Sleep & Kabirdas

courtesy:http://kabeeran.blogspot.in/2008/02/blog-post.html

தூங்காதே தம்பி தூங்காதே

இறைவனின் படைப்பில் இரண்டு விஷயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் உலகமே ஒரு பெரிய மனநோய் மருத்துவமனை போல் இருந்திருக்கும். அது என்ன இரண்டு விஷயங்கள் ? மறதியும் தூக்கமும். இவையிரண்டையும் மிகப் பெரிய வரமாகக் கருதுகின்றனர் விவரம் தெரிந்தவர்கள். தூக்கம்,சக்தியின் ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே தேவி மஹாத்மியம் அவளை “யா தேவி ஸர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:”என்று போற்றுகிறது.

ஆனால் ‘ராத்திரி பூரா தூக்கமே வரவில்லை’என்று புலம்புவோர்களுக்கு இடையே,’சே சனியன் புடிச்ச தூக்கம்! சீக்கிரம் எழுந்திருக்கவே முடியல’என்று திட்டிக் கொண்டே அரக்க பரக்க காலையில் பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க ஓடுபவர்களும் சம அளவில் இருக்கிறார்கள். வயது கூடக் கூட தூக்கம் குறைந்த பெருசுகள், தூங்குவதே சுகம் என்று காலை பத்து மணியானாலும் படுக்கைவிட்டு எழாத இளசுகளை கண்டு பொருமுகிற காட்சி இன்று வீட்டுக்கு வீடு காணலாம். பலருக்கு தைராய்ட் போன்ற சுரப்பிகளின் குறைபாடு. சுறு சுறுப்பில்லாமல் எப்போதும் ஒரு தூங்கி வழியும் நிலை. போதாத குறைக்கு ‘கால் சென்டர்’போன்ற புது குழப்பங்கள் வேறு. மாறிவரும் வாழ்க்கை முறையில் மன அழுத்தம்தான் மிச்சம்.

தியானம் செய்தால் மனஅழுத்தம் குறையும். அதனால் இரவில் தூக்கம் நன்றாக வரும் என்று யாரோ சொல்ல தியான வகுப்பில் சேர்ந்தாச்சு. கழுத்தும் முதுகுதண்டும் ஒரே நேர்கோட்டில் வருமாறு சுகாசனத்தில் மிடுக்காக அமர்ந்து மூன்றுமுறை ஆழ்சுவாசம் செய்து பின், மெல்லிய குரலில் கட்டளைகள் தரும் மாஸ்டர் ரிலாக்ஸ்..ரிலாக்ஸ் என்று சொல்லச் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே நம்மை மறக்கும் ஆனந்தம் பற்றிக்கொள்கிறது. அடுத்துத் தெரிவது கோலால் முதுகில் ஒரு மெல்லிய தட்டு. கண் திறந்தால் புரிகிறது; பழங்கள் பழுத்த மரத்தின் கிளைகள் வளைந்து தாழ்ந்து விடுமாமே அப்படி, தலையும் மார்பும் வளைந்து பூமியை தொடும் நிலையை அடைந்து விட்டிருப்பது. தியானம் பழுக்கவில்லை, தூக்கம் பழுத்து விட்டது. ‘பாழும் தூக்கம்’வேண்டாத இடத்தில் வந்து எல்லோர் முன்னும் மானத்தை வாங்குகிறது.

இதையே “The spirit is willing but the flesh is weak" என்று பைபி்ள் சொல்கிறது. ஏசுநாதர் பீட்டரையும் அவனுடன் இருந்த இரு சகாக்களையும் விழித்திருக்கும்படி பலமுறை கேட்டுக் கொண்ட பின்னரும் அவர்கள் இயலாமை கண்டு அவர் கூறுவதாக வரும் வாசகம் இது. (மத்தேயு-26:42)

இப்படி புத்தியும் உடலும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்காத நிலையில் இறைவனின் சிந்தனை எப்படி கைகூடும்?

தேகத்தில் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளபோதே ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள வேண்டும். வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் மனம் சண்டி மாடு போல பணியாது, உடல் ஒத்துழைக்காது என்பது அனுபவம் மிக்க ஞானிகளின் வாக்கு.

பிரம்மமுஹூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருந்து செய்யப்படும் பிரார்த்தனையும் தியானமும் ஆன்ம பலம் சேர்க்கும் என்று எல்லா ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்கள் இடைவிடாமல் போதித்தாலும் அது செவிடன் காதில் ஊதும் சங்காகவே முடிகிறது. தன் பங்குக்கு கபீரும் சொல்ல வேண்டியதை சொல்லி விடுகிறார்.

कबीरा सोया क्या करे, उठि न भजे भगवान ।
जम जब घर ले जाएँगे, पडा रहेगा म्यान ॥

கபீரா சோயா க்யா கரே, உடி ந பஜே பக்வான் |
ஜம் ஜப் கர் லே ஜாயேங்கே, படா ரஹேகா ம்யான் ||

துஞ்சுவான் கபீர் என் செய்ய, விழித்தும் விளியான் பரமனை
அஞ்சும் போய்த் துஞ்சிய பின், விழைவார் இல்லை இக்கூட்டினை

(துஞ்சுதல் =உறக்கம், விழித்தல்= கண் விழித்தல், விளியான் =கூப்பிட மாட்டான், பரமன்= இறைவன், விழைதல்= விருப்பப் படுதல்)

இன்னும் சற்று மோனை அதிகம் வரலாமென்றால்

துஞ்சுவான் கபீரென் செய்ய, துஞ்சரித்தும் துதியான் பரமனை
அஞ்சும் போய்த் துஞ்சியப் பின், துதிப்பாரில்லை இக்கூட்டினை
(துஞ்சரித்தல்= கண் விழித்தல்; துதித்தல்=போற்றுதல்)

‘அஞ்சும் போய் துஞ்சுதல்’என்பது மரணத்தைக் குறிப்பதற்காக வந்தது. ஐந்து புலன்களும் அடங்கிப் போகும் பெரும் தூக்கம்.

