1000 kalam naivedyam at Guruvayoor

ஆயிரம் கலம் நைவேத்யம்

கற்பனை செய்து பார்க்க முடியாத நிகழ்வுகளை நிகழ்த்தி, அதன் மூலம் மக்களுக்கு ஆத்ம ஞானத்தை அருள்பவர் தான் இறைவன்.
குருவாயூரில் உள்ள பெரும்பலச்சோரி எனும் இடத்தில் நடைபெறும் விழாவிற்கு, சமையல் வேலை செய்வதற்காக சென்றிருந்தனர், நான்கு முதியவர்கள். அவர்களை பார்த்ததும், ஏளனமாக சிரித்த நிகழ்ச்சி பொறுப்பாளர், ‘வயதான நீங்கள் தான் சமையல்காரர்களா… நாளை, ஆயிரம் கலம் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல் என எல்லாம் செய்யணுமே… வயதான உங்களால் முடியுமா… இத்தனை வயதாகியும் பணத்தின் மேல் உள்ள ஆசையால், வேலை செய்ய வந்திருக்கீங்களே…’ என்றார், ஆணவத்தோடு!
கிருஷ்ண பக்தர்களான அம்முதியவர்களோ, பள்ளிவேட்டை உற்சவத்தின் போது, குருவாயூரப்பன் சன்னிதியில் நின்று, ‘குருவாயூரப்பா… உன் அருளை அடைய முடியாத எங்களை, இக்கர்வம் பிடித்தவர் முன், காப்பாற்று…’ என்று பிரார்த்தனை செய்து, தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்.
மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, நால்வரும், குளத்திற்கு நீராட சென்றனர். அப்போது, அவர்களுக்கு பழக்கமான நாகோரி எனும் சிறுவன், பல் விளக்குவதைப் பார்த்து, ஆச்சரியமடைந்து, ‘நாகோரி… நீ எப்ப வந்த…’ எனக் கேட்டனர்.
அச்சிறுவனோ, ‘நீங்க இங்க சமையல் வேலைக்கு வந்திருப்பது, நேத்து ராத்திரி தான் தெரிஞ்சது; வயசான உங்களுக்கு உதவியாக இருக்கலாமேன்னு தான் வந்தேன்…’ என்றான்.
அம்முதிய அடியவர்களுக்கு சற்று திருப்தியாக இருந்தது; அனைவரும் நீராடி திரும்பினர்.
சமையல் வேலை துவங்கியது; நால்வரும், ஏதோ செய்தனரே தவிர, பெரும்பாலான வேலைகளை நாகோரியே, ‘பரபர’வென செய்து முடித்தான். காலை, 9:00 மணிக்குள், இறைவனுக்கு படைக்க வேண்டிய திருவமுது, பால் பாயசம், தேங்காய் பாயசம் மற்றும் கறி வகைகள் என, எல்லாவற்றையும் செய்து
முடித்தான்.
அனைவரும் வியந்தனர்; எகத்தாளம் பேசி, அவமானப்படுத்திய நிகழ்ச்சிப் பொறுப்பாளர், முதியவர்களை பாராட்டி, அவர்களுக்கு ஏராளமான வெகுமதியும் அளித்தார்.
அப்போது, ‘நான் அவசரமாக குருவாயூர் போக வேண்டும்…’ என்று கூறி, உணவுக்கு முன் புறப்பட்டான் சிறுவன் நாகோரி.
முதியவர்கள் நால்வரும் உணவை முடித்து, குருவாயூர் சென்றனர். அவர்களுக்கு நாகோரியின் நினைப்பே வரவில்லை.
குருவாயூரில் தரிசனத்தை முடித்து, இருப்பிடம் திரும்பியவர்களின் கனவில், குருவாயூரப்பன் காட்சி கொடுத்து, ‘அடியவர்களே… நாகோரியாக வந்து, உங்களுக்கு சமையலில் உதவி செய்த எனக்கு கூலி தராமல் வந்துவிட்டீர்களே… உழைப்பை வாங்கி, ஊதியம் தராமல் இருக்கலாமா…’ என்றார்.
அடியார்கள் திடுக்கிட்டு, ‘குருவாயூரப்பா… எங்களை காப்பாற்றுவதற்காக, சமையல்காரனாக வந்த உன் கருணையை என்னவென்று சொல்வது…’ என, கண்ணீர் மல்க துதித்தனர்.
இதன் காரணமாகவே, ஆயிரம் கலம் நைவேத்யம் செய்து, குருவாயூரப்பனுக்கு படைக்கும் திருநாளில், சமையல்காரர்கள் தங்களுக்கு கிடைக்கும் கூலியில் ஒரு பங்கை, பகவானுக்கு சமர்ப்பணம் செய்யும் வழக்கம் வந்தது.

