Thiruvettakudi temple


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாற்றினார் அருள்வாய்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
💐 *சிவ தல தொடர்67.* 💐
🌺 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🌺
(நேரில் சென்று தரிசித்ததைப்போல….)
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
💐 *திருவேட்டக்குடி.* 💐
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*இறைவன்:*
திருமேனி அழகர், சுந்தரேஸ்வரர்.

*இறைவி:*
செளந்தரநாயகி, சாந்தநாயகி.

*தல விருட்சம்:* புன்னை மரம். (இப்போது இல்லை.)

*தீர்த்தம்:* தேவ தீர்த்தம். (கோவிலுக்கு எதிரில் உள்ளது.)

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் நாற்பத்தொம்பதாவது தலமாகப் போற்றப் பெறுகின்றது.

*இருப்பிடம்:*
புதுச்சேரி மாவட்டத்தின் ஒரு பகுதியான காரைக்கால் வட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

காரைக்காலில் இருந்து சுமார் எட்டு கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலை வழியில் வரிச்சக்குடி என்ற ஊர் வரும். அங்கிருந்து வலதுபுறம் கிழக்கே செல்லும் கிளைச்சாலையில் சுமார் இரண்டு கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

*பெயர்க்காரணம்:*
பாண்டவர்கள் வனவாசம் செய்த போது அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவ்வாறு தீர்த்த யாத்திரை செய்த போது பல தலங்களில் சிவபெருமானை ஆராதித்தான்.

அப்படி வழிபட்ட தலங்களில் இத்தலமும் ஒன்று. அருச்சுனன் தவம் செய்த சமயம் இறைவன் வேட வடிவத்தில் வெளிப்பட்டு அர்ச்சுனனுக்கு அருள் செய்ததாக புராண வரலாற்றில் காணப்படுகிறது.

இறைவன் வேட வடிவத்தில் தோன்றியதால் இத்தலம் திருவேட்டக்குடி என்று பெயர் பெற்றது.

*கோவில் அமைப்பு:*
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்புக்குத் தெரியவும், *சிவ சிவ, சிவ சிவ* என் மொழிந்து கோபுரத்தின் தரிசனத்தை பல் பெற்றுக் கொண்டோம்.

கோபுரத்தில் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான மண்டபம் நம்மை வரவேற்கிறது.

அதில செப்புக் கவசமிட்ட கொடிமரம் முன்வந்து நின்று கொடி மரத்திற்கு முன் வீழ்ந்து வணங்கி எழுந்து கொண்டோம்.

கொடிமரம் முன்பு கொடிமர விநாயகர் இருக்க, விடுவோமா? முதல்வருக்கு முதல் மரியாதை வணக்கத்தை முழுமையாக செலுத்தி வணங்கினோம்.

அடுத்து பலிபீடத்திற்கு வந்தோம், நமக்குத் தெரிந்தும் தெரியாமலிருந்த ஆணவமலத்தை அப்பலிபீடத்தில் பலியிட்டுவிட்டு நிம்மதிக்கு பெருமூச்சுடன் நகர்ந்தோம்.

அடுத்து நந்தியை வணங்கி, உள் புக் அவரிடம் அனுமதிக்கிறது கோரிக்கையை சொல்லிவிட்டு உள் பிரவேசித்தோம்.

வெளிப் பிரகாரம் வலம் செய்து வரும் போது தென்மேற்குச் சுற்றில் சுந்தர விநாயகர் சந்நிதியும், மேற்குச் சுற்றில் வலம் வரும்போது வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதிக்கும் சென்று முறையாக கை தொழுதோம்.

வடக்குப் பிரகாரத்தில் வரும்போது, புன்னை வனநாதர் சந்நிதிக்கும், அதற்கடுத்தாலிருக்கும் மகாலட்சுமி சந்நிதிக்கும் சென்று வணங்குவதை செலுத்திவிட்டு நகர்ந்தோம்.

