Vaikunta Ekadashi

Courtesy: http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=10228:2014-01-03-04-32-37&catid=58:football&Itemid=386

thirup_300_300.jpg

மார்கழி மாதத்தில் சிவபெருமானை வழிபடும் திருவாதிரை (ஆதிரை) திருநாளும், விஷ்ணு பகவானைக் வழிபடும் ஏகாதசித் திருநாளும் அமைவதால் மார்கழி மாதம் சிறப்புப் பெறுகின்றது. இவ் இரண்டு வழிபாடுகளும் அதிகாலைப் பொழுதில் நிகழ்வதும் மார்கழி மாதத்திற்கு பெருமை சேர்க்கின்றது.

வைணவர்கள் மட்டுமின்றி இந்துக்கள் எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசியாகும். விவரம் தெரியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பதோடு உறங்காமல் கண் விழிக்கவும் செய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினத்தில் பெருமாளை வணங்குபவர்கள் ”சொர்க்கத்தை” அடைவர் என்பது ஐதீகம். இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது.

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை ஒரு நாளாக அமைகின்றது. அந்த வகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. (1 மாதத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம்.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப்பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம். இந்த தட் சிணாயணத்தின் நிறைவுப் பகுதி – அதாவது, தேவர்களைப் பொறுத்தவரை இரவுப் பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள் கொள்ளலாம்.

மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷாக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள பிரம்ம முகூர்த்தம் என்ற கால அளவில் வைகுண்ட வாசல்திறக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் சுக்கில பட்ச (வளர்பிறையிலும்), கிருஷ்ணபட்ச (தேய்பிறையிலும்) ஏகாதசி திதி வந்தாலும், மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்குத்தான் ”வைகுண்ட ஏகாதசி”என்ற தனி மகிமை உண்டு. இத் திருநாள் இவ் வருடம் 21.12.2015 ல் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது

வைகுண்ட ஏகாதசி அன்று வெங்கடேசர், கோவிந்தன், நாராயணன், கிருஷ்ணன், வரதராஜன் என்று நாம் வணங்கும் பரந்தாமன் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக இலட்சுமி தேவியுடன்வந்து எமக்கு கருணை மழை பொழிகின்றார் என்று வேத புராணங்களில் சொல்லப்பெற்றுள்ளன.

மாதங்களில் நான் மார்கழி ஆகின்றேன் என்று ஸ்ரீ கிருஷ்ணபகவான் கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறந்த முறையிலே நடைபெற்று வருகின்றது. இதே போன்றுபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் ஏனைய வைஷ்ணவ கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன. இதுவே சுவர்க்க வாசல் என்றும் பெரிய ஏகாதசி என்றும் முக்கோட்டி ஏகாதசி என்றும் அழைக்கப் பெறுகின்றது. சாதாரணமாக ஏகாதசி விரதமே சிறப்பாகப் பேசப்படும் போது மற்றவற்றைக் கடைப்பிடிக்கா விட்டாலும் சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி விரதத்தையாவது கடைப்பிடித்தால் நாராயணனின் நல்லருள் நமக்குக் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

சொர்க்க வாசல் என்பதன் அர்த்தம்:
மார்கழித் திங்கள் உஷாக்காலத்தில் வைகுண்ட (ஆலய) வாசல்கள் திறந்தேயிருப்பினும்; பகவான் அதன் வழியே வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்டு ஏகாதசி ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்க வாசல் எனும் வடக்கு வாசல் திறந்திருக்கும் அதன் வழியே பகவான் எமக்கு அருள் மழை சொரிய வருகின்றார். அந்நேரமே சொர்க்க வாசல் திறப்பு விழா எனப்பெறுகின்றது.

தாலா ஜங்காசுரனுடனும் (முரன்) அவனது மகன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டுக் களைத்து ஒரு பெரிய குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தெய்வீகப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தன் ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது.

விஷ்ணு விழித்து நிலைமையை உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் அனைத்து நன்மைகளையும் தருவேன்” என வரம் அளித்து அச் சக்தியை மீண்டும் தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும், வரமும் பெற்ற இந் நாளில் நாமும் கண் விழித்து விரதத்தை அனுஷ்டித்தால் பரந்தாமனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நீங்காப்புகழுடன் அனைத்து ஐஸ்வரியங்களையும் பெற்று வாழலாம்.

வைகுண்ட ஏகாதசி திருமால் திருத்தலங்களில் கொண்டாடப்படுவதற்கு கூறப்பெறும் இன்னுமொரு காரணம்
ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த நான்முகனை அழிக்க மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர்.

அவர்களைத் தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் தங்கள் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசி அன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார்.

அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள்; மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கு ஆசி வழங்கினார். அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி விரத முறை:
ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் – லக்ஷ்மி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும்.

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.

துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள்.

மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாக தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே விளக்கேற்றி வைத்தால் மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிடைத்து மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். சீதேவி வீட்டினில் குடிகொள்ளும் போது எமக்கு கஷ்டமும் துன்பமும் தந்து வருத்தும் மூதேவி வெளியேறுவாள் என்பது ஐதீகம்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’ என்று வடமொழியிலும் மார்கழி என்று தமிழிலும் அழைக்கிறோம். இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப் பிதாமகராகத் திகழ்பவர் ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அந்நாளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின் ஜென்ம நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.

சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு அடுத்தபடியாக நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர்.

தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி அவர். மார்கழி மாதத்திற்கு உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார்.

தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக் கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நாம் அறிந்ததே. மார்க்கண்டேய சரித்திரம் மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவேதான் ”ம்ருத்யுஞ்ஜய ஹோமம்” செய்ய விவரம் அறிந்தவர்கள் மார்கழி மாதத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின் காரணமாகத்தான் அவரால் ஆண்டவன் அடி சேர முடிந்தது. அதே போன்று ராம நாம ஜபத் தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ் சநேயர் பிறந்ததும் மார்கழி மாத அமாவாசை நாளில். மார்கழி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுகிறோம்.

நாமும் வைகுண்ட ஏகாதசியில் நோன்பிருந்து சுவர்க்க வாயில் திறக்கும் போது வைகுண்டத்தில் இருந்து சுவர்க்க வாயில் வழியாக வருகை தரும் பரந்தாமனையும் இலட்சுமி தேவியையும் வழிபட்டு சகல ஐஸ்வரியங்களும் பெற்று இன்புற்று வாழ்வோமாக.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s