Nagaswara chakravarti Sri.T.N.Rajaratnam Pillai

Courtesy:Sri.J.K.Sivan

நாதஸ்வர சக்ரவர்த்தி

அறுபது எழுபது வருஷங்களுக்கு முன்பு T .N .R என்ற சொல்லுக்கே தனி மதிப்பு, மரியாதை. கௌரவம். பெருமை. புகழின் உச்சாணிக் கிளையில் அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் வீற்றிருந்தார். அவர் யார்? நடிகரா, எழுத்தாளரா, சாமியாரா, பாடகரா, இல்லை. ஒரு வாத்தியக்காரர். மற்றவர் கையில் இருந்த குழலுக்கும் அவர் கையில் இருந்த குழலுக்கும் இருந்த வித்யாசம் அவர் செலுத்தும் காற்றின் பரிமாணம். அது ஒலியாக வெளியேறி பல சங்கீத தேவதைகளை வெளியே அனுப்பி எதிரே இருப்பவர்கள் கேட்பவர்களின் செவியில் தேனாக புகுந்து அவர்களை நாகபாசம் போல் கட்டுண்டு அசைவற்ற பொம்மையாக்கியது.

யார் இந்த T .N .R ? திருமருகல் நடேசபிள்ளை ராஜரத்தினம் பிள்ளை. 1898-1956 என்ற கால அளவில் 58 வருஷங்கள் வாழ்ந்த ஒரு அபூர்வ அமரர். இசையுலக சக்கரவர்த்தி. நாதஸ்வர சக்ரவர்த்தி. ஐந்து முறை கல்யாணம் பண்ணிக்கொ ண்டும் வாரிசு இல்லாத ராஜா.

நாதஸ்வர கலைஞர்களை அப்போதெல்லாம் மக்கள் ரசித்தார்களே தவிர அவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த இடம் கிடைக்கவில்லை. சாதாரண வேட்டி இடுப்பில் ஒரு துண்டு கழுத்தில் சில சங்கிலிகள், சிலருக்கு குடுமி, காது கடுக்கன், நெற்றியில் விபூதி பட்டை, கழுத்தில் ருத்ராக்ஷம் தான் அவர்கள் அலங்காரமாக இருந்தது. கோவிலில் தான் அதிகம் காணப் பட்டார்கள். சுவாமி ஊர்வலத்துக்கு நடந்து கொண்டே வாசித்தார்கள். கல்யாணங்களில் ஒரு ஓரமாக அமர்ந்து கையை உயர்த்தி ஜாடை காட்டிய பொது சங்கீதத்தை நிறுத்தி பீ பீ என்று உரக்க சப்தம் செய்வார்கள். தவில் டமடம என்று வானைப் பிளக்கும். அது ஒலித்தால் தாலி கட்டும் நேரம் என்று புரிந்து விடும். இசையைக் காட்டிலும் ஓசையே அதிகம். இதற்கு விதி விலக்கு ராஜரத்தினம் பிள்ளை. பட்டு சட்டை, கால் சட்டை, வட இந்திய உடைகள் எல்லாம் போட்டுக்கொண்டு மினுமினுத்தார். அலங்கார பிரியர் மட்டும் அல்ல ஆணவக்காரரும் கூட. சுய கவுரம் முக்கியம் அவருக்கு. ஆறுமணிக்கு கச்சேரி என்றால் 7 மணிக்கு தான் ஆரம்பிப்பார். நடுவில் எந்த இடையூறும் கூடாது. இருந்தால் யாராயிருந்தாலும் கவலை இல்லை. உடனே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார். மீண்டும் அவரைப் பிடிப்பது துர்லபம். அவர் வந்து வாசித்து விட்டால், அந்த ரெண்டு மூன்று மணி நேரம் அவர் இசையைக் கேட்பவன் நிச்சயம் கிராமத்தில் இல்லை. தேவலோகத்தில் கந்தர்வர்களோடு இருப்பான்.