சம்பந்தருக்கும் சனி சந்நிதி உள்ளதைக் கண்டதும், சிறிது நிமிடங்கள் அவ்விடத்திலே நின்று மனமுருகப் பிரார்த்தித்தோம்.

கருவறை பிரகாரம் சுற்றி வருகையில் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோரின் சந்நிதிகளுக்கும் சென்று அனைவரையும் ஆராதித்து வணங்கி வேண்டுதலை செலுத்திவிட்டு நகர்ந்தோம்.

கோஷ்ட மூர்த்திகளாக இருக்கும் தட்சினாமூர்த்தி, துர்க்கை ஆகியோரையும் வணங்கினோம்.

சிவன் மீனவர், வேடன் என இரண்டு வடிவங்களில் வந்து அருள் செய்த தலம் இது.

கருவறையில் மூலவர் திருமேனி அழகர் என்கிற அழகுடன், சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் காட்சியருளை காட்டிக் கொண்டிருந்தார்.

சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தந்த ஈசனை மனம் நெகிழ்ந்து பிரார்த்தித்தும் வணங்கவும் செய்தோம்.

அர்ச்சகர் காட்டிய தீபாரதனையில் ஈசனின் உயரமான பாணத்தில் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி கிடைத்தது.

சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ஜுனர், கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக ஈசனின் அருகில் இருக்கிறார்.

விழாக்காலங்களில் இவருக்கும் பூஜைகள் நடப்பதாக அர்ச்சகர் கூறினார்.

பின்பு, தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் அம்மையை மனமுருகி தரிசித்தோம்.

சாந்தமான கோலத்தில் அம்பாளை கண்டோம். அதனால்தான் அம்பாளை *"சாந்தநாயகி"* என அழைக்கின்றனர் என் தெரிந்துணர்ந்தோம்.

உற்சவத் திருமேனிகளில் வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய வேடரூபர், வேடநாயகி திருமேனிகளை அங்கு சிறப்புறத் தரிசித்தோம்.

வேடரூபர் கையில் வில்லேந்திக் கம்பீரமாகக் காட்சி தந்தார். முருகனும் கையில் வில்லுடன் காட்சியளித்தார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் இங்கே தரிசனம் கிடைத்தது அபூர்வம்.

*கடலாடு விழா:*
மாசிமக தினத்தன்று திருமேனியழகரான சுவாமி வேட மூர்த்தியாகக் காட்சி தந்து கடல் நீராடும் வைபவம் கடலாடு விழா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் மீனவப் பெண்ணாக வந்து அவதரித்தாக புராண வரலாறு கூறுவதால், இந்த கடலாடு விழாவை திருவேட்டக்குடி தலத்திற்கு அருகிலுள்ள கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள்.

மாசிமகத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள தேவதீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.

*மீனவராய் வந்து அம்மையை மணந்தமை.*
அன்னை பார்வதி சிவபெருமானிடம் அண்ட சராசரத்து அனைத்து உயிர்கட்கும் மூச்சாக இருப்பது யார்?-என வினவ….

அதற்கு ஆதி மூர்த்தி யாமே என விடை அளித்தார். இது உண்மையாயின் சற்றே தாங்கள் மூர்ச்சை அடக்கி சும்மா இருங்கள் என வேண்டினார்கள்.

அவ்வாறே இறைவனும் மூச்சை அடக்கிட அவ்வேளையில் அனைத்து உயிர்களும் மூச்சற்றுப் போயின.

ஐயன் அடக்கிய மூச்சை வெளியில் விட உயிர்கள் உயிர் பெற்று மகிழ்ந்தன.

தம்மைச் சோதித்து உயிர்களுக்கு துன்பத்தை விளைவித்தக் காரணத்தால் அன்னையைப் பார்த்து நீ திருவேட்டக்குடியில் மீனவர் மற்றும் வளர்ந்து அருந்தவம் செய்து எம்மை அடைவாயாக! என அருளினார்.

