32 facts for contended life

Courtesy; Sri.GS.Dattatreyan

குறையொன்றுமின்றி நிறைவுடன் வாழ மறை உரைக்கும் முறை முப்பத்திரெண்டு
உம்
1. உரைக்கவல்லார்க்கும் நினைக்கவல்லார்க்கும் வைகுண்டம் ஆகும் தம்மூரெல்லாம் !
2. விஷ்ணு என்று சொன்னால் அது திருநாமம். "ௐ விஷ்ணவே நம:" என்றால் அதுவே மந்த்ரமாகிவிடுகிறது. ஆறு அக்ஷரங்களுடன் கூடிய உயர்ந்த மந்த்ரம் இது. ஒரு புஷ்பத்தை அல்லது துளஸி தளத்தை எடுத்து "ௐ விஷ்ணவே நம:" என்று அர்ச்சனை பண்ணிணோமானால் அந்த எம்பெருமான் பரமானந்தத்தை அடைகிறான்.
3. துளசியை ஜாக்கிரதையாக நகம் படாமல் க்ரஹிக்க வேண்டும். அவ்வாறு க்ரஹிக்கும்போது ‘துளசி! அமிர்த ஜன்மாஸி! சதாத்வம் கேஸவப்ரியே’ என்று சொல்லி க்ரஹிக்க வேண்டும்
4. புஷ்பத்தையோ, துளசியையோ எடுத்து ஹ்ருதயத்துக்கு நேரே வைத்து, இந்த என் ஹ்ருதயம் அமிர்தமயமானது, இந்த ஹ்ருதயத்தை உனக்கு சமர்ப்பிக்கிறேன், என்னையே உனக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அவன் திருவடியில் அர்ப்பணம் பண்ண வேண்டும்
5. அவ்வாறு அர்ப்பணம் செய்யும் பொழுது கீழ் வரும் ஸ்லோகத்தின் பொருளை நினைவுகூர்ந்து புஷ்பத்தை சேர்க்க வேண்டும்
அஹிம்ஸா ப்ரதமம் புஷ்பம்
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ:
ஸர்வ பூத தயா புஷ்பம்
க்ஷமா புஷ்பம் விசேஷத:
சாந்தி: புஷ்பம் தப: புஷ்பம்
ஞானம் புஷ்பம் ததைவச
சத்யம் அஷ்டவிதம் புஷ்பம்
விஷ்ணோ: ப்ரீதி கரம்பவேத்
6. சத்யம் பகவானுக்கு மிக உகந்த புஷ்பம். மனுஸ்ம்ருதி சொல்கிறது "சத்யமே பேசு. சத்தியத்தையும் ப்ரியமாக பேசு. உண்மையை புண்படும்படி சொல்லாதே, அதே சமயத்தில் ப்ரியத்தினால் கூடப் பொய்யைச் சொல்லாதே. இதுவே உன் தர்மமாக இருக்கட்டும்"
7. ‘விஷ்ணவே நம:’ என்று சொல்லி அர்ச்சிக்கும்போது மேலே சொன்ன எட்டும் நம்மிடம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உணர்ந்து அர்ச்சனை செய்தால் இந்த எட்டு விதமான புஷ்பங்களும் – அதாவது குணங்களும் நமக்கு வந்துவிடும்.
8. நாம் ஒரு புஷ்பத்தை கொடுக்கிறோம். ஒரு நாமாவை சொல்கிறோம். அவன் எட்டு மடங்காக திருப்பித் தருகிறான். அவ்வளவு காருண்யம் அவனுக்கு. இவ்வாறு பலன் என்னவென்று தெரிந்து கொண்டு அர்ச்சனை செய்கிறோம். பலன் கிடைக்கவில்லை என்றால் நிஷ்டை போறவில்லை என்று அர்த்தம். மீண்டும், மீண்டும் பலன் சித்திக்கும்வரை நிஷ்டையுடன் முயற்சி செய்ய வேண்டும்.
