Story of sudarshana chakra

*தெரிந்த புராணம்… தெரியாத கதை!*
*’ஹரியும் சிவனும் ஒன்றுதான்’*

என்கின்றனர் ஆன்மிகப் பெரியோர். வேதவியாசர் எழுதிய பதினெண் புராணங்களும் இந்தத் தத்துவத்தையே வலியுறுத்துகின்றன. ஆனாலும் ஹரி வேறு, ஹரன் வேறு… இவர் பெரியவர், அவர் சிறியவர் என்றெல்லாம் பேதங்கள் பார்த்து வாழ்கிறவர்களும் உண்டு.

விஷ்ணுவின் சக்தி சிவனிடமும், சிவனின் சக்தி விஷ்ணுவிடமும் இருப்பதை விளக்கும் மகா சுதர்சனச் சக்கரம் பற்றிய ஒரு புராணக் கதையை இங்கே பார்ப்போம்.

சுதர்சனச் சக்கரம் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஸ்ரீமந் நாராயணன்தான். தன் நான்கு கரங்களிலும் முறையே சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றைத் தாங்கியிருப்பவர் திருமால். தனது சுதர்சனச் சக்கரத்தால் அதர்மத்தை அழித்து, தர்மத்தை ஸ்தாபனம் செய்பவர் அவர். அவரின் திருக்கரத்தில் உள்ள சுதர்சனம், பக்தர்களை தீமைகளில் இருந்து காக்கவல்லது.

அந்த சுதர்சனம் தோன்றியது எங்கே? எப்போது? எவ்விதம்?

சிவனாரைத் தரிசிக்க, இந்திரன் ஒருமுறை திருக்கயிலாயத்துக்குச் சென்று கொண்டிருந்தான். ‘பார்க்கின்ற பொருளெல்லாம் பரம்பொருள்’ என்பதை இந்திரன் உணர்ந்திருக்கிறானா எனச் சோதிக்கத் திருவுளம் கொண்டார் ஈஸ்வரன். மகா ருத்ர சொரூபத்துடன் இந்திரனுக்கு முன்னே காட்சி தந்தார். அதை உணராத இந்திரன், தன்னை மறித்து நிற்பது அரக்கன் என்றெண்ணி, ருத்ரன் மீது தன் கையில் உள்ள வஜ்ராயுதத்தை எறிந்தான். அந்த ஆயுதம் ருத்ரன் மீது பட்டதும், அவர் உடல் சிலிர்த்து, கோபாக்னி உண்டாகி, வியர்வைத் துளிகளாக மாறி, கடலில் சிதறி விழுந்தன.

பிறகுதான், வந்திருப்பது சிவனார் என அறிந்த இந்திரன், மனம் வருந்தி அவரின் திருவடியில் விழுந்தான். கடலில் விழுந்த ருத்ரனின் வியர்வைத் துளிகள் ஒன்று சேர்ந்து அரக்கனாக வடிவெடுத்தது. பிரம்மதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, சமுத்திரராஜனால் வளர்க்கப்பட்ட அந்த அசுரன், ஜலந்தரன் என அழைக்கப்பட்டான். ஆக, இந்திரனின் அறியாமையாலும் அவசரத்தாலும் தோன்றினான் ஜலந்தரன்.

ருத்ரனின் வியர்வைத் துளியில் இருந்து தோன்றியவன், பிரம்மாவின் வரம் பெற்றவன் என்பதால், தன்னை எவராலும் அழிக்கமுடியாது என இறுமாப்புடன் இருந்தான் ஜலந்தரன். மூவுலகையும் வென்று, தேவர்களை அடிமைப்படுத்தினான். நாளாக ஆக, அவனது ஆணவமும் அதிகரித்தது.

பிரம்மாவையும் திருமாலையும்கூட வெற்றி கொண்டான்; கொடுமைகள் பல புரிந்தான். முடிவில், தன்னைப் படைத்த ஈஸ்வரனைவிட தான் உயர்ந்தவன் என கர்வம் கொண்டு, சிவனாரை அடிபணியச் செய்யும் முயற்சியாக, திருக்கயிலாயம் புறப்பட்டான். வழியில், வேதியர் வடிவில் அவனுக்கு முன்னே தோன்றினார், சிவனார். ‘சிவனாருக்கு அடுத்த ஸ்தானத்தில் நான் இருக்கிறேன். சிவபெருமானை வெல்ல வேண்டுமென்றால், முதலில் என்னால் நிர்மாணிக்கப்படும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை அழிக்கும் சக்தி உனக்கு இருக்கிறதா என்று பார்ப்போம்’ எனச் சவால் விட்டார் சிவனார். அதனை ஏற்றான் ஜலந்தரன்.

வேதியராக வந்த சிவனார், தன் பாத விரல்களால் பூமியைக் கிளறி, மகா சுதர்சன சக்கரத்தை வரிவடிவமாக உருவாக்கினார். ‘முடிந்தால், இந்த மகா சுதர்சனச் சக்கரத்தை எடுத்து, உன் சிரசில் வைத்துக்கொள், பார்ப்போம்!’ என்றார் ஜலந்தரனிடம்.

உடனே அவன், அந்தச் சுதர்சனச் சக்கரத்தை அப்படியே பெயர்த்தெடுத்தான்; தன் சிரசின் மீது வைத்துக்கொண்டான். ஆணவமும் காமமும் மிகுந்த அவனது உடல், இருகூறாகப் பிளந்தது. ஜலந்தரனின் உடல் அழிந்தது. ஆனாலும், அழியா வரம் பெற்ற அவனது ருத்ர சக்தி, சுதர்சனச் சக்கரத்தில் ஒன்றாகக் கலந்தது. அதன் பிறகு, மகா சுதர்சனம், மகேஸ்வரனின் திருக்கரத்தில் அமர்ந்தது. இது சுதர்சனம் தோன்றிய கதை!