அம்மை இப்புன்னை வனத்தில் குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழியில் வந்த மீனவர், குழந்தையைப் பாசத்தோடு எணுத்துப்போய் வளர்ப்பாயினர்.

அப்பெண் மகவு சிறுமியாக வளர்ந்து பருவ நிலை எய்திய பின்பு, சிவனை நினைந்து சிவலிங்கம் ஸ்தாபித்து சிவாகமப்படி பூஜை செய்து பின்னர் அருந்தவத்தில் அமர்ந்தார்.

மீனவர் வடிவில் வந்த பெருமான் அன்னையைக் கண்டு தன் முன்னைய வடிவம் காட்டி அம்மையைக் கடலாடி வரச் செய்து மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பெளர்ணமி தினத்தில் அன்னை வழிபட்ட சிவலிங்கமே திருமேனி அழகராய் விளங்கி அடியவர்க்கு அருள் புரிகிறார்.

*வேடராய் வந்து அர்ச்சுனனுக்கு அருளியமை.*
இறைவனை எண்ணி அர்ச்சுனன் இத்தலம் வந்து தாங்கமரும் தவத்தை மேற்க்கொள்கிறான்.

துரியோதனன் இத்தவத்தை கேள்விப்பட்டு மூக்காசுரனிடம் தவத்தைக் கலைக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறான்.

மூக்காசுரன் பன்றி உருவெடுத்து தவத்தை கண் கலைக்க முற்படுகிறான்.

இறைவன் இந்த செயலை எண்ணி வில்லும், அம்பும் கைக்கொண்டு இடப்பாகம் அம்மையை வேடர்குல மங்கையாக்கி, விநாயகர், முருகனை வேட்டுவர்களாக்கி, நான்கு வேதங்களையும், வேட்டை நாய்களாக்கி அர்ச்சுனனை நோக்கி விரைந்தார்.

மூக்காசுரன் தவத்தைக் கலைப்பதற்கு முன் அர்ச்சுனன் அவன் மாயத்தை உணருமாறு செய்து, மூக்காசுரனை அர்ச்சுனன் அழித்து விடுகிறான்.

அர்ச்சுனனுக்கு அருள் அளிக்கும் பொருட்டு வேட்டுவர் வடிவம் தாங்கி பாசுபத அஸ்திரம் தருவதற்கே இந்த வேடர் வேடுவர்.

அருகிலிருந்த அம்பாள் சிவனிடம் ஆயுதங்களில் உயர்ந்ததாக பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ச்சுனன் தகுதி பெற்றவன்தானா? என்றாள் சந்தேகத்துடன்.

சிவன் அவளிடம், அர்ச்சுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்டரேகை) பெற்றவன்.

எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம் என்றார். அர்ச்சுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளைக் காட்டினாராம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 3-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

*கோயில்பழமை :*
1000-2000 வருடங்களுக்கு முன் வரை.

*புராண பெயர்:* புன்னகவனம்.

*பொது தகவல்:* பிரகாரத்தில் நடராஜர், சுப்பிரமணியர், சன்னதிகள் உள்ளன.

நல்ல நண்பர்கள் கிடைக்க, எதிரிகள் தொல்லை, ஆணவம் நீங்க, இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

*நேர்த்திக்கடன்:*
சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

*தலபெருமை:*
மாப்பிள்ளை சிவன்: ஒருசமயம் கைலாயத்தில் பார்வதிதேவி சிவனிடம், ""உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்க முடியும்? நான் இல்லாமல் உங்களால் தனித்து இயங்க முடியாதே!” என்றாள். அம்பாளின் ஆணவத்தை அறிந்த சிவன், அவளை பூலோகத்தில் மீனவப்பெண்ணாக பிறக்கும்படி செய்துவிட்டார்.

அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவக்க குழந்தையாக பிறந்தாள்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் மாசி திருவிழாவின்போது, சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று *"மாப்பிள்ளை அழைப்பு’* கொடுக்கின்றனர்.