Posted in Uncategorized | Leave a comment

Origin of Lalita Sahasranama

Courtesy: https://srinivassharmablog.wordpress.com/2016/08/04/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த வரலாறு ஒரு பார்வை.
அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல. பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க…. அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகஸ்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார்.
ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஸஹஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 182 1/2 சுலோகங்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது. அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு). தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு.
இந்த நூலுக்கு எழுதப் பட்டிருக்கும் உரைகளில் தலைசிறந்ததாக விளங்குவது பாஸ்கர ராயர் எழுதிய “சௌபாக்ய பாஸ்கரம்” என்ற உரை. பாஸ்கர ராயர் (பொ.பி* 1690 – 1785) மிகப் பெரிய தேவி உபாசகரும், தத்துவ ஞானியும், அறிஞரும் ஆவார். இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு தன் குருநாதரைத் தேடி வந்தடைந்தார். காவிரிக் கரையில் நீண்ட நாள் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஊர் பாஸ்கரராஜபுரம் என்று இன்றளவும் வழங்கப் படுகிறது. (* பொ.பி – பொதுயுகத்துக்குப் பின் – Common Era, Circa).
ஸஹஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்துள்ளது.
லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது. ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள் –
ஸ்ரீமாதாவின் அவதாரம்

கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)

பண்டாசுர வதம்

மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)

குண்டலினீ ரூபம்

பக்த அனுக்ரஹம்

நிர்க்குண உபாசனை

சகுண உபாசனை

பஞ்சப்ரஹ்ம ரூபம்

க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்

பீடங்களும், அங்க தேவதைகளும்

யோகினீ தியானம்

விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்

சிவசக்தி ஐக்கியம்
தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா ஸஹஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது. சிதக்³னிகுண்ட³ ஸம்பூ⁴தா – அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராக³ஸ்வரூப பாசா’ட்⁴யா – ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதா⁴கார அங்குசோ’ஜ்வலா – தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோத³ண்டா³ – மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா – ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள். பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்!.
தத்துவ அளவில் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப்பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம். நிர்த்³வைதா – த்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்³வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா – சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே. இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும். அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் – எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்.

தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக் கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன!
அதுவே லலிதா ஸஹஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம். இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும் போதும், தியானிக்கும் போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது. பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிற்து.
தத்துவங்களின் பெருவெளியாக லலிதா ஸஹஸ்ரநாமம் இருக்கிறது.
மூலப்ரக்ருதி என்னும் ஆதி இயற்கை வடிவானவள் – மூலப்ரக்ருதி:. இந்த ஆதி இயற்கை வெளிப்பட்டும், வெளிப்படாமலும் உள்ளது – வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி. வெளிப்படும் பேரியற்கை எங்கும் வியாபித்தும் (வ்யாபினீ), பல்வேறு வடிவாகவும் (விவிதா⁴காரா) உள்ளது. இந்த ஆதி இயற்கையை யாராலும் முழுமையாக அறிந்து விட முடியாது. அதற்கு பிரக்ஞை என்னும் முழுமை அறிவு தேவைப் படுகிறது, அந்த அறிவு வடிவானவள் – ப்ரக்ஞான-கன-ரூபிணீ. இது சாங்கிய தரிசனம்.
அந்த முழுமை அறிவு அனுபூதியில் கைகூடும்போது, அறிபவன், அறிவு, அறிபடுபொருள் அனைத்தும் ஒன்றாக ஆகி விடுகிறது – த்⁴யான த்⁴யாத்ரு த்⁴யேய ரூபா. தர்மம், அதர்மம் போன்ற இருமை நிலைகள் நீங்கி விடுகின்றன – த⁴ர்மாத⁴ர்ம விவர்ஜிதா. இது வேதாந்த தரிசனம்.
பசு’பாச’ விமோசனி – பசுக்களாகிய ஜீவர்களின் பாசம் என்னும் தளையை விடுவிப்பவள். சி’வஞான ப்ரதா³யினி – சிவஞானத்தை அளிப்பவள். இது சைவ சித்தாந்தம.
என்ன செய்கிறேன்? எப்படி ஒருவன் சிந்தித்து, தர்க்கித்து அப்படி ஒரு பெயரை உருவாக்க முடியும்? வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும். மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்… அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில். அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும். அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும். மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும். ஆயிரம் பெயர்கள். ஸஹஸ்ரநாமம். லலிதா ஸஹஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான். ஒவ்வொரு பெயரும் பிறிதில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள். அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள். அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர். அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்

