Q & A by Tirunavukkarasar in Thevaram

தேவார அமுதம்====திருநாவுக்கரசர் தேவாரம்.

கேள்விகளும் திருநாவுக்கரசர் [அப்பர்] பதில்களும்!

நல்ல கேள்விகள் கேட்பவர் சிலரே! அதற்குச் சரியான விடைகள் தருபவர் நிச்சயமாக வெகு சிலரே!

நமக்குப் புரிய வேண்டிய பல விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்க அருளாளர் அப்பர் இவைதாம் என பதில்களை அள்ளி வீசுகிறார் .இங்கே இருபது கேள்விகளும் அப்பர்பெருமான் பதில்களும் . எங்கே? தேவாரத்தில் தான்!!!

கேள்விகளும் பதில்களும் இதோ:-

(1) ஞானம் எது? கல்வி எது?

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்

(2) நன்னெறி காட்டுவது எது?

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.

(3) நமது வினைகள் ஓடிப் போக என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போம் நமதுள்ள வினைகளே!

(4) துன்பப் படுகிறேன், வினை விடவில்லை, பழைய வினைகள் படுத்துகின்றன, நான் என்ன செய்வது?

அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?
தொல்லை வல்வினை தொந்தம் தான் என் செயும்?
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லதோர் அடிமைப் பூண்டேனுக்கே.

(5) காக்கைக்கு உடலை இரையாக்குவார் யார்?

பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரையாகிக் கழிவரே .(ஆக்கை – உடல்)

(6) இறைவனது திருவடி நிழல் எப்படி இருக்கும்?

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!

(7) சுவர்க்கம் செல்ல வழி என்ன?

துளக்கில் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும்.

(8) மெய்ந் நெறி ஞானம் என்றால் என்ன?

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானம் ஆகும்.

(9) நண்பன் யார்?அவனுக்கு என்ன கொடுப்பது?

கண் பனிக்கும்! கை கூப்பும்! கண் மூன்றும் உடை நண்பனுக்கு எனை நான்
கொடுப்பன்!

(10) நெஞ்சுக்கு உபதேசம் என்ன?

நக்கரையனை நாள்தொறும் நன்னெஞ்சே! வக்கரை உறைவானை வணங்கு நீ!!

(11) ஈசன் யார்க்கு எளியன்? யார்க்கு அரியன்?

வஞ்சகர்க்கு அரியர் போலும், மருவினோர்க்கு எளியர் போலும்!

(12) நன்நெறிக் கண் சேராதவர்கள் யார்?

“துரிசு அறத் தொண்டு பட்டார்க்கு எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன்கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல் தெளியானைத்,
திருநாகேச்சரத்து உளானைச் சேராதார் நன்நெறிக் கண் சேராதாரே!

(13) கிரகமும், நட்சத்திரமும் சரி இல்லை, என்ன செய்வது?

“நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம்! குறிக்கொண்மினே! (குறித்துக் கொள்ளுங்கள்)

(14) இடர் தீர வழி?

பொன் ஒத்த நிறத்தானும், பொருகடல் தன் ஒத்த நிறத்தானும் அறிகிலாப் புன்னைத் தாது பொழில் புகலூரரை ‘என் அத்தா’ என என் இடர் தீருமே!

(15) பிறந்தவர்கள் என்று யாரைச் சொல்லலாம்?

வஞ்சர் சிந்தையுள் சேர்விலாதார், கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்தப் பெற்றார் பிறந்தவரே!
மற்றுப் பிறந்தவர் பிறந்திலரே!!

(16) துயர் கெட வழி?

கந்த வார் பொழில் நாகைக்காரோணனைச் சிந்தை செய்யக் கெடும் துயர், திண்ணமே!

(17) யாருடைய செல்வத்தை மதிக்கக் கூடாது? ஏன்?

சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும், மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்!

(18) யாரைக் கடவுளாக வணங்கலாம்? ஏன்?

அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய், ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளரே!

(19) செத்துச் செத்துப் பிறப்பவர் யார்?

திருநாமம் அஞ்செழுத்து செப்பார் ஆகில்
தீவண்ணர் திறம் ஒரு கால் பேசார் ஆகில்
ஒருகாலும் திருக்கோவில் சூழார் ஆகில்
உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணார் ஆகில்
அரு நோய்கள் கெட வெண்ணீறு அணியார் ஆகில்
அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெரு நோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்துப்
பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே!

(20) குறை இல்லாமல் இருப்பது எதனால்?

சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்,
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே!

இப்படி அள்ள அள்ள குறையாத பதில்கள் அப்பரின் பதிகங்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.

நம் கேள்விகளுக்கு உரிய பதில்கள் மட்டும் அல்ல அவை! அனைத்தும் அற்புத இரகசியங்கள்!

நற்றுணையாவது நமசிவாயவே!
ரூபேஸ் குமார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s