சங்கீதம் பயின்றது திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யரிடம். நாதஸ்வர குரு அம்மா சத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை. திருவாடுதுறை ஆதீனம் அவரை ஆதரித்து கோவில் வித்வானாக அங்கீகரித்தது. பிள்ளையின் பூபாளத்தை கேட்கவே கோவிலில் காலை வேளையில் வெள்ளம்போல் மக்கள். நாடெங்கும் புகழ் பரவியது. மதராஸில் சினிமா டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன் 1940ல் பிள்ளையை கதாநாயகனாக வைத்து காளமேகம் என்று படம் ஒன்று தயாரித்தார். சினிமா புகழைவிட நாதஸ்வர சக்ரவர்த்தி என்ற புகழே அவருக்கு புகழ் சேர்த்தது. தோடி ராகம் அவரை தத்து எடுத்துக் கொண்டது. அவரது தனிச் சொத்தானது.

பெரிய பெரிய மிராசு மிட்டாதார்கள் குறுநில பிரபுக்கள் ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர கச்சேரியை வைத்தால் தான் தங்கள் வீட்டு கல்யாண வைபவங்களுக்கு கௌரவம், புகழ் பெறும் என்று அவர் பின்னே அலைந்தார்கள். கேட்டதை கொடுத்தார்கள்.

சுட்டுப்போட்டாலும் சங்கீதம் தெரியாத ஒரு பணக்கார நாட்டுக்கோட்டை
செட்டியார் பிள்ளையின் கச்சேரியை ஏற்பாடு செய்து விட்டார்.

நிறைய கூட்டம். கச்சேரி முடிந்தது. எல்லோர் எதிரிலும் சன்மானம் கொடுத்தபோது நாலு பேர் எதிரே தனது சங்கீத ஞானத்தை வெளிப்படுத்திக் கொள்ள ஆசைப்பட்டு பிள்ளையிடம் ”உங்கள் கச்சேரி அபாரம் அபாரம். ஆனால் எனக்கு ஒரு குறை ” என்கிறார்.

மூன்று மணிநேரம் பிள்ளை சங்கீத தேவதையை அங்கே ஆடவிட்டு எண்ணற்ற ரசிகர்கள் மனம் நிரம்ப இதயம் குளிர அவரது சகல ராக ஆலாபனைகளையும் கேட்டு திளைத்திருந்தார்கள். அதிலும் தோடி அதிக வரவேற்பு பெற்றிருந்தது. பாவம் செட்டியாருக்கு என்ன தெரியும்?. ஆகவே பிள்ளை திகைத்துப் போய்

”அடடா செட்டியார்வாள் என்னை வரவழைத்து கவுரவித்து நிறைய பரிசு கொடுத்தீர்கள். அப்படி என்னை திருப்தி படுத்தியும் நான் உங்களுக்கு என் சங்கீதத்தில் என்ன குறை வைத்துவிட்டேன் என்று தெரியவில்லையே” என்கிறார்.

”இன்று எனக்கு பிடித்த தோடியை பாடுவீர்கள் என்று ஆவலாக எதிர்பார்த்தேன்…” என்றார் செட்டியார். பிள்ளைக்கு தெரிந்து போய்விட்டது செட்டியாரின் சங்கீத ஞானம் எவ்வளவு என்று.

சபையில் அருகே இருந்த அத்தனைபேருக்கும் ஒருபக்கம் ஆச்சர்யம். அதே சமயம் எவ்வளவு ஞானசூன்யம் இந்த செட்டியார் என்று கேலி சிரிப்பு. வெளியே காட்டிக் கொள்ளாமல் பிள்ளையின் பதிலுக்கு காத்திருந்தார்கள்.

பிள்ளை சாதாரணம் இல்லை. விஷமக்கார பிள்ளை. பலே கிண்டல் பேர்வழி.
நாசூக்காக சொன்னார்……..