அப்போது, மீனவர்கள் சிவனை, *"மாப்பிள்ளை!’* என்றும் அழைக்கும் வழக்கமும் உள்ளது. இவரிடம் வேண்டிக் கொண்டால் திருமண தோஷங்கள் நீங்கும், விரைவில் வரன் அமையும் என்பது நம்பிக்கை.

திருஞானசம்மந்தர் காரைக்கால் செல்லும் முன்பு, இத்தலத்திற்கு கடல் வழியாக வந்தார். அவர் படகில் இருந்து இறங்க முயன்றபோது, கரையில் மணல்கள் எல்லாம் லிங்கமாக தெரிந்தது. எனவே, அவர் கடலில் நின்றே சுவாமி குறித்து பதிகம் பாடிவிட்டு சென்றுவிட்டாராம்.

சிவன், வேடன் வடிவில் வந்ததால் இவ்வூர் *"வேட்டக்குடி’*என்றும், அம்பாள், மீனவப் பெண்ணாக பிறந்த தலம் என்பதால், *"அம்பிகாபுரம்’* என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தலத்தின் தலவிநாயகர் சுந்தர விநாயகர் எனப் போற்றப்படுகிறார்.

*சம்பந்தர் தேவாரம்:*
🍁வண்டிரைக்கும் மலர்க்கொன்றை
விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக்
காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத்
துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை விரிந்த சடையின்மேல் அணிந்து, வரிகளையுடைய பாம்பைக் கண்டு பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவபெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க, விளங்குகின்ற ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார்.

🍁பாய்திமிலர் வலையோடு
மீன்வாரிப் பயின்றெங்கும்
காசினியிற் கொணர்ந்தட்டுங்
கைதல்சூழ் கழிக்கானல்
போயிரவிற் பேயோடும்
புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாருந்
திருவேட்டக் குடியாரே

🙏🏾வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில், வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப் பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த கழியுடைய சோலை விளங்க, நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான்.

🍁தோத்திரமா மணலிலிங்கந்
தொடங்கியவா னிரையிற்பால்
பாத்திரமா வாட்டுதலும்
பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க்
கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை அமைத்து, தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப் பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு, அபிடேகம் செய்து வழிபட்ட சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன் சிவபெருமான், தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான். அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.

🍁கலவஞ்சேர் கழிக்கானல்
கதிர்முத்தங் கலந்தெங்கும்
அலவஞ்சே ரணைவாரிக்
கொணர்ந்தெறியு மகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய
நேரிழையா ளவளோடும்
திலகஞ்சேர் நெற்றியினார்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾மயில்கள் தோகை விரித்து ஆடும் கடற்கரைச் சோலைகளை உடைய, கடல் நண்டுகள் சேர்ந்த குவியல்களை வாரிக்கொணர்ந்து சேர்க்கின்ற காவிரியின் அகன்ற கரையில், ஒளி பொருந்திய குறுகிய இடையை உடைய அழகான அணிகலன்களை அணிந்த உமாதேவியோடு, திலகம் போன்று சுடர்தரும் நெற்றியுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.

🍁பங்கமார் கடலலறப்
பருவரையோ டரவுழலச்
செங்கண்மால் கடையவெழு
நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
அங்கநான் மறைநால்வர்க்
கறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾சேறாகும் வண்ணம் கடல்நீர் அலைப்புற, மேருமலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, சிவந்த கண்களையுடைய திருமால் முன்னின்று கடைய எழுந்த நஞ்சையருந்தியவர் சிவமூர்த்தி. நால் வேதங்களையும், அவற்றின் ஆறங்கங்களையும் உணர்ந்த சனகாதிமுனிவர்கள் நால்வர்க்கும் அறநூற் பொருளின் பயனாகிய அனுபவத்தை உணர்த்தியருளிய பிறை சூடிய சடையையுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.

