Shiva putting Rishaba symbol in Pandya Kingdom

சிவாயநம.{திருசிற்றம்பலம்
*கோவை.கு.கருப்பசாமி*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*(165–வது நாள்.)*
🍁 *திருவிளையாடல் புராணத் தொடர்.* 🍁
*34–வது படலம்.*
*விடை இலச்சினை இட்டது.*
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
குலபூஷண பாண்டியன் மதுரையை ஆண்டு வந்த காலத்தில் காஞ்சிமா நகரத்தைக் காடுவெட்டிய சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.

அவன் காஞ்சிப் புறமுள்ள காடுகளை வெட்டித் திருத்தி நகரம் கண்டதால் அப்பெயர் பெற்றான்.

அச்சோழ.மன்னன் உத்தம சிவ பக்தர்களுக்குள்ளே உத்தமமான சிவபக்தன் திருநீறும், உருத்திராட்ச மாலையும் இலங்கிய மேனியான் அவன்.

சிவபெருமானே எல்லாவற்றுக்கும் மேலான பொருள் என்பதைத் தெரிந்து உறுதி கொண்டவன்.

வேத வேதாந்தங்களை நன்றாக ஓதி உணர்ந்தவன். சிவ புண்ணியக் கதைகளை நாள்தோறும் செவிமடுப்பவன். சிவ லீலைகளைக் கேட்டு உளம் களி கூர்பவன்.

சோமசுந்தரப் பெருமானை மதுரை சேர்ந்து தொழ வேண்டுமென்று பெருங்காதல் கொண்டான் காடு வெட்டிய சோழன்.

நாளாக நாளாக மதுரைச் சொக்கநாதர்பால் கொண்ட பக்தி முறுகியது. "எப்போது நான் மதுரைப் பெருமானின் சேவடி காண்பேன்?" என்ற சிந்தனையோடு ஓர் இரவிலே நித்திரை செய்தான்.

மதுரைப் பெருமான் சோழனது கனவிலே சித்த மூர்த்தியாகத் தோன்றி, சோழனே! நீ பயம் கொள்ள வேண்டாம். மாறு வேஷம் போட்டுக் கொண்டு நீ தன்னந்தனியனாய் இன்றே புறப்மட்டு மதுரைக்கு வா;; வந்து எம்மைத் தரிசனம் செய்து திரும்பலாம்,;; என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

காடுவெட்டிய சோழனும் சித்தப் பெருமானையும் அவர் திருமொழியையும் சிந்தித்தபடியே விழித்துணர்ந்தான்.

பெரிதும் வியப்புற்றான். தன்னந்தனியாக அவ்விரவு நேரத்திலே தன் நகர் நீங்கி மதுரை நோக்கிப் புறப்பட ஆயத்தமானான்.

சிவபக்தியைக் குதிரையாகக் கொண்டான். பஞ்சாட்சர மகா மந்திரத்தையே தனது உடைவாளாகக் கொண்டான். மதுரையை நோக்கித் தனி வழி ஏகினான்.

பலவகை நிலங்களையும், மலைகளையும், ஆறுகளையும் கடந்து, வையை நதியின் கரையை வந்தடைந்தான். வையை நதியிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.

ஆற்றின் கரையிலே நின்று வெள்ளப் பெருக்கினைக் கண்டு கவலையோடு நின்றான் சோழன்.

"சோமசுந்தரப் பெருமானைத் தரிசிக்க வந்த தருணம் பார்த்து இவ் வெள்ளப் பெருக்கு இடையூராக வந்ததே! கைக்கெட்டியது வாய்க்கெட்டாது போய்விடுமோ?

சூரியோதயம் ஆகிவிட்டால் பகைவனான பாண்டியன் எனக்குத் துன்பம் இழைப்பான். பாண்டியனை மட்டுமே பகையாளி என்று எண்ணினேன். இந்த ஆறும் பகையாகி விட்டதே," என்று கருதி மனம் நைந்தான்.

சோழனது பெருங் கவலையை நன்குணர்ந்த சிவபெருமான் கருணை கொண்டு சித்தமூர்த்திக் கோலம் தரித்து அவன் பக்கத்திலே வந்து நின்றார்.

வையை யாற்றிலே நீர் வற்றிப் போகும்படி கடாக்ஷம் செய்தார். வெள்ம் வற்றிப் போனது.

சோழ மன்னனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு ஞித்தப் பெருமான் வையை நதியைக் கடந்து சென்றார்.

மதுரைக் கோட்டையை அடைந்து அதன் வடக்கு வாசலைத் தன் திருவருளால் திறந்தார்.

உள்ளே புகுந்து கட்டுக் காவல் எல்லாவற்றையும் மீறிப் பல வீதிகள் கடந்து திருக்கோவில் புகுந்தார்.

கோவிலிலுள்ள பொற்றாமரைத் தீர்த்தத்திலே சோழனை நீராடச் செய்தார். பிறகு உள்ளே சென்று சொக்கநாதரையும் மீனாட்சியம்மையாரையும் தரிசிக்கச் செய்தார்.

சித்த மூர்த்திகளின் திருவருளால் அம்மையாரைக் கண்ட சோழன், தூய்மையும், இன்பமும் நிரம்பப் பெற்றான்.

