Beggar – Periyavaa

மஹா பெரியவா – கதறி அழ வைக்கும் பதிவு

பிச்சைக்காரர்கள்

சாப்பாடு எங்கே? தங்குவது எங்கே?

என்னுடைய கல்லூரிக் கட்டணமும் கைச்செலவுக்கு வேண்டிய பணமும் இவ்வாறாக ஏற்பாடு செய்யப்பட்டபின், என்னுடைய சாப்பாட்டுக்கும் தங்குவதற்கு இடத்துக்கும் பெரியவா என்ன ஏற்பாடு செய்யப் போகிறார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். பெரியவாளுக்கு மூன்று வழிகள்தான் இருக்கிறது என்று நான் நினைத்தேன். ஒன்று, அவர் என் அம்மாவை மறுபடியும் சிதம்பரத்திலேயே குடித்தனம் போடச் சொல்லலாம்; இரண்டு, என்னை என் அக்காவின் வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கும்படி கூறலாம், மூன்றாவது, கல்லூரி ஹாஸ்டலில் தங்கச் சொல்லலாம். இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுதே, பெரியவா முற்றிலும் வேறான ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு அறவே தெரியாமலிருந்தது.

காஞ்சீபுரத்திலிருந்து திரும்பி வந்து ஒரு வாரம் கழித்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தம்பதிகள் என்னைப் பார்க்க அக்காவின் வீட்டிற்கு வந்தனர். திரு. ஸ்வாமிநாத ஐயர் திருமதி ஸ்வாமிநாத ஐயர் என்றும் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர்.

அவர் மேலும் சொன்னது, “நான் ரெஜிஸ்ட்ராரா வேலை பாத்துண்டிருக்கேன். இப்போதான் காஞ்சீபுரத்துல பெரியவாளைத் தரிசனம் பண்ணிட்டு வரோம்.”

அவருடைய மனைவி திருமதி லக்ஷ்மி தொடர்ந்து கூறிய வரலாறு எனக்கு நம்பமுடியாததாக இருந்தது.

“நாங்க பெரியவா கிட்டேந்து உத்தரவு வாங்கிண்டு கிளம்பறப்போ, பெரியவா கஷ்டப்பட்டுப் பேசினார் (பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்).
நீங்க எனக்கு பிக்ஷை தருவேளா அப்படின்னு கேட்டார். எங்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. கடவுளே என்னத்துக்கு பிக்ஷை கேக்கறார்-னு புரியலை. “நாங்க வருஷத்துக்கு ஒரு தரம் பெரியவாளுக்கு பிக்ஷை சமர்ப்பிக்கிறோம். இன்னும் வேணுமானாலும் செய்யறோம், அது எங்க பாக்யம்” என்று சொன்னோம்.

அதுக்கு பெரியவா என்ன சொன்னார் தெரியுமா? “ஒங்க ஊர்ல கலாசாலைல சேர்ந்திருக்கற ஒரு பையன் மேலே எனக்குக் கொஞ்சம் அக்கறை. அவனுக்கு நீங்க தங்க இடமும், சாப்பாடும் குடுத்தா அதுதான் எனக்கு பிக்ஷை”

“அவனுடைய படிப்பு முடியறவரையிலும் நாங்க அவனைக் கவனிச்சுக்கிறோம்” என்றேன் நான்.

ஆனா, பெரியவா ஒரு கண்டிஷன் போட்டார், “படிப்பு முடியறவரையிலும் வாரத்துக்கு ஒரு நாள் அவனுக்கு சாப்பாடும் இடமும் கொடுத்தால் போறும்”

இஷ்டமில்லாம சரின்னோம்; ஏன்னா, எங்களுக்குக் குழந்தை பாக்யம் இல்லே. அந்தப் பையனை நமக்கே நமக்கு வெச்சுண்டுடலாம்னு ஆசைப்பட்டோம்.
மேலும் பெரியவா, எங்களோட பக்கத்து வீடுகளில் வசிக்கும், பட்டம்மாள், கோகிலா ஆகிய ரெண்டு பேர் கிட்டேயும், அவாளும் ஒவ்வொருத்தரும் அந்தப் பையனுக்கு வாரம் ஒரு நாள் சாப்பாடும் இருக்க இடமும், படிப்பு முடியும் வரை ஏற்பாடு செய்யணும்னு சொல்லச் சொன்னார்.

பட்டம்மாளுக்கும் அவர் கணவர் துரையப்பாவுக்கும் அந்த வடக்குத் தேர் வீதியில் மூன்று வீடுகள் இருந்தன. அவைகளில் நடுவில் இருக்கும் வீட்டை நாங்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறோம். கோகிலாவும் அவர் கணவர் வக்கீல் சுப்ரமண்ய ஐயரும் எங்களுக்கு வலது பக்கம் உள்ள வீட்டை எடுத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் பெரியவாளின் பரம பக்தர்கள். பட்டம்மாவும் அவர் கணவரும் உயர்ந்த மனப்பானமை உள்ளவர்கள். பட்டம்மாள் பெரியவாளைப் பார்த்து ரொம்ப காலம் ஆச்சு. ஆனால், அவருக்குப் பெரியவாகிட்ட தொடர்ந்து ‘கம்யூனிகேஷன்’ இருக்கு. நாங்கள் பட்டம்மாளிடமும் கோகிலாவிடமும் பெரியவா சொன்னதைப் பற்றித் தெரிவித்தபோது அவர்களுக்கு ஒரே சந்தோஷம். உன்னோட விலாசத்தை மடத்திலிருந்து வாங்கிக்கொண்டு உன்னைக்கூட்டிண்டு போறத்துக்கு நேரே இங்கே வந்திருக்கோம்.” என்று அந்த அற்புத வரலாற்றை முடித்தார் அவர்.

