Lalita sahasranama garland for Karpagambal – Periyavaa

கற்பகாம்பாள் காசுமாலை

சென்னை மயிலாப்பூரில் உள்ளது மிகப்பிரசித்தி பெற்ற கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலயம்.இந்த ஆலயத்தில் 1950 ஆம் வருடத்திலிருந்து ஆனந்தவல்லி, தன்னையொத்த பெண்களுடன் ஒரு குழுவாக அமர்ந்து, அனுதினமும் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்வது வழக்கம். இவர்களுக்கு முத்துலட்சுமி அம்மாள் என்பவர் தலைவியாக இருந்தார். இந்தக் குழு “கற்பகாம்பாள் சஹஸ்ரநாம கோஷ்டி” என்றும், தலைவி “குரு பாட்டி‘ என்றும் அழைக்கப்பட்டனர். ஆனந்தவல்லி செயலாளராக இருந்தார். அனுதின பாராயணத்தைத் தவிர கோயிலின் பல்வேறு உற்சவங்கள் மற்றும் விசேஷ நாட்களில் அர்ச்சனை, அபிஷேகம் ஆராதனை ஆகியவையும் செய்துவந்தனர்.

1970-ல் ஒரு நாள் குரு பாட்டிக்கு கனவில் காட்சி அளித்த கற்பகாம்பாள், “நீயும் உனது கோஷ்டியும் தினமும் எனக்கு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிண்டுருக்கேள். விசாலாட்சிக்கும் காமாட்சிக்கும் இருக்காப்போல எனக்கும் தங்கத்துல சஹஸ்ரநாம காசுமாலை வேணும். செய்து போடறியா?” என்று கேட்க, பாட்டியும் தான் கனவில் கண்டதை குழுவில் எல்லோருக்கும் சொல்லி மகிழ்ந்தார். அனைவரும் நல்ல மனம் படைத்த பக்தர்களிடமிருந்து நன்கொடை பெற்று காசுமாலை செய்து கற்பகாம்பாளுக்கு அணிவிக்க முடிவு செய்தனர்.

வருடங்கள் பல சென்றும் குழுவின் நடுத்தர வர்க்கத்து மாதர்களால் காசுமாலைக்குத் தேவையான பெரும் பொருளை சேர்க்க முடியவில்லை. சிலரது ஆலோசனையின் காரணமாக 1978-ல் குரு பாட்டியும் ஆனந்தவல்லி மற்றும் உறுப்பினர்களோடு பரமாச்சாரியாளிடம் முறையிட காஞ்சி மடத்திற்கு சென்றனர்.

காத்துக் கொண்டிருந்த அவர்களிடம், மடத்துப் பணியாளர் ஒருவர் வந்து, “பெரியவா உங்களை உடனே வரச்சொன்னா; உள்ளே போங்கோ” என்று சொல்லவும் விரைந்து உள்ளே சென்றனர். மஹா பெரியவாளின் தரிசனத்தில் மெய்சிலிர்த்துப் போயிருந்தவர்களிடம், :என்ன? காசுமாலைக்கு பணமும் பொருளும் சேரலியா?” என்று மகான் கேட்டார். தாம் முறையிட வந்ததை முன்னதாகவே மஹா பெரியவா கேட்டதால் சொல்வதறியாது நின்றவர்களிடம், பெரியவா “அம்பாள் தானே கேட்டா; அம்பாளே அதுக்கு அருள் கொடுப்பா; கவலை படவேண்டாம் ” என்று கூறினார்கள். மேலும் “விசாலாட்சிக்கும் காமாட்சிக்கும் இருக்கறது பணக்கார காசுமாலை; ஆனா கற்பகாம்பாளுக்கு கிடைக்கப் போறது பக்தியால காசுமாலை” என்று அங்கிருந்தவர்களிடம் கூறினார்கள். பிறகு ஆனந்தவல்லியிடமும் குரு பாட்டியிடமும் “கற்பகம் சுவாசினி சங்கம் அப்பிடின்னு பேர் வச்சு நிறைய சுவாசினி மற்றும் பாலா திருபுரசுந்தரி பூஜைகள் செஞ்சிண்டு வாங்கோ” என்று சொல்லி ஆசீர்வாதம் செய்து பிரசாதமளித்தார்கள்.