காலாகாலத்தில் எழவில்லைதான்,போகட்டும். ஆனால் எழுந்த பின்னாவது இறைவனை துதி செய்கின்றனரா மக்கள். அதற்கும் நேரமில்லை. காலன் அழைத்துப் போகும் காலத்தில் உடன் வரக்கூடிய சற்கருமங்களை சம்பாதிக்காமல் போனால் எதற்கு பிறவி ? உயிர் போனபின் இந்த உடலுக்கு மதிப்புதான் ஏது என்று வினவுகிறார் கபீர்.

ஆனால் அருளாளர்கள் உலகம் எப்போது அடங்கும், எப்போது ஏகாந்தத்தில் இருக்கமுடியும் என்ற எதிர்பார்ப்போடு இரவை எதிர் நோக்கி யிருப்பார்களாம். இராமலிங்க அடிகளுக்கும் தூக்கம் போய் விட்டது. இறைவனே அவனை எழுப்பி அருள் செய்கிறானாம். அந்த பேரின்பத்தை தன்னைப் போலவே யாவரும் பெற வேண்டும் என்று வேண்டுகிறார்.

பாதி இரவில் எழுந்தருளிப்
பாவியேனை எழுப்பி யருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது;என் போல் இவ்
உலகம் பெறுதல் வேண்டுவனே

அடுத்து வரும் ஒரு ஈரடியிலும் நாளுக்கு நாள் நம்மை துரத்தும் காலனை கபீர் நினைவூட்டுகிறார். கடவுளை துதிக்காமல் போன நேரம் விரயமே. ஆகையால் மீதமுள்ள நேரத்தையாவது பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே என்கிற ஆதங்கம் அவர் வரிகளிலே தெரிகிறது.

नींद निशानी मौत की, उठ कबीरा जाग ।
और रसायन छांडि के, नाम रसायन लाग ॥

நீந்த் நிஷானீ மௌத் கீ, உட் கபீரா ஜாக் |
ஔர் ரசாயன் சாடி கே, நாம் ரசாயன் லாக் ||

தூக்க மென்பது காலனின் சுவடு, கபீரா விரைந்து விழித்திடு
ஊக்கமோ டருந்து நாமரசம், விட்டுவிடு வேறு விடயரசம்
(விடயம் =விஷயம், ரசம்= ருசி, இன்பம்; புலனின்பங்கள்.)

‘உட்’ என்பது எழுந்திடு என்று பொருள் படும். ‘ஜாக்’ என்பது உணர்வால் விழித்துக் கொள்வது அல்லது புரிந்து கொள்வது. உலக விஷயங்களில் ஏற்படும் நாட்டத்திலிருந்து விடுபட இறைவன் நாமத்தை துணை கொள்ள வேண்டும். அதற்கான காரணத்தை திருமூலர் பொருத்தமாகச் சொல்கிறார்.

நெஞ்சு நிறைந்து அங்கிருந்த நெடுஞ் சுடர்
நஞ்செம் பிரான் என்று நாதனை நாடொறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே

(நஞ்செம்பிரான் =நம்+செம்மை+பிரான் நம் செம்பொருளான சிவம்; அஞ்சு=ஐம்புலன்கள்; அற்று விட்டது =கட்டுப்பாடு இல்லாமல் போனது)

இரவில் தூங்கச் செல்லும் வரையிலும் இறைவனை தொழுது கொண்டே இருங்கள். அப்படிச் செய்யத் தவறினால் யானையின் பலத்துடன் ஐம்புலன்களும் நம்மை அலைக்கழித்து விடும் என்கிறார். “விழித்தும் விளியான் பரமனை” என்று கபீர் கவலைப் படுவதற்கான காரண மூலம் நமக்கு புரிகிறது.

இரட்டை மாடுகளால் இழுக்கப்படும் வண்டி, இந்தப் பிறவி. மனம் புத்தி இவையிரண்டும் தான் இரட்டை மாடுகள். இரண்டிற்கும் மூக்கணாங்கயிறு உண்டு, வைராக்யம் மற்றும் விவேகம்.

ஆரம்பக் காலத்திலிருந்தே ஜோடி மாடுகளாக்கி பழக்கினால்தான் பயணத்திற்கு பயன்படும். சேர்ந்து பழகாத மாடுகள் வண்டி இழுக்கவோ ஏர் உழவோ பயன்படாது. விவேகத்தையும் வைராக்கியத்தையும் முறையாக பயன்படுத்தி அவற்றை பழக்க வேண்டும் என்பது பெரியவர்கள் நமக்கு சொல்லி வைத்திருக்கும் வழிமுறை. மனம் தன் போக்கில் ஐம்புலன்கள் துணையோடு பலவித வாசனைகளுக்கு அடிமையான பின்பு புத்தி அதை வழிபடுத்த முனைந்தால் அது ஒத்துழைக்குமா? எனவே தான் ‘உட் கபீரா,ஜாக்’ (எழுந்து உணர்ந்திடு) என்று கபீர் ஆதங்கத்தோடு நம்மை அறியாமையிலிருந்து தட்டி எழுப்புகிறார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s