I have to become like Periyavaa

ஏண்டா….அவன் என்ன சொன்னான்?

தேனம்பாக்க க்ஷேத்ரம். பெரியவா விஶ்ராந்தியாக கிணத்தடியில் அழகாக அவருக்கே உரிய பாணியில் உடலை குறுக்கிக் கொண்டு, கால்களை பின்னிக்கொண்டு அமர்ந்திருந்தார். அதிக கூட்டம் இல்லை. அனேகமாக எல்லாரும் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். யாருமில்லாத போதுகூட, எப்போதுமே, யாருக்காவது அனுக்ரஹம் நடந்துகொண்டே இருக்குமே!

பெரியவா தன் திருவிழிகளை சுழல விட்டார்……..

"ஏண்டா…..அங்க யாரோ நிக்கறாப்ல இருக்கே! என்னன்னு கேளு…….."

ஆம்! அங்கு ஒரு யுவா [இளைஞன்], கண்களில் பக்தி பரவஸம் மின்ன, இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பிக் கொண்டு தன்னை மறந்த நிலையில் பெரியவாளை தர்ஶனம் பண்ணிக் கொண்டிருந்தான்.

பாரிஷதர் அவனிடம் சென்று

" என்னடா…..கொழந்தே! பெரியவா தர்ஶனத்துக்குத்தான வந்த? கிட்டக்க போய் நன்னா தர்ஶனம் பண்ணிட்டு, நமஸ்காரம் பண்ணிக்கோப்பா! …"

அந்த பையனின் விழிகள் பெரியவாளை விட்டு அங்கே, இங்கே நகரவில்லை! இவர் சொன்னது அவன் காதில் விழுந்ததா என்றும் தெரியவில்லை!

"ஆமா…….ஒனக்கு என்ன வேணும்? கிட்டக்க போப்பா.."

பொட்டில் அடித்தது போல் பதில் வந்தது

" நா………..பெரியவா மாதிரி ஆகணும்!!"

ஈஶ்வரா !………

பாரிஷதருக்கு உள்ளுக்குள் பயங்கர கடுப்பு !

"இங்க பாரு….இந்த மாதிரில்லாம் ‘தத்துபித்து’ன்னு பெரியவாட்ட போய் கேக்கப்டாது! என்ன? புரிஞ்சுதா? "

அந்தப் பையன் இவரைப் பார்த்து முழித்த முழிப்பில், அவன் கேட்காமலேயே, ஏகப்பட்ட அர்த்தங்கள் த்வனித்த கேள்விகள் பிறந்தன!

"பின்ன? பெரிய சக்ரவர்த்திகிட்ட போய், உப்பு, புளி வேணும்னா கேப்பா?…பகவான்கிட்ட பகவானையே கேக்காம, அழியற ஶரீர ஸௌக்யங்களை, ஸுக போகங்களையா கேப்பா?….."

"ஸாதாரணமா எல்லாரும் கேக்கறா மாதிரி……வேலை, ப்ரமோஷன், கல்யாணங்கார்த்தி, வ்யாதி ஸொஸ்தம், படிப்பு, பதவி…ன்னு இப்டித்தான் கேக்கணும். என்ன? ஸரியா?…"

பையன் "ஒங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதான்!.." என்பது போல் அவரைப் பார்த்தான்.

"வா…………"

பெரியவா முன்னால் நின்ற இளைஞன், பெரியவாளுக்கு நான்கு முறை நமஸ்காரம் பண்ணினான். பேச்சே வரவில்லை! கண்கள் பெரியவாளின் அம்ருதவதனத்தை ஆனந்தமாக பருகிக் கொண்டிருந்தன!

இவன் வாயை திறந்து ஏதாவது ‘ஏடாகூடமாக’ கேட்டுவிடப் போகிறானே என்று, பாரிஷதர் தானே முந்திக்கொண்டார்……

"இந்த பையனுக்கு பெரியவா அனுக்ரஹம் வேணுமாம்………"

உரத்த குரலில் அவனுக்கு பதிலாக பேசி விட்டார். பெரியவாளுக்கு ‘வயஸான’தால் காது கேட்பதில்லை என்று எல்லோருமே சற்று உரக்க பேசுவார்கள் !