Posted in Uncategorized | Leave a comment

Guru & sishya

எப்படிப்பட்ட சிஷ்யனை குரு நல்ல சிஷ்யன் என்றுகூறுவார்.குரு முக்கியமாக இந்த மூன்று குணங்களை எதிர்பார்ப்பார் ஒருவரை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுமுன்பு.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை

பொறுமையைக்கடை கடைபிடித்தல்

கற்றுக்கொள்ளும் லட்சியத்தின்மீது மட்டும் பற்று வைத்தல்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் பொறுமை இரண்டையும் சேர்த்தே பார்க்கலாம்.

ஒரு மாணவன் ஒரு குருவை தேர்ந்தெடுத்து அவரிடம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு அவருடைய குருகுலத்துக்குச் சென்று அவரைப் பணிந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினான். குரு மற்ற மாணக்கர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டே நாளை வா பார்க்கலாம் என்றார்.சிஷ்யன் போய்விட்டு மறுபடியும் மறு நாளைக்கு வந்து கேட்டான் . இந்தநாளும் குரு நாளைக்கு வா பார்க்கலாம் என்றார்.இது மாதிரி சிஷ்யன் 21 நாட்கள் வந்து வந்து விடாமுயற்சியோடு குருவை வணங்கி கேட்டுக்கொண்டிருந்தான்.குருவும் நாளைக்கு வா என்று கூறிக்கொண்டே நாட்களை கடத்திக்கொண்டுவந்தார்.

கடைசியாக குரு, சிஷ்யனின் பொறுமைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்து அவனை சிஷ்யனாகச் சேர்த்துக்கொள்ள தீர்மானித்து அவனுடைய உணர்ச்சிக்களை கட்டுப்படுத்தும் தன்மையையும் சோதிக்க விரும்பினார்.சரி மாணவனே நாளையிலிருந்து நீ வகுப்புக்கு வா. ஆனால் வரும்போது காலை பூஜைக்கு அக்னி வளர்க்கவேண்டும் ஆகையால் நீ வரும்போது உன் இருகைகளிலும் அக்னி தனலைக் கொண்டு வந்து என் முன்னால் இருக்கும் ஹோமகுண்டத்தில் போடவேண்டும் என்றார். மாணவனும் மிகுந்த சந்தோஷத்துடன் சென்றான்.

மறுநாள் காலை சிஷ்யனை எதிர்பார்த்து குரு அக்னி குண்டத்தில் எதிரில் அமர்ந்திருந்தார்.மற்ற மாணாக்கர்களும் என்ன குரு இப்படி ஒரு செயலைச் செய்யச் சொல்லியிருக்கிறர் நம் குரு, அதை எப்படி இந்த புது சிஷ்யன் செய்யப் போகிறான் என்று பயத்துடன் இருந்தனர். அப்போது சரியான நேரத்தில் சிஷ்யன் இரு கைகளிலும் அனல் பறக்கும் நெருப்புத்துண்டங்களைக் கொண்டுவந்து குருவின் முன்னால் இருக்கும் குண்டத்தில் சமர்ப்பித்து குருவை வணங்கி நின்றான்.குரு அதைப்பார்த்ததும் சிஷ்யனை அழைத்து அன்புடன் தழுவிக்கொண்டு நீதான் உத்தம சிஷ்யன் என்றார்.21 நாட்கள் உன்னை அலைக்கழித்தும் பொறுமையைக் கடைபிடித்து எப்படியாவது கற்க வேண்டும் என்ற ஆசையினால் வந்து கொண்டிருந்தாய்.அதே மாதிரி உனக்கு உன்னுடைய உணர்ச்சிகளை சோதனை செய்யவைத்த சோதனையிலும் வெற்றி பெற்று விட்டாய்.எல்லோரும் நினத்துக்கொண்டிருந்தார்கள் நீ உன் இருகைகளிலும் நெருப்பை அப்படியே கொண்டுவந்து கொட்டி கைகளைச் சுட்டுக் கொள்ளப் போகிறாய் என்று.ஆனால் நீயோ உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருகைகளிலும் மணலை நிரப்பச்செய்து அதில் நெருப்புத்துண்டங்களை வைத்து கைகளை சுட்டுக்கொள்ளாமல் புத்திசாலிதனத்துடன் செய்து முடித்தாய்.இன்றுமுதல் உனக்கு பாடம் ஆரம்பிக்கிறேன் என்று கூறி அவனை சிஷ்யனாகச் சேர்த்துகொண்டார்

