Thirukadaiyur temple


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌸 *சிவ தல தொடர்.( 65.)* 🌸
🌸 *சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.*🌸
(நேரில் சென்று தரிசித்ததைப் போல…….)
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
🌸 *திருக்கடவூர்.* 🌸
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*இறைவன்:* அமிர்தகடேசுவரர், அமிர்தலிங்கேஸ்வரர்.

*இறைவி:* அபிராமி.

*தல விருட்சம்:*வில்வம், ஜாதிமல்லிகை (பிஞ்சிலம்)

*தீர்த்தம்:* அமிர்த தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தங்கள்.

*உற்சவர்:* காலசம்ஹார மூர்த்தி.

*பெயர்க்காரணம்:*
தேவர்கள் அமுதத்தைஒரு கடத்தில்-கலயத்தில் சேமித்து வைத்து விநாயகரிடமிருந்து அமுதக் கடம் பெற்ற ஊரானது திருக்கடவூர் என்றாயிற்று.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்ற நூற்றி இருபத்தெட்டுத் தலங்களுள் இத்தலம் நாற்பத்தேழாவது தலமாகப் போற்றப் பெறுகின்றன.

*இருப்பிடம்:* மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து இருபத்து மூன்று கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் முப்பது கி.மி. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடி சாலை வழியில் இத்தலம் உள்ளது.

இது ஒரு அஷ்ட வீரட்டான ஸ்தலம். திருக்கடையூர் மயானம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது.

*கோவில் அமைப்பு:*
அளப்பரிய பல சிறப்புகளுடன் அருமையாகத் திகழும் இத்திருக்கோயில் ஏழுநிலை இராஜகோபுரத்தைக் காணவும் *"சிவ சிவ, "சிவ சிவ"* மொழிந்து வணங்கிக் கொண்டோம்.

அடுத்து உள் புகவும், ஐந்து நிலை உள்கோபுரத்தையும் தரிசித்து விட்டு, கவசமிடப்பட்ட கொடிமரத்தையும் வணங்கி விட்டு, பலி பீடத்தருகேயும் முன் நின்று நம் ஆணவத்தையெல்லாம் அங்கே பலியிட்டு விட்டுத் தொழுது வணங்கினோம்.

பிரகாரத்தில் வலம் வரும்போது, மார்க்கண்டேசுவரர், கஜலட்சுமி, நாகநாதேஸ்வரர், சுப்பிரமணியர், ஆகியோர்களையும் தொழுது வணங்கிக் கொண்டோம்.

நடராசர் சபைக்கு வந்த போது,.. அவனாடற்கலையின் நிலையைக் கண்டு மெய்மறந்து நின்று வணங்கிணோம். எத்தனை முறை எத்தனைத் தலங்களில் தரிசித்திருந்தாலும், இரும்பத் திரும்ப அவனாடற்கலை உருவினைக் காணும்போது, மனம் திருப்தியாகி நகர மறுக்கிறது.

திரும்பவும் இன்னொரு தலத்தில் வந்து உம்மைத் தரிசிக்க வருவேன் என மனதை சமாதானம் செய்து நடராசரின் அருளைப்பார்த்து வணங்கி நகர்ந்தோம்.

ஈசனான மூலவர் சந்நிதிக்கு வந்தோம். மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் அவருளை மனமுருகிப் பிரார்த்தி தொழுதோம்.

மூலவரின் இடப்பாலாக காலசம்ஹார மூர்த்தி பாலாம்பிகையுடன் காட்சியைக் கண்டோம். அற்புதமான அந்தத் திருமேனிகள் அழுகுற பக்தியருளுடன் காட்சி தந்தன.

அடுத்து மேலாக வெள்ளி பிரபை. இதில் வெள்ளிப் பேழையில் வைத்து, மரகதலிங்கத்தை நாள்தோறும் காலசந்தி, சாயரட்சை வழிபாடு செய்து வருகின்றனர்.

நாங்கள் காலசந்தி நடக்கும் நேரத்தில் அங்கிருந்தோமையால், மரகதலிங்கமேனியின் வழிபாட்டைப் பார்த்து அவன் அருள்கிடைத்த பேறு பெற்றோம்.