மஹா பெரியவா சொன்னதை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதால், பொன்னும் பொருளும் வந்து குவிந்தன. 1982-ல் காசு மாலை செய்யும் வேலை துவங்கியது. சென்னை உம்மிடி பங்காரு கண்ணன் அவர்களிடம் வேலை ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு காசின் ஒரு புறத்தில் ஒரு நாமாவும், மறு புறத்தில் கோயிலின் முத்திரையான சிவலிங்கத்தை மயில் பூஜை செய்வது-பின்னணியில் அம்பாள் உருவமும் பதிக்கப்பட்டது. அவ்வப்போது வேலையின் முன்னேற்றம் குறித்து காஞ்சி மடம் மூலமாக மஹா பெரியவாளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்வாமிகளும் மடத்தின் வேத பாடசாலை பண்டிதர்கள் சிலரை அனுப்பி வைத்து நாமாக்களின் சரியான பதிவு மற்றும் வரிசை மாறாதிருத்தல் ஆகியவற்றை ஆய்வு செய்ய வைத்தார். இந்த மகத்தான காரியத்திற்கும் பல முட்டுக்கட்டைகள் – ரிலீஜியஸ் எண்டோமென்ட் போர்டு; கோயில் போர்டின் ஒரு சில உறுப்பினர்கள்; சில வேலை இல்லாத சமூக அமைப்புக்கள் மற்றும் சில விஷமிகள் என பல வடிவுகளில் வந்தன. ஆனாலும், மஹா பெரியவாளின் அருளாசியினாலும், நிர்வாக அதிகாரி சுகவனேஸ்வரர்; தக்கார் குப்புசுவாமி; தலைமை அர்ச்சகர் விஸ்வநாத சிவாச்சாரியார்; வழக்கறிஞர் கிருஷ்ணஸ்வாமி ஆகியோர் உதவி செய்ததாலும் வேலை நன்கு முடிந்தது., “அருள்மிகு கற்பகாம்பாளுக்கு லலிதா சஹஸ்ரநாம தங்க காசுமாலை சமர்ப்பண விழா” 26-2-1986 அன்று கொண்டாடுவது என்றும் விவேக் & கோ விழா அமைப்பாளராகவும் முடிவு செய்யப்பட்டது.

துரதிர்ஷ்டமோ அல்லது வினைப்பயனோ, 20-1-1986 அன்று ஆனந்த வல்லியின் கணவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கை கால்கள் செயலிழந்து பேச்சும் இல்லாமல் போனது. மருத்துவர்களும் நம்பிக்கை இழந்து, அதிக பட்சம் 48 மணி கெடு கொடுத்துவிட்டனர். ஆனந்தவல்லி இதைத் தாங்க முடியாது மனமுடைந்து வீட்டின் பூஜை அறையிலேயே அடைந்து கிடந்தார். குரு பாட்டி சங்கத்தின் உறுப்பினர்களோடும், உம்மிடி கண்ணன் மற்றும் விவேக் ஆகியோருடன் முடிவுற்ற காசு மாலையை எடுத்துக்கொண்டு பெரியவாளை தரிசிக்க மடத்திற்குச் சென்றார். இவர்கள் எல்லோரையும் பார்த்த ஸ்வாமிகள், “ஏன்? உங்க செகரட்ரி வரலியா?” என்று கேட்க,இவர்களும் அனந்தவல்லி கணவரின் நிலைமை பற்றி கண்ணீருடன் விவரித்தனர். காசு மாலையை பார்வையிட்ட மஹா பெரியவா, “மாலை ரொம்ப நன்னா வந்திருக்கு; இந்த மாலையை கற்பகாம்பாளுக்கு போட உங்க செகரட்ரி இருப்பா; கவலைப்படாம போயிட்டு வாங்கோ” என்று சொல்லி ஆசீர்வதித்து பிரசாதங்கள் கொடுத்தார். அனைவரும் நேராகஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து ஸ்வாமிகளின் ஆசிகளை சொல்லி பிரசாதங்களை கொடுத்தனர். என்ன ஒரு அதிசயம்! அதே நேரத்தில் மருத்துவ மனையிலிருந்து, ஆனந்தவல்லியின் கணவர் நினைவு திரும்பி பேசுவதாகவும், மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. மருத்துவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் ஏதோ அற்புதம் நடந்துள்ளது என்று சொல்லி மறு நாளே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். அவரும் இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு நடந்தே வந்து விட்டார்.

26-2-1986 அன்று காசுமாலை சமர்ப்பண விழா வெகு விமரிசையாக நடந்தது. அனந்தவல்லி கணவரும் சிறிது நேரம் கோயிலுக்கு வந்து விழாவினில் கலந்து கொண்டார். செகரட்ரி என்கின்ற வகையில் அனந்தவல்லி விழாவை முன்னின்று நடத்தி, அன்று காலையில் கற்பகம்பாளுக்கு காசுமாலையினை சாற்றி மாலையில் நடை பெற்ற கூட்டத்தில் தனது அறிக்கையையும் சமர்ப்பித்தார். மேலும் காசுமாலையைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கோத்ரேஜ் அலமாரியினையும், சுவாசினி சங்கத்தின் சார்பில் இந்த விலையுயர்ந்த காசுமாலைக்கான ஆவணங்களையும் அளித்தார். தற்போதும், அம்பாளுக்கு அனைத்து வெள்ளிக் கிழமைகள், பெளர்ணமி நாட்கள் மற்றும் வருடா வருடம் பிப்ரவரி 26 நாளிலும் இந்தக் காசுமாலை சாற்றப்படுகிறது.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s