Krishna parting Radha

Courtesy:Sri.JK.Sivan

‘ராதா!.. ஓ!… ராதா!” — J.K. SIVAN

கிருஷ்ணனை பற்றி எவ்வளவு எழுதினாலும் தாகேமே தீருவதில்லை. எப்பவுமே சம்மர் தாகம் தான். மனது நினைக்கிறது. கை டைப் அடிக்கிறது. அப்புறம் என்ன? பிரம்மானந்தம் தானே.

ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.

கிருஷ்ண ஜன்ம காண்டத்தில் கடைசி அத்தியாயத்தில் ராதா தனிமையில் பிருந்தாவனத்தில் கண்ணனை நேரில் காணாது எவ்வாறு ஏங்கினாள் என்று வரும். சித்தாஸ்ரமத்தில் பிரபாச க்ஷேத்ரத்தில் இருவரும் இணைகிறார்கள். கிருஷ்ணனின் 125 வயதில், முதல் 11 வருஷங்கள் நந்தகோபனோடு கோகுலத்திலும், 14 வருஷங்கள் பிருந்தாவனத்தில் ராதையோடும், மீதி நூறு வருஷங்கள் மதுராவிலும் துவாரகையிலுமாக கழிந்தது.

இங்கு ஒரு குட்டிக்கதை அவசியமாகிறது.

ஒரு சூரிய கிரஹணத்தின் போது குருக்ஷேத்தரத்தில் ஒரு பெரிய கும்பல் சேர்ந்தது. அங்குள்ள ச்யாமந்த பஞ்சகம் என்கிற குளத்தில் க்ரஹணம் முடிந்தவுடனே ஸ்நானம் செய்தால் பாபங்கள் விலகி ஜீவன் மோக்ஷம் அடையும் என்று நம்பிக்கையில் தான் அனைவரும் அங்கு கூடுவார்கள். பரசுராமர் அநேக க்ஷத்ரியர்களை வதம் செய்து அந்த பாப பரிகாரத்துக்காக இங்கு வந்து ஸ்நானம் செய்தார். எனவே அநேக ராஜ குடும்பங்கள் அங்கு வந்தது. பாப விமோசனத்துக்காகவும் பரிஹாரத்துக்காகவும் தான்.

துவாரகையிலிருந்து கிருஷ்ணன் பலராமன் முதலானோர் பல விருஷ்ணி, அந்தக,யாதவ அரச குடும்பங்களோடு குருக்ஷேத்ரம் வந்தனர். ஹஸ்தினா புரத்திலிருந்து திரித ராஷ்டிரன் முழு குடும்பத்தோடு வந்திருந்தான். பாண்டவர்களும் இருந்தனர். இங்கேயே பின்னர் பாண்டவர்களும் கௌரவர்களும் மோதுவோம் என்று எதிர்பார்க்கவில்லையே! சாதாரண மக்களும் திரண்டு வந்தனர். அவர்களில் பிருந்தாவன கோப கோபியர்களும் உண்டே.

கிருஷ்ணனின் பெற்ற தாய் தந்தையர் வசுதேவரும் தேவகியும் வந்திருந்தார்கள். நந்தகோபன் யசோதாவை சந்திக்க ஆவலாக இருந்தனர். இரு குடும்பமும் சந்தித்தபோது இரு பெற்றோர்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு பேச வார்த்தை எழவில்லை. பலராமனும் கிருஷ்ணனும் பழைய கோகுல, பிருந்தாவன பால்ய நண்பர்களை சந்தித்தனர்.

கிருஷ்ணனின் கண்கள் ராதையைத் தேடின. பார்த்து விட்டன. கண்கள் மட்டுமே பேசின. அடேயப்பா. என்ன வேகம்! கோடானுகோடி வார்த்தைகள் எண்ணங்களாக மின்னல்வேகத்தில் நெஞ்சுக்குள் பரிமாறிக்கொண்டன. அவற்றின் பிரதிபலிப்பாக இருவரது கண்களும் குளமாயின. கிருஷ்ணனது அரச வாழ்க்கையில் ராதா குறுக்கிடவே இல்லை. ராதாவை எந்த தர்ம சங்கடத்திலும் கிருஷ்ணனும் ஆழ்த்தவில்லை.

நேரம் நகர்ந்தது. கற்சிலையாக எத்தனை யுகங்கள் அவர்கள் இருவரும் அங்கே ஒருவரை ஒருவர் விழிகளால் விழுங்கிக்கொண்டு நின்றனர்? எல்லா எண்ணங்களையும் சர்வமுமாக பரிமாரிக்கொண்டபின் தான். கண்கள் நீரின்றி வறண்ட பாலைவனமான போது தான். ராதா கிருஷ்ணனின் மகிழ்ச்சியை அவன் பட்ட மகிஷிகளோடு இருந்தபோது சிரிப்பில் கண்டாள். அவன் தன் நினைவால் வாடியதை அவன் கண்களில் கண்டாள். அவள் முடிவு சரியானதே. அவரவர் பாதையில் அவரவர் செல்லவேண்டும் என்ற தீர்மானம் பொருத்தமானதே.