இதே மாதிரிதான் கர்ணனும் பரசுராமரிடம் வில்வித்தை கற்றுக்கொள்ளச் சென்றபோது அவரும் அவனை அலைக்கழித்து அவனது பொறுமையைச் சோதனை செய்துதான் சிஷ்யனாகச் சேர்த்துக்கொண்டார்.பின்பு அவர் கர்ணன் மடியில் தலைவைத்து தூங்கிக்கொண்டிருந்தபோது தேவர்களின் சூழ்ச்சியால் வண்டு வந்து கர்ணனின் தொடையை துளையிட்டு ரத்தபெருக்கையும், கடுமையான வலியையும் ஏற்படுத்திய போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவரின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாதவண்ணம் இருந்தான்.ஆகவே அவனும் இரண்டு சோதனைகளில் வெற்றிபெற்றாலும் உண்மைகூறவில்லை என்ற தவறைச் செய்து அதன் பலனை அனுபவித்தான்.

இனி மூன்றாவது குணமான லட்சியத்தை மட்டும் அடைவது என்பதைப் பார்ப்போம். இந்த குணத்துக்கு நல்ல உதாரணமாக இருப்பது துரோணரும் அர்சுணனும்தான். வில்வித்தை கற்றுக்கொடுக்கும்போது ஒரு பெரிய மரத்திலுள்ள பலகிளைகளில் ஒருகிளையைக்காட்டி அதில் ஒரு இலையை மட்டும் காட்டி அம்பு எய்யச்சொன்னபோது பலபேர்கள் ஆச்சார்யன் சொன்ன இலையைத்தவிர பலவிஷயங்களை பார்த்துச் சொன்னபோது அர்ச்சுணன் ஒருவன் மட்டுமே தன் கண்களில் தெரிவது மரம் இல்லை, கிளைகளும் இல்லை. மற்ற இலைகளும் இல்லை ஆசார்யர் ஆன துரோணர் சொன்ன இலை மட்டும்தான் என்று சொல்லி லட்சியத்தை அடைவது மட்டும்தான் சிஷ்யனின் குறியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியவன்.

நல்ல குருவைப் பற்றியும் நல்ல சிஷ்யனைப் பற்றியும் தெரிந்த நாம் இனி எப்படி இருக்கப் போகிறோம் என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும்

Posted in Uncategorized | Leave a comment

Shivling & Maheswara Sutram

http://www.i-c.tech/shivling.html

Posted in Uncategorized | Leave a comment

Manneeswarar Temple

*அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில்*

*மூலவர்:* மன்னீஸ்வரர் (அன்னீஸ்வரர்)

*உற்சவர்:* சோமாஸ்கந்தர்

*அம்மன்/தாயார்:* அருந்தவச்செல்வி

*தல விருட்சம்:* வன்னி

*ஆகமம்/பூஜை :* காரணாகமம்

*பழமை:* 500 வருடங்களுக்குள்

*புராண பெயர்:* மன்னியூர்

*ஊர்:* அன்னூர்

*மாவட்டம்:* கோயம்புத்தூர்

*மாநிலம்:* தமிழ்நாடு

*திருவிழா:*

மார்கழியில் பிரம்மோற்ஸவம், சித்திரைப் பிறப்பு, வைகாசி பூஜை, மகா சிவராத்திரி.

*தல சிறப்பு:*

இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய சிவாலயம்.

*திறக்கும் நேரம்:*

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

*முகவரி:*

நிர்வாக அதிகாரி,
மன்னீஸ்வரர் திருக்கோயில்,
அன்னூர் – 641 653.
கோயம்புத்தூர் மாவட்டம்.

*போன்:*

+91- 4254 – 262 450,
98422 – 38564.

*பொது தகவல்:*

மேற்கு நோக்கிய தலம், மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பிரகாரத்தில் பைரவர், குருபகவான், நடராஜர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், நால்வர், திருநீலகண்ட நாயனார் சன்னதிகள் உள்ளது.

தலவிருட்சம் வன்னி மரத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னதியில் 7 நாகங்கள் உள்ளன. இங்கு வேண்டிக் கொண்டால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

*பிரார்த்தனை:*

முன்வினைப்பாவம் நீங்க, தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

*நேர்த்திக்கடன்:*

சிவன், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

*தலபெருமை:*

இறகு லிங்கம்: மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். ராஜகோபுரம் ஏழுநிலை கொண்டதாக அமைந்துள்ளது. கருவறையில் சிவலிங்கம் மணலின் நிறத்திலேயே இருக்கிறது. லிங்கத்தின் இருபுறமும் பறவைக்கு இருப்பது போல, இறகு போன்ற வடிவம் இருக்கிறது. உற்றுப் பார்த்தால் கருடன் தனது இறக்கைளை மடக்கி வைத்து அமர்ந்திருப்பது போல காட்சியளிக்கிறது.

