவன், வாசுகி என்னும் பாம்பை மேருவில்லில் நாணாக இணைத்து அனலை அம்பாகக் கொண்டு தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத் தீ எழுமாறு செய்து அழித்தவன்.

7நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையார் அரவம் அழகா அசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறியலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

விளக்கம்‬:
அலைகளையுடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம் பொருந்திய மலர்ச் சோலைகளை உடையதுமான திருப்பறியலூர் வீரட்டத்தில் விளங்கும் இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை உடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன், இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.

8வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறியலூரில்
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத் தானே.

விளக்கம்‬:
பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களை உடையதும், மிகுதியான நெல் விளைவைத் தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர் வீரட்டானத்து இறைவன், வளைந்த பற்களையுடைய இராவணனைக் கயிலை மலையின்கண் அகப்படுத்தி அவனை வலிமை குன்றியவனாகும்படி கால் விரலால் அடர்த்து எழுந்தருளி இருப்பவனாவான்.

9விளங்கொண் மலர்மேல் அயன் ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான்
இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப்பறியல் வீரட்டத் தானே.

விளக்கம்‬:
இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமையம்மையோடு இணைந்தும், இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும் விளங்குபவனாகிய திருப்பறியல் வீரட்டத்து இறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல் வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கிய மனத்தையுடையவராய்த் தன்னைத் தொழத் தழல் உருவாய் நின்றவனாவான

10சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.

விளக்கம்‬:
திருப்பறியல் வீரட்டத்தில் உறையும் இறைவன், சடையில் பிறை அணிந்தவன். சமணர், புத்தர் ஆகியோர்க்கு அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன். புலியின் தோலை இடைமேல் ஆடையாக உடுத்தவன். விடையேற்றினை உடையவன்.

11நறு நீர் உகும் காழி ஞான சம்பந்தன்
வெறி நீர்த் திருப்பறியல் வீரட்டத்தானை
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத் தானே.

விளக்கம்‬:
நல்ல நீர் பாயும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், மணங்கமழும் நீர் வளமுடைய திருப்பறியல் வீரட்டானத்து உறையும் புள்ளிகளையுடைய நீண்ட பாம்பினை அணிந்த இறைவனைப் புனைந்து போற்றிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்.

திருவிழாக்கள்:
யாக சம்ஹார மூர்த்திக்கு வருடத்தில் தமிழ் வருடப் பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஐப்பசி பிறப்பு, புரட்டாசி சதுர்த்தி, தைப்பிறப்பு, வைகாசி திருவோணம் என ஆறுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது.

பிற செய்திகள்:
தாரகன் எனும் அசுரனால் தேவர்களுக்கு ஏற்பட்ட பயத்தை நீக்கியதாலும், சவுனகர் சாபத்தால் வேடுவனாய்த் திரிந்த புற்கலன் இத்தலத்தின்பால் வந்த ஏழு முனிவர்களது குடை, திருவடி முதலியவற்றை பறித்துக் கொண்டமையாலும், இங்கு வந்து வழிபடுவோர்களது பாவங்களை இறைவன் பறித்ததாலும் பறியலூர் எனப் பெயர் பெற்றது.

பூஜை:
காரணாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,

மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அஞ்சல் முகவரி:
அருள்மிகு, வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,
கீழப்பரசலூர் அஞ்சல்-609 309,
(வழி)- செம்பனார் கோவில்,
தரங்கபாடி வட்டம்,
நாகை மாவட்டம்.

தொடர்புக்கு:
தருமபுர ஆதீனக் கோயில்.
04364–281197, 9943862486
அன்பழகன்.(மெய்காவல்)04364- 205555.

திருச்சிற்றம்பலம்.

நாளைய தலம்…திருச்செம்பொன்பள்ளி.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s