Lad giving spiritual discourses – Thirukameeswaran

See the article below which was published in Sakthi Vikatan

சிவனருட்செல்வன் – சிவப்பணியால் சிந்தை மகிழ்விக்கும் சிறுவன்

ஜெ.முருகன்
புதுச்சேரி… வில்லியனூர்…

சூரியதேவன் விடைபெறும் மாலை நேரம்…

நாம் திருக்காமீஸ்வரர் கோயில் பக்கமாகச் சென்று கொண்டிருந்தோம். மழலை மாறாத ஒரு குரல், யாழிசையையும் பழிக்கும்வண்ணம் நம் காதுகளில் ஒலித்தது. அந்தக் குரலின் வசீகரத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகக் கோயிலுக்குள் செல்கிறோம். அங்கே, அந்த மழலைக் குரலின் வசீகரத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகப் பல பெரியவர்களும் சிறியவர் களும் திரளாக அமர்ந்து, அந்த பாலகனின் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

திருஞானசம்பந்தருக்கு அம்மை அருள்பாலித்த புராணத்தை விவரித்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.

“…சீர்காழி, பிரம்மதீர்த்தக் குளம். கரையிலே மூன்று வயதுக் குழந்தையான ஞானசம்பந்தர். தந்தை சிவபாத இருதயர் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கிறார். தந்தை நீரில் மூழ்கியதும், அப்பாவைக் காணவில்லையே என ஏங்கி அழுகிறது குழந்தை. கோயில் கோபுரமும் குளமும் மட்டும்தான் குழந்தையின் கண்களுக்குத் தெரிகிறதே தவிர, அப்பா தெரியவில்லை. குழந்தை என்ன செய்யும்..? அழும். ஞானசம்பந்தரும் அழுதார். எப்படி? `அம்மே… அப்பா…’ என்று. ஞானசம்பந்தர், சாட்சாத் முருகப்பெருமானின் அம்சம் அல்லவா? அன்னை பார்வதி, குழந்தையின் ஏக்கக் குரலில் கரைந்துபோனாள்.

உடனே ஓடோடி வந்தாள். குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, பொற்கிண்ணத்தில் பாலோடு ஞானத்தையும் சேர்த்தே ஊட்டினாள். சிவபாத இருதயர் குளித்து முடித்து, கரைக்கு வந்தார். பொற்கிண்ணத்தில் மீதமிருந்த பாலை ஞானசம்பந்தர் அருந்துவதைப் பார்த்தார். ‘எச்சில் பாலை அருந்துகிறாயே… யார் தந்தது?’ என ஒரு குச்சியை எடுத்து ஓங்கிக் குழந்தையை அதட்டினார். குழந்தை கோயில் கோபுரத்தை நோக்கித் தன் சுட்டுவிரலை நீட்டிப் பாடியது…

`தோடுடைய செவியன் விடை
யேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்
உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே…’ ’’

இங்கே அந்த ஞானசம்பந்தராகவே மாறி, பாலகன் பாடப் பாட, கூட்டத் தோடு சேர்ந்து நாமும் நெகிழ்ந்து, உருகிப் போகிறோம்.

யார் இந்த பாலகன்?

‘அலகிலா விளையாட்டுடையான்’ என்று போற்றப் பெறும் அந்த சிவப் பரம்பொருளின் திருவருளைப் பூரணமாகப் பெற்றிருக்கும் அந்த பாலகன் திருக்காமீஸ்வரன்.

ஏழு வயதே ஆன அந்த பாலகன், இப்படிப் புராணப் பிரசங்கங்கள் நிகழ்த்தி, அதன் மூலம் சேரும் தொகையை அப்படியே திருக்கோயில் உழவாரப் பணிகளுக்காக வழங்கிய நன்கொடை இதுவரை ஒன்றரை லட்சம் ரூபாய். கடந்த ஆண்டு வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது, திருப்பணிகளுக்காக அந்த பாலகன் வழங்கிய நன்கொடை மட்டும் ரூ.85,000/- அத்தனையும் ‘ஆன்மிகச் சொற்பொழிவு’ என்கிற இறைப்பணி மூலம் அவன் திரட்டிய பணம்!

புதுச்சேரி, சாலியமேடு கிராமத்தில் உள்ள அருள்மிகு திருமுறை நாயகி உடனுறை அருள்மிகு ஜோதிலிங்கேஸ் வரர் ஆலயத்தில் நடைபெற இருந்த உழவாரப் பணிகளுக்கான உபகரணங்களை வழங்க விரும்பினான் திருக்காமீஸ்வரன். அது பற்றிக் கேள்விப்பட்ட புதுவை சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி, நேரிலேயே கோயிலுக்குச் சென்று திருக்காமீஸ் வரனிடம் இருந்து உபகரணங்களைப் பெற்றுக்கொண்டு, கௌரவப்படுத்தினார்.

அதேபோல், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் திருப்பணிக்கு நன்கொடை வழங்க, சமூகநலத் துறையின் முன்னாள் அமைச்சர் ராஜவேலுவைச் சந்திக்க நேரம் கேட்ட போது, ‘‘நன்கொடையை இங்கேபெற்றுக் கொள்வது முறையல்ல. நானே கோயிலுக்கு வந்து பெற்றுக்கொள்கிறேன்’’ என்று சொல்லி, அப்படியே செய்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, திருக்காமீஸ்வரனை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார்.