9. வியாஸ மஹரிஷி கொடியதென்று சொல்லக்கூடிய கலியுகத்தை ‘சாது’ என்கிறார். ஏனென்றால், சுத்தமான மந்தரோச்சாரணத்தை மனம் லயித்துக் கேட்டால், ஒரு அசுவமேத யஜ்ஞம் செய்தால் பெறக்கூடிய பலனை இந்த கலியுகத்தில் பெற்றுவிடலாம். இவ்வளவு சுலபமான முறையில் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது ‘மனம் லயித்து’ என்பது!
10. மனம் லயிக்க வேண்டுமென்றால் ப்ராணாயாம பலம் இருக்க வேண்டும். ப்ராணாயாமம் என்பது மூச்சை இழுத்து வெளியிடும் பயிற்சி என்று எளிமையாக சொல்லலாம். ஆனால், இழுத்த மூச்சை உள்ளே தேக்கி வைக்கிற காலம் (நேரம்) மிகவும் முக்கியம். அந்த நேரம் அதிகமாகிக்கொண்டே வரவேண்டும். அப்பொழுது மனம் கட்டுப்படும்.
11. மல்லிக்கொடி மாதிரி ஆடுகிற மனத்தை ப்ராணாயாமத்தில் நிருத்தி, எம்பெருமான் என்கிற அந்த கொம்பில் அதாவது அவன் திருவடியில் கொண்டு சுற்றி விட்டு விட்டால் அது பற்றிக்கொண்டு படரும்.
12. ஸ்த்ரீகளும் ப்ராணாயாமம் செய்யலாம். மந்திரம் கூறி செய்யாமல், ஸ்லோகம் மூலம் பயிற்சி செய்யலாம். ராம மாதா கௌஸல்யா தேவி ப்ராணாயாமம் செய்திருக்கிறாள். அவள் பெற்ற பலன் உயர்ந்தது.
13. அவ்வாறு ப்ராணாயாம பலத்துடன் மனம் லயித்து அவனைப் பெற எட்டினால் எல்லாமே கிட்டி நிற்க்கும். எட்டினால் எட்டாததே கிடையாது.
14. எட்டு என்பது பகவான் நாமாவான "ௐ நமோ நாராயணாய" என்பதைக் குறிக்கிறது. எதையெல்லாம் அது தருகிறது என்று கேட்டால்,
குலம் தரும் செல்வம்தந்திடும்
அடியார் படுதுயராயினவெல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வளம் தரும் மற்றும் தந்திடும்
பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம் ||
15. நாராயணா என்னும் நாமம் மோக்ஷத்தையே வாங்கிக்கொடுக்கும்
16. இந்த சரீரத்தில் நாம் மோகம் வைக்ககூடாது. ஆதிசங்கரர் சொன்னதை நாம் அப்படியே மனதிலே எழுதிக்கொள்ள வேண்டும்.
அதாவது " யார் மோக்ஷத்திற்க்கு அதிகாரி?"
"எவனொருவன் உயிரோடு இருக்கும்பொழுதே தன் சரீரத்தை பிணமாக நினைக்கிறானோ, அவனே மோக்ஷத்திற்க்கு அதிகாரி!"
17. நம் உள்ளுக்குள்ளே பரமாத்மா எழுந்தருளியிருக்கிறான். எங்கும் ப்ரவேசிக்ககூடியவன் நமக்குள்ளேயும் இருக்கிறான், அசேதனங்களுக்குள்ளேயும் இருக்கிறான் என்கிற உயர்ந்த ஸாஸ்த்திரத்தை உணர வேண்டும்
18. நமக்குள்ளே இருப்பவனை ஆசார்யர்களால் கொடுக்கப்பட்ட மந்திரத்தின் மூலமாக பார்க்கலாம்.
19. ஒரு மந்திரத்தை நாமாக எடுத்து புத்தகத்தில் படித்து மனப்பாடம் பண்ணக்கூடாது. அதை அவ்வாறு மனப்பாடம் செய்து ஜபம் பண்ணிணால் ஒருநாளும் பலனைக் கொடுக்காது. ஆசார்யனிடத்தில் சென்று அடிபணிந்து அவர் உபதேசம் பண்ணிய பிற்பாடுதான் அந்த மந்த்ரத்தை நாம் அனுஷ்டானத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
20. மந்திரத்தினிடத்திலும், மந்திரத்தின் உள்ளீடான தேவதையினடத்திலும், அம்மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனிடத்திலும் சமமான பக்தி நமக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் அது சித்தியை கொடுக்கும். அதாவது பூர்ண பலனை கொடுக்கும்.