கிருஷ்ணன் வளர்த்த தாய் தந்தையர் நந்தகோபன் யசோதாவின் தாள் தொட்டு வணங்கிவிட்டு மதுராவுக்கு பயணமானான். தேர் ஓட்டம் போலவே அவன் மனத்திலும் பிருந்தாவன வாழ்க்கை நிகழ்வுகள் வேகமாக சுழன்றது. பழைய சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சுவையானது, சுகமானது இல்லையா? பிருந்தாவனத்தில் மரத்தடியில்………….

”கிருஷ்ணா, நீ என்னை மறந்துவிடுவாயா? சொல் ”

”என்னால் முடியாது ராதா, சூரியனும் சந்திரனும் கிரணங்களின்றி ஒளியின்றி உண்டா?. நீ என் தெய்வமல்லவா. என் மூச்சல்லவா”

”நீ என்னை கல்யாணம் பண்ணிக்கொண்டால் என்னை பிரியமாட்டாய் அல்லவா?”

”நமக்கு தான் காந்தர்வ விவாகம் ஆகிவிட்டதே”

”அரசர்களுக்கு தானே அது முடியும். நீ ராஜாவா? இந்த ஊரில் பசு மேய்க்கும் ஒரு கோபன் தானே?”

”இல்லை நான் ராஜா தான்.”

”பொய் சொல்வதை நிறுத்த மாட்டாயா? ஒரு நாளாவது உண்மை பேசேன்!”

கிருஷ்ணன் தனது பிறப்பின் ரகசியத்தை உணர்த்த ராதா மூச்சுவிடாமல் கேட்டாள். அதிசயித்தாள்.

நான் கம்சனைக் கொன்று ராஜாவாகி உன்னை என் ராணியாக்குவேன்”

”இல்லை, கிருஷ்ணா அது நடக்கவே நடக்காது. நடக்கவும் கூடாது. நான் அற்ப இடைக்குல பெண். நீ அரசன். நான் உனக்கு ஏற்றவள் அல்ல. ஏராளமான ராஜகுமாரிகள் உனக்கு மனைவியாக வந்து சேருவார்கள். நான் இங்கிருப்பது தான் முறை. இதையும் முக்கியமாக கேள் கிருஷ்ணா. நான் ஒருநாளும் ராஜா கிருஷ்ணனை விரும்பவில்லை. எனக்கு தெரிந்த என் மனம் கவர்ந்த கோபர்களில் ஒருவனான கிருஷ்ணனை தான் விரும்புபவள். அவன் என்னில் நிரம்பியிருக்கிறான். இனி நாம் மனத்தளவிலேயே சந்திப்போம் இணைவோம்.

நான் இங்கேயே இருந்து உன் வளர்ப்புத் தாய் தந்தையர்க்கு பணிவிடை புரிவேன். உன்னைப் பிரிந்த அவர்களுக்கு நானாவது கொஞ்சம் சந்தோஷம் தர முயற்சிப்பேன். உன் நினைவு வந்தால் மதுவனம் செல்வேன். நீ இருப்பதாக நினைத்து பாடுவேன், ஆடுவேன், கன்றுகளோடு விளையாடுவேன். உன் குழல் கானத்தை காற்றில் உணர்வேன். நீ தூக்கி நிறுத்திய கோவர்தன கிரியை சுற்றி வருவேன். யமுனையில் உன் நினைவோடு நீந்துவேன். அதுவே போதும் எனக்கு.”

”கிருஷ்ணா ஒரே ஒரு வார்த்தை. பிருந்தாவனத்துக்கு நீ ராதையின் கிருஷ்ணனாக இருப்பதைவிட உலகத்துக்கே நீ யோகியாக ஆச்சார்யனாக, லோக தர்ம பரிபாலன கிருஷ்ணனாக இருப்பதையே நானும் வேண்டுகிறேன். நீ யாவர்க்கும் சொந்தம் ஆனவன் எனக்கு மட்டுமே அல்ல”

”என் ராதா பிரிய சகி..”

