Karuveli temple

உ.
சிவாயநம.
திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு. கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🍁 *பாடல் பெற்ற சிவ தல தொடர்.81.* 🍁
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌹 *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.* 🌹
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌷 *திருக்கருவிலி கொட்டிட்டை.* 🌷
(நேரில் சென்று தரிசித்ததைப் போல…………..)
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
பிரபஞ்ச நாதனே போற்றி!
பிறவாவரஈவனே போற்றி!!
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*கருவிலிக்கொட்டிட்டை* தற்போது *கருவேலி*

*இறைவன்:* சற்குணநாதேஸ்வரர்.

*இறைவி:*
சர்வாங்க நாயகி.

*தலமரம்:* வில்வம்.

*தீர்த்தம்:* எம தீர்த்தம்.

*ஆலய பழமை:*
ஐநூறிலிருந்து ஆயிரம் வருடங்களுக்குள்ளாக.

*புராண பெயர்:* கருவிலிக்கொட்டிட்டை,
திருக்கருவிலி.
தற்போதைய பெயர் – கருவேலி.

*தேவாரம் பாடியவர்கள்:*
*அப்பர்.*

தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இத்தலம் அறுபத்து மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இருப்பிடம்:*
கும்பகோணத்தில் இருந்து சுமார் இருபத்தைந்து கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம் – நாச்சியார்கோவில் – எரவாஞ்சேரி – பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலத்தைக் கடந்து சுமார் ஒரு கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.

கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் இரண்டு கி.மி. வந்தும் கருவேலி தலத்தை அடையலாமுவீழிமிழிலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து கிழக்கில் ஆறு கி.மி. தொலைவிலும், வடக்கே சுமார் நான்கு கி.மி. தொலைவில் திருநல்லம்
என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில்,
கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்)
கூந்தலூர் அஞ்சல்,
எரவாஞ்சேரி S.O.,
தஞ்சாவூர் மாவட்டம்.
PIN – 605 501.

*பூஜை நேரம்:*
ஆகம விதிப்படி.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

*கோவில் அமைப்பு:*
ஆவயத்துக்குள் செல்ல முதலில் ஒரு அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது.

நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான நடைபாதை இருக்கிறது.

நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபத்தைக் கண்டோம். அவரை ஆனந்தித்து மனம் குளிர தரிசித்து அடுத்துத் தொடர்ந்து நடந்தோம்.

இதற்குப் பிறகே கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளுடன் இராஜ கோபுரம் தெரியவும், *சிவ சிவ,சிவ சிவ,*என வணங்கி மொழிந்து கோபுரத் தரிசனம் செய்து கொண்டோம்.

வாயில் வழியாக உள்ளே சென்றால் இறைவன் கருவறை ஒரு முன் நந்தி மண்டபத்துடன் அமர்ந்திருந்தார். பணிந்து குனிந்து வணங்கிக் கொண்டோம்.

வெளிப் பிராகாரத்தில் கணபதி பாலசுப்பிரமணியர் சந்நிதிகளுக்கும் சென்று கைதொழுதோம்.

கருவறை வெளிப்பிரகாரச் சுவர் மாடங்களில் கோஷ்ட மூர்த்தங்களாக இருக்கப்பெற்ற நர்த்தன விநாயகரையும், அர்த்த நாரீஸ்வரரையும் வணங்கிக் கொண்டோம்.

அடுத்ததாக இருந்த தட்சிணாமூர்த்தியை அவரை வணங்கக்கூடிய நெறிமுறை மில் வணங்கினோம்.

பைரவர் உருவங்களைப் பார்த்து பிரமித்தோம். பழைமையும் கலைச்சிறப்பும் பொதிந்த வண்ணம் காட்சிகள்தான்.

கருவறை முன் மண்டபத்தில் நடராஜரை தரிசித்தோம். அவன் தூக்கிய திருவடிகளை பார்க்கவும், முகவோட்டத்தைப் பார்க்கவுமாக மறுபடியும் மறுபடியும் ஆடற்கலை நயங்கள் நம்மை மெய்சிலிர்க்கச் செய்தன. ஆனந்தமாக வணங்கி விடைபெற்று நகர்ந்தோம்.