சுந்தரப் பெருமானையும், மீனாட்சியம்மையாரையும் உளமாரத் தரிசனம் செய்த சோழன் பேரின்பத்திலே மூழ்கியவனாகி, "முதல்வா போற்றி! அடியவர்க் கெளியவனே போற்றி! எளியவர்கள் எண்ணிய எண்ணியாங்கு எய்துமாறு அருள் புரியும் தனிப்பெரும் பொருளே போற்றி!" என்று பல தோத்திரம் கூறித் துதித்தான். பல நல் வரங்களையும் வேண்டிப் பெற்றுக் கொண்டான்.

பின்னர் சித்தர் பெருமான் சோழனைப் பார்த்து, "மன்னவனோ, நீ இங்கு வந்துள்ள செய்தியைத் தெரிந்தால் பாண்டியன் உனக்கு இன்னல் செய்ய நேரிடலாம், "என்று சொன்னார்.

பிறகு, அவனை வந்தவாறே அழைத்துச் சென்று வடக்கு வாசல் வழியே விட்டுச் சென்று வையையின் வடகரையிலே சேர்த்தருளினார்.

அவனது நெற்றியிலே திருநீற்றைச் சாத்தி, "உள்ளம் நிறைவு பெற்ற உனக்கு நல்ல துணை கிடைக்கும்!" என்று ஆசி கூறி வழியனுப்பினார்.

சித்த மூர்த்தி திரும்பி வந்து தான் முன்பு திறந்து கொண்டு வந்த வடக்கு வாசற் கதவுகளை மூடி, அதனிடத்தே ரிஷப மூர்த்தியை வேத்து தான் விமானத்துள் மறைந்தருளினார்.

விடிந்தது. மதுரைக் கோட்டையின் நான்கு வாசல்களும் திறக்கப்பட்டன. வடக்கு வாசலிலே ரிஷபக் குறி இருந்ததைக் காவலாளிகள் கண்டனர்.

மற்ற வாசற் கதவுகளிலே மீனக்குறி இலங்கி நின்ற போது வடக்குப் புறக் கதவுகளிலே புதுக்குறி எப்படி வந்தது என்பது எவருக்குமே புரியாது விழித்தனர்.

"இந்த நிகழ்ச்சி எதிலே சென்று முடியுமோ?" என்று அஞ்சிய காவலாளிகள், ஓடோடியும் சென்று பாண்டியனை வணங்கி, "மாமன்னரே! நமது வடக்கு வாசற் கதவிலே இருந்த மீன் குறியை முற்றிலும் மாற்றி ரிஷபக் குறி இடப் பெற்றுள்ளது.

இப்படித் துணிந்து செய்தது யார் என்பது எங்களுக்குத் தெரியாது; மன்னிக்க வேண்டும்!" என்று சொல்லினர்.

பாண்டியனும் சென்று வடக்குப்புறக் கதவிலே விடை இலச்சினை இடப்பட்டிருப்பதைக் கண்டான். "ஏதோ அற்புதம் அல்லவா நிகழ்ந்துள்ளது!

இந்த மாயத்தைச் செய்தது யார்? ஏதும் விளங்கவில்லையே," என்று சந்தேகப்பட்ட மனத்தவனாய் அரண்மனைக்குச் சென்றான்.

அன்று பகலில் பாண்டியன் உணவு கொள்ளவில்லை. இரவிலும் உணவு கொள்ளாமல் படுக்கையை வெறுத்து நிலத்திலே நித்திரை போனான்.

சிவபெருமான் கனவிலே தோற்றம் காட்டியருளினார். "குலபூஷணா! காஞ்சிப் பதியிலுள்ள காடுவெட்டிய சோழன் நம்பால் நிரம்பப் பக்தியுடையவன்.

அவன் மதுரைக்கு வந்து நம்மைத் தரிசித்து வணங்க விரும்பினான். நாம் அவனை வடக்கு வாசலைத் திறந்து உள்ளே கூட்டி வந்து தரிசனம் செய்வித்தோம்.

அவனை மீண்டும் வெளியே அனுப்பிவிட்டுக் கதவினைத் தாழிட்டு நமது விடை இலச்சினையை இட்டோம்!".என்று திருமொழி பகர்ந்தருளினார்.

குலபூஷண பாண்டியன் விழித்தெழுந்தான். அவனது சந்தேகம் விலகியது. அஞ்சினான். வியர்த்தான். பூரிப்படைந்து பலவகைப் பாடல்களாலே சோமசுந்தரப் பெருமானைத் துதித்தான்.

பக்தனுக்காக எளிமையுற்று வந்த பெருமானின் பெருந்தன்மையை எண்ணி எண்ணிச் சிவானந்தத்திலே
மூழ்கினான்.

சோமசுந்தரப் பெருமானின் திரு சன்னதியை அடைந்து துதி செய்தான். எல்லாரிடத்திலும் எம்பெருமானது திவ்ய திருவிளையாடலைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தான்.

பல நாட்கள் சென்றன. குலபூஷண பாண்டியன் தனது குமாரன் இராஜேந்திர பாண்டியன் வசத்திலே தனது கொற்றக் குடையும், செங்கோலையும், மகுடத்தையும் அளித்து விட்டுப் பேரமைதி கொண்ட உள்ளத்தோடு சிவலோகம் சேர்ந்தான்.

. திருச்சிற்றம்பலம்.

*திருவிளையாடல் புராணத் தொடர் இன்னும் நாளையும் வ(ள)ரும்.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s