Kokileswarar temple- Thirukozhambam


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(தல த் தொடர்.53)*
🍁 *சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.* 🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல……)
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
🍁 *திருக்கோழம்பம்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*இறைவன்:* கோகிலேஸ்வரர், கோழம்பநாதர்.

*இறைவி:* செளந்தர நயகி.

*தலமரம்:*வில்வம், முல்லைக்கொடி.

*தீர்த்தம்:*மதுதீர்த்தம்.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள 128 தலங்களுள் முப்பத்தைந்தாவது தலமாக இத்தலம் போற்றப்பெறுகின்றது.

*இருப்பிடம்:*
கும்பகோணம் – காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்துள்ள எஸ்.புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து வடக்கில் திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் இரண்டு கி.மீ. சென்றால் கோயிலையடையலாம்.

திருவாவடுதுறை சிவஸ்தலத்தில் இருந்தும் தெற்கே சுமார் நான்கு கி.மீ ஆட்டோ மூலமாகவும் பயணம் செய்து இத்தலத்தை அடையலாம்.

*பெயர்க்காரணம்:*
உலக அன்னையாகிய உமாதேவியார் "கோ" வடிவில் அதாவது பசு வடிவாய் இருந்து பூசித்துப் பேறு பெற்றார்.

கோ-பசு. பூசித்ததால் திருக்கோழம்பம் எனப்பெயர் பெற்றது.

பசு வடிவாய் அம்மை பூசித்ததை எடுத்துக்காட்ட, பசுவின் கால் குளம்புகளின் அடையாளம் நெடிய பாணத்தில் காணப்படுகிறது.

கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி அவர்களால் கட்டப்பட்ட ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்றாகும்.

அம்பிகை ஒரு சமயம் சாபத்தின் காரணமாக பசு வடிவம் பெற்று பூவுலகில் பல தலங்களில் இறைவனை வழிபட்டாள். அத்தகைய தலங்களில் திருக்கோழம்பம் தலமும் ஒன்று.

அவ்வாறு பசு வடிவில் வழிபட்ட போது பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட இத்தல இறைவன் கோகிலேசுவர் என்று பெயர் பெற்றார்.

*கோவில் அமைப்பு:*
நந்தலாற்றின் வடகரைப் பகுதியில் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பளவுடன் கோயில் அமையப்பெற்றுள்ளது.

ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் உள்ளது. முகப்பு வாயிலுக்கு எதிரே பிரம்ம தீர்த்தம் உள்ளது. முகுப்பு வாயிலில் மேலே அமர்ந்த நிலையில் சிவன் பார்வதியும், அவர்களின் ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகரும் சுதை வடிவில் காணப்படுகின்றனர்.

வாயில் வழி உள்ளே நுழைந்தால் ஒரு நீண்ட பாதை அடுத்துள்ள மூன்று நிலை உள்ள கோபுரத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல, வழக்கம் போல் கோபுரத் தரிசனம் *சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொள்கிறோம்.

கோபுரத்திற்கு முன்னால் நந்தியை நமஸ்கரித்து, பின் பலிபீடத்தின் முன் வந்து வணங்கி நம் வேண்டாச் செயல் புரிந்தவைகளுக்கு அதனிடம் பலியிட்டுவிட்டு நிம்மதியாக நகர்கிறோம்.

கோபுரம் கடந்து உட்சென்றால் மகாமண்டபத்தில் நடராஜர் சபை உள்ளது. விடுவோமா? அப்படியே ஆடல் நயனங்களைப் பார்த்து பக்தி திளைப்பில் விழிகளில் ஈரம் செரிந்த பிறகே நகர்ந்தோம்.

உள் பிராகாரத்தில் விநாயகர், அப்பர், முருகன், கஜலட்சுமி பைரவர் ஆகியோர் சந்நிதிகள் இருக்க தோடர்ந்து ஒவ்வொருவரையும் தயிசித்து அகன்றோம்.

கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக காணப்படும் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, விநாயகர் ஆகியோருடன் நடராசரும், சட்டை நாதரும் பிட்சாடனரும் காட்சியளிக்க, வழக்கமான அவர்களுக்குண்டான வணங்குதலை செய்வித்து ஆனந்தமானோம்.

இத்தல இறைவனைக் கண்டோம். சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தல லிங்கத்தின் பாணம் மிகவும் பெரியதாக இருக்கன்றது.

பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட பசுவின் கால்குளம்பு ஆவுடையார் மேல் பதிந்துள்ளதைக் காணமுடிகிறது.

*தல அருமை:*
இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலம். திருவாவடுதுறை ஆதீனத்திற்குட்பட்ட கோவிலாகும்.

இத்தலத்திற்கு கோகிலாபுரம் என்றும் பெயர் வழங்கி வந்து, பின் காலப் போக்கில் திருக்குழம்பியம் என மருவி வழங்கப்பட்டது.