கருடன் கூர்மையான பார்வை கொண்டது. வானத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழே இருக்கும் மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது. அதுபோல, சிவனும் யாருக்கும் தெரியாது என்றெண்ணி நாம் செய்யக்கூடிய தவறுகளையும், பாவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது. பாவங்களை உணர்ந்து திருந்தி, இனியும் பாவம் செய்ய மாட்டேன் என இவரது சன்னதியில் உறுதி எடுத்துக் கொண்டால், இதுவரை செய்த பாவங்களை மன்னித்து விடுவார் என்பது நம்பிக்கை. லிங்கத்தின் மேற்பகுதியில் சங்கிலியால் கட்டி இழுத்த தடமும், உச்சியில் வேடனது கோடரியால் வெட்டுப்பட்ட இடம் மழுங்கியும் இருக்கிறது.

அம்பாள் எதிரே விநாயகர்: அன்னி என்ற வேடனுக்கு அருள் புரிந்த சிவன் என்பதால் இவர், "அன்னீஸ்வரர்’ என்றும், பாவச்செயலை செய்த அவனை மன்னித்ததால், "மன்னீஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார். தலமும் "மன்னியூர்’ எனப்பட்டது.

அமாவாசைகளில் சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அம்பாள் அருந்தவச்செல்வி என்ற பெயரில் அருளுகிறாள். வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது. இப்பூஜையின்போது அம்பாளை தரிசித்தால் திருமண பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. கோயில்களில் சிவன் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இருப்பாள்.

இங்கு அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் துர்க்கை இருப்பது வித்தியாசமானதாகும். இவளது சன்னதி எதிரில் விநாயகர் இருக்கிறார். இவர் தாயைப் பார்த்தபடி இருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சூரிய, சந்திர பூஜை: கல்வெட்டுக்களில் இவ்வூர் "மேற்றலைத்தஞ்சாவூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில் ராஜகோபுரத்தின் அருகில் சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளது. தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் சூரியனுக்கும், திங்கள்கிழமையில் சந்திரனுக்கும் அதிகாலையில் விசேஷ பூஜை நடக்கிறது. நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும், சூரியனைப் பார்த்தபடி இருக்கிறது. சனீஸ்வரன் தனிச் சன்னதியில் இருக்கிறார். சனிக்கிழமைகளில் காலையில் இவருக்கு எள் சாதம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

*தல வரலாறு:*

பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி வள்ளிச்செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற சிவபக்தன், இங்கு வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த வேலையும் தெரியாது என்பதால், வேட்டையாடி வந்தான்.

ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை. பசியின் காரணமாக, வள்ளிக்கிழங்கை கோடரியால் வெட்டி சாப்பிட்டான். கிழங்கை வெட்டிய பிறகும், அது அளவில் குறையாமல் அப்படியே இருந்தது. ஆச்சரியத்துடன், மேலும் கிழங்கை வெட்டவெட்ட கிழங்கின் நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறிந்துகொள்ள கூடுதல் ஆழத்திற்கு வெட்டினான். அப்போது கிழங்கில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த வேடனிடம் அசரீரியாக ஒலித்த குரல், " இனி உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை செய்யாமல் இரு.

இதுவரையில் நீ செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது” என்றது. வேடன் மன்னனிடம் சென்று நடந்த சம்பவங்களைத் தெரிவித்தான். இங்கு வந்த மன்னன் ரத்தம் வெளிப்பட்ட இடத்தில் தோண்டியபோது, மண்ணிற்கு அடியில் ஒரு லிங்கத்தைக் கண்டான். லிங்கத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்தான். முடியவில்லை. எனவே, லிங்கத்தின் மீது சங்கிலியைக் கட்டி, யானையைக் கொண்டு இழுத்துப் பார்த்தான். ஆனால், லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன், "தான் இவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புவதாகவும், அதனால் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வேண்டாம்,” எனவும் கூறினார். எனவே, மன்னன் லிங்கம் இருந்த இடத்திலேயே கோயில் கட்டி வழிபட்டான்.

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*
இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

Posted in Uncategorized | Leave a comment

Snake – Positive story

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.**
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

கவலைகளை விட்டொழியுங்கள்.
*****************
மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

Posted in Uncategorized | Leave a comment

16 samskaras

Posted in Uncategorized | Leave a comment