Thiruvavaduthurai temple


சிவாயநம.திருச்சிற்றம்பலம்
*கோவை கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *தலத் தொடர் 54.*🍁
🍁 *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.* 🍁
(நேரில் சென்று தரிசித்ததைப் போல…..)
■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *திருவாவடுதுறை.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*புராண பெயர்கள்:*
நந்தி க்ஷேத்திரம், அரசவனம், கோகழி, துறைசை, மகா தாண்டவபுரம், கோமுத்தித் தலம், சித்தபுரம், நவகோடி சித்தபுரம், சிவபுரம், பிரமபுரம், தருமபுரம் என்பன.

*இறைவன்:*
மாசிலாமணீசுவரர், கோமுத்தீசுவரர்.

*இறைவி:*
ஒப்பிலா முலையம்பிகை, அதுல்ய குஜாம்பிகை.

*தல விருட்சம்:*படர் அரச மரம்.

*நந்தி:* தரும நந்தி.

*விநாயகர்:*துணைவந்த விநாயகர்.

*சபை:*போதியம்பலம் எனும் அரசம்பலம்.

*தீர்த்தம்:* கோமுத்திதீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள நூற்று இருபத்தெட்டு தலங்களுள் இத்தலம் முப்பத்து ஆறாவது தலமாக போற்றப் பெறுகின்றது.

*கோவில் அமைப்பு:*
இக்கோயில், ஏறக்குறைய பத்து ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது.

முதலில் ஆலயத்தை நோக்கிச் செல்லும்போது ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கண்கள் காணவும் *சிவ சிவ* என மொழிந்து, கோபுரத்தரிசன புண்ணியத்திற்காக வணங்கித் தொழுது கொண்டோம்.

தைத்தில் மூன்று பிராகாரங்கள் இருக்கின்றது. வடக்குப்புற
நுழை வாயிலில், புதிதாக மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது.

கோயிலுக்கு எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது.

பசுவான உமைக்கு துணைக்கு வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள் இருக்க வணங்கினோம்.

இரண்டாம் கோபுர வாயிலில் பெரிய நந்தியை பார்த்தோம் வணங்கினோம்.

பின்னால் உள்ள பலிபீடமே சம்பந்தருக்கு பொற்கிழி அளித்த இடம்.

அம்பாள் சந்நிதிக்கு வந்தோம். அவள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் காட்சியருள் புரிந்ததை நின்று நன்றாக வணங்கி நகர்ந்தோம்.

தியாகேசர் கோவில் இருக்கிறது. தியாகேசர், செம்பொன் தியாகசர், புத்திரத் தியாகேசர், சொர்ண தியாகேசர் மூர்த்தங்கள் உள்ளன.

திருமாளிகைத் தேவர் வாழ்ந்த இடமே ஆதீனமாகச் சொல்லப்படுகிறது.

திருமாளிகைத் தேவர் ஆலயம் உள்ளது. இவற்குப் பக்கத்தில் நமசிவாய மூர்த்திகள் கோவில் உள்ளது.

இவருக்கு பூசை நடைபெற்ற பின்னரே திருமடத்தில் நமசிவாய மூர்த்திக்கு பூசை நடைபெறுவது வழக்கமாம்.

கோவிலின் மேற்குப் பிராகாரத்தில் திருமூலர் சந்நிதி உள்ளது.

ஆதீனமும் கோவிலும் அடுத்தத்தாக இருக்கிறது.

*இருப்பிடம்:*
மயிலாடுதுறையில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறை -கும்பகோணம் இரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.

மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை
வழியில் உள்ள திருவாலங்காடு
என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.

*பெயர்க்காரணம்:*
பசுக்கள் கூட்டமாக வந்து இளைப்பாறவும், மேயவும் வசதியான வசதியான காவிரியாற்றுத் துறை என்பதால் திரு+ஆ+அடு+துறை என்று தலப்பெயர் அமைந்தனவாம்.