["காது கேக்காதுன்னு, கத்தியா பேசற? இரு…சொல்றேன்!…"]

பையனுக்கு ப்ரஸாதம் குடுத்தார். சென்றுவிட்டான்.

இனிதான் சூடு! பாரிஷதரிடம்,

" ஏண்டா……அவன்ட்ட ரொம்ப நேரமா பேசிண்டிருந்தியே?……என்ன சொன்னான்?"

பாரிஷதரின் தொடை லேஸாக நடுங்குவது போல் இருந்தது.

என்னத்தை சொல்றது? உண்மையையா? பொய்யையா?…….

ஸத்யஸ்வரூபத்திடம் பொய்யா?

"………….வந்து, அவனுக்கு….பெரியவா மாதிரி ஆகணுமாம்! ……"

"நீ என்ன பதில் சொன்ன?…"

"……………."

"இந்த மாதிரில்லாம் தத்துபித்துன்னு பெரியவாட்ட கேக்கப்டாது….ன்னு சொல்லிட்டியோ?"

ஸுமார் 25 அடி தள்ளி நின்று பேசியது…..!!!

"கடவுளே! தூண்டிலில் அகப்பட்டாச்சு. இவருக்கா காது கேட்காது? எல்லா தெசைலயும் கோடிகோடியா காதுகளும், கண்களும், கைகளும் வெச்சிண்டு, நம்ம முன்னால, ஒரு ‘ஸ்வாமிகள்’னு ஒரு வேஷம் போட்டுண்டு, காஷாயம் கட்டிண்டு உக்காந்துண்டு இருக்காரே!…வகையா மாட்டிண்டேனே!"

"ஆ……..மா…..பெரியவா"

‘அப்பாடா! எப்படியோ உண்மையை பேசியாச்சு !’
மனஸ் லேஸாகியது. [அதுதான் ஸத்யத்தின் சிறப்பு]

ஆனால், அதோடு விட்டாரா?

இதோ ஒரு ‘குண்டு’ வருகிறது……

"நீ…அப்டி சொல்லியிருக்கப்டாது. அவன் ஏன் அப்டி கேட்டான்னு ஒனக்கு தெரியுமோ? ஒனக்கு என்ன தோணியிருக்கும்?……… அவன் என்னை மாதிரி பீடாதிபதியா ஆகணும்னு ஆசைப்படறதா நெனைச்சிண்டியோ?…குரு பீடத்ல ஒக்காந்துண்டுட்டா….. எல்லாரும்… ப்ரைம் மினிஸ்டர்லேர்ந்து……க்ரைம் மினிஸ்டர் வரை வந்து நமஸ்காரம் பண்ணுவா…. காணிக்கை குடுப்பா…….ஸாமான்ய விஷயத்த சொன்னாக் கூட, அதை வேத வாக்கா எடுத்துண்டு பேப்பர்ல போடுவா….இப்டி நெனச்சு ஆசைப்பட்டுட்டான்னு தோணித்தோ?…….."

பாரிஷதர் மனஸை அப்படியே படம் பிடித்துக் காட்டும் போது, ‘அதெல்லாம் இல்லை’ என்று பொய் சொல்லவா முடியும்?

"………அதையே அந்த பையன் வேற விதமா ஏன் ஆசைப்பட்ருக்கக் கூடாது? இவர் பெரிய ஞானி…பக்தர், வேதஶாஸ்த்ர புராணங்கள்ள கரை கண்டவர்…..இவர் பேரை சொல்லிண்டு நெறைய நல்ல கார்யங்கள் நடக்கறது, கோவில் கும்பாபிஷேகங்கள் நடக்கறது, க்ராமியக் கலைகள் அபிவ்ருத்தியாறது….இப்பிடில்லாம் இருந்தாலும், அவர் கொஞ்சமும் கர்வமில்லாமல், தாமரை எலை தண்ணீர் மாதிரி இருக்கார்…….நானும் அந்த மாதிரி ஆகணும்! ஞானியா ஆகணும்!…ன்னு நெனைச்சிருக்கலாமில்லியோ?…."

