Thirutalaichangadu temple

உ.
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *சிவ தல தொடர்.63.*🍁
🍁 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல…..)
*°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°*
🍁 *திருத்தலைச்சங்காடு.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* சங்காரண்யேஸ்வரர், சங்கவனேஸ்வரர், சங்கருணாதேஸ்வரர்.

*இறைவி:* செளந்தரநாயகி.

*தலமரம்:*புரசு மரம்.

*தீர்த்தம்:* சங்கு தீர்த்தம். (கோவிலுக்கு முன்புறம் எதிரில் உள்ளது.)

*புராண பெயர்:* திருத்தலைச்சங்காடு.

*தற்போதைய பெயர்:* தலைச்சங்காடு.

*பெயர்க்காரணம்:*
பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும், அதைச் சார்ந்த ஊருக்கும் பெயர் வைப்பது வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இவ்வூரில் சங்குப் பூக்கள் ஏராளமாக பயிரிடப்பட்டதால் இதை ஒட்டியே இவ்வூருக்கு தலச்சங்காடு என்ற பெயர் உருவானதாகவும் கல்வெட்டு செய்து கூறுகிறது.

தலைச்சங்காடு = தலை + சங்கு + காடு எனப் பிரித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்.

திருமால் வழிபட்டு பாஞ்ஜசன்ய சங்கைப் பெற்ற தலம். இத்தலத்திற்கு சங்கு வனம், சங்காரண்யம், தலைச்செங்கானம், தலையுடையவர் கோவில் பத்து, தலைச் செங்கை என்பன வேறு பெயர்கள் ஆகும்.

*இருப்பிடம்:*
மயிலாடுதுறையிலிருந்து – பூம்புகார் செல்லும் பேருந்துகளும், நாகப்பட்டிணத்திலிருந்து – சென்னை செல்லும் பேருந்துகளும் தலைச்சங்காடு பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்லும். ஆக்கூரிலிருந்து வடக்கே நான்கு கி.மீ தொலைவு.

தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் அமையப்பெற்றுள்ள நூற்று இருபத்தெட்டு தலங்களுள் இத்தலம் நாற்பத்தைந்தாவது தலமாகப் போற்றப்பெறுகிறது.

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

திருமால் சிவனாரை வழிபட்டு சங்குகளில் தலையானதான பாஞ்சஜன்ய சங்கைப் பெற்ற தலம்.

மகாவிஷ்ணு இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு.

தல தீர்த்தத்தில் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் நீராடுவது விசேஷமானதாக சொல்லப்படுகிறது.

*கோவில் அமைப்பு*
ஒன்னேமுக்கால் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பளவுடன் இக்கோயில் அமைந்துள்ளன.

இரண்டு பிராகாரங்களுடன் கிழக்கு நோக்கிப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளன.

கோவிலை சங்கு வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள் கட்டியவர்கள்.

வெளிப்பிராகாரத்திலிருந்து உள்நுழையவும் தலவிநாயகரைக் காணவும் முதல்வனுக்கு முதல்மரியாதை வணக்கம் புரிந்தோம்.

பின், தேவி, பூதேவி சமேதராய் பெருமாள், சுப்பிரமணியர் சந்நிதிகளுக்கு சென்று தொடர்ந்து வணங்கி நகர்ந்தோம்.

அம்பாள் சந்நிதி வந்தோம். தெற்கு நோக்கி அருள்பார்வைக் காட்டியருள, கைதொழுது வணங்கி, ர்ச்சகர் அளித்த குங்கும பிரசாதத்தோடு அவளருள் பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு நகர்ந்தோம்.

நடராசரைக் கண்டோம். அவன் ஆடத் தூக்கிய பாதத்தைக் கண்டு சிரமேற் கையுர்த்தி வணங்கித் தொழுதோம்.

அடுத்ததாக இருந்த சோமாஸ்கந்தர் சந்நிதிக்கு வந்து வணங்கிக் கொண்டோம்.

உள் பிராகாரத்தில் நால்வர் திருமேனிகளைக் கண்ட நமக்கு, உடலின் உரோமக்கால்கள் சிலிர்க்கக் கண்டு பக்தியுடன் கண்கள் ஈரம்பட வணங்கி நகர…….

ஜ்வரஹரேஸ்வரர், காவிரித்தாய், அகத்தியர், பட்டினத்தார் முதலியோர்களையும் வணங்கி விட்டு, அங்கிருக்கும் படியினியில் சிறிது இளைப்பாறிவிட்டு வெளிவந்தோம்.

*தல அருமை:*
ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராய் பெருமாள் தனிச்சந்நிதியில்
மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் தெற்கு நோக்கியும் திருக்காட்சி அருளுகின்றனர்.

இத்தலத்து இறைவன் மூன்று அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது கண்கூடு.

உள்பிரகாரத்தில் திருமால் , ஜ்வரஹரேஸ்வரர் , காவிரித்தாய் , பட்டினத்தார் , அகத்தியர் முதலானோரின் சந்நிதிகள் இருக்கின்றன.

மூலவர் திருமேனி சங்கு போன்ற உருண்டையான வடிவில் விசாலமான கருவறையில் திருக்காட்சி தருகிறார்.

மலைமேலுள்ள வல்லப விநாயகர் மற்றும் காவேரியம்மன் திருவுருவங்கள் அவசியம் தரிசிக்க வேண்டியவைகளுள் ஒன்று.

ஒரே சிவாலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் தரிசனம் இங்கே அமையக் கிடைக்கிறது.

மூலவர் தனியாகவும் பிரதோஷ நாயகர் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர்.

சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே காட்சி தருகின்றனர்.

கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பிலும் , சங்கு வடிவிலும் அமைந்துள்ளது.

