aavudaiyar temple


சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🍁 *மணிவாசகரும், ஆவுடையார் கோயிலும்.* 🍁
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

சுவாமி : ஆத்மநாதர்.

அம்பாள் : யோகாம்பாள்.

மூர்த்தி : மாணிக்கவாசகர், சொக்கவிநாயகர், முருகன், வீரபத்திரர்.

தீர்த்தம் : சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம்.

தலவிருட்சம் : மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).

தலச்சிறப்பு : சிவபெருமான் திருக்கோவில்களில் இராஜகோபுரத்தை அடுத்து முதலில் பலிபீடம், நந்தி, கொடிமரம் காணப்படும். ஆனால் இந்த திருக்கோவிலில் இல்லை. கோவில்களில் நடைபெறும் நாள்பூசை, விழாக்களில் நாதசுரம், மேளம், பேரிகை, சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கப்படும்.

இத்தகைய வாத்திய ஒலிகளை இக்கோவிலில் கேட்க முடியாது. திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகளே கேட்கப்படும். சிவன் இத்தலத்தில் கருவறையில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்.

இங்கு குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு *“ஆத்மநாதர்”* என்று பெயர் ஏற்பட்டது.

ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது மிகச் சிறப்பு.

தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.

ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப் பட்டுள்ளன.

சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார்கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆவுடையார் கோவிலில் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார்.

இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்ககளுள் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் மற்றும் சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும். 50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது. கோவிலின் மேற்கூரை, கிரானைட் கற்களால் வேயப்பட்டது. ஆளுயர சிலைகள் காண்பவர் மனதில் பக்தியைக் கூட்டும்.

கி.பி. 10-வது நூற்றாண்டின் போது இக்கோவில் கட்டப்பட்டது.

இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் :

*1.* டுண்டி விநாயகர் சிற்ப உருவம்,

*2.* உடும்பும் குரங்கும்,

*3.*கற்சங்கிலிகள் – சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது,

*4.* இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்.

*5.*1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்,

*6.* பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள்,

*7.*27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்,

*8.*நடனக்கலை முத்திரை பேதங்கள்,

*9.*சப்தஸ்வரக் கற்தூண்கள்,

*10.*கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல்.

தல வரலாறு : மாணிக்க வாசகர் மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்தவர். அரசன் உத்தரவுப்படி குதிரை வாங்க திருப்பெருந்துறைக்கு வந்தார்.

அப்போது சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்கும் திசையில் சென்று பார்த்தால் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார்.

மாணிக்கவாசகர் தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசம் அளிக்கும்படி வேண்டினார். குருவும் ஒப்புக்கொண்டார். உபதேசம் கேட்டு சிவநிட்டையிலிருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாதது கண்டு சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டார். உள்ளம் உருகிப் பாடினார்.

குதிரை வாங்கக் கொண்டு வந்த பணத்தில் கோயில் ஒன்றை கட்டி சிவதொண்டில் ஈடுபடலானார்.

பின்பு மன்னன் குதிரை வராத செய்தி கேட்டு மாணிக்கவாசகரைப் சிறையில் அடைத்தார். சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி (குதிரை) சிவபெருமானே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார்.

ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் மாறியது. இதை கண்டு கோபம் கொண்டு மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தித் தண்டிக்க, வைகையில் வெள்ளம் வந்தது.

கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்கினார். அந்த பிரம்படி அனைவரின் முதுகிலும் விழுந்தது, எனவே வந்தது இறைவன் என்று தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான்.

இந்த சிறப்பு மிக்க திருவிளையாடற்புராண கதை நிகழக் காரணமான தலம் இந்த ஆவுடையார் கோவில் ஆகும்.

வழிபட்டோர் : மாணிக்க வாசகர், பாண்டிய மன்னன்.

நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் 12.00 வரை, மாலை 04.00 மணி முதல் 09.00 வரை.

அருகிலுள்ள நகரம் : ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை.

கோவில் முகவரி : அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோவில்,
ஆவுடையார் கோயில் – 614 618, புதுக்கோட்டை மாவட்டம்.

திருப்பெருந்துறை என்கிற
ஆவுடையார்கோயில் இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்திலுள்ள, தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும்.

இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடி வைத்த
*கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோனாட்டிற் கெல்லையெனச் சொல்-*எனவும்,

*வெள்ளாறது வடக்காம் மேற்குப் பெருவெளியாய் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளாரஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத்தறு காதம் பாண்டிநாட் டெல்லைப் பதி-*என்றும்,

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த *தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.*

அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக்
கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோவில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது.

மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.

ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரை ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும். இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

இதே மண்டபத்தில் பத்திலிருந்து பதினைந்து வளையங்கள் வரையான வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது.

உருவம் இல்லை. கொடி மரம் இல்லை. பலி பீடம் இல்லை. நந்தி இல்லை.

இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பது போல கொடிமரம் இல்லை. பலி பீடமும் இல்லை. நந்தியும் இல்லை. சுவாமிக்கு உருவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை. மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்
என்பதாலேயே தீபம் தருவதில்லை.

புழுங்கல் அரிசியினால் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.

6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

பாண்டியர் – சோழர் – நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டதாகும்.

திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்ஙள்,இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s