நீண்ட பேச்சாக பெரியவா ரொம்ப நாளைக்கப்புறம் பேசியதால், பாரிஷதருக்கு கேட்க ஆனந்தமாகவும் இருந்தது. அதே ஸமயம் பட்டவர்தனமாக [தன்னைப்பற்றிய ஸத்ய விளக்கம்] எல்லாருக்கும் தெரிந்த பெரிய உண்மையை போட்டு உடைத்தார்!

பாரிஷதருக்கு வியர்த்துக் கொட்டியது.

"போ ! போயி அந்த பையன கூட்டிண்டு வா"

எங்க போய் தேடறது? எங்க போனானோ? நாலாபுறமும் தேடிக் கொண்டு போனார்.

அதோ! அப்பாடா! ஶிவன் கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருந்தான்!

"கொழந்தே! பெரியவா கூப்டறா…."

அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டி போல் தாயை தேடிக் கொண்டு ஓடினான்……அந்தக் குழந்தை.

ஏறக்குறைய ஐந்து நிமிஷம் பெரியவாளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ! பெரியவாளும் நடுநடுவே அவனை கடாக்ஷித்தார் …….நயன தீக்ஷை நல்கினார்……

"டொக்…."

பெரியவாளின் விரல் சொடுக்கில் குறிப்பறிந்த பாரிஷதர், ஒரு தட்டில் ஒரு பழத்தை வைத்து பெரியவாளிடம் கொடுத்தார். அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். சில நிமிஷங்கள் பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த [ஞான] பழம், பையனுக்கு பெரியவாளாலேயே அனுக்ரஹிக்கப்பட்டது!

அரிய ஞானப்பழமாக அதை அன்போடு எடுத்துக்கொண்டு, நமஸ்கரித்துவிட்டு வேகமாக போய் விட்டான் அந்த யுவா! இல்லை! ஞானி!

மஹான்கள் தங்கள் கைகளால் நமக்கென்று கொடுத்த எதையும் ஸாதாரணமாக உடனே பங்கு போட்டு யாருக்கும் கொடுக்காமல், வாங்கிக் கொண்டவர் மட்டுமே ஸ்வீகரித்துக் கொள்ளுவதுதான் உத்தமம்! இது ஸுயநலமில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக, மஹான்களால் ஸங்கல்பிக்கப்பட்டு, தனியாக கொடுக்கப்பட்டது என்பதால், அதன் காரணத்தை அந்த மஹா புருஷர்களே அறிவார்கள்.

கர்மாவை கழிக்க பூமியில் பிறந்தாச்சு! கஷ்டமில்லாம ஓரளவு ஸௌகர்யமான வாழ்க்கை அமைஞ்சாச்சு! எல்லாத்துக்கும் மேல, கஷ்டமான ஜீவிதமோ, ஸுக ஜீவிதமோ, மஹா மஹா அவதாரமான பெரியவாளோட தர்ஶனமோ, ஸ்மரணமோ நிறையாவே கிடைச்சாச்சு! அவர் மேல அப்படியொரு அன்பும், பிடிப்பும் வந்தாச்சு! அவர் உபதேஸிப்பதை கடைப்பிடிக்கும் ஸௌகர்யமும் இருக்கு! பெரியவாதான் பகவான், காமாக்ஷி, ஶிவன், நாராயணன், பரப்ரஹ்மம் எல்லாம் தெரிஞ்சுண்டாச்சு! அப்படியிருந்தும், இன்னும் எது நம்மை பிடிச்சு இழுக்கறது, பூர்ணமா அவரே கதின்னு, அத்தனையையும் மனஸளவில் உதறிவிட்டு, அவரை ஶரணடைய?

மாயை! இதுதான் நம் பதிலாக இருக்கும். பெரியவாளை விட மாயை powerful-லா என்ன?

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s