*தேவாரம் பாடியவர்கள்:*
*சம்பந்தர்* 3-ல் ஒரே ஒரு பதிகமும்,
*அப்பர்* 4-ல் இரண்டு பதிகமும், 5-ல் ஒரு பதிகமும், 6-ல் இரண்டு பதிகமும்,
*சுந்தரர்:*7-ல் இரண்டு பதிகமும் ஆக மொத்தம் இத்தலத்திற்கு எட்டு பதிகங்கள்.

*மூர்த்திச் சிறப்பு:*
சுயம்பு மூர்த்தியாக விளங்கிடும் இவ்வாலயத்தின் மூலமூர்த்தி கோமுக்தீசுவரர் என அழைக்கப்படுகின்றார்.

*அம்பாள்:* ஒப்பில்லாமுலைநாயகி ஆவார்.

இவ்வாலயத்தின் மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் *துவைதளம்* என அழைக்கப்படுகின்றது.

துணை வந்த கணபதி என்ற திருநாமத்துடன் இவ்வாலயத்தில் விநாயகர் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

*திருமூலர்:*
திருமூலர் திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது.

*கோயிற் சிறப்புகள்:*
சிவபக்தரான திருமாளிகை தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோயில் மதில் மீது நந்திகள் கிடையாது.

சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது.

திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்.

தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்திதான் இங்கிருப்பவர்.

இவரது உயரம் பதினான்கு அடி ஒன்பது அங்குலம் ஆகும். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோயில் ஒரே கல் நந்தியின் உயரம் பன்னிரண்டு அடி).

தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்

*தலத்தின் சிறப்பு:*
சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் இடர் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன்.

பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள். இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன்.

அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார்.

"கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்

திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாத இருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென சிவபாத இருதயர் விரும்பினார். எனவே யாகத்திற்கு வேண்டிய பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார். சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி *இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்* என்று தொடங்கும் பதிகம் பாடினார்.

சிவன் பூதகணங்கள் மூலமாக, எடுக்க எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தின் அகன்ற பீடத்தில் வைக்கச் செய்தார். பொன் பெற்ற சிவபாத இருதயர் சீர்காழிக்கு சென்று யாகத்தை நடத்தி முடித்தார்.

பொற்கிழி வைக்கப்பட்ட இந்த பலிபீடம் வெளிப் பிரகாரத்தில் நந்திக்கு அருகில் இருக்கிறது. இந்த பலிபீடத்தை, நாங்கள் அவசியம் பார்த்து வணங்கிக் கொண்டோம். நீங்களும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்பலி பீடத்தைச் சுற்றிலும் பொற்கிழி கொண்டு வந்த பூதகணங்கள் இருக்கிறது. இங்கிருந்து சிவனிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத்தேவர் போகரின் சீடராவார். இவர் இத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார். ஒருசமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான்.

திருமாளிகைத் தேவர், நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவாவடுதுறை. இன்றும் இவ்வாலயத்தின் மதில்களில் நந்திகள் இல்லாதிருப்பதைக் காணலாம்.

முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும் காட்டிய சிறப்பும் உடையது இத்தலம்.

புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்த முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒருசமயம் சிவன் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி இங்கு வந்து சிவனை வணங்கி புத்திரப்பேறு பெற்றார் முசுகுந்தன். எனவே, புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார்.

பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இத்தலத்தில் தவம் செய்யத் துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார்.

இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் மூவாயிரம் பாடல்களை பாடினார். இவையே திருமூலர் திருமந்திரமாக தொகுக்கப்பட்டது.

இத்தலத்தின் வெளிப் பிரகாரத்தில் திருமூலருக்கு சன்னதி இருக்கிறது.

சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியாகேசர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் இத்தலத்தின் உற்சவ மூர்த்தியான அணைத்தெழுந்த நாயகர் இருக்கிறார். இவர் அம்பாளை அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார்.

பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வந்து வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை. அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தியுள்ளது. இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும்.

பலீபீடத்தின் நான்கு புறமும் பூதகணங்கள் தாங்கி நிற்கின்றன.

இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் வரும் போது, அப்பீடத்தினின்று தமிழ்மணம் கமழ்வதை உணரப்பெற்றார்.

உடனே பீடத்தின் கற்களை பெயர்க்கக் கூற, அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.

பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது.

நாம் சென்றிருந்த வேளை பிரதோஷ வேளையாக இருந்ததால், இவருக்கு மகாஅபிஷேகம் நடந்தது. அபிஷேகத்தைக் கண்டு ஆனந்தித்தோம்.

திருவிடைமருதூர் தலத்திற்கான பரிவாரத் தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக் கொள்வது மிக மிக விசேஷம்.

சிவன் இத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம்.

தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றதும் இத்தலத்தில் தான்.

திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பதும் இத்தலத்தில் தான்.

கயிலாயத்தில் இருந்த குரங்கு ஒன்று, மகாசிவராத்திரி அன்று வில்வ இலைகளை பறித்து கீழே எறிந்து கொண்டிருந்தது. அப்படி எறிந்த வில்வ இலை அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது பட்டு பட்டு விழுந்தது. இதனால் இறைவன் பெருமகிழ்ச்சியுடன் அந்த குரங்கிற்கு முக்தியளித்து அடுத்தப் பிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாகப் பிறப்பாய் என வரமருளினார்.

அதற்கு குரங்கு, இறைவனின் திருவடியைப் பணிந்து, *‘நான் சக்கரவர்த்தியானாலும் குரங்கின் முகமும், இறைவனைப் பற்றிய சிந்தனையும் எப்போதும் என்னுடன் இருக்க அருள வேண்டும்’* என வேண்டிக் கொண்டது. குரங்கின் விருப்பத்தை இறைவனும் நிறைவேற்றி ஆசி வழங்கினார்.

வலாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கு மிக்க துன்பம் கொடுத்து வந்திருக்கிறான். இந்திரனையே போரில் வென்றான். இதனால் வானுலகை விட்டு இந்திரன் பூமிக்கு வந்தான்.

இதையறிந்த முசுகுந்தன் பெருஞ்சேனையுடன் சென்று வலாசுரனை அழித்து, கற்பக நாட்டை மீட்டு இந்திரனுக்கு அளித்தார். தனக்கு உதவி செய்த முசுகுந்தனை பாராட்டிய இந்திரன், *‘உனக்கு தேவையானதைக் கேள். உடனே தருகிறேன்’* என்றான்.

முசுகுந்தன், *‘மயன் உனக்கு அளித்த தியாகேசமூர்த்தியை எனக்கு தர வேண்டும்’* என கேட்டார்.

அதைக்கேட்டு திடுக்கிட்ட இந்திரன், ‘கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது’ என நினைத்தான்.

உடனே மயனை அழைத்து, மேலும் ஆறு விடங்கேசர் திருஉருவங்களைத் தயாரிக்கச் சொன்னான். இவற்றை முசுகுந்தனிடம் இந்திரன் வழங்க, இறைவன் திருவருளால் உண்மையான திருவிடங்கேசரை அடையாளம் கண்டு அதைக் கோரினார் முசுகுந்தன். இந்திரனோ அனைத்து விடங்கேசரையும் கொடுத்தனுப்பினான்.

பூமிக்கு அவற்றைக் கொண்டுவந்த முசுகுந்தன், திருநாகைக்காரோணம், திருக்கோளிலி, திருவாய்மூர், வேதாரண்யம், திருநள்ளாறு, திருகாரவாயில் ஆகிய ஆறு இடங்களில் கோயில் அமைத்து எழுந்தருளச் செய்தார். பின்னர் வீதி விடங்க திருவாரூரில் பொற்கோயில் உருவாக்கி தியாகேசரை இறைவியோடு பீடத்தில் எழுந்தருளச் செய்து ஆகம முறைப்படி ஆறு கால பூஜையையும், விழாக்களையும் நடத்தினான். இப்படி சிறப்பாக ஆட்சி செய்து வந்த முசுகுந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் விடங்க தியாகேசர் சந்நதிக்கு சென்று தன் மனக் குறையை தெரிவித்தார்.

