tiruvilayadal 17th day

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍃 திருவிளையாடல் புராணத் தொடர். 🍃
(எளியநடை சாிதம். 17-வது நாள்.)
💐 இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.💐
(14-வது படலம்)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
உக்கிர பாண்டியப் பெருவழுதி செங்கோல் ஆட்சி செலுத்தி வந்த காலத்திலேயேயும் கோள் நிலை திரிந்தது. மாாிவறங் கூர்ந்தது. மேகங்கள் மழை பெய்யாது நின்றன. பயிர்கள் கருகின. சேர சோழ பாண்டியமென்னும் முத்தமிழ் நாடுகளிலும் வறுமைப் பிணி வாட்டி வதைத்தது.

அது கண்டு உளம் நொந்த முத்தமிழ் வேந்தரும் பாிகாரம் காணும் பொருட்டு அகஸ்திய மாமுனிவரைக் காணுமாறு பொதியமலையை அடைந்தனர்.,குறுமுனிவரிடம் தமது வறுமைக் கதையைக் கூறினார்.

அகஸ்தியர் கிரக நிலையை ஆராய்ந்தார். "மூவேந்தர்களே! இனி மழை பொழிய வகையில்லை. கிரகாசாரப்படி பன்னிரன்டு வருஷங்களுக்கு மழையே பெய்யாது. ஆகையால் நீங்கள் மழைக்கதிபனாகிய தேவேந்திரனிடம் சென்று முறையிடுதலே நல்லது, "என்றார்.

"தேவேந்திரனைக் கண்டு வரச் சுவர்க்கலோகத்திற்கு எவ்வாறு நாங்கள் செல்ல இயலும்?" என்று மூவேந்தரும் வினவினர்.

அப்போது அகஸ்திய மகரிஷி, " நீவிர் சோமவார விரதம் அனுஷ்டித்து வெள்ளியம்பலவாணரான நடராஜப் பெருமானின் திருவருள் பெற்று வான வழி செல்வீரா!" என மொழிந்தார்.

பின்னர் குறு முனிவர் சோமவார விரதம் நோற்கும் முறைகளைச் சாங்கோபாங்கமாக எடுத்து விளக்கத் தொடங்கினார். "சிறந்த,தேவருள் சிறந்த தேவர் சிவபெருமான். சிறந்த சக்திகளுள் சிறந்த சக்தி உமாதேவியாரே. சிறந்த விரதங்களுள் சிறந்து விளங்குவது சோமவார விரதமே.

சோமவாரம் சோமசுந்தரக் கடவுளுக்கே உரிய நன்னாள். சிவபெருமான் உமையோடு இசைந்திருப்பதால் சோமன் என்று அழைக்கப்படுகிறார். மதுரையிலே இச்சோமவார விரதம் நோாற்றல் சாலவும் நன்று. அமாவாசைச் சோமவாரமாக இருந்தால் பெரும் பயன் அளிக்கும். , என்று கூறி அம்மாமுனிவர் விரத வகைகளையும், செய்முறைகளையும் முடிக்கும் முறையையும் விரித்துக் கூறினார்.

சோமவார விரத மகிமையினை அகஸ்திய முனிவர் விளக்கம் செய்யக் கேட்ட முத்தமிழ் வேந்தரும் அவரை வணங்கி விடை பெற்று, சோமசுந்தர ஷேத்திரமாகிய மதுரையம்பதிக்கு வந்து சேர்ந்தனர். பொற்றாமரைத் திருக்குளத்திலே நீராடிய பின்னர் சோமசுந்தரப் பெருமானையும் மீனாட்சியம்மையையும் உளமார துதித்து, சோமவார விரதத்தினை மேற்கொண்டு, அதனைச் செவ்வையாகச் செய்து முடித்தனர்.

விரதத்தின் பலனைப் பெற்ற சேர,சோழ, பாண்டியமன்னர் மூவரும்வான வழியே சென்று சுவர்க்கம் புகுந்து தேவேந்திர நகரை அடைந்தனர். தேவேந்திரன் முப்பெரு மன்னர் இருக்கும் பொருட்டு மூன்று சிங்காதனங்களை,இடச் செய்தான். அவர்களது ஆசனங்கள் தாழ்வானவையாக இருந்தன.