அகலிகை, கெளதமரின் சாபம் பெற்ற இந்திரன் பலகாலம் சிவனை பூசித்து சாபம் நீங்கப் பெற்றான்.

திருமுறைவாணர்கள், திருமுறை ஓதுவதற்கு முன்னால் விநாயகர் வணக்கம் கூறிய பின், முருக வணக்கமாக இத்தலத் திருப்பாடலாகிய சமர சூரபன்மாவைத் தடிந்த வேற் என்ற பாடல் அப்பர் பாடியருளியதைப் பாடுவர்.

*தல பெருமை:*
சிவனும் மகாவிஷ்ணுவும பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக் கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் இடர் வர பார்வதியிடம் சிவன் கேட்க………

பார்வதி, மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் போய்ப் பிறக்கும் படி சாபம் இடுகிறார்.

இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல தலங்களில் இறைவனை பூஜித்தாள். அவைகளில் இத்தலமும் ஒன்றாகும்.

மகாவிஷணுவிற்கும், பிரம்மாவிற்கும் ஒரு சமயம் தங்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஜோதி ரூபமாகத் தெரிந்த சிவபெருமானின் அடிமுடியை யார் முதலில் கண்டு வருவது என்ற போட்டியில் பிரம்மன் முடியை காண்பதற்காக சென்று, அது முடியாமல் போகவே தாழம்பூவின் துணையுடன், முடியை கண்டதாக பொய் சொல்லச் சொன்னார்.

இதனால் கோபப்பட்ட சிவன் பிரம்மனை தண்டித்தார். பின்பு, பிரம்மன் இத்தலம் வந்து தன் பெயரால் ஒரு குளம் அமைத்து நீராடி இறைவனை வழிபட்டார். அதுவே பிரம்ம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்திற்கு வெளியே உள்ளது.

பெருமானின் தண்டனையைப் பெற்ற பிரம்மன் நேராக இத்தலத்திற்கு வந்து தன் பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி நீராடி கோழம்பமேவிய பெருமானின் திருவுருவை அமைத்து நற்பேறு அடைந்தனர்.

சந்தன் என்னும் வித்யாதரன் தேவேந்திரனின் சாபத்தினால் குயிலாக மாறினான். சாபம் நீங்க இத்தலம் வந்து பல்லாண்டு காலம் பூஜித்து, சாபம் நீங்கி சுய உருவை அடைந்தான். குயில் *(கோகில)* வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேசுவரர் என அழைக்கப்பட்டார்.

இந்திரன் தனக்கு அகலிகை, கவுதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றான்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 2-ல் ஒரே ஒரு பதிகமும்,
*அப்பர்* 5-ல் ஒரே ஒரு பதிகமும் பாடியுள்ளார்கள்.

சிவபிரான் உறையும் வானளாவிய பொழில் சூழ்ந்த கோழம்பத்தைப் புகழ்ந்து ஞானசம்பந்தர் போற்றிய பதிகப்பாடல்கள் பத்தையும இசை பொருந்தப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை என்று ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

🍁நீற்றானை நீள்சடை மேனிறை வுள்ளதோர்
ஆற்றானை யழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்ப மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிட ரேகவே.

🙏🏾திருநீறு அணிந்தவன். நீண்ட சடைமுடி மீது பெருகி வந்த கங்கை ஆற்றைத் தாங்கியவன். அழகமைந்த மெல்லிய தனங்களைக் கொண்ட உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன். அத்தகையோன் பொழில் சூழ்ந்த கோழம்பம் என்னும் தலத்தில் விடை யூர்தியனாய் உள்ளான். ‘நும் துன்பங்கள் நீங்க வேண்டு மாயின் அவனை ஏத்துங்கள்’.

🍁மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய்பா லுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.

🙏🏾கருமைநிறம் பொருந்திய கண்டத்தினன். மான் கன்றை ஏந்திய கையினன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த கோழம்பத்தில் விளங்கும் செம்மையன். தேன், நெய், பால் முதலியவற்றை ஆடிய மெய்யினன். அவனை இடைவிடாது நினைப்பவர் மேல் வினைகள் மேவா.

🍁ஏதனை யேதமி லாவிமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே.

🙏🏾நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன். குற்றம் அற்ற இமையா நாட்டமுடைய யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன். வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன். விளக்கமான பொழில்கள் சூழ்ந்த கோழம்பம் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் நைந்து கெடுமாறு ஏத்துமின்.

🍁சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்
உடையானை யுள்குமின் உள்ளங் குளிரவே.

🙏🏾சடைமுடியை உடையவன். குளிர்ந்த தாமரை மலரில் விளங்கும் பிரமனின் தலையோட்டைக் கையில் ஏந்திய விடை ஊர்தியன். வேதமும் வேள்வியுமாய நன்மைகளை உடையவன். குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தனக்கு ஊராக உடையவன். உள்ளங்குளிர அவனை நினைவீர்களாக.