திருக்காமீஸ்வரனின் தந்தை ஆனந்தனிடம் பேசினோம். தன் மகனை `அவர்’, ‘இவர்’ என்றே குறிப்பிடுகிறார்.

“எனக்கும் என் மனைவிக்கும் இறை வழிபாட்டில் அதீத ஈடுபாடு உண்டு. திருக்காமீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே வீடு என்பதால் அடிக்கடி கோயிலுக்கு வருவோம். இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜைக்கு, கருவுற்ற காலத்தில் தவறாமல் வந்து விடுவார் என் மனைவி. திருக்காமீஸ்வரன் பிறந்தபோது, அந்த ஈசனே எங்களுக்கு மகனாகப் பிறந்துவிட்டதாக எண்ணி, இறைவன் பெயரையே சூட்டினோம். இவர் பிறந்ததும், மூன்று வயது வரை, மருதூரில் இருக்கும் தாத்தா-பாட்டி வீட்டில்தான் வளர்ந்தார். சினிமா பாடல்களை முணுமுணுக்கும் வயதில், இவர் சிவபுராணம் பாடத் தொடங்கினார். பள்ளி விட்டு வந்து, வீட்டுப் பாடங்களை முடித்ததும், மூவரும் கோயிலுக்குச் செல்வோம்.

கோயிலில் சூரசம்ஹாரம் நடக்கிறதா… ‘இது ஏன் நடக்கிறது? இதன் தாத்பர்யம் என்ன?’ என்று கேட்பார். சிவபுராணச் சொற்பொழிவு அரங்கேறுகிறதா… ‘இந்தக் கதை என்ன?’ என்று விசாரிப்பார். இப்படி மெள்ள மெள்ள தேவார, திருவாசகப் பாடல்களையும் அதன் வரலாற்றையும் தெரிந்துகொண்டு, இவரே அதை சொற்பொழிவாக ஆற்றும் திறமையை வளர்த்துக்கொண்டார். திருக்கோவையார், பெரியபுராணம் உள்ளிட்ட 12 திருமுறைகளில் உள்ள சில பாடல்களை அட்சர சுத்தமாகப் பாடவும் கற்றுக்கொண்டார்.

புதுச்சேரி மட்டுமல்ல… தமிழகத்தின் பல கோயில்களில் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் திருவிழாக்களில் சொற்பொழிவு ஆற்றுகிறார். எந்த நிகழ்ச்சிக்கும் இவ்வளவு பணம் வேண்டும் என்று நாங்கள் கேட்பது இல்லை. அவர்களாக மனமுவந்து அளிக்கும் நன்கொடையை மட்டும் பெற்றுக்கொள்கிறோம். அதையும் இவர் கோயில்களின் உழவாரப் பணிகளுக்கும் திருப்பணிகளுக்கும் கொடுத்துவிடுகிறார்’’ என, ஆனந்தன் சொல்லிக்கொண்டிருந்தபோதே, அருகில் வந்தான் திருக்காமீஸ்வரன்.

‘குழந்தைச் சாதனையாளர்’, ‘குழந்தை சம்பந்தன்’, ‘அருள்செல்வன்’, ‘திருமுறைச் செல்வன்’, ‘தேவார நன்மணி’ எனப் பல பட்டங்கள் பெற்ற அந்த ஞானச் சிறுவனிடம் பேச்சு கொடுத்தோம்.

‘‘எப்படி உங்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டது?’’

“ஈஸ்வரனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுடன் கோயிலுக்கு வருவேன். வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் அம்பிகை வழிபாட்டில் பாடப்படும் லலிதா நவரத்தின மாலை, அபிராமி அந்தாதி, துக்க நிவாரண அஷ்டகம் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றை நானும் பாடக் கற்றுக் கொண்டேன்.

எந்தப் பாடலை யார் பாடினார்கள், அதன் வரலாறு என்ன என்பதையும் தெரிந்து கொண்டேன். ஏதோ, எனக்குத் தெரிந்ததைப் பாடுகிறேன்; பேசுகிறேன். எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறேன். அவ்வளவுதான்! மற்றபடி, என்றென்றைக்கும் ஈஸ்வரன் என்னுடனே இருக்கிறான். அந்த உணர்வு என் உள்ளத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதுவே எனக்குப் போதும்’’ என, முதிர்ச்சி நிரம்பிய தொனியில், அதிராமல் பேசிய திருக்காமீஸ்வரன், ஸ்ரீகுமரகுருபரர் அருளிய `சகலகலாவல்லி மாலை’யில் உள்ள பதிகம் ஒன்றைப் பாடினான்.

“வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே…’’

திருக்காமீஸ்வரன் கண்களை மூடி, கைகூப்பிப் பாடப் பாட, மழலையும் இனிமையும் நிரம்பிய அந்தக் குரல் நம் காதுகளின் வழியே, இதயத்தையும் மனசையும் இதமாக நிரப்பியது.

அதனால் உண்டான மனநிறைவோடு விடைபெற்றோம், சிவனாரின் திருக்கோயிலில் இருந்தும், சிவனருட்செல்வனிடம் இருந்தும்!

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s