மூர்த்தியின் திருவடிக்கீழ் மார்க்கண்டேயர் கைகூப்பிய நிலையில் நின்றவாறும், ஈசனிடம் உதை பெற்று வீழ்ந்து கிடக்கும் எமனும் அரிய காட்சியை பீடத்தின் அடியில் வெள்ளித் தகடு கொண்டு மறைத்து, தீபாராதனை காலத்தில் இதை சேவிக்கலாம்.

பின் அம்பாளின் சந்நிதிக்கு வந்து அம்மையை மனமுருகப் பிரார்த்தனை செய்வித்து கைதொழுது அவளருடுடன் வெளி வந்தோம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 3-ல் ஒரே ஒரு பதிகமும்,
*அப்பர்* 4-ல் இரண்டு பதிகமும், 5-ல் ஒரு பதிகமும்,
*சுந்தரர்* 7-ல் ஒரு பதிகமும் ஆக மொத்தம் ஐந்து பதிகங்கள் இத்தலத்திற்கு.

*எமபயம் நீக்கும் தலங்கள்:*
திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.

*தல அருமை:*
பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார். பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து திருக்கடவூரில் முளை விடக் கண்டார்.

இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றி விட்ட இடம் இத்தலமான திருக்கடவூர் என்று பெயர் பெற்றது.

அந்த்க் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

சிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். இங்குள்ள அம்பாளின் அழகில் தன்னை மறந்து அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்திற்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிராம பட்டர் அவதரித்த தலம் இதுவாகும்.

ஆலயத்தின் கிழக்கிலும் மேற்கிலும் இராஜகோபுரங்கள் இருந்தாலும் மேற்கில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம் தான் பிரதான வாயிலாகும்.

கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், அறுபத்து மூவர் நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன.

இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. இறைவன் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உருவம் பார்த்து தரிசிக்க வேண்டியதாகும்.

காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார்.

மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார்.பிறகு எமனுக்கு மன்னிப்புக் கொடுத்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்கச் செய்து விடுகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது.

எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன.

இக்கோவிலின் வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோகியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள் புரிந்தவள் இந்த அன்னை அபிராமியே.

இவ்வூரில் வாழ்ந்து வந்த இவர், அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பக்தி அதிகரிக்க உன்மத்த நிலையில் இருப்பார். அவ்வாறு இருந்த சமயம் ஒருமுறை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இவ்வூர் வந்த போது இந்த பட்டரைப் பார்த்து இன்று என்ன திதி என்று கேட்கிறார்.

அன்னை நினைவிலிருந்த பட்டர் அமாவாசையை பௌர்ணமி திதி என்று தவறாகக் கூறி விடுகிறார். பட்டரைப் பற்றி தவறான கருத்துக்களை மன்னரிடம் கோவில் அர்ச்சகர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர்.

இதனால் கோபமுற்ற மன்னர் அன்றிரவு பௌர்ணமியைக் காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறிவிடுகிறார். பட்டர் அன்னை அபிராமி மீது நூறு பாடல்கள் கொண்ட அந்தாதி பாட, அமாவாசை அன்று பௌர்னமி தோன்றியது.

எழுபத்தொம்பதாவது பாடலின் போது அன்னை அபிராமி தனது காதில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூர்ண சந்திரனாகக் காட்சி அளித்தது.

இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த இந்த அன்னை அபிராமியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர்.

*திருப்புகழ் முருகன்:*
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரண்டு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இங்கு முருகப்பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதியின் வலப்பக்கம் தாயைத் தழுவியவாறு காட்சி தருவது காண வேண்டிய ஒரு காடசியாகும்

*தல பெருமை:* மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது பதினாறு வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க…..

அதற்கு, மிருகண்டு தமபதியினர் பதினாறு வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர்.

மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு பதினாறு வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் பதினாறு வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர்.

சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார்.

அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார்.

எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார்.

பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி, எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது.

சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ஒன்று.

*தலத்தின் சிறப்பம்சம்:*
கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாக பார்க்க முடியும்.

அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது.

இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு பதினோறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க முடியும்.

அறுபதாவது வயது தொடங்கும் போது உக்ரரத சாந்தியும், அறுபத்தொன்றாவது வயது தொடக்கத்தில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், எழுபத்தொன்றாவது வயது தொடக்கத்தில் பீமரத சாந்தியும், எண்பதாவது வயதில் சதாபிஷேகமும் செய்து கொள்கின்ற தம்பதிகளை இத்தலத்தில் நாம் நிறையப் பார்க்க முடியும்.

திருக்கடவூர் தலத்தில் இப்படிப்பட்ட சாந்திகள் செய்து கொள்வது காலங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒன்றாகும்.

எல்லோரும் மார்க்கண்டேயனைப் போல் என்றும் பதினாறு வயதுடன் மரணத்தில் இருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தைத் தராமல் இருக்க இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டு நலம் பெறலாம்.

திருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தையும், கடவூர் மயானத்திலுள்ள பிரம்ம்புரீஸவரர் ஆலயத்தையும் தரிசித்த பிறகு அருகிலுள்ள கீழ்க்கண்ட மற்ற கோவில்களுக்கும் சென்று வரலாம்.

*அனந்தமங்கலம்:*
திருக்கடையூரில் இருந்து சுமார் மூன்று கி.மி. தொலைவில் உள்ளது அனந்தமங்கலம் இராஜகோபாலப் பெருமாள் கோவில். இக்கோவிலில் உள்ள த்ரிநேத்ர பஞ்சமுக ஆஞ்சனேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

*தில்லையாடி:*
திருக்கடையூரில் இருந்து கிழக்கே திருவிடைக்கழி செல்லும் பாதையில் சுமார் நான்கு கி.மி. தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்குள்ள சிவன் கோவில் பெரிய பிரகாரம், பெரிய கோபுரம் உடையதாகும். சுயம்பு லிங்க வடிவிலுள்ள இறைவனை திருமால் வழிபட்டுள்ளார்.

*திருவிடைக்கழி:*
தில்லையாடியில் இருந்து மேற்கே சுமார் மூன்று கி.மி. தொலைவில் உள்ள திருவிடைக்கழி திருவிசைப்பா பாடல் பெற்ற முருகன் தலம். இக்கோவிலில் மூலவர் திருகாமேஸ்வரர். ஆயினும் பிரதான மூர்த்தியாகத் திகழ்பவர் இக்கோவிலில் உள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ள சுப்பிரமண்யர் தான்.

*தேவானூர்:*
தில்லையாடிக்கு அருகில் உள்ள தேவானூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாத சுவாமி ஆலயமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள ஞான குரு பகவான் சந்நிதியும் பார்த்து வழிபட வேண்டிய சிறப்புள்ளது. இங்குள்ள ஞான குரு பகவான் இந்திரனால் வழிபடப் பெற்றவர்.

*தரங்கம்பாடி:*
திருக்கடையூரில் இருந்து தென்கிழக்கே சுமார் எட்டு கி.மி. தொலைவில் உள்ள *"அளப்பூர்"*என்ற தேவார வைப்புத்தலம் தான் இன்றைய தரங்கம்பாடி. கடல் அலைகள் மோதி மோதி மிகவும் சிதிலம் அடைந்துள்ளன. இங்குள்ள சிவாலயத்தின் மூலவர் மாசிலாநாதர். கந்தர்சஷ்டி நாளில் திருவிடைக்கழி முருகன் சூரசம்காரம் செய்யும் தலம்.

*சிறப்புக்கள்:*
திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்திற்கு வேறு பெயர்களும் இருக்கின்றன.

இப்பதியில் அவதரித்த குங்குலியகலய நாயனார், வறுமையுற்ற காலத்திலும் தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றவர்.