🍁காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலொர் பான்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்ப மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிட ரொல்கவே.

🙏🏾மேகமாக இருந்து மழை பொழிபவன். மணம் கமழும் கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன். உமையம்மையை ஒருபாலாகக் கொண்டு மகிழ்ச்சி மிக்கவனாய் விளங்கும் புகழினன். செறிந்த பொழில்கள் சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தன் ஊராகக் கொண்டு அதன்கண் உறைபவன். நும் இடர்கள் நீங்க அவனை ஏத்துங்கள்.

🍁பண்டாலின் னீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புர மூன்றுட னேவேவக்
கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்
கொண்டானைக் கூறுமி னுள்ளங் குளிரவே.

🙏🏾முற்காலத்தே ஆலின் நிழலில் இருந்து அறம் உரைத்தவன். மேலான ஒளிவடிவினன். பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் ஒருசேர வெந்தழியுமாறு செய்தவன். மணம் கமழும் திருக்கோழம்பத்தைக் கோயிலாகக் கொண்டவன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள்.

🍁சொல்லானைச் சுடுகணை யாற்புர மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
கொல்லானை உரியானைக் கோழம்ப மேவிய
நல்லானை யேத்துமி னும்மிடர் நையவே.

🙏🏾எல்லோராலும் புகழப்படுபவன். அனல் வடிவான கணையைத் தொடுத்து முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவன். வேதமும் வேள்வியும் ஆனவன். தன்னைக் கொல்ல வந்த யானையை உரித்து அதன் தோலைப் போர்த்தவன். திருக்கோழம்பத்தில் எழுந்தருளிய மங்கல வடிவினன். நும் இடர் கெட அவனை ஏத்துவீராக.

🍁விற்றானை வல்லாரக் கர்விறல் வேந்தனைக்
குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்
செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.

🙏🏾விற்படையை உடைய வலிய இராக்கதர்களின் வலிய வேந்தனாகிய இராவணனைத் தன் அழகிய கால் விரலால் நசுக்கியவன். கொடிய காலனைச் செற்றவன். புகழ் விளங்கும் திருக்கோழம்பத்திற் பற்றுதல் உடையவன். அவன்மீது பற்றுக் கொள்வாரை வினைகள் பற்றா.

🍁நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டங்க வேடம் பயின்றானைக்
கடியாருங் கோழம்ப மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

🙏🏾நீண்ட வடிவெடுத்த திருமாலும் பிரமனும் அறியமுடியாத வகையில் ஓங்கி நின்ற உருவத்தை உடையவன். பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடும் கோலம் பூண்டவன். மணம் கமழும் திருக்கோழம்பம் மேவிய இடபக் கொடியினன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள்.

🍁புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தலர் தண்பொழிற் கோழம்ப மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.

🙏🏾புத்த சமயத்தினரும், மயில் தோகையாலாகிய பீலியைக் கையில் கொண்டுள்ள பொய்ம்மொழி பேசும் பித்தர்களாகிய சமணர்களும் பேசுவன பயன்தரும் உண்மையான அறவுரைகளாகா. பெருமை பொருந்திய பூங்கொத்துக்கள் அலரும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோழம்பம் மேவிய அத்தனை அல்லல்கள் அகலப் போற்றுங்கள்.

🍁தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தனம் பானுறை
விண்பொழிற் கோழம்ப மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

🙏🏾குளிர்ந்த நீர் மிகுந்த தண்ணிதான அழகிய தராய் என்னும் மாநகரில் தோன்றிய, எல்லோரிடமும் நட்புக்கொண்டு ஒழுகும் ஞானசம்பந்தன் சிவபிரான் உறையும் வானளாவிய பொழில் சூழ்ந்த கோழம்பத்தைப் புகழ்ந்து போற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசைபொருந்தப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

*திருவிழாக்கள்:*
●ஐப்பசி அன்னாபிஷேகம்.
●கார்த்திகை சோமவாரங்கள்.
●பங்குனி உத்திரம்.

*பூஜை:*
சிவாகம முறையில் இரண்டு கால பூசை.

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, கோழம்பநாதர் திருக்கோயில்,
திருக்குழம்பியம்,
எஸ்.புதூர் அஞ்சல் -612 205,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம்.

*தொடர்புக்கு:*
திருவாவடுதுறை ஆதீனம். 04364–232055
தண்டபாணி குருக்கள். 93677 28984

திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்…திருவாவடுதுறை.*

முக்திபேறு வேண்டச் செய்யும் நீங்கள், தர்மங்கள் பலவும், அடியார்களுக்குத் தொண்டும் செய்திருக்கின்றீர்களா?…………..அப்படியில்லையெனில் தர்மங்களையும் தொண்டுகளையும் தொடங்குங்கள்!. ஏனெனில், *தர்மமும் அடியார் தொண்டும் முக்திக்கு மூலதானம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s