”கிருஷ்ணா, ஒன்று செய். நீ போகுமுன் ஒரு முறை உன் குழலை என்னிடம் கொடு நானும் ஊதிவிட்டு தருகிறேன். இந்த குழல் உனக்கு என் நினைவை என்றும் அளிக்கட்டும்”

கர்கரிஷி சொன்ன வார்த்தைகள்:

”கிருஷ்ணா, நீ சாதாரண கோபனா என்ன இந்த ராதையை மணந்து இங்கேயே வாழ. உன் பிறப்பின் ரகசியம் மறந்து விட்டதா? . வசுதேவர் தேவகியின் எட்டாவது பிள்ளை — உன் மாமன் கம்சனின் முடிவு உன் கையால் நிகழ்ந்து யாதவகுலம் மீண்டும் உன் தலைமையில் பொலிவு பெறவும், கொடுங்கோல் ஆட்சி அழியவும் லோக பரிபாலன சேவைக்கும் நீ தேவை. பூமியின் பாரம் உன்னால் குறையவேண்டும். அதற்கு தகுதியாகும் வரையில் தான் நீ இங்கு கோகுலத்தில் பிருந்தாவனத்தில் ரகசியமாக நந்தகோபன் யசோதை குமாரனாக வளர்ந்தவன். உன்னை வேத சாஸ்திரங்கள் தர்மங்கள் முழுமையாக கற்க, வழி நடத்த ஆச்சார்யனாக சாந்தீபனி முனிவர் தயாராக உள்ளார். ”

கிருஷ்ணன் புன்னகைத்தான்.

”மகரிஷி நான் அறிவேன். நந்தகோபன் யசோதையும் என் அன்பு பெற்றோர்களே. இங்கே எவருக்கும் என் பிறப்பு ரகசியம் தெரியவேண்டாம். அவர்களில் ஒருவனாக நான் இருப்பதையே அவர்கள் உணர்ந்து மகிழ்ந்தவர்கள். அவர்கள் உண்மையை உணரும் வரையில் அவர்களின் எண்ணப்படியே இங்கு நான் என்றும் வாழ்வேன். நானும் இந்த நேரத்துக்காகவே தான் இத்தனை காலம் காத்திருந்தவன். ராதையைப் பொருத்தவரை, ஒன்று சொல்வேன் . ஒரு வேளை நான் கொடிய விஷங்கொண்ட காளியனை வதம் செய்ய முற்பட்டபோது மறைந்திருந்தால் என் வளர்ப்பு பெற்றோர் வருத்தம் அடைந்திருப்பார்கள். மீளாத சோகத்தில் ஆழ்ந்திருப்பார்கள். ஆனால் ராதா அக்கணமே தன் உயிரை விட்டிருப்பாள். என் வாழ்க்கையும் ஜீவனும் ராதா என்பதை அவளும் அறிவாள்.

கர்க ரிஷியும் அவர்கள் இருவருமே இணைபிரியாத ஒரே ஜீவன் என்று உணர்ந்து வாழ்த்தியவர்.

கண்ணன் பிருந்தாவனத்தை விட்டு விலகுகிறான் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. பேரிடியாக ஒவ்வொரு வரையும் பாதித்தது. பெற்றோர்கள் செல்லக்குழந்தையை இழந்தனர். கன்னியர்க்கோ கற்பனைக்கோட்டைகள் சிதறின. கனவுகள் கலைந்தன. கோபர்கள் உற்ற நண்பனை இழந்த சோகத்தில் மயங்கி விழுந்தனர். நந்தகோபனும் யசோதையும் கண்ணீரில் மூழ்கினர். ராதையின் விழிகள் விரக்தியை பிரதிபலித்தன. சிலையானாள் . உயிரில்லாத சிற்பமானாள் . அவள் காதில் கண்ணனின் வேய்ங்குழல் நாதம் ரீங்காரமிட்டது. வேக வேகமாக மதுவனத்துக்கு ஓடினாள் . திரும்பி பார்த்தாள் . கண்ணனை ஏற்றிக்கொண்டு சென்ற தேர் பிருந்தாவனத்திலிருந்து தூரமாக வேகமாகச் சென்று ஒரு கரும் புள்ளியாகி அதுவும் மறைந்தது.

ராதை -கிருஷ்ணன் பிரேமை பொதிந்த உறவை முழுதுமாக யாரால் சொல்லமுடியும், எழுதமுடியும்.? நான் ஜெயதேவரோ கண்ணற்ற சூர் தாசரோ அல்லவே? . ராதையையும் கண்ணனையும் நினைவு கூறுவதற்கு சாட்சியாக யமுனை ஓடிக்கொண்டே இருக்கும். பிருந்தாவனம் பூரா தென்றல் வீசி மனதை கண்ணன் பால் வைக்கும். காற்றில் மென்மையாக இன்னும் குழலோசை மனதில் ஆத்ம ராகமாக ஒலிக்கும் .

”ஆமாம் இதெல்லாம் உண்மை தான், நமது முன்னோர்கள் நிறையவே பார்த்திருக்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள் என்று மரங்கள் செடிகள் எல்லாம் தலையசைக்கும்.

”ராதா ஓ ராதா…..” என்றுவிண்ணை நோக்கி உயரே உரக்க சொல்வோமானால் எங்கும் ”ஹே கிருஷ்ணா, மாதவா” என்று அது நம் மனதில் எதிரொலிக்கும். என் ஒரு பெண் பெயர் ராதா. வாய் நிறைய கூப்பிட.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s