21. காயத்ரீ மந்த்ரத்தை யார் நன்றாக கானம் பண்ணுகிறார்களோ, அவர்களை அம்மந்திரம் ரக்ஷிக்கிறது. அஷ்டாக்ஷரம் அவ்வாறே ரக்ஷிக்கும். புருஷர்கள் காயத்ரியை சொன்னபின் அஷ்டாக்ஷரம் சொல்ல வேண்டும்.
22. ப்ரணவத்தை க்ருஹஸ்தர்கள் தனியாக உச்சரிக்ககூடாது. மந்திரத்துடன் சேர்த்து உச்சரிக்கும்பொழுது மூன்று மாத்திரையிலே உச்சரிக்க வேண்டும். ஸ்த்ரீகள் ப்ரணவத்தை ‘அம்’ என்று உச்சரிக்க வேண்டும்.
23. சாஸ்திரத்தை மீறி, தனக்கு தோன்றியபடி ஒருவன் காரியம் செய்வானேயானால் அவனுக்கு சித்தி ஏற்ப்படாது. இது பகவானுடைய வாக்கு.
24. பகவானுக்கு கோபத்தை வரவழைக்காமல் நாம் சாஸ்த்திர வழியோடு வாழ வேண்டும்.
25. ஆயிரம் தாய் தந்தையரின் அன்பைக் காட்டிலும் மேலானது சாஸ்த்திரம் நம்மீது காட்டும் அன்பு.
26. சாஸ்த்திரம் தவறாமல் வாழ்கிறவனை நோக்கி எல்லா நலன்களும் பலன்களும் ஓடி வருகின்றன. அவன் செல்கின்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்ப்படும்.
27. நமது ஸம்பிரதாயத்தில் ஞானத்தைக் காட்டிலும் ஆசாரத்திற்க்கும் அனுஷ்டானத்திற்க்கும் விசேஷ கௌரவம் தரப்படுகிறது.
28. ஒருவர் ஆசாரமாக இருந்து அனுஷ்டித்தால்தான் மற்றவர்கள் அனுஷ்டிப்பார்கள். இல்லையென்றால் ‘அவரே அனுஷ்டிக்கவில்லை, நான் எதற்க்கு அனுஷ்டிக்கவேண்டும்’ என்று கேட்பார்கள்.
29. அனுஷ்டானத்தில் ஸூரியனை பார்ப்பது மிகவும் முக்கியம். ஸூரியனை யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்கள். ஆகையால், நாம் ஸூரியன் உதிப்பதற்க்கு முன் எழுந்து அவன் வருவதை எதிர் நோக்கி வணங்கவேண்டும்.
30. பகவான் ராமாவதாரத்திலே ஸூரிய குலத்திலே உதித்தான். க்ருஷ்ணாவதாரத்திலே ஸூரியனை முதலில் பார்க்கும் குலத்திலே வளர்ந்தான்.
31. அப்படிப்பட்ட ஸூரியனை தனது வலது நேத்ரமாக உடையவன் லக்ஷ்மிந்ருஸிம்ஹன்!
32. ஓம்காரத்தில் முதலாவதாக வரும் அகார ரூபமாய் விளங்குபவன், ஸூரியனை நேத்ரமாக உடையவன், உம் என்கிற அக்ஷரத்திலே உறைபவன், அடிபணிந்தவர்களுக்கு அபய வரதனாய் இருப்பவன் நம் மட்டபல்லி லக்ஷ்மிந்ருஸிம்ஹன். அவனை இந்த ரோஹிணி நன்நாளிலே போற்றி உகப்போம்!!!
~o~o~o~o~o~o~ சுபமஸ்து. மங்களம் மஹதே

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s