இறைவனைக் காண அவன் கருவறை முன் வந்து நின்றோம்.

இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் லிங்க வடிவில் அருட்காட்சி மழை பெய்து கொண்டிருந்தார்.

தூக்கிய கைகளை தாழ்த்தாது அவன் அருள்மழையில், நாங்கள் நனைந்து மனம் குளிர்ந்து வெள்ளிய விபூதியை பெற்றுத் திரும்பினோம்.

அம்பாள் தனிக்கோயிலாக வெளிப் ரகாரத்தில் வலதுபுறம் சர்வாங்கசுந்தரியாக அருளோட்சிக்கிக் கொண்டிருந்தாள்.

அம்பாள் சர்வாங்க சுந்தரி பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றாள். எங்கள் அருகில் ஏற்கனவே தரிசனத்திற்கு நின்று கொண்டிருந்த பக்தை ஒருவரிடம் அம்பாளைப் பற்றி வினா வினவினோம்.

அதற்கு அந்த பக்தை, ஈசனின் கவனத்தைத் தன் பக்கம் இழுப்பதற்கு, அன்னை உலகத்து அழகை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தாளாம் இங்கே,

பக்கத்தில் ஓர் ஊரில் சில காலம் இருந்த இவ்வாம்பிகை பின் இங்கு வந்து சர்வாங்க சுந்தரியாக இறைவனின் முன் நின்றாளாம்.

இவளைத் தரிசித்த பின் இளம் பெண்களுக்கு கல்யாண வேளையாக கூடிவரும் என்றும், கல்யாணமும் தடையின்றி உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொன்னார்கள்.

இக்கோவிலில் நவக்கிரத்திற்குத் தனிச் சந்நிதி இல்லை.

இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது.

கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம் குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலதிற்குப் பெயர் உண்டு.

*"கருவிலி"* என்ற பெயரே "இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம்," என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவிலுக்குச் சென்று சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால், அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது.

இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவேலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்கு பிராப்தம் இருந்தால் தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும்.

‘முயன்று பாருங்கள்! உங்களை நீங்களே சோதனை செய்து பாருங்கள். அவனை வணங்கும் பிராப்தம் உங்களுக்கு கிடைக்க, இத்தலம் சிறப்பை வாசித்த அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று அடியேன் இறைவனிடம் பிராத்தித்துக் கொள்கிறேன்.

திருநாவுக்கரசு சுவாமிகள் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகத்தின் ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

தேவாரப்பாடல் பெற்ற தலமான இத்தலத்தை அப்பர் தன் பதிகங்களிலே *"கருவிலிக் கொட்டிட்டை"* என்றே அழைக்கிறார்.

திரிபுரம் எரித்த எம்பெருமான் ஆடிய பல்வேறு வகை நடனங்களிலே *"கொட்டிட்டை"* ஒருவகை என்பதாகவும், அதனையே ஈசன் இங்கு தாண்டவமாக ஆடினார் என்பதும் செவிவழிச் செய்தி.

கோயிலின் பெயர் "கொட்டிட்டை" என்பதாகும். அவர் தனது பதிகத்தின் இரண்டாவது பாடலில் *"நீர்உம்மை நோக்கி கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக"* என்று குறிப்பிடுகிறார்.

*சிறப்பு:*
இந்திரன் , ருத்ர கணத்தவர்கள் , பிறவிப்பிணி தீர சற்குண மன்னன் வழிபட்ட தலம்.

குலோத்துங்க சோழன் திருப்பணி செய்துள்ள தலம்.

மிகப்பழமையான கோயில்.

கோயில் – கொட்டிட்டை ; ஊர் – கருவிலி.

எமதீர்த்தம் கோயிலுக்கு எதிரே இருக்கிறது.

மூலவர் அழகிய கம்பீரமான திருமேனியராக கிழக்கு நோக்கி திருக்காட்சி.

அம்பாள் அழகிய பெரிய திருமேனியராக தனிக்கோயிலில் திருக்காட்சி தருகிறாள்.