சேரனும், சோழனும் இட்ட அரியணையின் மீதமர்ந்து விட்டனர். ஆனால் உக்கிர பெருவழுதி மட்டும் இருக்கையின் தாழ்ச்சியை உணர்ந்து இந்திரனது சிம்மாசனத்தில் ஏறி அவனுக்குச் சமமாக அமர்ந்து கொண்டார்.

இது கண்டு பொறாத தேவர்கோன் சேரனையும், சோழனையும் மட்டுமே நோக்கி முகமன் கூறி,," வந்த காாியம் யாது?" என வினவினான்.

அவர்கள் தனது நாட்டிலே மழையின்மையால் பஞ்சம் மலிந்து தெரிவித்து, மழை வேண்டி நின்றனர். இந்திரன் மகிழ்ந்தான். அவ்விருவர் நாடுகளில் மட்டும் மழை பெய்ய அருளினான். அவர்கட்குப் பொன்னணி, நல்லாடை தந்து விடை கொடுத்தனுப்பினான்.

சேர, சோழ மன்னர்கள் சென்ற பின்பு, இந்திரன் உக்கிர பாண்டியன் கர்வத்தோடு தன்னருகே அமர்ந்திருப்பதையும், மேற்கொண்டு மழை வேண்டாதிருக்கும் பெருமிதத்தையும் உன்னிச் சூழ்ச்சியென்று கருதினான்.

மிகவும் உயர்ந்த சிறப்புச் செய்வனைப்போல, பல ஏவலர் தாங்கி வந்த முத்துமாலை ஒன்றைப் பாண்டியனபக்கு அன்புடன் கொடுத்தான்.

வழுதியும் அம்மாலையை ஏற்றுப் பூமாலையைப் போல அணிந்து கொண்டார். பெரும் பாரம் கொண்ட முத்துமாலையைத் தாங்கி வழுதியிருக்கும் பான்மை கண்ட இந்திரன் வியந்து, "ஆரம் தாங்கு பாண்டியன்" என்று அழைத்தான். உக்கிரவர்மர் அப்பெருமையைச் சிறிதேனும் இலட்சியம் செய்யவில்லை. மதுரையூருக்கு மீண்டு விட்டார்.

இந்திரன் ஆணையாலே சேரமும் சோழமும் மழை நிரம்பப் பெற்று வளமிக்கோங்கின. பாண்டியத்திலே மழை பொழிவைக் காணவில்லை. வற்கடம் நிலைத்தது.

உக்கிர பெருவழுதி ஒரு நாள் பொதிய மலையைச் சார்ந்த சந்தன வனத்திலே விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தார். அதுசமயம் புஷ்கலா வருத்தம், சங்காரித்தம், துரோணர், காளமுகி என்ற நான்கு மேகங்களும் பொதிய மலையிலே தாழ்ந்து மேய்ந்து கொண்டிருத்தலைக் கண்ணுற்றார். உடனே அவற்றைப் பிடித்துக் கட்டி, விலங்கிட்டுக் கொண்டு சென்று, சிறைச்சாலையில் இடுவித்தார்.

இது தெரிந்த தேவர்கோன் கடுஞ்சினம் கொண்டு சமர் கருதிப் புறப்பட்டான். வரும் வழியிலே, மனிதன் ஒருவன் கடல் சுவற வேல் விட்டதையும், மிகவும் பாரமான ஆரத்தைத் தாங்கிய ஆற்றலையும் எண்ணி எண்ணி மனமுடைந்தான்.

உக்கிர வழுதியுடன் போர் தொடுக்கக் கருதித் தனது தேவப் படைகளோடு மதுரை நகரைச் சூழ்ந்து கொண்டான். பாண்டியனது ஒற்றர்கள் உடனே ஓடோடியும் வந்து வணங்கி விஷயத்தை தெரிவித்தனர்.