வைகாசி விசாகம் ஐந்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடக்கிறது. கந்த சஷ்டியின் போது ஒரு நாள் லட்சார்ச்சனையும் நடக்கிறது.

குழந்தைப்பேறுக்காக பெண்கள் வருகிறார்கள். அப்படி வரும் பெண்கள் பவுர்ணமி விரதம் இருந்து அம்மனுக்கு செய்யப்பட்ட சந்தனக்காப்பில் இருந்து சிறிதளவு சந்தனம் எடுத்து சாப்பிட்டு குழந்தை பிறக்க வேண்டிக் கொள்கிறார்கள்.

வழிபடுவோர்க்கு இஷ்ட சித்திகளை அளிக்கவல்ல தலமும் இது.

திருத்தலைச்சங்காடு, திருவெண்காடு, திருச்சாய்க்காடு, திருமறைக்காடு, திருத்தலையாலங்காடு என்ற வரிசையில் திருத்தலைச்சங்காடு எனச்சிறப்பு பெற்றது.

இத்தலம் சங்காரண்யம், சுவேதாரண்யம், வேதாரண்யம், வில்வாரண்யம் , வடவாரண்யம் என்ற ஐந்து ஆரண்யங்களிலும் வைத்தும் போற்றப்படுகிறது.

அருகில் ஆக்கூர் , திருவலம்புரம் தலங்கள் இருக்கின்றன.

சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர் கோயில்களுக்கும் இதனை சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்த பூந்தோட்டத்தை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் என கல்வெட்டு செய்தி கூறுகிறது.

இவ்வூர், சிலப்பதிகாரத்தில் கூறப் பட்டுள்ளது என்பதை நினைவு கூறும் போது, பக்தர்கள் வருகை இல்லாத இன்றைய நிலையை எண்ணியபோது மனதை என்னவோ செய்கிறது!

சங்கு தீர்த்தத்தில் பௌர்ணமி நீராடல் மிக விசேஷம்! பௌர்ணமி அன்று நீராடி இங்கு இறைவனையும் இறைவியையும் வணங்கினனாலும் அருகில் இருக்கும் சந்திர தீர்த்தத்தில் நீராடி வணங்கினாலும். நாள்பட்ட தோல் மற்றும் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட நோய்கள் விலகி விடும் என்பது கண்கூடு!

சந்திர பகவான் வணங்கி திருவருள் பெற்ற திருத் தலங்களுள் ஒன்றான காரணத்தினால் ஜாதகத்தில் சந்திரனின் பாதிப்பினால் வரக் கூடிய தோல் வியாதி மற்றும் மன அழுத்தம் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடுபதை அறிய முடியும்.

கோயில் அமைப்பே சங்கு வடிவில் அமைந்துள்ளது. மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. உலக மகா கோடீஸ்வரர்களான சங்கநிதி, பதுமநிதி இருவரும் கோயில் நுழைவு வாயிலிலேயே நம்மை வரவேற்கிறார்கள். கோயில் அமைப்பே சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது.

"மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 2-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

🍃"நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.

🍁அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே! சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே! நீர்க்குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

🍃துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லா மாண்பானீர்
பிணிமல்கு நூன்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

🍁துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே! நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர்.

🍃சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளே றூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூன்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக விருந்தீரே.

🍁சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே! நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர்.

🍃வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையு ம் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

🍁தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும் இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச்சங்கையில் கூடம், மண்டபம் வாயிலில் கொடிதோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

🍃சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமே னீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கான லன்னமன்னுந் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.

🍁சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச்சங்கையில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாக் கொண்டுள்ளீரே.

🍃நிலநீரொ டாகாச மனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.

🍁நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூதவடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாததக்கோர் வாழும் தலைச்சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

🍃அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல் உமையோர் பாகங்கூடினீர்
பொடிபுல்கு நூன்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

🍁திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி நடனம் ஆடி, கொடிபோன்ற மென்மையான சாயலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடிபூசிப் பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரிநூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

🍃திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர விரலாலூன்று மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீ ரந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.

🍁திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கிவாழும் தலைச்சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

🍃பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார் புறநின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

🍁பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று காணஇயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து போற்றப்படுபவரே! முத்தீவளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

🍃அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.

🍁அலைகளை உடைய நீரில் குளியாத அமணர், குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங்களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

🍃நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
குளிருந் தலைச்சங்கை யோங்குகோயின் மேயானை
ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

🍁குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை, போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால் சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர்.

*திருவிழாக்கள்:*
வைகாசி விசாகம், ஐந்து நாட்கள் திருவிழா சிறப்பாக நடக்கிறது.

கந்த சஷ்டியின் போது ஒருநாள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

*கல்வெட்டுக்கள்:*
பத்து கல்வெட்டுக்கள் உள்ளன. இவை சோழர் காலத்தைச் சார்ந்தவை. ராஜராஜவள நாட்டு நாங்கூர் நாட்டு தலைச்சாங்காடு என்றும், தலையுடையவர் கோவில் பத்து என்றும் உள்ளன.

*பூசை:*
காரணாகம முறையில் மூன்று கால பூசை.

காலை 8.00 மணி முதல், பகல் 10.00 மணி வரை,

மாலை 5.00 மணி முதல்,
இரவு 7.30 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அ/மி.சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்,
தலைச்சாங்காடு,
ஆக்கூர் அஞ்சல்- 609 301,
தரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்.

*தொடர்புக்கு.*
கந்தசாமி குருக்கள். 04364-280757
பாலசந்திரன்.04364-280032,
94434 01060

திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்………திருஆக்கூர்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s