கோஷ்ட மூர்த்தங்களான நர்த்தன விநாயகர் , அர்த்தநாரீஸ்வரர் , தட்சிணாமூர்த்தி , மகாவிஷ்ணு , பிரம்மன் , துர்க்கை முதலியோரும் , பாலமுருகன் , துவார விநாயகர் , சண்டிகேஸ்வரர் , பைரவர் முதலானோரும் பழமையான சிற்ப அழகுடன் திகழ்கிறார்கள்.

அருகில் திருநல்லம் , திருவன்னியூர் , திருவீழிமிழலை திருத்தலங்கள் உள்ளன.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய தலம்.

அப்பரின் அரிய அறிவுரைகளைக் கொண்டது இத்தல திருப்பதிகமான குறுந்தொகைப் பதிகம்.

தட்சிணாமூர்த்தி ராசி வடிவங்களுடன் திருக்காட்சி தருவதால் ராசி தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலத்து இறைவனைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை. அதாவது, அவர்கள் மீண்டும் ஒரு தாயின் கருவில் உதிக்கமாட்டார்கள். இதனால் தான் இவ்வூர் *’கரு இல்லை’* என்ற பொருளில் *’கருவிலி’* எனப்படுகிறது.

காலப்போக்கில் *கருவேலி* என மருவியது. கருவுக்கு வேலி என்றும் இதன் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தலத்தின் முக்கிய பெருமை, நல்ல குணங்கள் உள்ளவருக்கு அந்த குணங்கள் என்றும் நிலைத்து நிற்கும் என்பதும், தீய குணங்கள் இருந்தால் அது மறைந்துவிடும் என்பதே ஆகும்.

எனவே இவ்வூர் இறைவன் *’சற்குணேஸ்வரர்’* எனப்படுகிறார். அம்பாள் *’சர்வாங்க சுந்தரி’* என்றழைக்கப்படுகிறார்.

*கூந்தலூர்* தேவார வைப்புத்தலம் இத்தலத்தின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் வரை தரிசனத்திற்கு வந்தவர்கள், ஞாபகமாக *கூந்தலூர்* தலத்திற்கும் சென்று வாருங்கள்.

*தல அருமை:*
சற்குண சோழனுக்கு மகப்பேறு இல்லாததால் ஈசன் பார்வதி அம்சத்துடன் ஓர் பெண் குழந்தையை மன்னன் வழக்கமாக நீராடும் தாமரைத் தடாகத்தில் ஓர் சங்காக மிதக்க அதை எடுத்துக் கொண்டு கரையேறயபின் குழந்தையாக மாற சர்வாங்கநாயகி எனப் பெயரிட்டு வளர்த்தான்.

வளர்ந்து மணவயதை எட்டிய சர்வாங்க சுந்தரியை, சொக்கட்டான் போட்டியில் தன் மகளை வெல்பவருக்கு அவளை மணமுடிப்பதாக அறிவித்தான்.

எல்லா இளவரசர்களும் தோற்க சிதம்பரநடராசரிடம் முறையிட மகளுடன் மன்னன் சென்றான்.

வழியில் கொட்டிடை என்ற ஊரில் நதியில் நீராடி இறைவனை வழிபட்டு கூடாரம் செல்கையில் ஒரு முதியவர் தோன்ற அவரை அழைத்துக் கொண்டு சென்றவர், தன் மகள் தோழிகளுடன் சொக்கட்டன் ஆடிக்கொண்டிருக்க கண்டார். முதியவருடன் விளையாட்டாக ஆரம்பித்த சொக்கட்டான் முடிவில் அர்சகுமாரிக்கு தோல்வியில் முடிய இந்த கிழவனுக்கா என்பெண் என மன்னன் வேதனையுற……..

கிழவன் உருமாறி மணமகன் கோலத்தில் இறைவனாக காட்சி அருள் காட்டினார். பார்வதி அம்சத்தை மணந்து பார்வதியுடன் சேர்த்தார்.

கருவிழிக்கொட்டிடை சற்குணனுக்கு அருளியதால்- சற்குணேசுவரர். சிம்மவாகினி- பளிங்குகல். இந்திரன், உருத்திரகணத்தார் ஆகியோர் வழிபட்டது.

*தல பெருமை:*
சிவபெருமானின் மாமனாரான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். மருமகனுக்கு அழைப்பு இல்லாமல் யாகம் நடத்தப்பட்டது.