சரி… இந்த சுதர்சனம், திருமாலின் கைக்கு வந்தது எப்படி?

கோலோகம். திருமாலின் சேவையே பெரிதெனக் கருதி வாழ்ந்தவள் துளசிதேவி. அவள் ஒரு சாபத்தால், பூவுலகில் ‘பிருந்ததை’ என்பவளாக, மிக்க அழகுடன், காலநேமி என்கிற அரக்கனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளே ஜலந்தரனின் மனைவியானாள். அவளது பதிவிரதா சக்தியால்தான், அழியா வரம் பெற்றிருந்தான் ஜலந்தரன். முடிவில், சிவபெருமானால் அவன் அழிந்ததும், பிருந்ததை தீக்குளித்தாள். எப்போதும் திருமாலுடன் வாசம் செய்யும் வரம் பெற்று, மீண்டும் துளசியாகி, சேவையாற்றி வந்தாள்.

ஜலந்தரனுடன் வாழ்ந்தவள் துளசி. எனவே, அவன் உறைந்திருக்கும் மகா சுதர்சனச் சக்கரத்தையும் தன் திருக்கரத்தில் வைத்து, பிருந்தா- ஜலந்தர சங்கமத்தைத் தன்னுள் நிகழ்த்த விரும்பினார் திருமால். மேலும் பூவுலகில், தர்ம ஸ்தாபனம் எனும் கடமையைச் செய்ய, சுதர்சனத்தின் பங்கு இருப்பதை அறிந்து, அதனைச் சிவனாரிடம் இருந்து பெற, ஈஸ்வரனை பூஜிக்கத் துவங்கினார் ஸ்ரீமந் நாராயணன்.
ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைப் பறித்து, அதைக் கொண்டு ஆதிசிவனாரை அர்ச்சித்து வழிபடலானார். அப்போது, சிவனாரின் சங்கல்பத்தால், ஒரேயரு மலர் மறைந்துவிட… மந்திரம் ஒன்றுக்கு மலர் ஒன்று குறைந்தது கண்டு, தன் கமலக்கண்ணையே பெயர்த்து, மலராகச் சமர்ப்பித்தார், திருமால். கண்ணப்பருக்கு முன்னோடியாக, கண் ஒன்றை மலராகத் தந்ததாலேயே, கண்ணன் எனும் திருநாமம் பெற்றார் ஸ்ரீமந் நாராயணன். அந்த பூஜையில் மகிழ்ந்த சிவனார், மகா சுதர்சனச் சக்கரத்தை திருமாலிடம் தந்து, துஷ்டர்களைச் சம்ஹரித்து, பக்தர்களை ரட்சிக்கிற பணியை அவரிடம் தந்தருளினார். ஆக, சங்கரனால்… சக்கரதாரியானார் திருமால்.

‘உலகில் உள்ள எந்த தீய சக்தியையும் எதிர்த்து அழிக்கவல்லது மகா சுதர்சனம்’ என்று சுதர்சன மூலமந்திரம் குறிப்பிடுகிறது. நல்லவர்களுக்கு எதிராகச் செயல்படும் மந்திரம், தந்திரம், யந்திரம், அஸ்திரம், சஸ்திரம் ஆகிய அனைத்தையும் அழித்து, நல்லோரைத் துயர்களில் இருந்து காக்கவல்லது மகா சுதர்சனச் சக்கரம். சிவனாரால் நிர்மாணிக்கப்பட்ட சக்தி வாய்ந்த இந்தச் சக்கரம், ருத்ர சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளது.

மகாவிஷ்ணு எடுத்த ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரத்தில், ஸ்ரீராமனும் ஸ்ரீகிருஷ்ண னும் மகேஸ்வர பூஜை செய்ததாக ராமாயணமும் மகாபாரதமும் தெரிவிக்கின்றன. மகாபாரதச் சம்பவங்களில், பல தருணங்களில் சுதர்சனச் சக்கரப் பிரதிஷ்டை செய்து, துஷ்டர்களை அழித்து தர்மத்தைக் காத்தரு ளினார் ஸ்ரீகிருஷ்ணர் எனும் தகவல் உண்டு.

ராஜ சூய யாகத்தில் ஒழுக்கம் தவறி நடந்து பெரியவர்களை இழிவாகப் பேசிய சிசுபாலனை, சுதர்சனச் சக்கரமே அழித்தது. விஷ்ணு பக்தனான அம்பரீஷனை, துர்வாசரின் கோபாஸ்திரத்திலிருந்து காத்து ரட்சிக்க, சுதர்சனச் சக்கரம் துர்வாசரைத் துரத்திச் சென்று, அடிபணிய வைத்தது. குருக்ஷேத்திரப் போரில், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்த ஸ்ரீகண்ணன், விஸ்வரூப தரிசனம் காட்டி, மகா சுதர்சன சக்தியைப் பற்றி எடுத்துரைத்து, அர்ஜுனனுக்கு வீரத்தையும் விவேகத்தையும் ஏற்படுத்தினார்.

சுதர்சன வழிபாடு, அர்ஜுனனை அனைத்து ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளியது. அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட அவனுடைய செயல்கள் அனைத்திலும் துணை நின்றது!

மகா சுதர்சனத்தை வழிபடுகிறவர்கள், சிவனாரையும் ஸ்ரீமந் நாராயணனையும் சேர்த்து வழிபட்ட பலனைப் பெறுகின்றனர். ஹரியும் ஹரனும் உறையும் அற்புதச் சக்திதான் சுதர்சனம்!

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s