Svadharma of a brahmin – Periyavaa

பேசும் தெய்வம் – 2ம் பாகம் – J.K. SIVAN

41. அவரவர் ஸ்வதர்மம்

”சொத்” என்று காலை ஆறு மணிக்கு வரவேண்டிய செயதித்தாளை ஒன்பது மணிக்கு மேல் வீசி என் முகத்தில் எறிந்து விட்டு அந்த பையன் ஸ்கூட்டரில் பறந்து போனான். இப்போது யார் சைக்கிளில் வருகிறார்கள் கை தட்டி கூப்பிட.

செயதித்தாளை பிரித்து படிக்கவே அருவருப்பாக இருக்கிறதே. நூத்துக்கு எண்பது விஷயங்கள் லஞ்சம், பொய் பித்தலாட்டம், பதவி மோகம். மக்கள் மாறி விட்டார்கள். ஒழுக்கம், நீதி நேர்மை எல்லாம் புத்தகத்தில் மையில் மட்டும் தான் முடங்கி இருக்கிறது.

பெரியவா சொல்வது நினைவுக்கு வருகிறது. பெரியவா வார்த்தைகள் சாராம்சம்:

”ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை- எல்லாத்துக்குமே இரண்டு பக்கங்கள் உண்டு. நாம அனைவருமே ஒரு பக்கத்தை தான் பார்க்கிறோம். மறுபக்கத்தைப் பார்க்கமாட்டோம்.

துரோணரும், துருபதனும் ஒரே குருவிடம் சின்னவயதில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது ஒருநாள் துருபதன் “டேய் நண்பா துரோணா, நான் அரசனானால் உனக்குப் பாதி ராஜ்ஜியம் தருவேன்” என்று சொன்னான்.

“பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவித்தது. துருபதன் பாஞ்சால நாட்டு அரசன் ஆனான்.
பாவம் துரோணர் அப்பாவியாக நம்பிக்கையோடு துருபதனை போய் பார்க்கிறார். ” நம் பழைய கிளாஸ்-மேட் ஆச்சே!’ நமக்கு உதவுவான்” என்ற நினைப்பு.

துரோணரை உள்ளேயே விடவில்லை கோட்டை காவலாளிகள். எப்படியோ உள்ளே சென்று ”துருபதனிடம் உரிமையுடன் நட்பு கொண்டாடி உதவி கேட்கிறார்.

”யார் நீ? எப்போது சிறு வயதில் பழகியதை காரணம் காட்டி இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு பிராமணன் நம்மோடு friend-ship கொண்டாடலாமா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணி அனுப்பி விடுகிறான்.

மனசில் கூறிய முள்ளாக இது தைத்துவிட்டது துரோணருக்கு. அவனை பழிவாங்க துடித்தது மனசு. சந்தர்ப்பம் அர்ஜுனன் மூலம் கிடைத்தது. பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு துருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார்.

துருபதனுக்கு இப்போது மனதில் முள். தனக்கு நேர்ந்த இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். திரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான்.

பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, ‘நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறைப் பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?’ என்று துருபதன் நினைக்காமல், ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில், இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்ராயமே உண்டாயிருந்தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப்படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷாத்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடம் வன்மம் கொண்டான்.

கடைசியில் பாரத யுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடுகொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக் கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப் போய்விட்டான் என்று, ஸத்ய ஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, “அச்வத்தாம: ஹத: குஞ்ஜர:” என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து, “குஞ்ஜர” (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில், பாஞ்ச ஜன்யத்தைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே, த்ரோணர் மனச் உடைந்து போய் அப்படியே ஆயுதங்களைப் போட்டு உட்கார்ந்து விட்டார். அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரை கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதை பார்த்துப் பாண்டவ சைன்யத்தினர் உள்பட எல்லாரும் ‘தகாத கார்யம் நடக்கிறதே’ என்று விக்கித்துப்போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.

இன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனசுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் இளம் வயது சிநேகிதன். ஒன்றாக சேர்ந்து படித்தவன் குசேலன். த்ரோணர் மாதிரியே தாரித்ரிய ஸ்திதியில் குசேலர் ஒருநாள் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப் படுத்தாதது மட்டுமில்லை; அவருக்குப் பரம பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மிணியைக் கொண்டு அவருக்குச் சாமரம்போட வைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார்.

தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்தி பற்றி எதுவும் சொல்லவொட்டாமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, ‘இது நம் அகந்தானா?’ என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.

இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும், அஸத்யமாகவும், மனஸை உறுத்துகிறார் போல போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது….

குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், ப்ராம்மண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து, எளிமையுடன் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

த்ரோணர் என்ன பண்ணினார். மஹா புருஷர் தான். என்றாலும் ப்ராம்மண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப்பதோடு நிற்காமல், அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால்தான் எல்லாம் அநர்த்தமாக, கோளாறாகப் போனது..

த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் எதோ சொல்லிவிட்டானென்று ப்ராம்மணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமானமும் க்ஷாத்ரமும் பாராட்டிப் பழிவாங்க நினைத்ததே ஸரியில்லைதான்.

ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனசைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமில்லாமல், பரசுராமரிடம் அஸ்த்ர சிக்ஷை கற்றுக் கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படி செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரி ஆகிவிட்டது. நியாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கு எத்தனை வேதனையாயிருந்திருக்கும்?

யுத்த பூமியில், அர்ஜுனன் போடுகிற அம்பை விடக் கூராகத் துளைக்கும் வாரத்தை அம்புகளை பீமசேனன் அவர்மேல் வீசி, அவர் பிராம்மண தர்மத்தை முறைப்படி நடக்காததற்காக ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத் திறக்காமல் அவர் அதையும் வாங்கிக்கட்டிக் கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.

ப்ராம்மணன், ப்ராம்மணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு, மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால், மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன”

எப்படி இருக்கிறது மகா பெரியவா அனாலிசிஸ்

Image may contain: one or more people

LikeShow more reactions
CommentShare

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

One Response to Svadharma of a brahmin – Periyavaa

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s