யாகத்திற்கு செல்ல விரும்பிய தாட்சாயணியை சிவன் தடுத்தார். அவரது சொல்லைக் கேளாமல் தாட்சாயணி யாகத்திற்கு சென்றாள்.

அழைப்பில்லாமல் வந்த மகளை அனைவரது முன்னிலையிலும் தட்சன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத பார்வதி ஹோம அக்னியில் விழுந்து எரிந்தாள்.

தாட்சாயணியின் பிரிவைத் தாங்கமுடியாத சிவபெருமான், யாக குண்டத்திற்கு வந்து அன்னையின் உடலைத் தோளில் சுமந்துகொண்டு பித்துபிடித்தவர் போல் ஆடினார்.

சிவனின் ருத்ர தாண்டவத்தால், ஈரேழு லோகங்களும் அதிர்ந்தன. தேவர்கள் நடுங்கினர். அவர்கள் நாராயணனை அணுகி, சிவபெருமானைச் சமாதானம் செய்ய வேண்டினர்.

நாராயணன் சக்ராயுதத்தை ஏவி, தாட்சாயணியின் உடலைச் சிறிது சிறிதாக துண்டித்தார். உடலின் பாகங்கள் ஐம்பத்தோர் இடங்களில் விழுந்தன.

அந்த ஐம்பத்தோர் இடங்களே மகாசக்தி பீடங்கள் என அழைக்கப்பட்டன. பின்பு சிவபெருமானைச் சமாதானம் செய்தார்.

உடலை விட்ட தாட்சாயணி, பூலோகத்தில் பர்வதராஜனின் மகளாக பார்வதி என்ற பெயரில் அவதரிப்பாள் என்றும், அங்கு அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்றும் திருமால் கூறினார்.

இதன்படி, கயிலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தது.

*தேவாரம் பாடியவர்கள்:*
*அப்பர்*
🌸1. மட்டிட்ட குழலார் சுழலில் வலைப் பட்டிட்டு மயங்கிப் பரியாது நீர் கட்டிட்ட வினை போகக் கருவிலிக் கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே.

🌸2. ஞாலம் அல்கு மனிதர்காள் நாடொறும் ஏல மா மலரோடு இலை கொண்டுநீர் காலனார் வருதல்முன் கருவிலிக் கோலவார் பொழில் கொட்டிட்டை சேர்மினே

🌸3. பங்கம் ஆயின பேசப் பறைந்து நீர் மங்குமா நினையாதே மலர்கொடு கங்கை சேர் சடையான் தன் கருவிலிக் கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்மினே.

🌸4. வாடி நீர் வருந்தாதே மனிதர்காள் வேடனாய் விசயற்கு அருள் செய்தவெண் காடனார் உறைகின்ற கருவிலிக் கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்மினே.

🌸5. உய்யுமாறு இது கேண்மின் உலகத்தீர் பைகொள் பாம்பு அரையான் படை ஆர் மழுக் கையினான் உறைகின்ற கருவிலிக் கொய்கொள் பூம்பொழில் கொட்டிட்டை சேர்மினே.

🌸6. ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர் தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி காற்றும் ஆகி நின்றான்றன் கருவிலிக் கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

🌸7. நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா வாறு செயப் புரியாது நீர் கல்லாரும் மதில் சூழ் தண் கருவிலிக் கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்மினே.

🌸8. பிணித்த நோய்ப்பிறவிப் பிறிவு எய்துமாறு உணர்த்தலாம் இது கேண்மின் உருத்திர கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக் குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே.

🌸9. நம்புவீரர் இது கேண்மின்கள் நாடொறும் எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏகம்பனார் உறைகின்ற கருவிலிக் கொம்பனார் பயில் கொட்டிட்டை சேர்மினே.

🌸10. பார் உளீர் இது கேண்மின் பருவரை பேருமாறு எடுத்தானை அடர்த்தவன் கார்கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலிக் கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.

*திருவிழாக்கள்:*
மகாசிவராத்திரி, மார்கழித் திருவாதிரை.

*தொடர்புக்கு:*
04366-273900
94429 32942.

திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்…திருபேணுபெருந்துறை வ(ள)ரும்.*

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s