திருப்பனந்தாளில் சாய்ந்த.லிங்கத்தை, யாராலும் நிமிர்த்த முடியாத சிவலிங்கத் திருமேனியை தனது சிவ பக்தியால் நேராக நிமிர்த்தியவர்.
*அவதார தலம்*
வழிபாடு: இலிங்க வழிபாடு. முத்தித் தலம்: திருக்கடவூர். குருபூசை நாள்: ஆவணி – மூலம்.

காரி நாயனாரும் இப்பதியிலேயே அவதரித்தவர் – இவர் அரசனிடம் சென்று பொருள் பெற்றுப் பல திருப்பணிகள் செய்து, தொண்டாற்றி முத்தியடைந்த பதி.
*அவதாரத் தலம்* திருக்கடவூர் (திருக்கடையூர்) வழிபாடு: இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருக்கடவூர். குருபூசை நாள்: மாசிபூராடம்.

குங்குலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோரது திருவுருவச் சிலை இத்திருக்கோயிலில் உள்ளது.

அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி இது.

மூவர் பெருமக்கள் பாடல் பெற்றத் திருத்தலம்.

உள்ளமுருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து – அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட அற்புதப் பதி.

அன்னை அபிராமியின் அருள் தலம்; யம பயம் போக்கவல்ல பதி.

இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி – காலனை சம்ஹரித்த மூர்த்தி – மிகப்பெரிய மூர்த்தி – கம்பீரமான தோற்றம் – திருமேனியில் எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.

மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108-வது தலமாகும். (107-வது தலம் திருக்கடவூர் மயானம் ஆகும்.)

சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி தீர்த்தத்திலிருந்து வண்டியில் கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் ‘அசுவினி தீர்த்தம்’ எனவும் வழங்கப்படுகின்றன.

மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம், அருகிலுள்ள மணல்மேடு ஆகும்.

பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம்.

இங்கிருக்கும் கள்ளவாரணப் பிள்ளையாரை மறவாது வணங்கி வாருங்கள். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

மார்க்கண்டேயர் கங்கை நீருடன் பிஞ்சிலப் புஷ்பங்களையும் கொண்டு வந்து அர்ச்சித்ததாக வரலாறில் உள்ளது.

இச்செடி (பிஞ்சிலம்) கோயிலுள் உள்ளது. இதனால் இத்தலத்திற்குப் *’பிஞ்சிலாரண்யம்’* என்றும் பெயரும் உண்டு. தற்போது தலமரம் இதுவே. ஆதியில் தலவிருட்சம் வில்வம் என்பர்.

உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி (மணிவிழா) , சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவேயாகும். இச்சாந்திகளை வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம் மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும்.

பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலால் அநுக்ரஹம் பெற்ற
தர்மராஜா – எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.

வெளவால் நெத்தி மண்டபம். முன்னால், சுதையில் துவார பாலகியர் உருவங்கள், அபிராமி அந்தாதிப் பாடல்கள் கல்லிற் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. வாயில் கடந்து உட்சென்று அம்பிகைமுன் நிற்கும்போது நம்மையே மறக்கின்றோம். நின்ற திருக்கோலம். வலப்பால் உற்சவத் திருமேனி. அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள், வெள்ளிக் கவசத்தில் ஒளிரும் ஒண்கொடி கண்ணுக்குப் பெரு விருந்தாகிறாள்.

‘அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியை’ உளமாரத் துதித்து வேண்டுகிறோம். அம்பாள் சந்நிதியை வலம்வர வசதியுள்ளது.

*’சிலம்பில்’* வரும் நடன மகள *’மாதவி’* யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது. பக்கத்தில் உள்ள பிற தலங்கள் திருஆக்கூரும் திருத்தலைச்சங்காடும் ஆகும்.

*பூசை:*
காரண காமீக முறையில் ஆறு கால பூசை.

காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,

மாலை 4.15 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அ/மி, அயிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கடையூர் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம்,
நாகை மாவட்டம்-609 311

*தொடர்புக்கு:*
கண்காணிப்பாளர். 04364–287429

*நாளைய தலம்….திருக்கடவூர் மயானம்.*

திருச்சிற்றம்பலம்.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s