”செட்டியார் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிற பாணியில், ”செட்டியார் என்னை தயவு செயது மன்னித்து விடுங்கள். உங்களது அபார சங்கீத ஞானம் பற்றி ஊரிலிருந்து கிளம்பும் முன்பே கேட்டறிந்து ஜாக்கிரதையாக வாசிக்க வேண்டுமே என்ற கவலையில் புறப்பட்டேனா. வரும் அவசரத்தில் கவலையில், பிரத்யேகமாக உங்களுக்கு என்று இங்கு வாசிக்க எடுத்து வைத்த அந்த தோடி பாடும் நாதஸ்வரத்தை கொண்டுவர மறந்து போனேன். இங்கு வந்தபிறகு தான் தெரிந்தது எனது தவறு. எப்படியோ ஒரு வழியாக சமாளித்து மீதி பாட்டு எல்லாம் பாடினேன். தோடி பாடும் அந்த நாதஸ்வரம் இல்லாததை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களே. இந்த தவறை இனி செய்ய மாட்டேன்.” என்றதும் எல்லோரும் வாய் விட்டு சிரித்தனர். செட்டியாரோ தான் எப்படி பிள்ளையின் தவறுதலை கண்டுபிடித்துவிட்டோம் என்று அவர்கள் மகிழ்வதாக தானும் சிரித்ததுடன்

”அதனால் என்ன பிள்ளைவாள், மறதி எல்லாருக்கும் ஏற்படுவது தானே” என்று பெருந்தன்மையாக சொன்னார்.

பிள்ளையின் சிஷ்யர்களில் சிலர் குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாச்சலம், திருவாரூர் லட்சப்பா ஆகியோர். அவருக்கு தவில் வாசித்தவர்களில் ஒருவர் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. வயலினைக் கூட பக்கவாத்யமாக கொண்டு வாசித்திருக்கிறார் பிள்ளை. எத்தனையோ பட்டங்கள் விருதுகள் சங்கீத கலாநிதி உட்பட பெற்றவர்.

ஒரு தெய்வீக சங்கீதம் அவரிடமிருந்து கிடைத்தது.

ஒரு சின்ன விஷயம் சொல்லி முடிக்கிறேன்.

ஒருமுறை மஹா பெரியவா தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்தபோது மாயவரத்தில் பட்டண பிரவேசம். யானை, குதிரை ஊர்வலம்.பெரியவா பல்லக்கு தருமபுரம் மடம் வழியாக வரும்போது பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார். பண்டார சந்நிதி அவரை கெüரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். அப்புறம் ஊர்வலம் மயிலாடுதுறைக்குள் நுழைந்தது..

கப்பல் போன்ற தனது பெரிய ஸ்டுடிபேக்கர் மோட்டார் காரில்தான் பிள்ளை பயணிப்பார்.வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை வந்து கொண்டிருந்தார். மாயவரம் காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக மோட்டார் கார் சென்றபோது கூட்டம் கண்ணில் பட்டது..

டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு "என்ன விசேஷம் இங்கே ?’ என்று கேட்டார்.

”காஞ்சி பரமாச்சார்யார் பட்டணப் பிரவேசம் வரார். ஊர்வலம் அடுத்த தெருவுக்குள் வந்து விட்டது.

”நிறுத்து வண்டியை. பிள்ளை சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார். காற்றில் அலை அலையாக சங்கீத தேவதைகள் பறந்து வரவேற்றார்கள்.

"இது ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ’ . பல்லக்கு காரர்களுக்கு கட்டளையிட்டார் மகா பெரியவா.

பட்டண பிரவேச ஊர்வலம் மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! பரம சந்தோஷம். உற்சாகத்தோடு அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் அனைவருமே சிலையானார்கள். தெய்வ சங்கீத ஆக்கிரமிப்பில் திளைத்தார்கள். நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே தான்.

”இந்தாங்கோ பிரசாதம் ”. மெய்மறந்து கேட்டு ரசித்த பெரியவா கையிலிருந்து ஒரு சாத்துக்குடி பழம் ஆசிர்வாதமாக பிள்ளையின் கைகளை அடைந்தது. சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்த அந்த நாகஸ்வர சக்ரவர்த்தி கண்களில் நீர் பனிக்க நா தழுதழுக்க "இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!’ என்றார்.

THE ATTACHED LINK IS A THODI ALAPANAI RECORDED DECADES AGO
https://www.youtube.com/watch?v=wJqbyKPVLlM

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s