புத்திர பாக்கியம் அருளி, தன்னை சிவபக்தர்கள் கூட்டத்தில் சேர்த்து ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டினார். அன்று இரவு முசுகுந்தன் கனவில் தோன்றிய இறைவன், *‘‘திருவாரூரில் உள்ளதைப் போலவே, திருவாவடுதுறையிலும் நான் உள்ளேன்.* அங்கு சென்று பணி செய்து வா! அப்படி செய்யும் காலத்தில் புத்திரனை பெற்று மகிழ்வாய்’’ என்றருளினார். மறுநாள் முசுகுந்தன் சேனைகளுடன் கோமுக்தி தலத்திற்கு வந்து, தீர்த்தத்தில் நீராடி மாசிலாமணிப் பெருமானின் சந்நதிக்கு வந்தார். அப்போது இறைவன் திருவாரூரிலுள்ள வன்மீக லிங்கமாக முசுகுந்தனுக்கு காட்சி கொடுத்து அசரீரியாக அறிவித்தார்: *‘முசுகுந்தா!* உனக்கு புத்திரப்பேறு அளித்தோம். உனக்கு ஞானத்தை பின்னர் தருவோம். அதுவரை இங்கேயிருந்து நம்மை பூஜித்து வருவாயாக.’

ஆனந்தம் கொண்ட முசுகுந்தன் அத்தலத்திலேயே தங்கியிருந்து, திருவாவடுதுறையை காவல்புரியும் சாஸ்தா, காளி முதலான கிராம தேவதைகளுக்கு பத்து நாள் திருவிழா நடத்தினார். மாசிலாமணி பெருமானுக்கு பத்து நாள் திருவிழா. அதில் ஐந்தாம் நாள் திருநடனம், ஒன்பதாம் நாள் தேரோட்டம், பத்தாம் நாள் தீர்த்தவாரி.

இறைவன் திருவருளால் முசுகுந்தனுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. மூத்த மகனுக்கு பட்டாபிஷேகம் செய்து ஆட்சியை ஒப்படைத்தார். பின்னர், இறைவனின் திருவடியில் கருத்தைச் செலுத்தி இறைவனடி சேர்ந்தார்.

கோயிலின் முன்புள்ள முக்தி தீர்த்தத்தில், அமாவாசை, பிரதோஷம், அஷ்டமி, உத்திராயணம், தட்சிணாயணம், சோமவாரம், செவ்வாய்க்கிழமை, பிரமோற்சவ காலங்களில் நீராடினால், வேண்டிய வரங்களை பெறலாம் என தலபுராணம் கூறுகிறது.

*திருவிழாக்கள்:*
புரட்டாசியில் பிரம்மோற்சவம்- விழாவில் ஒரு நாளில் திருமூலர் நாடகமும், ஆரியக் கூத்தும் நடக்கும்.
மார்கழித் திருவாதிரை. சிவராத்திரி, அன்னாபிஷேகம்.

*பூஜை:*
காமீக ஆகம முறையில் நான்கு கால பூஜை.

காலை 7-00மணி முதல் 12.00மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு, மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருவாவடுதுறை அஞ்சல், (வழி) நரசிங்கன் பேட்டை,
மயிலாடுதுறை RMS,
நாகை மாவட்டம்- 609 803

*தொடர்புக்கு:*
திருவாவடுதுறை ஆதீனம்.
மேலாளர்.04364- 232055,
94439 00408

திருச்சிற்றம்பலம்.

*நாளைய தலம்….திருத்துருத்தி.*

*முக்தி பேறு கிடைக்க வேண்டச் செய்யும் நீங்கள், அடியார்களுக்குத் தொண்டு செய்திருக்கிறீர்களா? ஆலயத்துக்குத் தொண்டு சேய்திருக்கிறீர்களா? அப்படியில்லையெனில் அத்தொண்டுகளை முதலில் செய்யத் துவங்குங்கள், ஏனெனில் "முக்தி, தொண்டின் தர்மத்தின் மூலதானம்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு சேய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s