GURU- Mahaperiyavaa

Courtesy: Sri.Mayavaram Guru

""குரு என்பவர் யார்?"" – மஹா பெரியவாளின் அற்புதமான விளக்கம்

aacgarya.jpg
சாந்தோக்ய உபநிஷத்தில்தான் ”தத்வமஸி” என்ற மஹாவாக்கியம் வருகிறது.
” நீயேதானப்பா அந்த பிரம்மமாயிக்கிறாய் என்று ச்வேதகேதுவுக்கு அவனுடைய பிதா உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை செய்த உபதேசம் அது.

தத்-த்வம்-அஸி = ”தத்” என்பது பரமாத்மாவான பிரம்மம்; ”த்வம்” என்பது ஜீவாத்மா; ”அஸி” என்றால் இருக்கிறாய். பரப் ரம்மமாக இருக்கிறாய் – என்றைக்கோ ஒருநாள் அல்ல! எதிர்காலத்தில் இல்லை; இப்போதும் எப்போதும் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனிமேலே தான் பிரம்மமாக வேண்டும் என்பதில்லை.

அப்படியானால் ஸாதனை எதற்கு? பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து கொள்ளவில்லையே! தெரிந்தால் இத்தனை அழுகை, இத்தனை காமம், கோபம், இத்தனை பயம் நமக்கு இருக்கவே இருக்காதே! அலையே எழும்ப முடியாமல் ஆகாசம் வரை முட்டிக் கொண்டு நிற்கிற ஆனந்த சமுத்திரமாக அல்லவா இருப்போம்?

எனவே ”நீ எப்போதும் பிரம்மம் தானப்பா” என்றால் எப்படி? அதைப் புரிய வைக்க ஒரு கதை: நமது வாழ்க்கையே எதாவது ஒரு கதையை நம்பி தானே நடக்கிறது. ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத் பாதாள், சிலந்தி தன்னிலிருந்தே நூலை இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும் , ஆத்மாவிலிருந்தே
அத்தனை பிரபஞ்சமும் தோன்றியிருக்கிறது எனகிற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தாரமாக அர்த்தம் பண்ணிக்கொண்டு போகிறபோது, இந்தக் கதை வருகிறது.

ஒரு ராஜகுமாரன் அவனது அப்பா அம்மா எதிரி ராஜாவின் படையெடுப்பில் கொல்லப்பட்டதால், உயிர் தப்பி மந்திரியால் காட்டில் வேடர்கள் பகுதியில் குழந்தையாக விடப்பட்டு இளம் வயதில் வேடர்களோடு வளர்கிறான். பெரியவனாகி, பின்னால் அவன், தான் ஒரு ராஜகுமாரன் என்று அவனை தப்பிக்க விட்ட மந்திரி மூலமே உணர்கிறான். இத்தனை காலமும் வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜா பிள்ளைதானே? இது முதலில் தெரியாததால் வேடன் மாதிரி வாழ்க்கை நடத்தினான். உண்மை புரிந்தவுடன் ,ராஜ குமாரனாகவே எப்போதும் இருந்தவன் ராஜகுமாரனாகவே அநுபவத்தில் வாழ்ந்து காட்டினான். வேடப்பையனும் ராஜகுமாரனும் இரண்டுபேர் இல்லை. ஒருத்தன் இன்னொருத்தனாக மாறவில்லை. ஒரே பேர்வழிதான். முதலில் தன்னை தெரிந்து கொள்ளவில்லை. புரியவில்லை. அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் வேடப்பையனாகி கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாகினான். அப்புறம் எதிரி ராஜாவோடு சண்டை போட்டு ஜெயித்து ஸாம்ராஜ்யாதிபதி யாகவே ஆகிவிட்டான்.

நாமெல்லாருமே இந்த மாதிரி ”வேட” வேஷத்தில் தான் உள்ளோம். ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளாகவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்தவத்தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் எப்படியிருந்தாலும் உள்ளே இருக்கிற வஸ்து எப்போதும் பரமாத்மாதான். ஐம்புலன்களின் வசியத்தில் இழுக்கிற வழியில் ஒடி வேட்டையாடிக் கொண்டிருக் கிறோம். நாம் உண்மையில் பிரம்மம்என்று தெரிந்து கொள்ளலாமா? தெரிந்தால் மட்டும் என்ன? அநுபவத்தில் கொண்டுவர முடியாதபடி இந்திரியங்கள் (ஐம்புலன்கள்) இழுத்துக்கொண்டே இருக்கும். ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத்தன்மையை அடைவதற்காக அவன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ஸாம்ராஜ்யாதிபதியான மாதிரி, நாமும் பிரம்மமாகவே எப்போதும் இருந்தாலும் அதை உணராமலிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட்பகைகளை யெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாகஆகவேண்டும். ‘ஸாம்ராட்’- அதாவது ராஜா – என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானியைச் சொல்லியிருக்கிறது.

ஐஸும் ஸ்படிகமும் ஒரே மாதிரித்தான் வெளிப்பார்வைக்கு இருக்கின்றன. ஆனால் ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. ஏனென்றால் எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கி றதோ அதுதான் உருகி மறுபடியும் தன்ஸ்வயமான பூர்வ ரூபத்தை அடைய முடியும். பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால்மறுபடியும் பிரம்மமாகவே அநுபவத்தில் ஆக முடிகிறது. ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரைய மா ட்டோம் என்கிறோம். அது தான் வித்தியாசம்.

”கல்லேனும், ஐயா, ஒரு காலத்தில் உருகும் என் கல்நெஞ்சம் உருகவில்லையே! — தாயுமான ஸ்வாமிகள் நமக்காகத்தான் பாடியிருக்கிறார்.நம்மை உருக வைக்க ஒன்று தேவைப்படுகிறது. கதையில் ராஜகுமாரனை Practical- ஆக ராஜகுமாரனாக்குவதற்காக ஒரு மந்திரி வந்த மாதிரி,நம்மை உருக்கி நிஜ நாமாகப் பண்ண ஒருத்தர் வேண்டும். அவன் வரமாட்டேன் என்று முரண்டு செய்தாலும் வலிய இழுத்த மந்திரி மாதிரி,பாரமார்த்திகத்தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும். அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? நம்மை நம்முடைய நிஜ ”நாமா” க ஆக்கக்கூடிய ஒருத்தர் இருக்கிறாரா?

இருக்கத்தான் செய்கிறார். வேடப் பையனுக்கு நீதானப்பா ராஜகுமாரன் என்று சொல்லிப் புரியவைத்து, அவனுக்கு அஸ்திரப் பயிற்சி கொடுத்து,அவனை ராஜாவாக்குவதற்காகஅவனை விட ஜாஸ்தி உழைத்த மந்திரி இந்த ஒருத்தருக்குத்தான் ரூபகம். (உருவகம்) . நமக்கு நம் ” பரமாத்ம” த்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனைகளைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s