லக்ஷ்மி மாமி தொடர்ந்தார், “நீ இந்த லோகத்திலேயே ரொம்ப அதிருஷ்டமானவன், ஏன்னா, கடவுளே, உன்னை நாங்கள் கவனிச்சுக்கற (TAKING CARE) அந்த வாய்ப்பு மூலம் அவருக்கே பிக்ஷை கேட்டிருக்கார். உன்னை நமஸ்காரம் பண்ணத் தோண்றது. எங்களோட வந்து இரு!”

எனக்கு ரொம்ப சங்கோஜமாகிவிட்டது. இந்த நம்ப முடியாத நிகழ்ச்சியைக் கேட்டபோது என்னுள் எழுந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பெரியவா இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வு என்னுள் எழுந்தது. இது என் ஆழ் மனத்தைப் போய் தொட்டது. அந்த பெரிய மனிதர்களுக்கு உடனே ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினேன்.

“பெரியவா இந்த ஏற்பாடு பற்றி எனக்குக் குறிப்பாகக்கூட சொல்லவில்லை. அவரைப் பார்த்த பின் வருகிறேன்” என்றேன்.

“உன்னை எங்களிடம் வைத்துக்கொள்ளும் இந்த வாய்ப்பை நீ எங்களுக்குக் கொடுக்கணும்” என்று சொல்லிவிட்டு தயக்கத்தோடு விடைபெற்றார்கள்.

எனக்கும் என் அக்காவிற்கும் மிகவும் குழப்பமாக இருந்தது. இதைப்பற்றி யோசிப்பதற்கு முன் அடுத்த நாள் ஒரு வயதான, சிறிய தோற்றமுள்ள மனிதர் என்னைக் காண வந்தார். அவர் தான் ஒரு மருத்துவ டாக்டர் என்றும் பெரியவாளைப் பார்த்துவிட்டு அப்பொழுதுதான் காஞ்சீபுரத்திலிருந்து வருவதாகவும் சொன்னார். அவரும் நேற்று அந்த தம்பதிகள் வந்து சொன்ன அதே கதையைக் கூறினார். அவரும் மரவியாபாரியான அவருடைய சஹோதர் மஹாலிங்கய்யரும் பெரியவாளுடைய பரம பக்தர்கள் என்றும், எனக்கு வாரத்தில் ஒவ்வொரு நாள் தங்க இடமும் சாப்பாடும் தருவது அவர்களுடைய ஒரு பெரிய பாக்யம் என்றும் சொன்னார். நான் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு பெரியவாளைப் பார்த்துப் பேசிவிட்டு அவரைக் காண வருவதாகவும் கூறினேன். அந்த டாக்டரின் பெயர் ஞாபகம் இல்லை. அதன் பின் கல்லூரிக்குச் சென்று விட்டேன்.

நான் கல்லூரியிலிருந்து திரும்பி வந்ததும், எனக்காக ஒரு இளைஞன் காத்துக்கொண்டிருந்தான். தன் பெயர் சுந்தரேசன் என்றும் கச்சேரித்தெரு ராஜம் மாமியின் இரண்டாவது பையன் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். “என்னோட அம்மாவுக்கு பெரியவாளை விடப் பெரிய தெய்வம் வேறொன்றுமில்லை. அந்த பகவானைத் தரிசனம் பண்ணிட்டு இப்பத்தான் காஞ்சீபுரத்திலேந்து வந்தார்” என்று கூறிவிட்டு, தொடர்ந்து நேற்று நான் கேட்ட அதே கதையைக் கூறினான். “அம்மா உங்களைப் பாக்க ஆவலோட காத்துண்டிருக்கா. வாரத்துக்கு ஒரு நாள் உங்களை எங்காத்தில வெச்சுக்கறதைப் பத்தி அவளுக்கு ரொம்ப சந்தோஷம்.” என்று முடித்தான் அந்த கலாசாலை மாணவன் சுந்தரேசன். பெரியவாளைப் பார்த்துவிட்டு அவரைப் பார்க்க வருகிறேன் என்று கூறி அனுப்பினேன். மேலும் மேலும் இதேபோல் நடப்பதைக்கண்டு எனக்கு ஒன்றும் புரியவில்லை. இன்னுமொருவர் இதே மாதிரி வருவதற்குள் பெரியவாளைப் பார்த்துவிட வேண்டும் என்று விரும்பினேன். அன்று இரவு ரயிலிலேயே காஞ்சீபுரம் புறப்பட்டேன்.