உக்கிரவர்மர் சினமும் மானமும் மிகுந்தார். சதுரங்க சேனைகளுடன் போருக்குக் கிளம்பினார். தங்களோடு சண்டையிட வந்தவரி யார் என்று எண்ணிப் பாராத தேவர்கள் கோஷமிட்டு நெருங்கி வந்து ஆயுதங்களை வீசினர்.

தேவர் படைக்கும், பாண்டியர் படைக்கும் இடையே எழுந்த போர் கடுமையாகவும் அச்சம் விளைவிப்பதாயும் இருந்தது. பேரிகை விளைவாகக் கூளிப் பேய்கள் தம் தலைவி கொற்றவையை வாழ்த்திக் களிக் கூதத்தாடின. இந்திரன் சேனைகள் புறமுதுகு காட்டி ஓடின. இது கண்டு பொங்கிய இந்திரன் தெய்வப் படைகள் விடுத்தான்.

அனைத்தையும் எதிர்த்து முறித்தன பாண்டியன் படைகள். பின்னர் இந்திரனும் வழுதியும் மல்யுத்தம் புரிந்தனர். இந்திரன் தனது வச்சிராயுதத்தைப் பிரயோகம் செய்தான். உக்கிர பாண்டியரும் தன் கையிலிருந்த சக்ராயுதத்தை வளைப்படையைச் சுழற்றி வீசினர். வளை சென்று வச்சிராயுதத்தை எதிர்த் தொதுக்கிவிட்டு இந்திரனது முடியைத் தாக்கிக் கீழே வீழ்த்திச் சிதைத்து விட்டது. வெட்கமும் அச்சமும் உற்ற தேவர்கோன் ஓடினான். சிவபெருமான் திருவருள் இந்திரனது தலைக்கு வந்த ஆபத்தை முடியோடு போக்கியது.

பொன்னுலகில் புகுந்து கொண்ட இந்திரன் உக்கிரவழுதிக்குத் திருமுகம் ஒன்று வரைந்தனுப்பினான். அதிலே, "பாண்டி நாட்டிற்கு மழை வளம் தருகிறேன். தளைப்பட்டுள்ள எனது நான்கு மேகங்களையும் விடுவிப்பாயாக, "எனக் கோரியிருந்தான்.

ஸ்ரீமுகமி கொணர்ந்த தேவதூதன் வழுதியின் அடிபணிந்து ஒடுங்கி ஒதுங்கி ஓலையை நீட்டினான். அங்கிருந்தவன் ஓலையை வாங்கிப் படித்துக் காட்டினான்.

செவிமடுத்த பெருவழுதி இந்திரன் மேல் நம்பிக்கை கொள்ளவில்லை. மேகங்களை விடுவிக்க மனம் ஒப்பவில்லை. அது சமயம் அருகே இருந்த இந்திரணின் நண்பனான ஏகவீரன் என்ற வேளாளன், "பெருவழுதியே!" நான் பிணையாக இருப்பேன்!" என்று கூறி வணங்கினான். வேளாளன் சொற்களை வேந்தர்கோன் நம்பினார். சிறைபட்ட நான்கு மேகங்களின் தளைகளை நீக்கச் செய்து விடுதலை வழங்கியருளினார். மேகங்கள் மேலெழுந்து சென்றன.

இந்திரனது ஆணையால் பின்னர் பாண்டிப் பெரு நாட்டிலே மாதம் மும்மாரி பொழுந்தது. ஆறு, குளம் ஏரி, வாவி, மடு, முதலியன நீர் நிரம்பின. பாண்டி நன்னாடு பசுமை பெற்றுப்,பொலிவுடன் துலங்கியது.

திருச்சிற்றம்பலம்.

இத்துடன் 14- வது படலமான இந்திரன் முடிமேல் வளையெறிந்த படல எளியநடை சரிதம் மகிழ்ந்து நிறைந்தது. மறுபடியும் நாளை 15-வது படலமான மேருவைச் செண்டால் அடித்தத -செய்யுள்நடை + விளக்கம் வரும்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s