🍁நாவாய பிறைச்சென்னி
நலந்திகழு மிலங்கிப்பி
கோவாத நித்திலங்கள்
கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையா
லெயின்மூன்று மெரிசெய்த
தேவாதி தேவனார்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾சிவபெருமான் தோணிபோன்ற வடிவுடைய பிறைச்சந்திரனைச் சடையிலே தரித்தவர். அழகாய் விளங்கும் சங்குப்பூச்சிகளையும், கோத்தற்குரிய துளையில்லாத நல்முத்துக்களையும் கடலலைகள் கொணர்ந்து சேர்கின்ற குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடைய திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அக்கினியாகிய கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த தேவாதி தேவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

🍁பானிலவும் பங்கையத்துப்
பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைக்
கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோ
டொருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾பால்போல் விளங்குகின்ற வெண்தாமரையானது ஒளிர, பசுமை வாய்ந்த கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்க, மணம் வீசும் மலர்களையுடைய குளங்களும், தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலைகளும், தேன்துளிர்க்கும் மலர்ச் சோலைகளும் விளங்கும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், மான் போன்ற மருண்ட பார்வையுடைய மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிதலில்லாமல் வீற்றிருந்தருளுகின்றார் சிவபெருமான்.

🍁துறையுலவு கடலோதஞ்
சுரிசங்க மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை
நன்னீழற் கீழமரும்
இறைபயிலு மிராவணன்றன்
றலைபத்து மிருபதுதோள்
திறலழிய வடர்த்தாருந்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி சங்குகளை வீச, தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இலங்கை வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும் இருபது தோள்களும் வலிமை இழக்குமாறு அடர்த்தவர்.

🍁அருமறைநான் முகத்தானு
மகலிடநீ ரேற்றானும்
இருவருமா யளப்பரிய
வெரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி
மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾அரிய நால்வேதங்களையும் கற்ற பிரமனும், மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டி நீர் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்தறிய முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். பெருக்கெடுத்துவரும் காவிரியாற்றின், வீசுகின்ற அலைகள் மணிகளை உந்தித் தள்ளிச் சேர்க்கும் வளமிகுந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், சுடர்விடும் பவளம் போன்ற தம் திருமேனியில் திருவெண்ணீறு பூசப் பெற்றவராய், சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

🍁இகழ்ந்துரைக்குஞ் சமணர்களு
மிடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற்
கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலி
ணிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார்
திருவேட்டக் குடியாரே.

🙏🏾வேதவள்ளியை நிந்தனை செய்யும் சமணர்களும், பௌத்தர்களும் இறைவனைப் புகழ்ந்துரையாத பாவிகள். ஆதலால் அவர்களுடைய சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா. வெண்மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைப் போற்றி வழிபடுங்கள்.

🍁தெண்டிரைசேர் வயலுடுத்த
திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூ லிவைபத்து
முணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ
டுயர்வானத் திருப்பாரே.

🙏🏾தௌந்த நீர் அலைகளையுடைய வயல்கள் நிறைந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி, சோலைகள் சூழ்ந்த, திருவிழாக்களின் ஓசை மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் ஒண்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும், ஓதியும் வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல் உண்டலும், உடுத்தலும் இல்லாது வேறுபட்ட தன்மையுடைய தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர்.

*பூஜை:*
காரணாகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 6.00 மணி முதல், பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல், இரவு 8.45 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அ/மி,சுந்தரேசுவரர் திருக்கோவில்,
திருவேட்டக்குடி,
வரிச்சுக்குடி-அஞ்சல்,
(வழி)கோட்டுச்சேரி,
காரைக்கால் வட்டம்,
புதுவை-609 610.

*தொடர்புக்கு:*
காயாரோகண குருக்கள். ஷெல்லிஐயர்.
04368- 265691.,
04368- 265693,
98940 51753.

திருச்சிற்றம்பலம்.
*நாளைய தலம்…திருத்தெளிச்சேரி.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s