மறுநாள் காலை பெரியவா தன்னுடைய அனுஷ்டானங்களையெல்லாம் முடிக்கும் வரைக் காத்திருந்துவிட்டு அவர் முன் போய் நமஸ்காரம் பண்ணிவிட்டு நின்றேன்.

அவர் என்னைப் பார்த்த பொழுது, நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்தான் முதலில் பேச வேண்டும் என்று நினைத்தேன்.

சில நிமிஷங்கள் மௌனமாக இருந்துவிட்டு சொன்னார், “வாரத்தில ஒரு நாள் தவிர மத்த நாள்களுக்கெல்லாம் உனக்குத் தங்க இடமும், சாப்பாடும் ஏற்பாடு ஆயிடுத்து இல்லே?
இப்பொழுதும் நான் ஒன்றும் பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்தேன்.
மறுபடியும் சில நிமிஷங்கள் மௌனம்.

“ஒனக்கு நா செஞ்சிருக்கற ஏற்பாடு அவ்வளவா இஷ்டமில்ல போலன்னா இருக்கு?”

மறுபடி நான் மௌனம் சாதித்தேன்.
“இந்த அனுபவம் உன்னைக் கேவலப்படுத்தும்னு நீ நினைக்கறயோ என்னவோ? அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது. ஒன்னப் பாக்க வந்த ஒவ்வொருத்தரும் என்னுடைய பரம பக்தாள். அவா வீட்டுல உனக்கு ராஜோபசாரம் நடக்கும்.”

என் மௌனத்தைத் தொடர்ந்தேன்.

“நீ தமிழ்ல ஒரு நிபுணன் ஆச்சே! ஔவைப்பாட்டி சொன்னது ஒனக்குத் தெரிஞ்சிருக்கணுமே? ‘பிச்சை எடுத்தாலும் கல்வி கற்பது நன்று’ அப்படின்னு சொல்லியிருக்கா. என்னுடைய ஏற்பாடு பிச்சை எடுப்பது போலன்னு ஒனக்குத் தோணித்துன்னா அதுதான் ஒம்மனசை சஞ்சலப்படுத்தறதுன்னா, நான் சொல்றேன், நீ பிச்சை எடுக்கல்லே! ஒனக்காக நான் பிச்சை எடுத்தேன்.”

என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது!

நான் பெரியவாளைப் பார்க்கப் போனபொழுது இந்த ஏற்பாடு என்னை இழிவுபடுத்துவதாக இருக்கும் என்று நான் நினைத்ததால் இதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று நிச்சயம் செய்யவில்லை.
அந்த தெய்வம், “நீ பிச்சையெடுக்கல நான்தான் உனக்காகப் பிச்சையெடுத்தேன்” என்று சொன்ன போது என்னிடம் இருந்த அஹங்காரம் ‘நான்’ என்ற நினைப்பு எல்லாம் அந்தக் கணமே ஆவியாகிப் பறந்தது. அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, “நீங்க செஞ்சிருக்கற ஏற்பாட்டை நான் ஏத்துக்கறேன்” என்றேன்.

மீதி இருந்த இன்னும் ஒரு நாளைக்காக அந்த என் தெய்வம் மறுபடியும் பிச்சை எடுக்கலாகாது என்று முடிவு செய்து, ‘இன்னும் ஒரு நாளைக்கு என்னோட அக்கா வீட்டிலேயே தங்கிக்கறேன்’ என்றேன். மேலும் ஒரு நிமிஷங்கூட அவருக்கு முன்னால் என்னால் நிற்க முடியவில்லை. என்னுடைய உணர்ச்சிகள் கட்டுக்க்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. நான் புறப்பட்டேன்.
மறுபடியும் என்னை அழைத்து, “எனக்காக நீ இந்த ஏற்பாட்டை ஏத்துக்கறயா, இல்லேன்னா எப்படியாவது ஒன்னோட படிப்பை முடிக்கணும்கறத்துக்காகவா?” என்றார்.

“ரெண்டுக்குமேதான்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

அன்றிலிருந்து பெரியவாளை எனக்காக எதற்கும் தொந்தரவு செய்வதில்லை என்று முடிவு செய்தேன். என்னுடைய பிரார்த்தனையின் போதுகூட எனக்காகவோ என் குடும்பத்துக்காகவோ எந்த ஒன்றையும் நான் வேண்டவில்லை. டி.குளத்தூரிலே சின்னப் பையனாக இருந்தபோதே அவர் என்னை அனுக்ர்ஹித்திருக்கிறார் என்று இப்பொழுது நிச்சயமாக நம்பினேன்.

ஓரிக்கை கிராமத்தில் எனக்கு விஸ்வரூப தரிசனம் தந்திருக்கிறார்.

பாலாற்றங்கரையில் கீதோபதேசம் தந்தார்.

இப்போ எனக்காக பிச்சை எடுத்திருக்கிறார்.

இதில் எதையும் என்னால் எப்படி மறக்க முடியும்?
~ நான் கடவுளுடன் வாழ்ந்தேன் புத்தகத்தில் இருந்து சில துளிகள் டாக்டர் சுந்தர ராமன் மாமா அவர்கள்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s